ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 7

தொண்ணூறுகளின் இறுதியில் நானும் சரவணனும் சென்னைக்கு வந்துவிட்டோம். சினிமா, பத்திரிகை, அரசியல், இலக்கியம் என அலைந்துகொண்டிருந்த எங்களை, விஞ்சுவதற்கு ஆளே இல்லை என்பதுபோல உள்ளூர்த் தோழர்களில் சிலர் உசுப்பிவிட்டிருந்தார்கள். ‘‘ஆகப்பெரும் திறமைசாலிகளாக இருக்கும் நீங்கள் தஞ்சாவூரில் இருந்து என்னதான் செய்யமுடியும்? உங்களுக்கான களம் சென்னை மாநகரே. சிறப்பாகச் செயல்படவும் செழித்தோங்கவும் சென்னைக்குக் கிளம்புங்கள். மேலே கூறிய துறைகளில் போதாமை நிலவுகிறது. அந்த போதாமைகளைப் போக்கும் திறன் உங்களிடமிருக்கிறது. உடனே கிளம்புங்கள். நம்முடைய அடுத்த சந்திப்பு சென்னையில் அமையட்டும்’’ என்பார்கள்.

அவர்கள் சொல்லியதுபோல நாங்களும் எங்களை, சகல துறைகளையும் மேம்படுத்தும் பராக்கிரமசாலிகளாக நம்பினோம். ஒருகட்டத்தில் சென்னைக்கு விஜயமாவது என்றும் முடிவெடுத்தோம். அம்முடிவு, அவர்களின் வார்த்தைகளை மெய்ப்பிக்க அல்ல. வாரி வாரிப் புகழ்ந்த அவர்களின் தொந்தரவிலிருந்து தப்பிக்க. மேலும் சிலநாள் நாங்கள் தஞ்சாவூரில் இருந்திருந்தால் அவர்கள் எங்களை சிதையிலோ சிலுவையிலோ அறைந்திருப்பார்கள்.

எங்கள் மீதுள்ள அக்கறையினால் அவ்வார்த்தைகளை அவர்கள் உதிர்த்தார்களா? இல்லை எங்கள் நச்சரிப்பு பொறுக்காமல் நாடு கடத்தினார்களா? இன்று வரை கூட யூகிக்க முடியவில்லை. சென்னையில் எங்களுக்கு யாரையுமே தெரிந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் என்பதைத் தாண்டி ஒன்றுமே தெரியாது. பழகிய சிலபேர் கொளுத்திப்போட்டதில் பற்றிக்கொண்ட நாங்கள், கும்பி நெருப்பெரிய சென்னையில் வந்து விழுந்தோம்.

அழகழகான கட்டடங்கள் நிரம்பிய சென்னைத் தெருக்கள் அப்போதும் அழுக்குகளையே சுமந்திருந்தன. அதுவரை சாக்கடையாக ஒரு ஆறு ஓடும் என்று கனவில்கூட நாங்கள் நினைத்திருக்கவில்லை. பெரிய பெரிய பிஸ்தாக்கள் வாழும் சென்னை மா பட்டிணத்தில் பிச்சைக்காரர்களும், பிழைக்க வழியில்லாதவர்களும் அதிக எண்ணிக்கையில் இருப்பதைப் பார்த்த எங்களுக்கு அதிர்ச்சியாயிருந்தது. பரவாயில்லை. இதையெல்லாம் சரி செய்வதற்கே யாம் வந்திருக்கிறோம்.

இரண்டு பேரும் முன்நின்று இக்கேடுகளை நீக்கவும், சோம்பிக்கிடக்கும் சென்னையை சொர்க்கபுரியாக்கவும் தீர்மானித்தோம். சென்னை மாநகரைத் திருத்த வந்திருக்கும் எங்களை ஒரு ஈ, காக்கைகூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அந்த ஈயும் காக்கையும் அலுத்து சலித்து அடுத்த மாத இ.எம்.ஐக்காக ஆலாய்ப் பறந்து கொண்டிருந்தன. எல்லா காலத்திலும் சமூக மீட்பர்களுக்கு நேர்ந்த கதிதான். மனுஷ்யபுத்திரன் அவ்வப்போது எழுதுவதுபோல ‘என்ன மாதிரியான சமூகத்தில் நாமிருக்கிறோம்?’ தங்களுக்காக உழைக்க வந்திருக்கும் இரண்டு பெரும் ஆகிருதிகளை அடையாளம் காணக்கூட இந்த சமூகத்திற்கு முடியாமல் போகிறதே.

தங்களைக் கைதூக்கிவிட வந்திருப்பவர்களைப் பாராட்ட மனமில்லை என்றாலும், ஒருவேளை பட்டை சோற்றுக்காவது வழி செய்யக் கூடாதா? குடத்தைக் குப்புற கவிழ்த்ததுபோல் கொண்டு வந்த பணமெல்லாம் தீர்ந்துவிட்டது. ஊருக்கே திரும்பிவிடவும் யோசனைதான். ஆனாலும், எங்களைவிட்டால் சென்னையை யார் செப்பனிடுவது? வாய்க்கும் வயித்துக்கும் வழியில்லை எனினும் அவ்வளவு எளிதாக ஒரு வரலாறு வந்துவழியில் திரும்பிவிடுமா என்ன?

மூன்று வேளை உணவில்லையென்பது குறையில்லை, ஒருவேளை உணவுகூட இல்லாமல் நம்முடைய முன்னோர்கள் ஊருக்கு உழைத்திருக்கிறார்களே. சரவணன், எதார்த்தத்தை மீறி இப்படி எதையாவது பேசிக்கொண்டிருப்பான். சென்னைக்கு வர எனக்கும் சேர்த்து அவனே பிரயாண டிக்கெட்டெடுத்தவன் என்பதால் அவனைமீறி எந்த முடிவையும் என்னால் எடுக்க முடியாது. சரிதான் நண்பா, உன் சித்தம் எப்படியோ அப்படியே நடப்போம் என்றுதான் சொல்ல முடியும்.

பசி, அடிவயிற்றைக் கவ்விக்கொண்டு அகல மறுக்கும். ஈவு இரக்கமில்லாமல் எதைசெய்யவும் தூண்டும். நாங்கள் வந்திருந்த தொண்ணூறுகளின் இறுதியில்தான் தண்ணீரைக்கூட பாக்கெட்டில் விற்பனை செய்யும் விபரீதம் தொடங்கியது. பணமில்லாமல் பசியோடு சென்னையிலிருப்பது, இறந்துபோனவரிடம் நலம் விசாரிப்பது போன்றதுதான். ஆனாலும், அப்போதைய எங்கள் பசியைப் போக்க சில அரங்கங்கள் உதவின.

கம்பன் கழகமும், தமிழ்ச் சான்றோர் பேரவையும் புதுக்கல்லூரி இஸ்லாமிய மாநாடுகளும் எங்களுக்கான அரிசியை, உணவாக சமைத்துப் பரிமாறின. விழாவில் பங்கெடுக்க பிரத்யேகமாக வந்தவர்களைப் போல அவ்வரங்கங்களில் சாப்பிடுவதற்காகவே கலந்துகொள்வோம். சமூகம், எங்களை அடையாளம் காணவில்லையே என்று ஆரம்பத்தில் துக்கப்பட்ட நாங்கள், அப்புறம் யாருமே எங்களை அடையாளம் காணாத வகையில் நடந்துகொண்டோம்.

தெரிந்தால் விரட்டிவிடுவார்களோ என்னும் அச்சத்தில் தலையை குனிந்துகொண்டே சாப்பிட்டு எழுவோம். ஒருமுறை அப்படித்தான் ஜெர்மன் ஹாலில் தமிழ்ச் சான்றோர் பேரவை விழா. மதிய உணவு ஏற்பாட்டுடன் தடபுடலாக விழாவை நடத்தினார்கள். மாணவர் நகலக அதிபர் அருணாச்சலம் அந்நிகழ்வுகளை பின்னிருந்து இயக்கினார். உதிரி உதிரியாகப் பிரிந்திருந்த தமிழ் அமைப்புகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் அவர் அப்போது ஈடுபட்டிருந்தார்.

இறுதியில் அவராலும் தமிழின உணர்வாளர்களை ஒரு வட்டத்திற்குள் கொண்டுவர முடியவில்லை. அந்த விழா மூன்று அமர்வுகளைக் கொண்டிருந்தது. இயல், இசை, நாடகம். மூன்றிலும் சிறந்து விளங்கியவர்கள் பங்கெடுத்துக்கொண்டார்கள். காலையில் இருந்து மதியம்வரை ஒரு அமர்வு. அந்த அமர்வு எங்களைப் பெரிதாக கவரவில்லை. மதிய உணவு உண்டென்று சொல்லியிருந்ததால் ஒருவேளை பிடித்திருக்கலாம்.

சும்மா சொல்லக்கூடாது. மதிய உணவை ஜமாய்த்துவிட்டார்கள். இரவுக்கும் இதுபோல ஏற்பாடு செய்திருப்பார்களா என ஏங்கும் அளவுக்கு மதிய உணவின் மகிமை அமைந்தது. எதிர்ப்பார்ப்பில்லாமல் யார்தான் இருக்கிறார்கள்? நாங்களும் அன்று அங்கேயே பொழுதைக் கழிக்க முடிவு செய்தோம். இரவு உணவை உத்தேசித்து அல்ல. விழா ஏற்படுத்திய விநோத பரவசம், மாலைவரை எங்களை அங்கே இருக்கவைத்தது. இருள் மெல்ல கவிந்த பின் மாலையில்தான் அந்த அதிசயமும் நிகழ்ந்தது. அரங்கிற்கு வெளியே ஊசிமழை.

யாரோ ஒரு பெரியவர் மேடையேறினார். தபேலா, ஹார்மேனியத்துடன் மேலும் சிலர். கச்சேரி ஆரம்பானது. ‘அழகான அந்த பனைமரம் அடிக்கடி நினைவில்வரும்’, என்ற காசி ஆனந்தனின் பாடலை அவர் பாடினார். அதுவரை அந்தப் பாடலை நாங்கள் கேட்டதில்லை. அதற்கு முன்னாலும் அதற்குப் பின்னாலும்கூட அப்படியொரு குரலை நாங்கள் கேட்டதில்லை. அதைக் குரல் என்று சொல்லமுடியாது. உயிரை உருக்கிப்பிழியும் வஸ்து.

தமிழனின் செங்கோட்டு யாழ். தமிழ்த்தேசிய அடையாளத்தைப் பிரதிபலித்த சிதம்பரம் ஜெயராமனின், சீர்காழி கோவிந்தராஜனின் குரலை ஒத்திருந்தது அந்தக்குரல். கருத்த முகம். தோளில் நீலநிற ஜரிகை சால்வை. வயதின் காரணமாக அவ்வப்போது சுருதி சேராவிட்டாலும் உணர்ச்சியின் பாவத்தை அவர் உதடுகள் கொப்பளித்தன. மின்சாரம் உடலெங்கும் ஊடுருவியது போலிருந்தது. இன மீட்பு, மொழிப் பற்று, திராவிட அரசியல் விமர்சனம் என்று அவர் பாடிய பாடல் ஒவ்வொன்றும் உள்ளத்தைக் கடைந்தன.

மேலும் கீழும் அபிநயம் பிடித்ததில் அவ்வப்போது அவர் விரலில் அணிந்திருந்த மோதிரத்தின் ஒளி, குழல் விளக்கில் பட்டுத்தெறித்தது. உச்சஸ்தாயியில் எட்டுக்கட்டைக்கும் மேல்கூட அவர் அனாயசமாக போவார் போல. உச்சரிப்பில் தெளிவு. உந்திவரும் கருத்துகளில் ஒன்றுகூட சோடையில்லை. அவர் முழங்கிக்கொண்டே இருந்தார். முதுகுத் தண்டில் மின்னல் வெட்டிக்கொண்டே இருந்தது. அந்தப் பாடகரின் பெயரை அருகிலிருப்பவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம். அவர்தான் தேனிசை செல்லப்பா.

சி.பா.ஆதித்தனாரின் ‘நாம் தமிழர்’ காலத்திலிருந்து பாடிவரும் அவர், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பிடித்தமான பாடகர். 1987ல் பனிரண்டு நாள் உண்ணாவிரதமிருந்து மரணத்தைத் தழுவிய போராளி திலீபன், தன்னுடைய கடைசி ஆசையாக அய்யாவின் பாடலையே கேட்க விரும்பினான், என்றார்கள். ஒரு போராளி தன் இறுதி ஆசையாக கேட்கத்தக்க குரல்தான் அது. எத்தனை உணர்ச்சிக் கொந்தளிப்பு.

இசைக்கு மொழியில்லை. இசைக்கு இனமில்லை என்று சொன்னாலும், மொழியையும் இனத்தையும் அவர் பாடல்களிலிருந்தே அறிந்துகொள்ள முடிந்தது. திராவிடத்தின் மூத்த மொழியான தமிழின் இசைவடிவை அவர் நேர்த்தியாகக் கற்றிருந்தார். தமிழிசை அவரிடமிருந்து தனக்குரிய பங்கைப் பெற்றிருக்கிறது. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களில் பாடிவந்த அவரை, ஒருகாலம் வரை ஆகர்ஷித்து ஆதரித்தவர் சி.பா.ஆதித்தனார்தான்.

‘நாம் தமிழர்’ இயக்கப் பொதுச்செயலாளர் சி.ஆர்.வரதராஜனின் அறிமுகத்திற்குப்பிறகு தன்னை மக்கள் பாடகராக மாற்றிக்கொண்டிருக்கிறார். 1958ல் மன்னார்குடியில் நிகழ்ந்த தனித்தமிழ் மாநாட்டில் பாரதிதாசனின் பாடலைப் பாடுவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார். அதன்பின், தமிழ்த் தேசிய கொள்கைகளை மேடைகளில் முழங்குவது ஒன்றே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுவிட்டார். பாரதிதாசனின் பல பாடல்கள் ஸ்வர கட்டுமானத்திற்கு உட்படுவதல்ல.

ஆவேசத் தொனியை கொண்டிருப்பவை. அவருடைய விருத்தப்பாக்களை பதம் பிரித்து வாசிப்பதே தனிக்கலை என்றிருக்கையில் அதற்கு மெட்டமைப்பது சாதாரண காரியமில்லை. ஆதித்தனார், திருக்குறள் முனிசாமி, சின்னச்சாமி போன்றோர் அக்காரியத்தில் தனக்கு உதவிபுரிந்ததாக தேனிசை செல்லப்பா ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் திருச்சி செளந்தர்ராஜனும் பழம்பெரும் நடன இயக்குநர் புலியூர் சரோஜாவும் இணைந்து நடித்த ‘பேராசை பிடித்த பெரியார்’ என்னும் நாடகத்தை திராவிட இயக்கத்தவர்கள் மறந்துவிட மாட்டார்கள்.

அந்த நாடகத்தின் வாயிலாக பெரியாரின் கொள்கைகள் நாடெங்கும் பிரகடனப்படுத்தப்பட்டு வந்தன. சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமும் பயணமும் எதை சொல்லவந்ததோ அதை சொல்லிக்காட்டுவதற்காகவே நிகழ்த்தப்பட்ட அந்நாடகப் பாடல்களைப் பாடியவர் தேனிசை செல்லப்பா. அதற்காக பெரியார் நூறு ரூபாய் பரிசளித்திருக்கிறார். ஒரு ரூபாய் செலவு செய்வது என்றாலும் கோடிமுறை யோசிக்கும் பெரியாரிடம், ஒருவர் நூறு ரூபாய் பெறுவது பத்து லட்சம் கோடிக்குச் சமம்.

பணத்தை பரிசளிக்கும்போது பெரியார், ‘‘மறுக்கக்கூடாதுங்க... எங்க பாடினாலும் யாருக்குப் பாடினாலும் எவ்வளவு தருவீங்க’’ன்னு கேட்டுட்டுத்தான் பாடணும், என்றிருக்கிறார். ‘‘கொள்கையை முன்நிறுத்தி செயல்பட வேண்டும். பணம் பொருளை பெரிதாக கருதக்கூடாது’’ என சொல்ல வேண்டிய ஒரு தலைவர், ‘‘பணமில்லாமல் எங்கேயும் பாடாதே’’ என்றது கவனிக்கத்தக்கது.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்