கமர்ஷியல் பிதாமகனின் பொங்கல் கொண்டாட்டம்!



-மை.பாரதிராஜா

‘‘விவசாயம் முடிஞ்சு அதுக்கான பலனை கொண்டாடுகிற காலம்தான் பொங்கல். ஜனங்ககிட்ட அப்ப பணமிருக்கும். குடும்பத்தோட தியேட்டருக்கு வருவாங்க. ஏவி.எம்.சரவணன் சார் கிறிஸ்துமஸ் விடுமுறைலயே படத்தை ரிலீஸ் பண்ண விரும்புவார். புத்தாண்டு, பொங்கல் வரை படம் ஓடும். வசூல் கிடைக்கும்னு சொல்வார். இதுவரை 70 படங்கள் இயக்கியிருக்கேன். அதுல ரஜினிக்கு 25, கமலுக்கு 10. அரை டஜன் படங்களுக்கு மேல பொங்கல்ல வெளியிட்டிருக்கேன்...’’ புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளை சொல்லிவிட்டு மலர்ச்சியோடு பேச ஆரம்பிக்கிறார் எஸ்.பி.முத்துராமன். தமிழ் கமர்ஷியல் படங்களின் பிதாமகன்.

‘‘ஏ.சி.திருலோகசந்தர் சார்கிட்ட ஒர்க் பண்ணும்போதே சிவாஜி, ஜெயலலிதா நடிச்ச ‘எங்க மாமா’, எம்ஜிஆர், சரோஜாதேவி நடிச்ச ‘அன்பே வா’ ரெண்டு படங்களும் பொங்கல் ரீலீஸ் ஆச்சு. நான் இயக்கிய படங்கள்ல ரஜினிக்குதான் பொங்கல் ரிலீஸ் அதிகம். ‘ப்ரியா’ (1979), ‘போக்கிரிராஜா’ (1982), ‘பாயும் புலி’ (1983), ‘நான் மகான் அல்ல’ (1984), ‘மிஸ்டர் பாரத்’ (1986). இதுபோக பார்த்திபன் நடிச்ச ‘தையல்காரன்’ (1991) படமும் பொங்கல் ரிலீஸ்தான். உண்மைய சொல்லணும்னா எம்ஜிஆர், ரஜினி படங்கள் எப்ப ரிலீசானாலும் அது திருவிழாதான்...’’ ஏசியை குறைத்துவிட்டு தொடர்ந்தார் எஸ்.பி.எம்.

‘‘சிம்லால ‘அன்பே வா’ படப்பிடிப்பு. பனிக்காலம். முதல் நாள் அங்க போனதுமே, ‘நம்ம யூனிட்ல எத்தனை பேர்னு லிஸ்ட் தாங்க’னு எம்ஜிஆர் கேட்டார். சரவணன் சார்கிட்ட இதை சொன்னேன். ‘பெரிய டெக்னீஷியன்ஸ் தவிர மத்தவங்க பெயரை கொடுங்க’ன்னார். அதே மாதிரி எம்ஜிஆர்கிட்ட கொடுத்தேன். ‘இது முழுமையா இல்லையே... சரவணன்ல ஆரம்பிச்சு

எல்லார் பெயரையும் எழுதி கொடுங்க’னு திரும்பவும் சொன்னார். அதே மாதிரி செஞ்சேன். அன்னிக்கே எங்க எல்லாருக்கும் ஸ்வெட்டர், மஃப்ளர் எல்லாம் வாங்கி செட்டு செட்டா கொடுத்தார். ‘முதலாளி உங்ககிட்ட ஏற்கனவே இதெல்லாம் இருக்கும். ஆனா, ‘அன்பே வா’ நினைவா வைச்சுங்க’னு சரவணன் சார்கிட்ட எம்ஜிஆர் கொடுத்தப்ப நெகிழ்ந்துட்டேன். சிவாஜி, ஜெயலலிதா நடிச்ச ‘எங்கமாமா’ல கிட்டத்தட்ட 15 குழந்தைங்க நடிச்சிருப்பாங்க.

அத்தனை பேரையும் கட்டி மேய்கிற பொறுப்பு எனக்கு. திருலோகசந்தர் சாரும், ஜெயலலிதா மேடமும் ஷூட்டிங் பிரேக்ல ஆங்கில புத்தகங்கள் படிப்பாங்க. ஏ.சி.டி., படிச்சு முடிச்ச புத்தகத்தை மேடம் வாங்கி வாசிப்பாங்க. மேடம் படிச்ச நூலை எங்க டைரக்டர் படிப்பார்...’’ என்று உதவியாளராக, தான் பணிபுரிந்த பொங்கல் வெளியீட்டுப் படங்கள் குறித்து அசை போட்ட எஸ்.பி.முத்துராமன், நிமிர்ந்து உட்கார்ந்தார்.

‘‘என்னுடைய  டைரக்‌ஷன்ல வந்த முதல் பொங்கல் ரிலீஸ், ‘ப்ரியா’. சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங்னு வெளிநாடுகள்ல சுத்திசுத்தி படமாக்கினோம். தேங்காய் சீனிவாசன் அதுல ‘உங்க பாஸ்போர்ட் என் கைல’னு ஒரு வசனம் பேசுவார். அது வைரலா மாறிச்சு. ‘டார்லிங்... டார்லிங்...’ பாட்டை ஷூட் பண்ண ரெடியாகிட்டோம். அந்த நேரம் பார்த்து தேவியை காணும். ‘ஸ்வீம் சூட் போட்டு நடிக்க மாட்டேன்’னு அடம்பிச்சாங்க. அப்புறம் அவங்க அம்மாதான் சமாதானப்படுத்தி நடிக்க வைச்சாங்க.

ஸ்ரீதேவியோட க்ளாமரால அந்த பாட்டு இப்பவும் ஹிட்டாவே இருக்கு. ரஜினி டபுள் ரோல்ல நடிச்ச படம் ‘போக்கிரிராஜா’. வன்மையான ரஜினிக்கு ராதிகா. தன்மையான ரஜினிக்கு தேவி. இதுல ‘நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா...’ பாட்டை திருத்தணி பக்கமா ஒரு மலைல ஷூட் செஞ்சோம். வெயில்ல ரஜினியும் ராதிகாவும் கொஞ்சம் கூட தயங்காம வெறும் காலோட, அதுவும் ரத்தம் சொட்டச் சொட்ட ஆடினாங்க. இதோ இப்ப உங்ககிட்ட அதுபத்தி சொல்லும்போது கூட கண் கலங்குது. வாட் எ டெடிகேஷன்...

கதைக்கும், சண்டைக்கும் முக்கியத்துவம் கொடுத்து ‘பாயும் புலி’ எடுத்தோம். ஒரு ஃபைட் சீன். கல்குவாரில ஷூட்டிங். லிஃப்ட் மாதிரி பலகைல ராதாவும், சில்க்கும் மாட்டிக்குவாங்க. அந்த பலகை சரியா பேலன்ஸிங்கா இல்ல. ராதா பயந்துட்டாங்க. ஆனா, சில்க் தைரியமா இருந்தாங்க. ‘கீழ விழுந்தா சாகப் போறோம். அவ்வளவுதானே’னு தோளை குலுக்கினாங்க. சரியா இந்த நேரம் பார்த்து கட்டியிருந்த கம்பில ஒண்ணு அறுந்துடுச்சு. ராதாவோட பயம் அதிகமாச்சு. சில்க், அப்பவும் அதே தைரியத்தோட இருந்தாங்க.

யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படலை. ஆனாலும் ‘பாயும் புலி’ படத்தை நினைக்கிறப்ப எல்லாம் சில்க்கோட தைரியம்தான் நினைவுக்கு வரும்...’’ என்று புருவத்தை உயர்த்திய எஸ்.பி.எம்., தான் கோர்ட் வாசலை மிதித்ததை விவரிக்கத் தொடங்கினார். ‘‘அதுவரை கோர்ட்டுக்கு போனதே இல்லை. முதல் முறையா படியேறினேன். காரணம், ‘நான் காந்தி அல்ல’னு ஒரு படத்துக்கு டைட்டில் வைச்சதால. மகாத்மா பெயரை இப்படி எல்லாம் பயன்படுத்தக் கூடாதுன்னு ஒருத்தர் கேஸ் போட்டார். சரினு சொல்லி ‘நான் மகான் அல்ல’னு தலைப்பை மாத்தினோம்.

‘மிஸ்டர் பாரத்’ல எல்லா பாடல்களும் ஹிட். ரஜினியோட அம்மாவாக ‘ஊர்வசி’ சாரதா நடிச்சிருந்தாங்க. ‘ரகுவரனுக்கும் ஒரு கேரக்டர் கொடுங்க’னு சரவணன் சார் சொன்னார். ‘ராஜா சின்ன ரோஜா’, ‘தியாகு’, ‘மனிதன்’னு நான் இயக்கின படங்கள்ல ரகுவரனோட பங்கு இருக்கும். தினமும் ஏதாவது ஒரு விஷயம் கத்துக்கணும்னு நினைப்பார். தன்னோட போர்ஷன் இல்லைனாலும் ஸ்பாட்டுக்கு வருவாரு. மத்தவங்க நடிக்கிறதை பார்ப்பாரு...’’ என்று சொல்லும் எஸ்.பி.முத்துராமன், ‘தையல்காரன்’ ரொம்பவே ஸ்பெஷல் என்கிறார்.

‘‘என்னோட ஒரு படத்துல ‘மூர்த்தி’ங்கிற பேர்ல சின்ன ரோல்ல பார்த்திபன் நடிச்சிருக்கார். அப்படிப்பட்டவர் ஹீரோவா நடிச்ச படத்தை நான் ‘தையல்காரன்’னு இயக்கினேன். தாணு தயாரிச்சார். இவரை எல்லாரும் ‘கலைப்புலி’னு சொல்வாங்க. ஆனா, உண்மைல தாணு, விளம்பரப் புலி. ஒரு படத்தோட ரீச்சுக்கு பப்ளிசிட்டி எந்த அளவுக்கு முக்கியம்ணு உணர்ந்தவர்.

‘வீடு’ சொக்கலிங்க பாகவதரை இந்தப் படத்துக்காக கமிட் பண்ண போயிருந்தோம். அப்ப அவர் படங்கள் எதுவும் இல்லாம சும்மா இருந்தார். அந்த சூழல்லயும் என்ன சொன்னார் தெரியுமா? ‘உங்க படத்துல எனக்கு முக்கியமான ரோல் இருந்தாதான் நடிப்பேன்!’ இப்படிப்பட்ட கலைஞர்கள் வாழற இண்டஸ்டிரி இது...’’ பெருமையுடன் சொல்கிறார் எஸ்.பி.முத்துராமன்.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
படங்கள் உதவி: ஞானம்

உதவி இயக்குநர்களுக்கு அட்வைஸ்

முத்துராமனும் ஜெயலலிதா மேடமும் நடிச்ச படம், ‘அன்புத் தங்கை’. படத்தோட கதையை மேடம் கிட்ட விசி.குகநாதன் சொன்னதும், ‘டைரக்டர் யாரு’னு கேட்டிருக்காங்க. ‘எஸ்.பி.முத்துராமன்’னு சொன்னதும் அவங்க முகம் மலர்ந்திருக்கு. ‘கடின உழைப்பாளி. ‘எங்க மாமா’ல அவரோட ஒர்க்கை பார்த்திருக்கேன். அவரே இயக்கட்டும்’னு சொன்னாங்களாம். இந்த சம்பவத்தைதான் இப்ப இருக்கிற எல்லா உதவி இயக்குநருக்கும் சொல்றேன். அசிஸ்டென்ட்டா இருக்கிறப்ப சின்சியரா உழைங்க. பட வாய்ப்பு தேடி வரும்.

ரஜினி என் தம்பி

ரஜினி எப்பவும் என்னை தன்னோட அண்ணனாதான் பார்க்கறாரு. அவரோட காதல், திருமணம், அவர் சூப்பர்ஸ்டாரா உயர்ந்தது, அப்பா ஆனது, மாமனார் ஆனது, தாத்தா ஆனதுனு ரஜினியோட எல்லா சந்தோஷ செய்திகளும் நான் டைரக்ட் பண்ணின படப்பிடிப்புலதான் வந்து சேர்ந்தது! அந்த அளவுக்கு நாங்க ரெண்டு பேரும் பின்னிப் பிணைஞ்சிருக்கோம். சமீபத்துல ஒருநாள் போன் செய்தாரு.

‘யூனிட் ஆட்கள் எல்லாரையும் கூட்டிட்டு வாங்க...’ ஏதோ விசேஷம் போலிருக்குனு யூனிட்டோட போனேன். அவர் வீட்ல ஃபங்க்‌ஷன் நடக்கறதுக்கான எந்த அறிகுறியும் இல்ல. வாசல்ல நின்னு எங்களை வரவேற்றவர், ‘நீங்க எல்லாரும்தான் எப்பவும் எனக்கு ஸ்பெஷல். உங்களோட லன்ச் சாப்பிட ஆசைப்பட்டேன். கூப்பிட்டேன்’னு சொன்னார்!

எம்ஜிஆர் வீட்டு சிக்கன் ரோஸ்ட்

முதல்வரான பிறகு ஒரு ப்ரிவ்யூ ஷோவுக்கு ஏவிஎம் வந்திருந்தார் எம்ஜிஆர். ‘அன்பே வா’ல பணிபுரிஞ்ச எல்லாரையும் நினைவுல வைச்சிருந்து ஒவ்வொருவர் பெயரையும் சொல்லி நலம் விசாரிச்சார். என் பக்கத்துல வந்து காதுகிட்ட ‘முத்துராமா உனக்கு என்ன வேணும்’னு கேட்டார். ‘உங்க வீட்டுலேந்து சிக்கன் நெய்ரோஸ்ட் வேணும்’னு சொன்னேன். பக்குனு சிரிச்சுட்டார்.

‘அவனவன் எனக்கு இது வேணும்... அது வேணும்’னு கேட்டு வாங்கிக்கறான். நானே வந்து உன்கிட்ட கேட்கறேன். நீ என்னடான்னா சிக்கன் போதும்னு சொல்றியே’னு சிரிச்சாரு. பதிலுக்கு நானும் புன்னகைத்தேன். அவரோட அன்பே எனக்கு கிடைச்சிருக்கு. இதுக்கு மேலயும் ஏதாவது வேணுமா என்ன?