மஸ்தானா மஸ்தானா... நீதான் எனக்கு மஸ்தானா...



-ஷாலினி நியூட்டன்

கிளாஸிக் ரிப்பீட்டுகளுக்கு எப்போதும் ஃபேஷன் உலகில் ஒரு மவுசு உண்டு. போட் நெக் ப்ளவுஸ், மேக்ஸி கவுன், லெக்கிங்க்ஸ் என ‘அந்த நாள் ஞாபகங்கள்’ இந்தநாள் டிரெண்ட்டாக மாறும்போது மொகலாய அரச குடும்பத்து பெண்களின் உடைகள் மட்டும் 2017ல் புது வெர்ஷனாக வரக் கூடாதா என்ன?

வந்தாச்சு. மொகலாய இளவரசி மஸ்தானி அணிந்த டிசைனே இப்போதைய பெண்களின் ஹாட் சாய்ஸ். அனார்கலி பாணிடாப். லாங் ஸ்கர்ட். ஒரு பேன்ட். இந்த மூன்றும் ஒன்று சேர்ந்தால் என்ன வருமோ அதுதான் மஸ்தானி. ‘மாற்றான்’ படத்தில் இடம்பெற்ற ‘நானி கோனி...’ பாடலுக்கு காஜல் அகர்வால் வெளிர் மஞ்சளில் ஒரு சுரிதார் அணிந்திருப்பாரே... அதுதான் மஸ்தானி. அவ்வளவு ஏன் இயக்குநராக கவுதம் வாசுதேவ் மேனன் அறிமுகமான ‘மின்னலே’ படத்தில் ரீமா சென்னை டின்னருக்கு அழைத்துச் செல்வார் மாதவன். அப்போது ரீமா அணிந்த சிவப்பு உடையை ரீவைண்ட் செய்யுங்கள். பல்பு எரிகிறதா? அதே.

என்ன... தென்னிந்திய நடிகைகள் அணிந்தபோது பிரபலமாகாத இந்த உடை, தீபிகா படுகோனே உடுத்த ஆரம்பித்ததும் ஹாட் ஆகிவிட்டது. பிள்ளையார் சுழி போட்டது. சென்ற ஆண்டு ப்ளாக் பஸ்டர் வெற்றியை சுவைத்த ‘பாஜிராவ் மஸ்தானி’ இந்திப் படம். ‘‘உண்மைதான். இதன் பிறகே ‘மஸ்தானி கலெக்‌ஷன்ஸ்’ ஃபேமஸானது...’’ என ஆமோதிக்கிறார் சென்னை போத்தீஸ் பொட்டிக்கின் விற்பனையாளர். ஒன்றரை வயதுப் பெண் குழந்தையிலிருந்து எல்லா வயதினருக்கும் இந்த மஸ்தானி கிடைக்கிறது என்பதுதான் ஹைலைட்.

அதாவது L சைஸ் முதல் XXL சைஸ் வரை. ஆரம்ப விலை ரூ.1470. அதிகபட்சம்? அது உங்கள் கையிருப்பை பொறுத்தது! கற்களும், ஸரி வேலைப்பாடுகளும் இதில் பின்னிப் பிணைந்திருப்பது மிகப் பெரிய ப்ளஸ். எனவே எடையும் சற்று அதிகமாக இருக்கும். ஸோ, வழக்கம் போல் சகோதரனையோ அல்லது அப்பாவையோ அல்லது கணவனையோ அல்லது காதலனையோ அல்லது தோழனையோ ‘சுமை கூலிக்கு’ அழைத்துச் செல்லவும். பில்லையும் அவர்களே கார்டில் தேய்ப்பார்கள்!           

படங்கள்: தமிழ்வாணன்

எப்படி உடுத்தலாம்?

உயரம் குறைந்த பெண்கள் ஹீல்ஸுடன் இந்த உடைகளைப் பயன்படுத்தலாம். உயரமான பெண்களை இந்த உடை இன்னும் நேர்த்தியாகக் காண்பிக்கும். கொஞ்சம் நீண்ட உடலமைப்பு கொண்ட த்ரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்ற பெண்கள் துணிந்து மஸ்தானியை தேர்வு செய்யலாம் என்கிறார்கள் ஃபேஷன் டிசைனர்ஸ். இந்த கலெக்‌ஷனிலேயே அதிக வேலைப்பாடுகள் இருக்கும் என்பதால் கூடுதலாக நகைகளை அணியத் தேவையில்லை. கொஞ்சம் உயர் ரக காலணி. பெரிதாக ஒரு தோடு. போதும். அன்றைய நாயகி நீங்கள்தான். நீங்கள் மட்டுமேதான்.