ஆயிரத்தில் ஒருவனாகும் கூட்டத்தில் ஒருத்தன்!மல்ட்டி கலரில் மின்னுகின்றன ‘கூட்டத்தில் ஒருத்தன்’ போஸ்டர்கள். ‘ஒரு பாட்டு பாக்குறீங்களா?’ என உற்சாகமாகச் சிரிக்கிறார் புதுமுக இயக்குநர் த.செ.ஞானவேல். பார்த்தால் பரவச ஆச்சர்யம். எஸ்.பி.பி. பாடிய ‘ஏன்டா இப்படி... எனக்கு ஏன்டா இப்படி...’ என அதிரடிக்கிற பாட்டு காட்சிகளாக வசீகரிக்கிறது.

‘‘இப்ப இருக்கிற தலைமுறைக்கு அழுத்தம் திருத்தமா ஒரு கதை சொல்ல விரும்பினேன். ஒரு படைப்பு முதலில் படைப்பாளியைத் திருப்திப்படுத்தணும். இந்தத் திருப்தி இதில் எனக்கு பெரிசாகவே வந்திருக்கு. நாலு பக்கம் படித்தால் வராத உணர்வை, நாலு பேர் மேடை போட்டுப் பேசினால் புரியாத விஷயத்தை சினிமா மூலம் சொன்னால் மனதில் பதியும்...’’ நிதானமாகப் பேசுகிறார் த.செ.ஞானவேல். பத்திரிகையாளராக தடம் பதித்து, பிறகு பிரகாஷ்ராஜிடம் பாடம் பயின்றவர்.

‘‘எப்படியிருக்கும் கூட்டத்தில் ஒருத்தன்?”
‘‘ஒரு மிடில் பெஞ்சு பையனோட கதை. முதல் வரிசையில் இருக்கிற பையன்களுக்கு வாழ்க்கை அவங்க கைவசமே இருக்கும். கடைசி பெஞ்ச் பையன்கள் நல்லாவே கூட வந்திடுவாங்க. இந்த நடு பெஞ்சு பையன்களை அதிகம் வெளியே தெரியாது. அவங்களை அடையாளம் சொல்லக் கூட டீச்சருக்கு பெயர் மறந்து போயிருக்கும். அப்படி ஒரு கூட்டத்தில் இருந்த ஒருத்தன், ஆயிரத்தில் ஒருவனா எப்படி மாறுகிறான் என்பதுதான் கதை.

இந்த உலகத்தில் இவங்கதான் பெரும்பான்மை. முதல் வரிசை, கடைசி வரிசையில இருக்கிற 20 பேரை சேர்க்காமல் இவங்களே முக்கால்வாசிப்பேரா இருப்பாங்க. ஐடென்டிட்டி இல்லாம இருப்பதுதான் இவங்க குறை. மிடில் பெஞ்சு பசங்களைப் பத்தி படம் வந்திருக்கான்னு யாகூவில் தேடினால் ‘படம்னா சுவாரஸ்யமாக இருக்கணும். இந்த மிடில் பெஞ்ச் பசங்ககிட்டே சுவாரஸ்யம் கிடையாது. சுவாரஸ்யமில்லாமல் எப்படி படம் பண்ண முடியும்’னு எதிர்க்கேள்வி வைச்சது யாகூ.

எனக்கு சேலஞ்சிங்கா இருந்தது அதுதான். எப்படி ஒரு மொத்த வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்க முடியும்? நமக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கும் என்பது கிடையவே கிடையாது. எல்லா இடத்திலும் புறக்கணிக்கப்படும் அவர்கள் ஒரு கட்டத்தில் சாதிக்கிறாங்க. நிம்மதியான, நல்ல வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறது அவங்கதான். நல்ல இதயங்களோடு இருப்பதும் அவங்களே!

விருதுநகரில் மாலை கட்டி விற்கிற கடைக்காரர் ஒருத்தர் இருக்கார். அவர் ராத்திரி கடையைச் சாத்தும்போது இரண்டு மாலையைக் கட்டி வெளியே தொங்கவிட்டுட்டுப் போவார். பதினைஞ்சு வருஷமாக இதைச் செய்கிறார். அஞ்சு வருஷத்திற்கு முன்னாடி நானே பார்த்தேன். அவருக்கு கிடைக்கிற 500 ரூபாய் வருமானத்தில் 200 ரூபாய்க்கு வெளியே மாலை கட்டிப்போட்டுவிடுகிறார்.

காரணம் கேட்டால், ஒரு நாள் மதுரையிலிருந்து திரும்பின அவர்கிட்டே பஸ்ஸில் உட்கார்ந்திருந்தவர் ‘நீங்க பாட்டுக்கு கடையை மூடிட்டு போயிட்டிங்க. அப்பா திடீரென்று செத்துப் போயிட்டாரு. மதுரைக்கு போக பஸ் இல்லை. அடுத்த நாள் வரைக்கும் நெஞ்சில ஒரு மாலை இல்லாமல் வெறுமனே இருந்தார் அப்பா’னு கண்கலங்கியிருக்கார்.

அதிலிருந்து எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் இருந்திட்டு போகட்டும்’னு அவர் இதைச் செய்கிறார். இவர் ஒரு சாமானியன்தான். பிறந்த நாளை பார்ட்டி வைக்காமல் ஆதரவற்றவர் இல்லத்தில் கொண்டாடுகிறவங்க இவங்கதான். ஒரு சாதாரண பையனையும் அசாதாரணமான பொண்ணையும் வைச்சு ஒரு காதல் கதை சொல்லியிருக்கேன். நிச்சயம் இது புதுசு!”

“அசோக் செல்வனை இப்படி பார்த்ததில்லை..?”
“அசோக்செல்வன் பொண்ணுகளுக்கு பிடிச்ச ஹீரோ. ஒரு சாதாரண பையனா எண்ணெய் வைச்சு படிய வாரிட்டு, பெரிய கண்ணாடி போட்டுட்டு கழுத்தில் சின்ன உத்ராட்ச கொட்டை கெட்டப்பில் ஷூட்டிங் வந்திருந்தார். வி.ஐ.டி.யில் அவரோட ஐ.டி. கார்டு கேட்டு அசோக்கை வாசலிலேயே நிறுத்திட்டாங்க. அவங்க அப்பாவே பார்த்திட்டு ‘என் பையன் மாதிரியே இல்லை’னு சொன்னது நடந்தது.

இந்தப் படத்தில் அவருக்கு நிலையான இடம் கிடைக்கும். எங்களை மாதிரி புதுசா படம் பண்றவங்களுக்கு ஒரு நல்ல ெடக்னிக்கல் சப்போர்ட் இருக்கணும். அதற்கு காமிராவுக்கு ‘குக்கூ’ பி.கே. வர்மா, மியூசிக் நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டர் லியோ ஜான்பால்னு ஒரு தீர்க்கமான டீைம கேட்டு வாங்கிக்கிட்டேன்.’’

“பிரசன்னா மியூசிக்கில் பாடல்கள் ரகளையா இருக்கு..?”
அப்படி அமைஞ்சது. ‘தெகிடி’, ‘சேதுபதி’னு செய்திட்டு இங்கே வந்திருக்கார். ‘ஏன்டா இப்படி’னு எஸ்.பி.பி. பாடினார். இணையத்தில் செம வைரல். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது’ன்னு கேட்காதவங்க யாரும் இருக்க முடியாது. ரொம்ப நேரம் காத்திருந்துட்டு, நிரம்பி வழிகிற பஸ்ஸில், மூச்சுத் திணறி, உடல் நசுங்கி ஏறியிருப்ேபாம். அடுத்த வண்டி காலியா வரும். ஒரு நிமிஷம் வெயிட் பண்ணியிருந்தால் சொகுசா போயிருக்கலாம்.

அதே மாதிரி ஏ.டி.எம். வாசலில் நின்னு பணம் எடுக்கப் போனால் நம்ம முறை வரும்போது No cashனு மிஷின் காட்டும். இதையெல்லாம் வைச்சு ‘றெக்கை இருந்தும் பறக்கலையே, கிட்ட இருந்தும் கிடைக்கலையே, நல்லது நடக்கலையே’னு எங்க பாட்டு ஹிட்டு. எல்லா பாடல்களையும் கபிலன் எழுதியிருக்கார்.

ஹீரோயின் ப்ரியா ஆனந்த், டவுன் டூ எர்த். ‘எதிர்நீச்சல்’ மாதிரி இருக்குன்னு நடிக்க வந்தாங்க. கதையின் ஹீரோ தன்னை உணர்வதற்கான பல விஷயங்களை அவங்களே உணர்த்துறாங்க. முதல்படம் பண்ற டைரக்டர்களுக்காகவே சமுத்திரக்கனி நடிக்க வந்திருக்காரானு தெரியலை. நம்ம கஷ்டங்கள பார்த்து வந்தவர். ‘தம்பி, இவ்வளவு நாள் யூனிட்டில கேட்டு இருக்காங்க.

அதை நீ மறந்திடு, ஒன்றிரண்டு நாள் தேவைப்பட்டாலும் வர்றேன். கவலைப்படாதே. திருப்தியா எடு’னு முதல் நாளே தோளில் கைபோட்டு சொன்னார். அதை நான் மறக்கவே மாட்டேன். படம் பார்த்திட்டு திருப்திண்ணேன்னு போன் போட்டுச் சொன்னேன். ‘தம்பி... இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு. நிப்போம் தம்பி’னு அழகா சொன்னார். பத்திரிகையில் எழுதிக் காண்பிச்சோம். இப்ப, விஷுவலாக எடுத்துக் காண்பிக்கிறோம். அவ்வளவுதான்!   

- நா. கதிர்வேலன்