சிதம்பர ஆச்சரியங்கள்!இந்திய கிரிக்கெட் அணி வெற்றியோடு 2016-ஐ முடித்துக் கொண்டது. கடந்த டிசம்பர் 16ல் தொடங்கி 20 வரை சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து, 470 என்கிற இமாலய ஸ்கோரை அடித்திருந்தாலும், இன்னிங்ஸ் தோல்வி அடைந்து கிரிக்கெட் உலகையே ஆச்சரியப்படுத்தியது.

காரணம், இந்தியா தன்னுடைய டெஸ்ட் வரலாற்றிலேயே அதிக ஸ்கோரை (759/7d) சென்னையில் பதிவு செய்ததுதான். இதுவரை இந்தியாவில் முச்சதம் அடித்த ஒரே வீரராக (இரண்டு முறை) வீரேந்திர சேவாக் மட்டும்தான் இருந்தார். அவருக்கு துணையாக 303* ரன்கள் விளாசி, இளம் வீரர் கருண் நாயரும் அந்தப் பட்டியலில் இணைந்தது யாருமே எதிர்பாராதது.

இந்தப் போட்டியில் மட்டுமல்ல. எப்போதுமே சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம், ஆச்சரியங்களை அள்ளி அள்ளி ரசிகர்களுக்கு தரக்கூடிய தன்மை கொண்டது. அதனால்தான் உலகளவிலான கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களுக்கும் செல்லமான ஸ்டேடியமாக சேப்பாக்கம் அமைந்திருக்கிறது.

* 1932ல் முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆடக்கூடிய அந்தஸ்தில் இந்திய அணி இருக்கிறது. ஆனால், அடுத்த இருபது ஆண்டுகளில் 23 போட்டிகள் விளையாடி, ஒரே ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாத நிலையில் இருந்தது. இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி கிடைத்தது 1952ம் ஆண்டு இதே இங்கிலாந்துக்கு எதிராக இதே சென்னையில்தான்.

* இந்திய அணிக்கு மிகவும் ராசியான மைதானம். இதுவரை இங்கே 32 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. 14 போட்டிகளில் வெற்றி, 6 போட்டிகளில் தோல்வி, ஒன்று டை, 11 போட்டிகள் டிரா.

* 1934ல்தான் ரஞ்சி டிராஃபி தொடங்கியது. முதல் போட்டி சென்னையில்தான்! இதில் சென்னை - மைசூர் அணிகள் மோதின.

* 1877ல் இருந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இதுவரை சுமார் 2000 போட்டிகள் நடந்திருக்கின்றன. இரு அணிகளும் சமமாக ‘tie’ ஆன வரலாறு, கிரிக்கெட்டில் இரண்டே இரண்டு முறைதான் நடந்திருக்கிறது. அதில் ஒன்று செப்டம்பர் 1986ல் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் சென்னையில் நடந்த போட்டி.

* 29 டெஸ்ட் செஞ்சுரிகள் அடித்து, தன்னை யாரும் தாண்டிப் போக முடியாத நிஜமான கிரிக்கெட் டானாக திகழ்ந்தார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன். தன்னுடைய 30வது டெஸ்ட் செஞ்சுரியை சென்னையில் அடித்துதான் இந்த சாதனையை சுனில் கவாஸ்கர் முறியடித்தார்.

* 1988 பொங்கல் சீசனில் இந்தியாவுக்கும், மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. அறிமுக வீரராக இதில் களமிறங்கிய இந்திய ஸ்பின்னர் நரேந்திர ஹிர்வானி, இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 16 விக்கெட்டுகளை வீழ்த்தி, நமக்கு வெற்றி தேடித் தந்தார். இன்றுவரை அறிமுகப் போட்டியிலேயே பத்துக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய பவுலர் அவர்தான்.

* 1997ஆம் ஆண்டு 50வது சுதந்திர தினத்தை ஒட்டி நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் சென்னையில் மோதின. பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 194 ரன்கள் விளாசி, இந்தியாவை நொறுக்கினார். ஒருநாள் போட்டிகளிலேயே அப்போது அதுதான் ஒரு தனிநபரின் அதிகபட்ச ஸ்கோர்.

அவர் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பும்போது கிரிக்கெட்டில் பாகிஸ்தான் நமக்கு எதிர் அணியாக இருந்தாலும், அவரது சாதனையை அங்கீகரித்து அங்கே திரண்டிருந்த 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினர். சென்னை ரசிகர்கள் செய்த இந்த மரியாதை, அப்போது உலகம் முழுக்க பரவியிருந்த கிரிக்கெட் வீரர்களையும், ரசிகர்களையும் சிலிர்க்க வைத்தது.

* 1999லும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சிலிர்க்க வைத்தார்கள் சென்னை ரசிகர்கள். ஜனவரி மாதம் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியின் விளிம்பில் இருந்தது. இன்னும் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி. டெண்டுல்கர் சதம் விளாசி ஜம்மென்று ஆடிக் கொண்டிருக்கிறார். கைவசம் நான்கு விக்கெட்டுகள். எதிர்பாராவிதமாக அடுத்த நான்கு ரன்கள் எடுப்பதற்குள் டெண்டுல்கர் உட்பட நான்கு விக்கெட்டுகளை இந்தியா இழந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் யாருமே எதிர்பாராவண்ணம் தோல்வி அடைந்தது.

ஒரு சில நொடிகள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோன மைதானம், உடனடியாக சுதாரித்துக் கொண்டு சிறப்பாக ஆடி வெற்றி பெற்ற பாகிஸ்தான் ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாக அப்படியே எழுந்து நின்று கைதட்டினார்கள். ‘இவ்வளவு ஸ்போர்ட்டிவ்வான கிரிக்கெட் ரசிகர்களை உலகில் வேறெங்குமே பார்க்க முடியாது’ என்று அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களும் சென்னைக்கு சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறார்கள்.

* 2008, மார்ச் மாதம் சென்னையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 319 ரன்களை விளாசினார் வீரேந்திர சேவக். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமான த்ரிபிள் செஞ்சுரி (278 பந்துகளில் 300 ரன்கள்) இதுதான். ஓர் இந்திய வீரர் ஒரே இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ஸ்கோரும் இன்றுவரை இதுவேதான்.

* கவாஸ்கர், சேவாக், ஹிர்வானி உள்ளிட்டோருக்கு மட்டுமின்றி லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கும் ராசியான மைதானம் சென்னைதான். அவர் இங்கு விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் 876 ரன்களை எடுத்திருக்கிறார். வேறெந்த இந்திய மைதானத்திலும் அவர் இவ்வளவு ஸ்கோர் அடித்ததில்லை. அதே நேரம் சுனில் கவாஸ்கர் சென்னையில் மட்டுமே 1018 ரன்கள் அடித்து, சச்சினுக்கு முன்பாக இருக்கிறார்.

* டெஸ்ட் போட்டியில் எம்.எஸ்.தோனியின் அதிகபட்ச ஸ்கோரான 224, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013ல் சென்னையில்தான் அடிக்கப்பட்டது.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் தன்னுடைய பத்தாயிரம் ரன்களை சென்னையில்தான் கடந்தார்!           

-யுவகிருஷ்ணா