ஊஞ்சல் தேநீர்
யுகபாரதி - 6
நான் அப்படிக் கோபப்படுவதற்குக் காரணம் என்னுடைய தம்பிகள். எழுதத் தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே ஏறக்குறைய நூறு பாடல்களுக்குமேல் திரையில் வந்துவிட்டது. அதிலும் பெருவெற்றி பெற்ற பாடல்கள் அதிகம். பல்லவியைச் சொன்னால் தெரியும் அளவுக்கு. ஏக அலப்பறையோடு அந்தக் காலத்தில் வலம் வந்த என்னை என் தம்பிகள் அவ்வப்போது கண்ணதாசனுக்கு இணையாகச் சொல்லுவார்கள்.
அவர்களுக்குள் யார் இராம.கண்ணப்பன், யார் பஞ்சு அருணாசலம் என்னும் போட்டி வேறு. இருவரும் கண்ணதாசன் உதவியாளர்கள். எனக்கு உதவுவதாகச் சொல்லிக்கொண்டு என் உதவியில் வாழ்ந்துவந்த அந்தத் தம்பிகள், என் பாடலைக் கேட்டு வைரமுத்து ஆடிப்போய்விட்டார் எனவும், வாலிக்கு வயிற்றுவலி வந்துவிட்டதாகவும் சொல்லி என்னை ஏகத்துக்கும் ஏத்திவிட்டிருந்தார்கள். ‘அண்ணே, ஒங்க ‘மன்மத ராசா’ பாட்டாலதான் இன்னைக்கு திரையுலகமே மறுவாழ்வு பெற்றிருக்கிறது’ என்பது வரை அவர்கள் சொல்ல நான் பூரித்திருக்கிறேன்.
பொதுவாக அப்படிப் புகழ்பவர்களை எனக்குப் பிடிப்பதில்லை என்றாலும் தம்பிகள் நம்முடைய சங்கை ஊதுவதில் என்ன தப்பு இருக்கிறது என்றே கருதினேன். நம்முடைய சங்கை தம்பிகள் ஊதலாம். நமக்குத்தான் சங்கு ஊதக்கூடாது என்று தம்பிகளைத் தடுக்காமல் இருப்பேன். அதிலும், ரகுமான் என்றொரு தம்பி. அரியலூர்க்காரன். அவனைப் போல உடம்பு கூசும் அளவுக்கு ஒருத்தரைப் புகழ முடியாது.
‘இந்த வருசம் தேசியவிருது வாங்க டெல்லிக்கு நானும் உங்களுடன் வருவேன்’ என்பான். ஏதோ வருடந் தவறாமல் நானே விருது வாங்கிக்கொண்டு இருப்பது போலவும், இந்த வருடமும் எனக்கு விருது வழங்குவதற்காகவே ஜனாதிபதி காத்திருப்பதுபோலவும் சொல்லிக்கொண்டிருப்பான்.
மறுத்தால் கோபித்துக்கொண்டு, ‘ஒங்களப் பற்றி உங்களுக்குத் தெரியல அண்ணே, நேத்துகூட பெளர்ணமி டிபன் சென்டர் மாஸ்டர் ஒங்க பாட்டப் பத்தி என்னிடம் மணிக்கணக்கா சிலாகிச்சார்’ என்பான். என் புகழ் மூலம் அவனுக்கு அவ்வப்போது அந்த டிபன் மாஸ்டர் இலவச ஊத்தப்பங்களை வழங்கி வந்தார் என்பது உள் பொதிந்திருக்கும் உண்மை. டிபன் கடை மாஸ்டரிலிருந்து இந்திய ஜனாதிபதி வரை அறிந்து வைத்திருக்கும் ஒரு கவிஞனை அந்த அய்யா யார் என்றது கவனத்துக்குரியது.
என்னை யார் என்று கேட்ட அந்த அய்யா யாராயிருக்கும் என்பது என் கவலை. அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடாமல் அவரை ஏற இறங்கப் பார்த்தேன். அவரோ என் பதிலுக்குக் காத்திராமல் எதையோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தார். கண்மணி ராஜாவை விகல்பமாகப் பார்த்தேன், ‘என்னைப்பற்றி ஊர் உலகிற்கு நீங்கள் அல்லவா சொல்லவேண்டும்’ என்பது போல.
அவரோ பதறிப்போய்விட்டார். ‘என்னய்யா இப்படிக் கேட்டுட்டீங்க... கவிஞர்தான் இன்னைக்கு டாப். அவர் எழுதினா அந்தப் பாட்டு ஹிட்டுன்னு எல்லாரும் சொல்றாங்க. நம்ம படத்துக்கு எழுத ஒப்புக்கிட்டது நம்முடைய பாக்கியம்’ என்று சொல்லி வைத்தார். அவ்வளவு சிரத்தையோடு அவருக்கு பதில் சொன்னது என்னை குதூகலப்படுத்தியது. என்றாலும், வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. கிளிக்கூண்டுகளில் எப்போதும் அதிகப்பிரசங்கித்தனமாக நடக்கக்கூடாது. நடந்தால் காரியம் கெட்டுவிடும். அதுமட்டுமல்ல, புரோட்டா செலவு நம் தலையில் விழுந்துவிடும்.
தேநீர் வந்தது. ‘அய்யாவுக்கு சுகர் இருக்குங்களா...’ என்று என் கோபத்தை எள்ளலாக மாற்றி பேசத் தொடங்கினேன். என் உரையாடலின் ஆரம்பம் அவரைக் காயப்படுத்துவது. என்னை யாரென்று தெரியவில்லையா? இரு, தெரிவிக்கிறேன் என்பது போன்ற வன்மம். ஆனால், அவர் என்னை ஒரு பொருட்டாகவே கருதாமல் மிகத் தாழ்ந்த குரலில், ‘ஆமாந் தம்பி, கண்ட்ரோல்லதான் இருக்கு. அசைவத்தை கொறச்சிட்டேன். டெய்லி நடக்குறேன். நைட்ல சப்பாத்திதான்’ என்று பட்டியலிட்டார். ‘பாத்துக்கோங்க.
இந்த வயசுல தேவையில்லாம பேசினாக்கூட சுகர் அதிகமாயிடும்’ என்றேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. என் வார்த்தையிலிருந்த குரூரத்தைப் பெரிதுபடுத்தாமல் வாஞ்சையோடு சிரித்தார். ஒரு சின்ன அமைதிக்குப் பின் ‘அய்யா, ஒங்க பேர நாந் தெரிஞ்சிக்கலாமா?’ என்றேன். அவர் சட்டென்று நிமிர்ந்து, ‘என் பேரு சலீம் தம்பி. நாகூர் சலீமுன்னு சொல்வாங்க’ என்றார்.
அவ்வளவுதான், என் மொத்த கொழுப்பும் அந்தப் பெயரைக் கேட்டதும் குறைந்துவிட்டது. நாடி நரம்பிலெல்லாம் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது. ‘தமிழக தர்காக்களைப் பார்த்து வருவோம் பாடலை எழுதிய சலீமா?’ என்றேன். ‘ஆமாந் தம்பி, அத கேட்டிருக்கீங்களா?’ என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. திக்பிரமை பிடித்தது போலானது. ஒருசில பாடல்களைச் சினிமாவில் கிறுக்கிவிட்டு அதையே கெளரவமாகவும் உலக சாதனையாகவும் கருதுபவர்களுக்கு மத்தியில் சலீம் அய்யா எத்தனை பெருமைக்குரியவர்? இஸ்லாமிய வீடுகளில் அவர் பாடல்கள் ஒலிக்காத நாளில்லை.
காலையும் மாலையும் அவர் எழுதிய எத்தனையோ கீதங்களை மசூதிகளும் தர்காக்களும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட ஏழாயிரத்தி ஐந்நூறு பாடல்கள். ‘ஈச்சமரத்து இன்பச் சோலையில்’ என்னும் ஒருபாடல் போதும் அவர் யார் என்பதை விளங்கிக்கொள்ள. நாகூர் சலீம் என்னும் பேரை சின்ன வயதிலிருந்து நான் கேட்டிருக்கிறேன். கல்லக்குடிகொண்ட கருணாநிதி’ என்னும் பாடலைக் கேட்டுவிட்டு இது யார் எழுதியது என வியந்திருக்கிறேன். அதேபோல `வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா’ என்னும் பாடல்.
வைகோ தி.மு.க.வில் இருந்து வெளியேறிய பொழுது தஞ்சை தெருக்கள் முழுக்க அப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அப்பாடல் வைகோவுக்காக எழுதப்பட்ட பாடலல்ல. கண்ணதாசனும் ஈ.வி.கே.சம்பத்தும் தி.மு.க.வை விட்டு வெளியேறியபோது எழுதப்பட்டது. இசைமுரசு நாகூர் ஹனிபா கேட்டுக் கொண்டதற்கு இணங்க சலீம் அய்யாவால் எழுதித் தரப்பட்டது.
‘கப்பலுக்குப் போன மச்சான், கண்ணிறைஞ்ச ஆசை மச்சான்’ என்னும் பாடலை வெளிநாட்டு வேலைக்குக் கணவனை அனுப்பிய எல்லாப் பெண்களும் கேட்டிருப்பார்கள். நாடகத்தில் தொடங்கி தனி இசைத்தட்டுகள் வரை சலீம் அய்யா சலிக்காமல் இயங்கியவர். கம்பதாசனுக்குப் பிறகு இந்தி டப்பிங் பட பாடல்களுக்கு பொருத்தமான வார்த்தைகளைக் கொடுத்தவர். இந்தத் தகவல்கள் எல்லாம் ஏற்கனவே எனக்கு ஓரளவு தெரிந்திருந்ததால் அந்தப் பெயரைக் கேட்டதும் என்னுடைய நிலை தளர்ந்தது.
அசாத்திய சாதனை புரிந்த ஒரு பெரிய மனிதரை அடையாளந் தெரியாமல் அவமதிக்கத் துணிந்துவிட்டோமே எனப் பட்டது. ஒரு மாபெரும் இயக்கம் தன்னுடைய அடையாளங்களாகச் சில பாடல்களைக் கொண்டிருக்கும். கொள்கைகளை விளக்கவும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் அப்பாடல்கள் உதவுகின்றன. இயல்பாகவே கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அப்படியான பாடல்களைப் பாடியே கூட்டத்தை கட்சிப் பிரமுகர்கள் ஆயத்தப்படுத்துவார்கள்.
அவ்வகையில் இன்று வரை தி.மு.க மேடைகளில் பாடப்படும் பல எழுச்சிப் பாடல்களை எழுதியவர் சலீம் அய்யா. வண்ணக் களஞ்சியப் புலவர் பரம்பரையைச் சேர்ந்தவர். முதல் இஸ்லாமியப் பெண் நாவலாசிரியை சித்தி ஜுனைதா பேகம், திரைப்பட வசனகர்த்தா தூயவன் ஆகியோரின் சகோதரர். எழுத்தாளர் நாகூர் ரூமியின் தாய்மாமா. தூயவன், திரைத்துறையில் பிரசித்தி பெற்றிருந்த போதும் கூட சலீம் அய்யா ஏன் கவனிக்கப்படாமல் போனார் என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.
நாகூர் ஹனிபா, காயல் ஷேக் முகமது, குத்தூஸ் போன்றோர் இவர் பாடல்களைப் பாடி இசைத்தட்டுகளாக வெளியிட்டு இருக்கிறார்கள். இதுவரை நூற்றி ஐம்பது பாடகர்களையாவது அறிமுகப்படுத்தியிருப்பார். அவர் பாடலைப் பாடாத பின்னணிப் பாடகர்களே இல்லை எனலாம். இவர் எழுதிய இறைவனை யாருக்குத் தெரியும், நபி இரசூல் இல்லையென்றால்’ என்ற பாடல் ஒருகாலத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. பல்வேறு வாத பக்கவாத மூக்குடைப்புகளுக்குப்பின் சலீம் சொன்னதே சரி என்று ஏற்றுக்கொண்டார்கள்.
இவருடைய ‘காதில் விழுந்த கானங்கள்’ முக்கியமான கவிதைத் தொகுப்புகளில் ஒன்று. இஸ்லாமிய கவிதை மரபின் தொடர்ச்சியை, சொல்லாட்சியை அக்கவிதைகளில் கண்டுகொள்ளலாம். ‘கீழே இறக்கு... மக்கள் குரலுக்கு இணங்கு’ என்று இவர் எழுதிய காங்கிரஸ் எதிர்ப்புப் பாடலைக் கேட்டு அறிஞர் அண்ணாவே புகழ்ந்திருக்கிறார். ஒரு தொலைக்காட்சியில் இவரை நேர்முகம் கண்ட தொகுப்பாளர், ‘இவ்வளவு சாதனை புரிந்த நீங்கள் அடக்கமாகப் பேசுகிறீர்களே’ என்றார்.
உடனே, சலீம் அய்யா சொன்னார். ‘அடக்கமாகப் போகிறவன் அடக்கமாதான் இருக்கணும்.’ அந்த நேர்காணல் வெளிவந்த கொஞ்ச காலத்தில் அவர் மரணமுற்றது குறிப்பிடத்தக்கது. அடக்கம் அமரருள் உய்த்தது. அந்த சந்திப்பு என்னை வெகுவாக புரட்டிப் போட்டது. அவர் பாடல்களைக் கேட்குந்தோறும், எளிய வாழ்வை சாத்தியப்படுத்த இயலாதவர்களால் எதையும் சாதிக்க முடியாது என்றே தோன்றுகிறது.
சலீம் அய்யாவுக்கு நிறைய சாதிக்கவேண்டும் என்னும் வெறியிருந்தது. ஆனாலும், காலம் அவரை திரைத்துறையில் செழித்தோங்க விடவில்லை. பெயர் தெரியாத பல கிளிக்கூண்டுகளில் அவர் பாடல் எழுதிய காகிதங்கள் கசங்கிக் கிழிந்தன. ஏ.கே.வேலன், எம்.ஜி.ஆர் போன்றோர் முயன்றும்கூட அவருக்குத் திரைத்துறை கதவுகள் பெரிதாக திறக்கப்படவில்லை. சத்யராஜ் நடித்த ‘மகா நடிகன்’ திரைப்படத்தில் ஒரு பாடல் வந்திருக்கிறது.
‘தம்பி, ஒங்க பேர தெரிஞ்சிக்கலாமா’ என்ற பெரியவரின் பெயரைக் கடைசிவரை தமிழ் திரைப்பாடல் உலகம் தெரிந்து கொள்ளாமலே போய்விட்டது. எளிமையும் சாந்தமும் ஒரு படைப்பாளனை உருவாக்குகிறது. அதே எளிமையும் சாந்தமும்தான் அவனை அடுத்த கட்டத்திற்கு அழைத்துப் போகாமலும் இருந்து விடுகிறது. அவரைச் சந்தித்துவிட்டு வந்த அந்த இரவில் ஒரு விநோத பயம் என்னைத் தொற்றிற்று.
நாற்பதாண்டுகளுக்குப் பிறகு நாமும் இப்படித்தான் ஏதாவது ஒரு கிளிக்கூண்டில் உட்கார்ந்து, அன்று பாடல் எழுதவரும் புதுப் பையனிடம் ‘தம்பி, ஒங்க பேரத் தெரிஞ்சிக்கலாமா’ என கேட்போமோ? சலீம் அய்யா என்னிடமிருந்து மட்டுமல்ல, யாரிடமிருந்தும் என்றைக்கும் மவுத்தாக மாட்டார்.
(பேசலாம்...)
ஓவியங்கள்: மனோகர்
|