நீதிபதியை மன்னிப்பு கேட்க வைத்த வழக்கறிஞர்!



-கோமல் அன்பரசன்

டி. ரங்காச்சாரியார்

நீதிமன்றத்தில் காரசாரமாக வாக்குவாதங்கள் போய்க்கொண்டிருந்தன. திடீரென வழக்கறிஞரைப் பார்த்து நீதிபதி எல்லை தாண்டிய வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அந்த நேரத்தில் அவை தேவையற்ற சொற்கள் என்பது அங்கிருந்த அத்தனை பேருக்கும் புரிந்தது. இருந்தாலும் சொன்னவர் நீதிபதியாயிற்றே! ஒருவரும் வாயைத் திறக்கவில்லை. தொடர்புடைய வக்கீல் மட்டும் கொதித்தெழுந்தார். வழக்கு ஆவணங்களை எடுத்துக்கொண்டு விறுவிறுவென நீதிமன்றத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

நீதிமன்ற அறையே விக்கித்து நின்றது. ஏனென்றால் இதற்கு முன் எப்போதும் இப்படி நடந்தது இல்லை. வழக்கு விசாரணை நடக்கும்போது வழக்கறிஞர்கள் கோபத்தோடு வெளியேற மாட்டார்கள். எவ்வளவு பெரிய வக்கீலானாலும் நீதிபதி ரசக்குறைவாகப் பேசினால் பொறுத்துத் தான் போவார்கள். இது அந்தப் பதவிக்குரிய ஆகப்பெரும் மரியாதை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இச்சம்பவம் தலைமை நீதிபதியின் கவனத்துக்குச் சென்றது. கோபப்பட்டு சென்றவர் மூத்த வழக்கறிஞர் என்பதால், நடந்ததைப் பற்றி நீதிபதியிடம் அவர் விசாரணை நடத்தினார். இதையடுத்து அந்த நீதிபதி ‘ஈகோ’ பார்க்காமல், மூத்த வழக்கறிஞரை தன்னுடைய அறைக்கு வரவழைத்து, அவருக்கு ஏற்பட்ட வருத்தத்தைச் சரி செய்ய முயன்றார்.

அதற்கு அந்த வக்கீல் என்ன சொன்னார் தெரியுமா? ‘வாய்க்கு வந்தபடி பேசுவது நீதிமன்றத்தில், வருத்தம் தெரிவிப்பது தனி அறையிலா? எங்கே சம்பவம் நடந்ததோ, அங்கே வந்து இதைப்பற்றி பேசுங்கள்’ என்றார். அதன்பிறகு நீதிமன்றத்திலேயே, தான் நடந்துகொண்ட விதத்துக்கு மன்னிப்பு கேட்ட நீதிபதி, சமரசம் ஆனதற்கு அடையாளமாக எழுந்து வந்து வழக்கறிஞரோடு கை குலுக்கினார். இதன்பிறகே வக்கீல் சமாதானமடைந்தார்.

இதில் நீதிபதியின் பெருந்தன்மையும், வழக்கறிஞரின் நியாயமான கோபமும் வரலாறாகப் பதிந்திருக்கிறது. இதற்கு வாழும் சாட்சியான சென்னை உயர்நீதிமன்றம், அத்தகைய கம்பீர வழக்கறிஞரான திவான் பகதூர் டி.ரங்காச்சாரியார் பற்றிய நினைவலைகளை இன்னும் சுமந்தபடியே நிற்கிறது. மேலே படித்த சம்பவம் என்றில்லை. எப்போதுமே சிங்கம் போல வலம் வந்தவர் ரங்காச்சாரியார். நீதிமன்றத்துக்குள் அவர் நுழைகிறார் என்றால், புயல் வருவது போல் இருக்கும்.

வாதம் செய்யும்போது இடி மின்னலோடு வான் மழை பொழிவது போலத் தெரியும். வழக்குக்குத் தேவைப்பட்டால், யுத்த களம் போல நீதிமன்றத்தில் போரிடவும் தயங்க மாட்டார். ஆவேசமாக வாதங்களை முன்வைத்து எதிர்த் தரப்பை மிரள வைத்திடுவார். ஆனால், எத்தகைய கடினமான வாதங்களிலும் நீதிமன்ற மரபுகள், நெறிமுறைகளுக்கு உரிய மரியாதை கொடுப்பார். அதே நேரத்தில் எந்த இடத்திலும் தன்னிலை தாழமாட்டார்.

வாதாடுவதற்கான குறிப்புகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்து தயார் செய்வார். ஒரு முறை அவற்றைப் படித்துவிட்டால் போதும். தன்னுடைய அபார நினைவாற்றல் மூலம் தேவைப்படும் இடங்களில் அதனை எடுத்து வைப்பார். சின்னச் சின்ன தகவல்கள் கூட வழக்கு ஆவணங்களில் எந்தப் பக்கத்தில் இருக்கிறது என்பதைப் பளிச்சென சொல்வார். நீதிமன்றத்தில் நின்றுகொண்டு குறிப்புகளைத் துழாவும் வேலையே ரங்காச்சாரியாரிடம் இருக்காது. கணினியைத் தட்டினால் வந்து விழுவதைப் போல சரமாரியாக தகவல்கள் கொட்டும்.

துணிவு, நினைவாற்றல் தாண்டி தொழில் மீது பெரிய பக்தியும், அசராத உழைப்பும் இவரது வெற்றிக்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன. இல்லையென்றால் தஞ்சாவூர் மாவட்டத்தின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த ரங்காச்சாரி தேசம் முழுக்க புகழ் பெற்ற மனிதராக எப்படி உயர்ந்திருக்க முடியும்? பாபநாசம் வட்டத்தில் கபிஸ்தலத்துக்கு பக்கத்திலிருக்கும் ஓம்பலபாடி எனும் சிற்றூரில் 1865, நவம்பர் 27 ஆம் தேதி பிறந்த ரங்காச்சாரி, கபிஸ்தலம் ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் ஆரம்பப் படிப்பைத் தொடங்கினார்.

சிதம்பரம் பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியிலும், திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியிலும் படித்து முடித்துவிட்டு, சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னையில் சட்டப்படிப்பை உயர்நிலைத் தகுதியோடு முடித்தவுடன் வெள்ளைக்கார பாரிஸ்டரான ஸ்பிரிங் பிரான்சன் என்பவரிடம் தொழில் பழகுநராகச் சேர்ந்தார். 1891ல் வழக்கறிஞராகப் பதிவு பெற்றார். ஹெச்.ஜி. வெட்டர்சன் என்பவரிடம் ஜூனியராகப் பணியாற்றினார்.

அந்தக் காலக்கட்டத்தில் சிவில் வழக்குகளில்தான் பெரும்பாலான வக்கீல்கள் கவனம் செலுத்துவார்கள். கிரிமினல் வழக்குகளில் வாதாடுவது கௌரவக் குறைச்சல் என்று இந்திய வக்கீல்கள் கருதிய நேரத்தில் சிலர் மட்டுமே அத்தகைய வழக்குகளை எடுத்து நடத்தினார்கள். இரண்டு வகை வழக்குகளிலும் வாதாடி சாதித்தவர்கள் ஒன்றிரண்டு பேர்தான். அவர்களில் ஒருவராக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டார் ரங்காச்சாரியார்.

தனித்துவமான, இன்னும் சொல்லப்போனால் கூண்டில் நிற்பவர்களை முன்வைக்கும் கேள்விகள் மூலம் நடுங்கிடச் செய்யும் குறுக்கு விசாரணை உத்தியால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் பெயரெடுத்தார். ராமநாதபுரம் ஜமீன் பாகப்பிரிவினை வழக்கு, மீனவர்  கிறித்துவர் திருமண வழக்கு, கபிஸ்தலம் மோசடி வழக்கு போன்ற எண்ணற்ற வழக்குகள் இவர் பெயர் சொல்லும்.

அதிலும் சி.கே.என் & சன்ஸ் வழக்கு, சட்டப் புத்தகங்களில் பாடமாகி இருக்கிறது. சென்னையில் பெரியளவில் வணிகம் செய்து வந்த சி.கே.நாராயண அய்யர் & சன்ஸ் என்ற நிறுவனம், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியை ஏமாற்றி பணமோசடி செய்தது என்பதே அந்த வழக்கு. இதில் வணிக நிறுவனத்துக்காக வாதாடிய ரங்காச்சாரியார் நடத்திய குறுக்கு விசாரணைகள் புகழ் பெற்றவை. வங்கியின் உயரதிகாரியை அவர் திணறடித்த விதம், குறுக்கு விசாரணையைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைக்கும் வக்கீல்கள் அனைவருக்கும் அற்புதமான பாடம்.

ரங்காச்சாரியின் வாதத்திறனால் அழியாப் புகழ் பெற்றது இந்த வழக்கு. இதுபோலவே வழக்கறிஞர் ஒருவர் தன் கட்சிக்காரரிடம் தவறாக நடந்துகொண்டால், தொழில் செய்யும் உரிமம் பறிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கும் சட்டத்துறை வரலாற்றில் புகழ் பெற்றது. ரங்காச்சாரி வெறும் வழக்கறிஞராக மட்டும் முத்திரை பதிக்கவில்லை; அன்றைய பெரும்பாலான வக்கீல்களைப் போல அரசியலிலும் கலக்கினார். சென்னை மாநகராட்சி கவுன்சிலராக தொடர்ந்து 15 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.

சென்னை மாநகராட்சியின் பிரதிநிதியாக தமிழக சட்டமேலவையில் 1916 முதல் நான்கு ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். இன்றைய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு முன்னோடியான டெல்லி சென்ட்ரல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலின் உறுப்பினர் தேர்தலில் கடும் போட்டிக்கிடையே சுயராஜ்ஜியக் கட்சியின் சார்பில் நின்று வெற்றி பெற்றார். டெல்லி மேலவையில் ரங்காச்சாரியின் உரைகளைக் கவனித்த ஆங்கிலேயர்கள் அவரது புத்திக்கூர்மையை உணர்ந்து கொண்டனர். அரசு நிர்வாகம் தொடர்பான பல்வேறு கமிட்டிகளுக்கு ரங்காச்சாரி நியமிக்கப்பட்டார்.

பிரிட்டனின் ஆளுகையில் இருந்த இந்தியாவுக்கு ‘டொமினியன் அந்தஸ்து’ எனப்படும் சுயாட்சி உரிமை வழங்கப்படுவதற்கு டெல்லி மேலவையில் ரங்காச்சாரி கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானமே முக்கிய காரணம். ‘நீங்கள் எங்களை அழுத்த, அழுத்த எவ்வளவு நாட்களுக்கு பொறுத்திருக்க முடியும்? ஒரு நாள் உங்களுடைய ஆதிக்கம் உடைந்துவிடும். இங்கிலாந்தில் மக்கள் அனுபவிப்பதைப் போன்று, இந்தியர்களும் இந்தியாவில் மகிழ்ச்சியைப் பெற வேண்டும்’ என்று அருமையான உவமைகளோடு அத்தீர்மானத்தை முன்மொழிந்து ரங்காச்சாரியார் பேசினார்.

நீதிமன்றங்களைப் போன்றே தன்னுடைய கம்பீரத்தால் மக்கள் மன்றங்களையும் வயப்படுத்திய ரங்காச்சாரியார், விடுதலை வீரரான பகத்சிங் அநியாயமாக தூக்கிலிடப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்துப் பேசி டெல்லி மேலவையில் இருந்து வெளிநடப்பு செய்தவர். இந்திய திரைப்படத் தொழிலைப் பற்றி ஆராய்வதற்கு 1928ல் அமைக்கப்பட்ட ‘இண்டியன் சினிமாட்டோகிராஃப் கமிட்டி’க்கு இவர்தான் தலைவர். ஒட்டுமொத்த இந்திய திரையுலகைப்பற்றித் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு ரங்காச்சாரி கமிட்டியின் அறிக்கை இன்றைக்கும் பெரும் புதையல் போன்றது. சிறிது காலத்தில் டெல்லி மேலவையின் துணைத்தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாக வெளிநாடுகளில் நடந்த மாநாடுகளில் பங்கேற்று சிறந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார். இந்திய பண்பாட்டின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த ரங்காச்சாரியார், பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதில் அக்கறை காட்டுவார். ஆஸ்திரேலியாவில் ஒரு மாநாட்டுக்கு ரங்காச்சாரியார் சென்றபோது, ‘தி சிட்னி மார்னிங் ஹெரால்டு’, ‘தி கான்பரா டைம்ஸ்’ பத்திரிகைகள் போட்டி போட்டுக்கொண்டு அவரை வர்ணித்தன.

‘அழகிய, கண்ணுக்கினிமையான இந்தியப் பிரதிநிதி’, ‘இந்திய உடையில், தலையில் தலைப்பாகையும், நெற்றியில் திருநாமத்துடனும் இருந்த அவரின் மூக்குக் கண்ணாடி மட்டும் வித்தியாசமாக இருந்தது’, ‘இந்தியப் பிரதிநிதியின் தீர்க்கமான பேச்சும், கண்ணியமான செயல்பாடுகளும் மாநாட்டில் பங்கேற்றவர்களைக் கவர்ந்தன’ என்றெல்லாம் அப்பத்திரிகைகள் எழுதியிருந்தன. மாநாட்டில் பங்கேற்றதோடு இல்லாமல், விவசாய விரும்பியான அவர், குயின்ஸ்லாண்ட் பகுதியில் செயல்படுத்தப்பட்டிருந்த நவீன வேளாண் முறைகளைச் சென்று பார்த்தார்.

அதோடு, ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான நிறவெறி சட்டங்களைப் பற்றி அந்நாட்டு பிரதமரிடம் எடுத்துச் சொல்லிவிட்டுத் தான் ரங்காச்சாரி அங்கிருந்து இந்தியா திரும்பினார். பின்னர், டெல்லி மேலவையின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் சகோதரர் விட்டல்பாயிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

வழக்கறிஞராக, அரசியல் தலைவராக பெருமைகளைக் குவித்தவர், குடும்ப வாழ்விலும் சிறந்த மனிதராகத் திகழ்ந்தார். 14 வயதில் பொன்னம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். மனைவியே தமக்கு அதிர்ஷ்டங்களைக் கொண்டு வந்ததாகக் கூறிய ரங்காச்சாரி, அவரை மனமார நேசித்தார். சென்னை புரசைவாக்கம் ரித்தர்டன் சாலையில் அமைந்த ‘ரித்தர்டன் ஹவுஸ்’ என்ற பங்களாவில் 6 ஆண்கள், 4 பெண்கள் என 10 குழந்தைகளுடன் கலகலப்பான குடும்பத்தோடு வாழ்ந்தார். பரந்து விரிந்த வீடு எப்போதும் விருந்தினர்களாலும் நண்பர்களாலும் நிரம்பி வழிந்தது.

அன்றைய மெட்ராஸில் இங்கே வந்து விருந்து சாப்பிடாத பிரபலங்களே இல்லை. அதிலும் இந்த வீட்டில் வழங்கப்படும் தேநீர் தனிச் சுவையோடு இருந்ததால், அவரது முதல் எழுத்தான (இனிஷியல்) ‘டி’ என்பதை ‘டீ’ ரங்காச்சாரி என நண்பர்கள் செல்லமாகக் கூப்பிடுவதுண்டு. மன்றங்களில் சிங்கமாக கர்ஜித்து, பேச்சுத்திறத்தாலே எதிரிகளை வாயடைத்துப் போகச் செய்தவருக்கு பக்கவாத நோய் தாக்கி நடக்கவும் பேசவும் முடியாமல் போனது பெருங்கொடுமை!

நாட்டின் விடுதலை மீது பேரார்வம் கொண்டிருந்த ரங்காச்சாரியார், தேசம் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதைப் பார்ப்பதற்கு முன் 1945ல் கண்மூடிப்போனார். மறக்கமுடியாத மனிதராக காலக்கல்வெட்டில் பதிந்து போனார்.

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்

மயிலாப்பூரா? எக்மோரா?

பழைய மெட்ராஸில் மயிலாப்பூரும் எழும்பூரும் (எக்மோர்) பெரிய வக்கீல்கள் வசிக்கிற முக்கிய பகுதிகளாகத் திகழ்ந்தன. இரண்டு பகுதி வக்கீல்களுக்கும் இடையே போட்டா போட்டி இருந்தது. அக்கப்போரான போட்டி அல்ல; ஆரோக்கியமான தொழில் போட்டியின் அடையாளமாக இரு பகுதிகளும் மதிக்கப்பட்டன. அந்த வகையில் ரங்காச்சாரியார் சம்பாதித்து முதலில் வாங்கிய வீடான ‘வேத விலாஸ்’, எழும்பூரில் அமைந்துவிட்டது. அதனால் ரங்காச்சாரி ‘எக்மோர்’ வக்கீலாகவே பார்க்கப்பட்டார்.

தாத்தா போல ஆக ஆசை!

ரங்காச்சாரியாரின் மகன் கிருஷ்ணமாச்சாரியின் மகன்தான் பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜி. தாத்தா ஆஸ்திரேலியாவின் கான்பரா நகருக்கு சென்று வந்ததன் நினைவாக பெயர் சூட்டிய எழும்பூர் பாந்தியன் சாலை, ‘கான்பரா’ இல்லத்தில் வாழ்ந்த பாலாஜிக்கு தாத்தாவைப் போன்று பெரிய வக்கீலாக வேண்டுமென்று ஆசை. என்ன காரணத்தாலோ அது நனவாகவில்லை. நீதிமன்றக் காட்சியால் புகழடைந்த ‘விதி’ போன்ற படங்களை எடுத்து திருப்தியடைந்தார்.

சென்னையில் இன்று பிரபலமாக இருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளியின் நிறுவனர் ராஜலெட்சுமி பார்த்தசாரதி (ராஷ்மி), ரங்காச்சாரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ரங்காச்சாரியின் மைத்துனரான வெங்கட வரதாச்சாரியார் வழக்கறிஞராகப் பெயரெடுத்தார். பேரன்களில் ஒருவரான ஆர்.சுந்தர்ராஜன் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளார்.

4 பெண்களுக்கும் 4 வீடுகள்

ரங்காச்சாரியார் தன்னுடைய பெண் குழந்தைகளான வேதவல்லி, கனகவல்லி, அமிர்தவள்ளி, குமுதவள்ளி ஆகிய 4 பேருக்கும் தனித்தனியாக வீடுகளை வாங்கிக் கொடுத்திருந்தார். அந்த வீடுகளுக்கு, ‘வேதவிலாஸ்’, ‘கனகவிலாஸ்’, ‘அமிர்தவிலாஸ்’, ‘குமுதவிலாஸ்’ என்று பெயர்களையும் சூட்டினார்.

நூற்றாண்டு கடந்த பள்ளி

ரங்காச்சாரியார் கொடுத்த 50 ஏக்கர் கொடையினால் விரிவாக்கம் செய்யப்பட்ட புகழ் வாய்ந்த மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளி, இன்றும் ‘திவான் பகதூர் டி.ரங்காச்சாரியார்’ ( டி.பி.டி.ஆர்) என்ற பெயரைச் சேர்த்தே அழைக்கப்படுகிறது. 1901ல் தொடங்கப்பட்ட இப்பள்ளிக்கு உதவியதுடன் கல்விக்கும், கோயில்களுக்கும் ரங்காச்சாரியார் நிறைய உதவிகளைச் செய்துள்ளார். தன்னுடைய உயிலிலும் மரண சாசனத்திலும் கூட தான, தர்மத்துக்காக சொத்துகளை அளித்துள்ளார்.

தென்கலையா? வடகலையா?

வைணவர்களில் வடகலை, தென்கலை என இருந்த இரு பிரிவினர் மோதிக்கொண்ட வழக்கு நீதிமன்றம் வரை வந்தது. அப்போது ரங்காச்சாரியின் ஜூனியரான வடகலை பிரிவைச் சேர்ந்த ஒருவர், ‘நீங்கள் தென்கலைக்குத்தான் ஆதரவாகச் செயல்படுகிறீர்கள்’ என்று குற்றஞ்சாட்டினார். ‘அப்படி எல்லாம் இல்லை. என்னுடைய தாயார் கூட வடகலையைச் சேர்ந்தவர்தான். அதற்காக அவர் மீது கெட்ட எண்ணம் கொண்டிருக்கிறேனா? வடகலை பிரிவைச் சேர்ந்தவர்கள் வந்து கேட்டால், தொழில் தர்மப்படி அவர்களுக்காகச் செயல்படுவேன்’ என்று ரங்காச்சாரி பதில் கூறினார்.