அஜித் ரசிகர் தயாரித்த படத்தில் விஜய் ரசிகர்கள்!



‘‘ஒவ்வொரு பொங்கலும் திருவிழாதான். அன்னிக்கி எங்க ஊர்ல ரிலீசாகிற எல்லா படங்களையும் பார்த்துடுவேன். இப்ப நான் இயக்கியிருக்கிற படமும் பொங்கலுக்கு வெளியாகுது. ஃபெஸ்டிவல் ரிலீஸ். நினைச்சுப் பார்க்கவே பிரமிப்பா இருக்கு. பெரிய பெரிய டைரக்டர்களோட இந்த கனவு எனக்கு ஈசியா நடந்திருக்கு...’’ நம்ப முடியாத ஆச்சர்யத்தில் மிதக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ். ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘புரூஸ் லீ’யின் இயக்குநர்.

திருச்சியைச் சேர்ந்த இவர் குறும்படம் வழியே பெரும் படத்துக்கு வந்திருக்கிறார். ‘பசங்க’ பாண்டிராஜ் சீடர். ‘‘ஜி.வி.பிரகாஷுக்கும் புரூஸ்லீக்கும் என்ன சம்பந்தம்னு கேள்வி எழும். என்னோட பக்கத்து வீட்டுப் பையன்தான் இந்தக் கதைக்கு இன்ஸ்பிரேஷன். அவனுக்கு கிரிக்கெட்டே தெரியாது. ஆனா, அவன் பெயர் சச்சின். அதே மாதிரி சண்டையே போடத் தெரியாத ஜி.வி.பிரகாஷ்தான் ‘புரூஸ்லீ’.

இந்தப் படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும். பில்டப் பண்றேன்னு நினைக்காதீங்க பாஸ். ஹீரோவுக்கு வேலை வெட்டி இல்ல. அவனை ஒரு பொண்ணு லவ் பண்றா. ஹீரோ கூடவே ஒரு ஃப்ரெண்ட். கேட்கும்போதே ‘அட... வித்தியாசமா இருக்கே’னு தோணுது இல்லையா? படமும் அப்படித் தான் ஃப்ரெஷ்ஷா இருக்கும்!’’ என்று சிரிக்கிறார் பிரசாந்த் பாண்டியராஜ்.

‘‘இப்படி ஓபனா பேசறீங்களே..?”
‘‘அதுல என்ன தப்பு ப்ரோ? படத்து மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ ரிலீஸுக்கு முன்னாடியே ஜி.வி.பிரகாஷுக்கு இந்தக் கதை தெரியும். வழக்கமான ஃபார்முலாவுக்குள்ள திரைக்கதையை எப்படி சுவாரஸ்யப்படுத்தி இருக்கோம்னு இன்ச் பை இன்ச் அவர் அறிவார். அந்தளவுக்கு ஃப்ரேமுக்கு ஃப்ரேம் ஆச்சர்யங்கள் கொட்டிக் கிடக்கு. ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், முனீஸ்காந்த்னு ஒரு பட்டாளமே ரசிகர்களை சிரிக்க வைக்க வர்றாங்க. ஹீரோயின் கீர்த்தி ஹன்பன்டா. கன்னடம், தெலுங்குல பட்டைய கிளப்பறவங்க.’’

‘‘ஜி.வி.பிரகாஷ்தான் ஹீரோயினை சிபாரிசு செய்தாரா?’’
‘‘விட்டா கிசுகிசுவே எழுதிடுவீங்க போலிருக்கே! தயாரிப்பாளர் செல்வா, நான், ஜி.வி.பிரகாஷ்... மூணு பேருமே ஹீரோயினா யாரை செலக்ட் பண்ணலாம்னு தனித்தனியா லிஸ்ட் தயாரிச்சோம். எங்க மூணு பேர் பட்டியல்லயும் கீர்த்தி ஹன்பன்டா இருந்தாங்க! இவங்க நடிச்ச கன்னடப் படத்துக்கு ஜி.வி. மியூசிக் பண்ணியிருக்கார். ஸோ, நீங்களே பேசுங்கனு பொறுப்பை அவர்கிட்ட ஒப்படைச்சோம்.

இதுதான் நடந்தது. பட், சும்மா சொல்லக் கூடாது. ரொம்ப டெடிகேட்டடான நடிகை. சாம்பிளுக்கு ஒரு இன்ஸிடென்ட் சொல்றேன். கடைசி நாள் ஷூட்டிங். மறுநாள் கன்னடப் படத்துல அவங்க நடிச்சாகணும். இந்தச் சூழ்நிலைல திடீர்னு அவங்களுக்கு ஃபேஸ் அலர்ஜி. குறைஞ்சது மூணு மணி நேரமாவது ரெஸ்ட் தேவைன்னு டாக்டர் சொல்லிட்டார். ‘சாரி டாக்டர். இன்னிக்கி நான் நடிக்கலைனா அப்புறம் பட ரிலீஸ் தாமதமாகிடும். பரவால்ல நான் பார்த்துக்கறேன்’னு ஸ்பாட்ல வந்து நின்னாங்க.”

‘‘ஜி.வி.பிரகாஷை எப்படி பிடிச்சீங்க?”
‘‘காமெடி நடிகர் பாலசரவணன்தான் ‘திருடன் போலீஸ்’ தயாரிப்பாளர் செல்வகுமாரையும் ஜி.வி.யையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். செல்வகுமாரோட ரவிச்சந்திரன், விட்டல்னு ரெண்டு பேரும் சேந்து இந்தப் படத்தை தயாரிச்சிருக்காங்க. கேமராமேன் பி.வி.ஷங்கர் உட்பட எல்லா டெக்னீஷியன்களுமே என்னோட குறும் படத்துல ஓர்க் பண்ணினவங்க.’’

BEHIND THE SCENES

* முழுக்க முழுக்க சென்னையிலேயே மொத்த படப்பிடிப்பும் நடந்துள்ளது. திட்டமிட்டபடி 50 நாட்களில் முழுப் படத்தையும் முடித்துள்ளனர்.
* படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ் என்பதால் மூன்று பாடல்களை அரை மணி நேரத்தில் கம்போஸ் செய்து அசத்தியிருக்கிறார்.
* ஒரு லவ் ஸாங்கை அவுட்டோர் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே ஷூட் செய்துள்ளனர்.
* சிம்பு பாடிய ஒரு குத்துப் பாடலை மார்க்கெட் செட் போட்டு படமாக்கியிருக்கிறார்கள்.
* கிளைமேக்ஸுக்காக பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது.
* படத்தின் தயாரிப்பாளர் தீவிரமான அஜித் ரசிகர். தன் மனம் கவர்ந்தவர் நடிக்கும் படத்தை, தான் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் திரைத்துறைக்கே வந்தாராம். அப்படிப்பட்டவர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் ஹீரோவும், இயக்குநரும் விஜய் ரசிகர்கள்! மட்டுமல்ல, விஜய் கட் அவுட்டுக்கு ஹீரோ பாலபிஷேகம் செய்வது போன்ற ஒரு காட்சிக்காக மட்டும் இரண்டு லட்சம் ரூபாயை செலவு செய்திருக்கிறார் அஜித் ரசிகரான புரொட்யூசர்.  

-மை.பாரதிராஜா