நியூஸ் வே



* டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் உலகில் இரண்டாம் இடம் பிடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின்! 37 டெஸ்ட்டில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். இந்தியாவின் 500வது டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து பத்து விக்கெட்டுகள் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட அஸ்வினை, ‘விலைமதிப்பற்ற கிரிக்கெட் வீரர்’ எனப் புகழ்ந்திருக்கிறார் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி!

* இதை சாதனை என வரையறுப்பதா என்று தெரியவில்லை. ஸ்காட்ச் விஸ்கியை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது இந்தியா. பிரான்ஸ் முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்தியா பணக்கார நாடாகி வருகிறதோ!

* மத்திய சிறுதொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்‌ரா இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும் சமீபகாலமாக நிருபர்களைச் சந்திக்க மறுக்கிறார். விஷயம் வேறொன்றுமில்லை... ‘75 வயது தாண்டிய யாரும் மத்திய அமைச்சரவையில் இருக்க மாட்டார்கள்’ என சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து சில அமைச்சர்கள் பதவி விலகினார்கள். மிஸ்‌ராவுக்கு இப்போது வயது 75 ஆகிவிட்டது. ‘‘அந்த விதியை மதித்து நீங்களாகப் பதவி விலகுவீர்களா?’’ எனக் கேட்டு அவரை சங்கடப்படுத்துகிறார்கள் என்பதே காரணம்.     

* தி72 வயதில் கேரள முதல்வராகி இருக்கும் பினராயி விஜயன், இந்த வயதில் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்கிறார். 

* லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் இப்போது பீகாரின் துணை முதல்வராக இருக்கிறார். பதவி ஏற்றதுமே, ‘‘எங்காவது சாலைகள் மோசமாக இருந்தால், அதை போட்டோ எடுத்து எனக்கு அனுப்புங்கள். சாலைகளை சரிசெய்ய உடனே நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்று சொல்லி, ஒரு வாட்ஸ்அப் நம்பரைக் கொடுத்திருந்தார். ஆனால் அதற்கு ரோடு படங்கள் வருவதில்லை. பல பெண்கள் தங்களின் புகைப்படங்களை அனுப்பி, ‘‘என்னைக் கல்யாணம் செய்துகொள்வீர்களா?’’ எனக் கேட்கிறார்களாம். இந்த 26 வயது பேச்சுலர், ‘‘எங்க அப்பா, அம்மா பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன்’’ என்கிறார்.

* இதோ... இந்தியாவின் அடுத்த ராக்கெட் ‘பி.எஸ்.எல்.வி சி 35’ விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்துள்ளது. பிரதான செயற்கைக்கோளை சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்திய பிறகு ராக்கெட்டின் எஞ்சின் நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும் இயக்கி வேறொரு சுற்றுப்பாதையில் மற்ற செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டன. இரண்டு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவது இந்திய ராக்கெட்டுகளில் இதுவே முதல்முறை. இந்திய செயற்கைக்கோள்களோடு சேர்த்து மொத்தம் 8 செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது.

* ‘ரியோ’ பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு அனுப்பும் வாழ்த்துக் கடிதங்களை அவரிடம் சேர்ப்பதை ஒரு சேவையாகச் செய்வதாக அஞ்சல் துறை அறிவித்திருந்தது. சேலம் தபால் அலுவலகத்துக்கு மட்டும் மாரியப்பனை வாழ்த்தி வந்த கடிதங்களின் எண்ணிக்கை இருபது ஆயிரமாம். அத்தனை கடிதங்களையும் அவரிடம் டெலிவரி செய்தாயிற்று!

* பிரியங்கா அரசியலுக்கு வருவது பற்றி முதல்முறையாக மனம் திறந்திருக்கிறார் ராகுல் காந்தி. ‘‘நான் வேறு யாரையும் நம்புவதைவிட மிக அதிகமாக எனது சகோதரியை நம்புகிறேன். அவர் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் விரும்புகிறேன். ஆனால் எப்போது, எப்படி, எந்த அளவுக்கு அரசியல் பணிகளைச் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டியது அவர்தான்’’ என்கிறார் ராகுல்.

* ரயில் நகரும் வேளையில் தவறி விழுந்து பிளாட்பாரத்திற்கும் தண்டவாளத்துக்கும் இடையில் சிக்கி சாக இருந்த ஒரு பெண்ணை அதிரடியாகக் காப்பாற்றிய போலீஸ்காரர் ஒருவரைப் பற்றிய வீடியோ இப்போது செம வைரல். புனே அருகேயுள்ள லோனாவ்லா ரயில் நிலையத்தில் ஒரு பெண் அவசரத்திற்காக கழிப்பறை தேடி அலைந்திருக்கிறார். அப்போது மும்பை-காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு வந்து சேர, அதனுள்ளே ஏறி கழிப்பறைக்குச் சென்றவர், திடீரென ரயில் கிளம்பும் சத்தம் கேட்டு வேகமாக இறங்கியிருக்கிறார்.

கால்கள் தடுமாறி, தண்டவாளத்தின் அடியில் அந்தப் பெண் தவறி விழ, அங்கு பணியில் இருந்த பவன் டயதே என்ற போலீஸ்காரர் புத்திசாலித்தனமாக அருகே சென்று அந்தப் பெண்ணை சாமர்த்தியமாக இழுத்துக் காப்பாற்றினார். இந்தச் சம்பவத்தை முகம் தெரியாத யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட, உடனே பரபரப்பாகிவிட்டது. இப்போது, பவன் டயதேவுக்கு நடிகர்கள் உள்பட பலரும் ராயல் சல்யூட் அடித்து வருகின்றனர்.

* பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி ட்வென்ட்டி 20 போட்டிகளிலும் ஓய்வுபெற வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நினைக்கிறது. கடைசியாக ஒரு மேட்ச் விளையாடினால், அதில் அவர் விடை பெறலாம் என பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், ‘‘நான் இன்னும் விளையாடும் தகுதியோடு இருக்கிறேன்’’ என முரண்டு பிடிக்கிறார் அஃப்ரிடி. இந்நிலையில் ஒரு பிரஸ்மீட்டில் ‘‘நீங்கள் எந்த அளவுக்கு உடல் தகுதியோடு இருக்கிறீர்கள்?’’ என ஒரு நிருபர் கேட்க, ‘‘உங்களைப் போல 10 ஆசாமிகளை தனி ஆளாக சமாளிப்பேன்’’ என முஷ்டியை உயர்த்தி ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் அவர்.

* ‘இனி ஆன்லைனில் அப்பாவை வாங்கலாம்’ என்ற  அதிரடியான  அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் லண்டனில் வசிக்கும் இந்திய மருத்துவரான கமால் அஹுஜா. பொதுவாக குழந்தை இல்லாத பெற்றோர்கள் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக உயிரணு வங்கியையோ அல்லது அந்த வங்கியைக் கையாளும் மருத்துவமனைகளையோதான் அணுகுவார்கள். உயிரணு கிடைக்க  பல மாதங்கள் தவம் கிடக்கவேண்டும்.

இப்போது  லண்டன் ஸ்பெர்ம் வங்கியின் அறிவியல் துறை இயக்குனரான டாக்டர் கமால் ‘ஆர்டர் எ டாடி’ (order a daddy) எனும் ஒரு ஆண்ட்ராய்டு ஆப்பை உருவாக்கி அதன்மூலம் குழந்தையில்லாத தாய்மார்களுக்கு குழந்தை வரத்தைக் கொடுக்கிறார். ஸ்பெர்ம் வங்கியில் பதிவு செய்திருக்கும் ஆணின் நிறம், உயரம், கண்ணின் வடிவம் போன்ற பல்வேறு குணங்களின் அடிப்படையில் தாய்மார்கள் தனக்குத் தேவையான குழந்தை எப்படி இருக்கவேண்டும் என்று ஆலோசித்து இந்த ஆப்பில் உள்ளவர்களை  செலக்ட் செய்யலாம் என்பதே இதன் சிறப்பம்சம். உலகிலேயே ஸ்பெர்ம் வங்கிகளுக்கான முதல் ஆப் இதுதான் என்பது ஹைலைட்!