எச்சரிக்கை... கண்ணுக்குத் தெரியாத யாரோ உங்களைக் கண்காணிக்கிறார்கள்!



முன்பு தியேட்டரில் டிக்கெட் வாங்க க்யூவில் நின்றதைப் போல இப்போது ‘சைபர் க்ரைம்’ போலீஸில் புகார் செய்ய நின்றுகொண்டிருக்கின்றனர். டெக்னாலஜி வளர வளர அதனுடன் சேர்ந்து பிரச்னைகளும் வளர்கின்றன. ஆபாசப் படம், மிரட்டல் எஸ்எம்எஸ், கிரெடிட் கார்டு மோசடி என டிஜிட்டல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதற்கு பலியானவர்கள் ஒரு பக்கம் இருக்க, பிரச்னையை வெளியே சொல்ல முடியாமல் புழுங்கித் தவித்துக்கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

‘‘இந்தியாவில் 2014ம் ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாக 2015ல்  சைபர் க்ரைம் நிகழ்ந்திருக்கிறது. இந்த அனைத்திற்குமே ‘நாம் செய்யும் தவறுகள்’தான்  முதல் காரணம்”  என்கிறார் சென்னை பல்கலைக்கழக குற்றப்பிரிவு விரிவுரையாளர், முனைவர் எஸ்.லதா. சைபர் உலகம் குறித்தும், இணையத்தில் நாம் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது குறித்தும் புரிந்துகொள்ள, நாம் செய்யும் தவறுகளை உணர வேண்டும். அதிர வைக்கும் தகவல்களோடு நமக்கு அதை உணர்த்துகிறார் லதா.

* நாம்தான் எல்லா தவறுகளுக்கும் காரணமா? எப்படி?
‘‘ஒரு உண்மையைச் சொல்லுங்க. உங்களது பக்கத்து வீட்டு நண்பர்கிட்ட ‘நான் இந்த தியேட்டர்ல இந்தப் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்’னு சொல்வீங்களா? ஆனால் ‘‘Watching ‘KABALI’ In Luxe’’ என ஆயிரம் பேர் அறிய ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவோம். அந்த நிமிடம் நாம் என்ன செய்கிறோம், எங்கு இருக்கிறோம் என்பது குறித்த மொத்த விபரங்களையும் யாரென்றே தெரியாத ஆயிரக்கணக்கானவர்களுக்கு அம்பலப்படுத்தி, நம்முடைய பாதுகாப்புக்கு நாமே உலை வைக்கிறோம்.

இந்த உலகத்துல எதுவும் எதற்காகவும் இலவசமாகக் கிடைக்காது என்பதை நம் மனது ஏற்றுக்கொள்வதே இல்லை. அதனால்தான் ‘ஐபோன்  வெல்லுங்கள்’ என்று  ஒரு லிங்க் வந்தவுடன் எதைப் பற்றியும்  யோசிக்காமல் சகட்டுமேனிக்கு க்ளிக் செய்து நம்மைப் பற்றிய  முழு விபரங்களையும் மூன்றாம் நபர் ஒருவருக்குத் தந்து விடுகிறோம். இப்படி நாம் குறி வைக்கப்பட 60 சதவீதம் நாம்தான் காரணம். நாம்  பணிபுரிகிற நிறுவனம், நண்பர்கள், சொந்த பந்தம்... இப்படி நிறைய சொல்லிக்கிட்டே போகலாம்!”

* நாம் வேலை செய்யற நிறுவனம் கூடவா இந்த சிக்கலுக்குக் காரணமா இருக்கு?
“நிச்சயமா! இன்னைக்கு நிறைய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களோட பயணங்கள் குறித்த வேலைகள், ஐ.டி கார்டு தர்றது, ஆபீஸ் அக்ஸெஸ் கார்டு தர்றது, ஏன்... விசிட்டிங் கார்டுகளுக்குக் கூட வெளி ஏஜென்சிகள் கிட்டதான் பொறுப்பை ஒப்படைக்கிறாங்க. இதனால ஒட்டுமொத்தமா எல்லோருடைய அடிப்படை விபரங்களும் இன்னொரு ஏஜென்சிக்குப் போயிடுது. அந்தக் குறிப்பிட்ட ஏஜென்சி உங்க விபரங்களை இன்னொரு விளம்பரக் கம்பெனிக்கோ, எம்.என்.சி போன்ற நிறுவனங்களுக்கோ தரமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?’’

* இளைய தலைமுறை எந்தெந்த விஷயங்கள்ல ஜாக்கிரதையா இருக்கணும்?
“முக்கியமா ஃப்ரீ வைஃபி. நாம எல்லாருமே ‘ஆட்டோ டவுன்லோடு ஆன் ஃப்ரீ வைஃபி’னுதான் மொபைல்ல ஆப்ஷன் போட்டு வெச்சிருப்போம். அத முதல்ல எடுத்துவிடணும். ஆட்டோ டவுன்லோடிங்ல வாட்ஸ்அப் புகைப்படம், வீடியோ, ஆப்ஸ் அப்டேட் மட்டும் இல்லாமல், தானாகவே  உங்க மொபைல்ல ஒரு ஹைடிங் ஆப் கூட இன்ஸ்டால் பண்ண முடியும். முக்கியமா அந்த ‘ஆப்’பை உங்களுக்கே தெரியாம மறைவா வெச்சிருந்து, உங்க கேமரா ஆப்ஷன் முதல் மெசேஜ் ஆப்ஷன் வரைக்கும் இன்னொரு தனி நபர் ஆபரேட் பண்ண முடியும். அது மட்டுமல்லாமல் டேட்டா சேமிக்கும் மக்கள்னே ஒரு குரூப் இருக்காங்க.

இவங்க வேலையே ஒரு தனி நபரோட முழு விபரங்களை எடுத்துக்கொடுக்கிறதுதான். ஏன்... நாம ஏதாவது கண்காட்சிக்கோ, பொருட்காட்சிக்கோ போயிட்டு அங்க லக்கி ட்ராப் பாக்ஸ்ல நம்ம பேரு, மொபைல் நம்பர்லாம் எழுதிட்டு வர்றோமே, அதில் உங்க விபரங்கள் யார் யாராலோ சேமித்து யார் யார் கைக்கோ போகுது!’’

* ஒரு நபர் தன்னோட புகைப்படம் தவறா சித்தரிக்கப்பட்டாலோ, அல்லது பணத்தைப் பறிகொடுத்தாலோ எப்படி சைபர் க்ரைம், அல்லது காவல் துறையை அணுகணும்?
“ஒருவேளை ஒரு பொண்ணோட புகைப்படம் தவறா சித்தரிக்கப்பட்டு இருந்தா முதல்ல பயப்படக் கூடாது. ‘அய்யய்யோ! நம்மள இப்படி செய்திட்டானே’ன்னு யோசிக்கவே கூடாது. அந்த அக்கவுன்ட்டை ப்ளாக் பண்ணணும். அப்புறம் ரிப்போர்ட் குடுக்கணும். முடிஞ்சா உங்க அம்மா, அப்பா அல்லது நம்பிக்கையான நண்பர்கள் கிட்ட சொல்லணும். நீங்க பயந்தா அடுத்து பிளாக்மெயில் ஆரம்பிக்கும். சைபர் உலகக் குற்றவாளிகளைப் பிடிக்க முடியும். பாதிக்கப்பட்டவங்க புகார் கொடுத்தா மட்டும்தான் அது சாத்தியம். இணையத் திருடன், சாதாரண ஏரியா திருடனோ... இல்ல, பிக்பாக்கெட்டோ இல்லை. எல்லாரும் போலீஸைவிட புத்திசாலிகள். இவங்க எல்லாரும் படிச்ச, அதிமேதாவிகளான குற்றவாளிகள். அதனால நாமதான் பாதுகாப்பா இருக்கணும்.”

* அப்போ நம்ம மொபைலே நமக்கு வில்லனா?
“ஒரு மொபைல் தொலைஞ்சிட்டா முதல்ல உங்க முகநூல், மெயில்னு எல்லா கணக்குகளோட பாஸ்வேர்டையும் மாத்துங்க. ஒரு மணி நேரத்துக்குள்ள புகார் கொடுங்க. இன்னைக்கு வண்டி காணாமப் போறத விட ஆபத்து மொபைல் காணாமப் போறதுதான்! நம்மள ஒவ்வொரு நிமிஷமும் யாரோ கண்காணிச்சிக்கிட்டு இருக்காங்கங்கற எண்ணம் எப்போதும் மனசுல இருக்கணும். இவங்ககிட்ட இருந்து நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்!’’

இணைய அச்சுறுத்தல்

குழந்தைகள் இணைய அச்சுறுத்தலுக்கு ஆட்படுகின்றனர். அதாவது இரண்டில் ஒரு குழந்தை மோசமான சூழலை சந்திக்கிறது.

54% பெண் குழந்தைகள் இணைய தாக்குதல்களில் பாதிக்கப்படுகிறார்கள்

எது மோசமான சூழல்?

* தவறான இணைய லிங்குகளுக்கு வழிகாட்டப்படுவது
* ஆன்லைனில் ஏமாற்றப்படுவது,  மிரட்டப்படுவது
* மெயில், ஃபேஸ்புக் பாஸ்வேர்டு திருடப்படுவது
* ஆபாச தளங்கள் திடீரென திரையில் தோன்றுவது

பள்ளி வயதிலேயே இணைய அச்சுறுத்தலை சந்தித்தவர்கள்

குழந்தைகள் இங்கு பாதிக்கப்படுவது மட்டுமில்லை, 34% குழந்தைகள் மற்றவர்களுக்கு அதேபோன்ற கொடும் அனுபவத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

18% குழந்தைகள் தொடர் அச்சுறுத்தல்களுக்கு  உள்ளாகியபடியே இருக்கிறார்கள்.

31% குழந்தைகள் மட்டுமே, குறிப்பிட்ட ஆபத்தான தளங்களுக்கு மீண்டும் செல்லாமல் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.

84% பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பதாக நம்புகின்றனர்.

என்ன செய்ய வேண்டும்?

பெற்றோர்கள்:
* பிள்ளைகளிடம் அவர்களின் மொழியில் பேசுங்கள்
* நவீன தொழில்நுட்பங்களையும், ட்ரெண்டு களையும் அறிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிள்ளைகள்:
* தெருவில் எதிர்ப்படும் அறிமுகம் இல்லாத நபரிடம் உங்கள் பெயர், போன் நம்பர் சொல்ல மாட்டீர்கள் அல்லவா? ஆன்லைனிலும் இதே ரூல்தான். அறிமுகம் இல்லாதவர்களிடம் பர்சனல் தகவல்கள் பகிர்தல் தப்பு.
* ஆபத்தான, ஆபாசமான கமென்ட், புகைப்படம், மிரட்டல் என எது நடந்தாலும் பெற்றோரிடமோ, பள்ளியிலோ தயங்காது கூறுங்கள்.

- அன்பரசு

கல்லூரி மாணவிகள் என்ன எச்சரிக்கை டிப்ஸ் வைத்திருக்கிறார்கள்? இதோ பேசுகிறார்கள்...
திவ்யா: தேவையில்லாம ஃபேஸ்புக் சாட்டிங், மூணாவது மனுஷங்க கிட்ட சுயவிபரங்களை ஷேர் பண்றது, ஆண் நண்பர்கள் கிட்ட தேவையில்லாத அந்தரங்கப் பேச்சு, புகைப்படப் பகிர்வு இது எல்லாமே ஆபத்துதான். பிரவுசிங் சென்டர்கள், மூன்றாம் நபரோட மொபைல்கள்ல நம்ம மெயில்கள், ஃபேஸ்புக்கை  ஓபன் பண்ணக் கூடாது. நீங்க லாக் அவுட்டே பண்ணினா கூட சுலபமா அவங்க உங்க பாஸ்வேர்டை எடுக்க முடியும்.
கீர்த்திகா: பிரச்னைன்னா தயங்காம பெற்றோர்கள் கிட்ட சொல்லணும். ஆறு மாசம் சாட்டிங், ஏழாவது மாசம் மீட்டிங். அங்க போனா இவங்க கிட்ட பேசின பையனோ, பொண்ணோ இருக்க மாட்டாங்க. மாறா ஒரு பெரிய கும்பலே கூட இருக்கலாம். தேவையில்லாத லிங்குகள ஷேர் பண்றதோ, ஓபன் பண்றதோ இருக்கக் கூடாது. ஏன்னா நம்ம கையில இருக்கற மிகப்பெரிய வில்லன் இந்த மொபைல்தான்.

- ஷாலினி நியூட்டன்
படம்: ஆர்.சந்திரசேகர்