ஆண்டவன் கட்டளை விமர்சனம்



பொய் சொல்லியாவது பிழைக்க லண்டன் போக ஏற்பாடு செய்யும் நண்பர்கள் இருவர். ஏஜென்ட்கள் ஏமாற்ற, அவர்கள் சகல வழிகளிலும் தப்பிக்கப் போராடுவதே ‘ஆண்டவன் கட்டளை.’ கிராமத்து விஜய்சேதுபதி தன் நண்பன் யோகி பாபுவோடு பஞ்சம் பிழைக்க வருகிறார். லண்டனுக்கு டூரிஸ்ட் விசாவில் வேலைக்குப் போய் அங்கேயே தங்கி சம்பாதிக்க ஆசை. விசா கிடைத்துப் போன யோகி பாபு திரும்பி வர, விஜய்சேதுபதிக்கு விசா கிடைக்காமல் போகச் செய்த தவறுகள் அவருக்கு சிக்கல்களை உருவாக்குகின்றன.

மனைவி இருப்பதாகக் கற்பனை பெயர் பாஸ்போர்ட்டில் இடம்பெற, அந்தப் பெயருடைய பெண்ணே ஒரு சந்திப்பில் நேரில் வர... சிக்கல்கள் தீர்ந்ததா என்ற மீட்டெடுப்பில் தொடங்குகிறது படம். மணிகண்டனின் திரைக்கதையின் பலத்தில் நிமிர்ந்து நிற்கிறது படம். மக்களின் நலன் மீதான  அக்கறையில் மேலும் கவனம் செலுத்துகிறார் இயக்குனர். படத்தின் நல்ல இடங்கள்கூட,  எந்த பில்டப்பும் பதறும் பின்னணியும் இல்லாமல் கடந்து போகின்றன.

ஊரிலிருந்து வந்து பொருள் தேடிப் போராடும் எளிய மனிதராக விஜய்சேதுபதி செம ஸ்கெட்ச் அடித்திருக்கிறார். மிகவும் நம்பகமான வளர்ச்சி. ‘நடிக்கிறேன் பார்’ என நமக்குத் தெரிய வைத்துக்கொண்டே சாட்டை சுழற்றுகின்ற எந்த முயற்சியும்  காட்டாமல் இயல்பில் வென்றெடுக்கிறார். ஆறு லட்சம் கடன் இருக்கிற அத்தனை வேதனையும் வலியும் விஜய்சேதுபதியின் முகத்திலேயே இருக்கிறது. எப்படியாவது பாஸ்போர்ட்டில் இடம்பெற்ற மனைவியின் பெயரை நீக்கிவிட அவர் ஒவ்வொரு தருணத்திலும் படும் பாடு... குழப்பமும் வஞ்சகமும் சூழ வரும் புரோக்கர்களிடம் ஏமாறுவது... என எல்லாமே மாஸ்டர்பீஸ். சரி... அற்புதம், அழகுதான். ஆனாலும் மாதத்திற்கு ஒரு படம் கொஞ்சம் ஓவர் பாஸ்!

இணை, துணை பாத்திரங்கள் எல்லாமே படத்தில் ஒன்றி இருக்கிறார்கள். யோகி பாபு அவ்வளவு யதார்த்தம். ஹீரோவோடு சரிக்குச் சமமாக நின்று விளையாடுவது  எல்லாமே நலம். இறுக்க நெருக்கமாகப்  புன்னகையின் சுவடே அறியாமல் வருகிற இமிக்ரேஷன் ஆபீஸர் ஹரிஷ் செம! மிகக் குறைந்த வார்த்தைகளில், தோரணைகளில் அவர் கொடுப்பது பெரும் உயிர். எந்த அயோக்கிய முகமும் காட்டாமல்  காரியங்கள் செய்யும் பாஸ்போர்ட் ஏஜென்ட் ஸ்டேன்லி கச்சிதம்.

‘இறுதிச் சுற்று’ ரித்திகா ஒன் ஃபிலிம் ஒண்டர் என்று நினைத்தால், ‘இல்லை’  என்கிறார். சின்னச் சின்ன ரீயாக்‌ஷன்களில் ஆரம்பித்து, சேதுபதியிடம் காதலில் விழுகிற இயல்புத்  தருணம் வரை முகபாவத்தில் மட்டுமே பேசுகிறார். அதுவும் ‘உங்களைத் திருமணம் செய்துகொள்ளட்டுமா’ என சேதுபதி திடுமெனக் கேட்டுவிட, பதில் சொல்ல முடியாமல் காதல், சந்தோஷம், கருணை, ஏக்கம் என அனைத்தையும் பிரதிபலிப்பதில் அவர் அடித்தது ஜாக்பாட்!

டிராமா மாஸ்டராக நாசர் ஆல்ரவுண்ட் அசத்தல். இன்னும் அவருக்கு இடம் கொடுத்திருக்கலாம். தியேட்டர் பகுதிகள் இன்னும் படத்தோடு ஒட்டியிருக்கலாம். அந்த ஈழ நேசனாக அரவிந்தன் புது ரூபம்! ஒரு தேர்ந்த பார்வையாளன் மாதிரி  மொத்த படத்தையும்  கட்டுக்குள் வைக்கிறது சண்முகசுந்தரத்தின் கேமரா. ‘கே’யின் பாடல்கள்  படத்தின் கவனத்தைக் கலைக்கவில்லை. விழிப்புணர்வை எட்டவே ‘ஆண்டவன் கட்டளை’ என முதலிலேயே மணிகண்டன் டைட்டில் போடா விட்டால் நாமே சொல்லியிருக்கலாம்!
நகைச்சுவையோடு வாழ்க்கையின் படப்பிடிப்பு!

- குங்குமம் விமர்சனக் குழு