யாரையும் பின்தள்ளி ஆஸ்கர் போகவில்லை!



வெற்றிமாறன்

‘விசாரணை’, சிறந்த அயல்நாட்டு படத்துக்கான ‘ஆஸ்கர் விருது’ போட்டிக்கு அனுப்ப இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பெருமை. அதற்காக வெற்றிமாறனிடம் எந்த மிகை உணர்ச்சியும் இல்லை. அவரிடம் பிடித்ததே இதுதான். அடுத்தடுத்த பயணங்கள் மேற்கொள்வதற்கான ஆயத்த அவசரங்கள் மட்டுமே அவரிடம் இருக்கின்றன. தமிழனின் உழைப்புக்கும், உயர்வுக்கும் எடுத்துக்காட்டாய் இதோ ‘விசாரணை’ ஆஸ்கரை கைப்பற்றக்  காத்திருக்க... சிணுங்குகிற அலைபேசிக்கு ஒற்றைச்சொல்லில் ‘பிறகு’ என்கிறார்.

‘‘இதையெல்லாம் ‘விசாரணை’ உருவாகும்போது எதிர்பார்த்தீர்களா?’’
‘‘நிச்சயமா இல்லை, ஆனால் மற்ற என் இரு படங்களிலிருந்து இது நிச்சயமாக மாறுபடுகிறது. இதில் இன்னும் நான் உண்மையாக வெளிப்படுகிறேன். இதை ஸ்கிரிப்ட்டாக எழுதும்போதே உணர்ந்தேன். சந்திரகுமாரின் ‘லாக்கப்’ நாவலும் உண்மைக்கு அருகாமையில் இருந்தது. அதனாலும் இந்த சினிமாவின் வெளிப்படைத்தன்மைக்கு என்னால் உழைக்க முடிந்தது. எனது சினிமா உள்ளூர மக்களின் மீதான அக்கறை சார்ந்ததுதான்.

எளிமையான மனிதர்களின் இன்னல்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை என்பதன் வருத்தம் எப்போதும் எனக்கு உண்டு. இந்த சினிமாவை மக்கள் உணர்ந்துகொண்ட விதமும், ஒன்றிய தன்மையும் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டது. நிஜமாகவே நல்ல எழுச்சி தரக்கூடிய படத்தைக் கடைசியில் எடுத்து விட்டேன் என்று உணர்ந்த தருணமும் இதுதான்.’’

‘‘மற்ற இந்தியப் படங்களுக்கு மத்தியில் உங்கள் ‘விசாரணை’ தேர்வு பெற்றதை எப்படி நினைக்கிறீர்கள்?’’
‘‘எல்லாரையும் தாண்டி விட்டேன் என்றெல்லாம் நான் நினைக்கவேயில்லை. தேர்வுக்காக பரிசீலிக்கப்பட்ட அனைத்து இயக்குநர்களின் மீதும் எனக்கு மரியாதை உண்டு. அவர்கள் படங்களின் நேர்த்தியோடு எனக்கு விருப்பம் உண்டு. எனக்கு இதில் நிறைவான சந்தோஷம், இது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் போய்ச் சேர்ந்து விட்டது என்பதுதான்.

இது ஆஸ்கர் அனுப்ப தேர்வானது, என்னைப் பொறுத்தவரை தற்செயல்தான், ஆனால் மகிழ்ச்சிகரமானது. மற்றவர்களைப் பின்தள்ளிவிட்டு தேர்வாகி விட்டேன் என்ற எண்ணமெல்லாம் என்னிடம் இல்லவே இல்லை. அப்படி நான் நினைத்துவிட்டதாக ஒரு தொனி கூட இந்த உரையாடலில் வந்து விடக்கூடாது.’’

‘‘ ‘விசாரணை’க்கு ஆரம்ப கட்டத்தில் கிடைத்த வரவேற்பில் நினைவில் நிற்பது என்ன?’’
‘‘வெனிஸ் செல்வதற்கு முன்பே மணிரத்னம் அவர்களுக்குக் காண்பித்தேன். அவர் படத்தில் இம்ப்ரஸ் ஆனதும், பாராட்டியதும் நினைவில் நிற்கிறது. அவர்தான் இந்தப் படத்தை இன்னும் முன்னெடுத்துச் செல்வதற்கான ஆலோசனைகளைத் தந்தார். ஐதராபாத்தில் ஐ.ஏ.எஸ் மற்றும் போலீஸ் ஆபீசர்கள் பார்த்தார்கள். சில விமர்சனங்களை வைத்துவிட்டு, படத்தின் உண்மைத்தன்மையை ஏற்றுக் கொண்டார்கள். ஆனாலும் என் மனதில் உள்ளே புகுந்து கொண்டது மக்களின் பேராதரவுதான்.

அதிகார மையம் எப்பொழுதும் அதை  எதிர்க்கிறவர்களை அடக்குகிறது. அல்லது எதிர்க்க முடியாதவர்களை  பலிகடாவாக்குகிறது. இயேசு, கோவலனில் தொடங்கி காலம் காலமாக  நடந்து வருகிற விஷயம் இது. இப்போது நாட்டில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வும், ‘விசாரணை’  போன்று இருக்கிறதே எனச் சொல்லும்போது மக்கள் உண்மைகளைப் புரிந்து  கொண்டார்கள் என நம்புகிறேன்.

சந்திரகுமாரின் நாவலை எடுத்துக்கொள்ளக் காரணம்   ‘சிறையின் உள்ளே என்ன நடக்கிறது’ என வெளியே இருப்பவர்களுக்குத்  தெரியவேண்டும் என்பதற்காகத்தான். சுய கௌரவத்தையும், வாழ்வுரிமையையும்  பெற  நமக்கு  உரிமை இருக்கிறது. அது எங்கே மீறப்பட்டாலும் அதை வெளிக்கொணர்வதே  நம் வேலை. அதன் ஒரு சிறிய குறுக்குவெட்டு சித்திரம்தான் ‘விசாரணை’...’’

‘‘எல்லா முக்கியமான டைரக்டர்களும் கூடி உங்களை வாழ்த்தியதும் அமைந்ததே!’’
‘‘நானும் மிஷ்கினும், கதிர் சாரிடம் உதவி இயக்குநர்களாக இருந்த நேரத்திலிருந்தே பழக்கம். அவர்தான் வெனிஸ் போய் திரும்பிய பிறகு ஒரு கெட் டுகெதருக்கு ஏற்பாடு செய்தார். அவரின் தன்னிச்சையான அன்பில் நடந்தது இது. என்னை விட அவர்தான் மனதால் நிறைந்து தளும்பி இந்த ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால் அது மணி சார்,  ஷங்கர் சார்  என தேர்ச்சியான இயக்குநர்களின் கூட்டமாக அமைந்து விட்டது. இதை நான் ‘விசாரணை’க்குக் கிடைத்த வரவேற்பாகவே எடுத்துக் கொண்டேன்.’’

‘‘தனுஷ் உங்களுக்குப் பெரிதும் பக்கபலமாக இருக்கிறார்...’’
‘‘ஒரு சினிமா எடுக்க நினைக்கும்போது, ‘நீங்கள் நினைப்பதை எடுங்கள். அதற்கு எந்த இடைஞ்சலும் தரமாட்டேன்’  எனச் சொல்லிவிட்டு, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து தருவது ஒரு நண்பரால் மட்டுமே முடியும். அவர் என்னை நம்பினார். நம்பியதற்காக அவர் சந்தோஷப்பட்டார். அவர் இப்போது என்னுடன் பயணிப்பது கூட எதேச்சைதான்!’’

‘‘அடுத்து ‘வடசென்னை’யைப் பற்றி எல்லாரும் நிறைய பேசுகிறார்கள்...’’
‘‘எனது உழைப்பில் பெரும்பகுதியைக் கொண்ட படம் ‘வடசென்னை’. நிறைய விவரங்கள் சேகரிக்க வேண்டியிருந்தது. 35 வருஷம் நடக்கிற கதை. நிறைய உடல் மாற்றங்கள், இடங்களின் தேர்வுகள் என உழைப்பை கதை வேண்டி நிற்கிறது. இரண்டு பாகம் வந்தால்தான்  பூரணமாகக் கதைசொல்ல முடியும் என்று இருந்தது. இப்போது பார்த்தால் ‘வடசென்னை - பார்ட் 3’ கூட வரும் போலிருக்கிறது. ஜெயில் செட் போட்டு கொஞ்சம் படம் பிடித்திருக்கிறோம். பீரியட் படத்திற்கான தயாரிப்பு விஸ்தாரமானது. அதை எளிமையாக, திரைமொழியில் விலகிப் போய்விடாமல் பார்த்துக்கொள்கிற விதமும் முக்கியம். முதல் பாகம் சீக்கிரம் வெளிவர வாய்ப்பிருக்கிறது.’’

- நா.கதிர்வேலன்