குட்டிச்சுவர் சிந்தனைகள்



சைக்கிள்ல எட்டு போடுறவங்கள, பைக்ல எட்டு போடுறவங்கள, ஏன்... கார், பஸ், லாரில எட்டு போடுறவங்கள  கூட பாத்திருக்கோம். ஆனா தன்னோட உடம்புலயே எட்டு போடக்கூடிய ஒரே ஆளு, நம்ம யோகா சாமியார் பாபா ராமதேவ்தான்.

பாலிவுட்ல சன்னி லியோனுக்கு காஸ்ட்யூம்ஸா தர்றதே ரெண்டு கர்ச்சீப்னா, அதுல பாதியை மட்டுமே பர்ச்சேஸ் செய்து தனது உடைத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளும் பரமாத்மா நம்ம பாபா ராமதேவ். சாம்பாருல போடுற உப்புல ஆரம்பிச்சு, சாயந்திரம் சாவகாசமா அடிக்கிற சரக்கு வரை நம்ம மாநிலத்துக்கு நம்ம அரசாங்கமே வழங்குதுன்னா, அதையே தேசிய லெவல்ல சேவையா செய்யறாரு நம்ம சாமி. கடந்த ஆறு மாசத்துல டாஸ்மாக் எண்ணிக்கையை விட இவரு கடை எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே போகுது.

பல்லு விளக்குற பேஸ்ட்ல இருந்து பல்லு விளக்கிட்டு தின்கிற பூரி வரை எல்லாத்துக்கும் நம்மாளு ஒரு அயிட்டத்தை ஆயுர்வேதம் கலந்து வச்சிருக்காரு. அக்குள்ல அடிக்கிற வேர்க்குரு பவுடர்ல ஆரம்பிச்சு, அடிச்சு துவைக்கிற வாஷிங் பவுடர் வரை எல்லாத்தையும் வித்துப் பாத்திட வந்த வரைக்கும் ஓகே.

ஆனா எல்லாத்துலயும் சித்த மருத்துவம் இருக்குன்னு சொல்றாரு பாருங்க, அங்கதான் சந்தேக சைத்தான் சடை பின்னி சிரிக்கிறான். மேகி நூடுல்ஸை தடை செஞ்சா இவரு புதுசா வல்லாரை நூடுல்ஸ்ல இருந்து வைக்கப்போர் நூடுல்ஸ் வரை எடுத்து விடுறாரு. கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா இலை, வாழை இலைன்னு ரெட்டலையை தவிர எல்லா இலையை வச்சும் சமையல் பொடி பண்றாரு. பக்கத்து ஜாடில அஞ்சு லேகியம் கலந்த மூக்குப்பொடியும் விக்கிறாரு. அந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட இவ்வளவு கண்டுபிடிக்கல.

அந்த தாமஸ் ஆல்வா எடிசன் கூட கண்டுபிடிப்புல ஆயிரத்து ஐந்நூற தாண்டல! ஆனா நம்ம சாமி போற வேகத்தை பார்த்தா எப்படியும் மூலிகை நிறைந்த பனியன் ஜட்டிகள்,  முருங்கைக்கீரை கலந்த கைலி, லுங்கிகள்னு ஆரம்பிச்சு சளி மருந்து நிறைந்த ஐஸ்கிரீம்கள், இருமல் மருந்து கலந்த குளிர்பானங்கள்னு போய் சித்த மருந்து கலந்த கொசு மருந்துகள், ஆயுர்வேதம் கலந்த எலி பாஷாணங்கள்னு எக்ஸ்ட்ரீம் லெவல் வரை இறங்கிடுவாருன்னு திங்க் பண்றேன்

இந்த வருஷத்தில் விராட் கோஹ்லி அடிச்ச செஞ்சுரிகளின் எண்ணிக்கையை விட...கடந்த ரெண்டு வருடங்களில் நம்ம பிரதமர் நரேந்திர மோடி ட்ரிப் அடிச்ச வெளிநாடுகளின் எண்ணிக்கையை விட... கேப்டன் விஜயகாந்த்  பிரசாரங்களில் இதுவரை கொட்டு வாங்கியவர்களின் எண்ணிக்கையை விட... உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸின் மொத்த உறுப்பினர்களை விட... ஒரு பொதுக்கூட்டத்தில் அண்ணன் சிவப்புத் தமிழன் சீமான் ஆவேசமாக முழங்கிக்கொண்டே முஷ்டியை மடக்கும் எண்ணிக்கையை விட...
தான் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி வந்தேன் என டி.ராஜேந்தர் கொடுத்த பேட்டிகளின் எண்ணிக்கையை விட...

நடிகர் விஷால் இதுவரை நடித்த மதுரையைப் பின்புலமாகக் கொண்ட படங்களின் எண்ணிக்கையை விட... தமிழ்த் திரைப்படங்களில் பரோட்டா சூரி இதுவரை கட்டிய லுங்கிகளின் எண்ணிக்கையை விட... ஓசில பேசலாம்னு ஜியோ சிம் வாங்க வேலையை விட்டுட்டு க்யூல நிற்பவர்களின் எண்ணிக்கையை விட... ‘சென்னை 28’ல் பிரேம்ஜி கோட்டை விட்ட கேட்ச்களின் எண்ணிக்கையை விட... தமிழ்நாட்டில் தினமும் பதிவாகும் விவாகரத்து கேஸ்களின் எண்ணிக்கையை விட...

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதத்தை விட... இதுவரை தமிழ் சினிமாக்களில் ஏதாவது போலீஸ்காரர் ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என டயலாக் சொன்ன எண்ணிக்கையை விட... இந்த வருஷம் விஜய்சேதுபதி நடிச்சு வர்ற படங்களின் எண்ணிக்கை அதிகமாட்டம் தெரியுது. வாரா வாரம் வெள்ளிக்கிழமை வருதோ இல்லையோ, விஜய்சேதுபதி படம் ஒண்ணு வந்திடுது.

இது என்ன?
நான்கு கால்களும் கட்டி வச்ச சிமென்ட் மூட்டையாட்டம் பொதுக் பொதுக்கென இருக்கும், ஆனால் அது பானை வயிறு கொண்ட  யானை இல்ல. கால்களோடு பாதமெல்லாம் மொழுக்மொழுக்கென  மொட்டையா இருக்கும், அதுக்காக டோப்பா கழட்டுன சினிமா ஸ்டாரு தலையும் இல்ல. நாமளா நிறுத்தவெல்லாம் முடியாது...

அதுவா நினைச்சாத்தான் நிற்கும், அதுக்காக அது நாலு வாரத்துக்கு ஒரு தடவை நகராட்சி விடுற தண்ணீரும் இல்ல. மழை பெய்ஞ்சா தேங்குன தண்ணில கப்பல் விட்டு விளையாடலாம்தான், அதுக்காக அது  பங்களா வீட்டு மொட்டை மாடியும் இல்ல. முன்னாடி கண்ணாடியாட்டம் மின்னினாலும் கறுப்படைஞ்சு கிடக்கும், அதுக்காக கோலி சோடா பாட்டில் கீழ் பாகமும் கிடையாது.

காலுக்கு அடியில எட்டிப் பார்த்தா பாதாளமே தெரியும், ஆனா அதுக்காக அது கொடைக்கானல் சூசைட் பாயின்ட் இல்ல. அஞ்சு நிமிஷத்துல அஞ்சாயிரம் ஆட்டம் காட்டும், அதுக்காக அது பிரபுதேவா டான்ஸும் இல்ல. துப்புற புகையிலைல தூத்துக்குடி நகரமே கருப்பா போகும், அதுக்காக அது சிமென்ட் ஃபேக்டரி புகைக்கூண்டும் இல்ல. 

அப்பப்போ குடிசையோ ரோட்டோர கடையோ பார்த்து பூந்து நிற்கும், ஆனா அது ராகுல் காந்தியும் இல்ல. ஆங்காங்கே அவ்வப்பொழுது இடிஞ்சு விழும், அதுக்காக அது சென்னை விமான நிலையக் கூரையும் இல்ல. சுத்தம்  என்பதே தெரியாது, ஆனா சத்தம் என்றும் குறையாது, அதுக்காக அது முனியாண்டி விலாஸ் புரோட்டா கல்லுமில்ல. அதுதான் நம்ம அரசாங்க பஸ்!

ஆல்தோட்ட பூபதி
ஓவியங்கள்: அரஸ்