தோனியின் சொல்லப்படாத கதை!



கிரிக்கெட் ரசிகர்கள் இதயத்துடிப்பு எகிறி எதிர்பார்த்திருக்கும் தேதி செப்டம்பர் 30. தோனியின் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரம் வெளியாகிற தினம். ‘M.S.Dhoni - The Untold Story’தான் சமீப காலங்களில் வரிசையாக வெளிவரும் சுயசரிதை திரைப்படங்களில் பரபரக்க வைக்கும் மாஸ்டர்பீஸ்.

எப்போதும் இயக்குநர் நீரஜ் பாண்டேவுக்கு வேறுபட்ட கதைகளில் போய் படமெடுப்பதுதான் பிடிக்கும்.  அக்‌ஷய்குமாருக்கு அவர்தான் ஃபேவரிட். கமல்ஹாசன் தமிழில் விரும்பி விரும்பித் தயாரித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ இவரின் ‘எ வெட்னெஸ்டே’ படத்தின் ரீமேக்தான். இவர் அக்‌ஷய்குமாரை வைத்து எடுத்த ‘ஸ்பெஷல் 26’ அதிரிபுதிரி வெற்றி. அப்புறம் ‘பேபி’, ‘ரஸ்டம்’ என எடுத்தவர், ஆசைப்பட்டு தோனியின் வாழ்க்கை வரலாற்றைக் கையில் எடுத்திருக்கிறார். இந்தத் தடவையும் நீரஜ் நினைத்தது அக்‌ஷய்குமாரைத்தான்.

‘இன்னும் இளமையாக ஒரு ஹீரோவைத் தேர்ந்தெடுக்கலாம்’ என அவர் பெருந்தன்மையோடு ஒதுங்கிக்கொள்ள, டி.வி. சீரியல்களில் பிரபலமாகி வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு அடித்தது அதிர்ஷ்டம்! சுஷாந்த் சும்மா இல்லை. கிரிக்கெட்டின் நுணுக்கங்களை இரவு பகலாகக் கற்றார். தோனி நிற்கிற ஸ்டைலில் ஆரம்பித்து, கீப்பராக அவரின் பொசிஷன் என எல்லாவற்றையும் தோனியே வியக்கும்படி உருவேற்றினார்.

தோனியைச் சந்தித்து அவரின் வாழ்க்கையின் பக்கங்களைத் தேர்வு செய்த ஸ்கிரிப்ட்டை நீரஜ் பாண்டே சொல்ல, அவருக்கே ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. நான் இப்படி படம் செய்வதற்கு தகுந்த ஆள்தானா? என தோனியே சந்தேகப்பட்டிருக்கிறார். நீரஜ் அவருக்கு உறுதியளிக்க, வேலைகள் ஆரம்பித்தன. இன்னும் சில விஷயங்களை சுவாரஸ்யத்திற்காக தோனி பகிர... விறுவிறுவென ஆரம்பித்துவிட்டார்கள் ஷூட்டிங்கை!

தோனியின் வரலாற்றை நீரஜ் தேர்வு செய்தது ஏன்?
இத்தனை ஆண்டு கால வரலாற்றில் எத்தனையோ கேப்டன்கள் கிரிக்கெட்டில் இருந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அவர்கள் அனைவரும் பிரியப்படுகிற பெயர் ‘தோனி’தான். பெரும்பாலும் விளையாட்டையே அவர் முன்னுரிமையாக நினைத்தார். மற்றவர்கள் போல சாதனைகளில் கண் வைக்காமல் அணியின் வெற்றி மீது மட்டுமே குறிவைத்தார். பதற்றப்படாத விளையாட்டுப் போக்கு அவருடையது. கஷ்டப்பட்டு அவரது திறமையை மட்டும் முன்வைத்து நுழைந்தவர். இளைஞர்களுக்கான செய்திகள் அவரிடமே இருக்கின்றன.

‘‘எனக்கு இதில் நீதி சொல்வதில் குறிக்கோள் கிடையாது. வெறும் கை காட்டிவிடுவதுதான் என் வேலை. இப்படி ஒரு இளைஞர் தானாகவே புறப்பட்டு வந்து இந்தியாவின் உச்சபட்ச உயரத்தை அடைந்து இப்போதும் வெற்றிக்கொடியை ஏந்திப் பிடித்திருக்கிறார் என்று சொல்லப்படுவதுதான் செய்தி. நிச்சயம் இது இளைஞர்களுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன். நம்பிக்கையோடு எதிர்காலத்தை நாடுபவர்களுக்கு, ஒரு துடிப்பான தன்வரலாற்றைப் பார்க்கவும் வாய்க்கும்’’ என்கிறார் நீரஜ்.

உலகக்கோப்பை சமயத்தில்தான் தோனிக்கு குழந்தை பிறந்தது. ஒரே ஒருநாள் அவகாசம் எடுத்துக்கொண்டு, பிறந்த குழந்தையை வந்து பார்த்துவிட்டுப் போவார் என்று எதிர்பார்த்தார்கள். இல்லை... தோனி வரவே இல்லை. டேப்லெட்டில் பார்த்து குழந்தைக்கு வெல்கம் சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார். மொத்த இந்தியாவும் அவரின் கிரிக்கெட் காதலைப் புரிந்துகொண்ட சமயம் அது. மனைவியிடம், ‘‘நல்லது. கடவுள் அருள்தான். இப்போது நாட்டுக்கான கடமை. மற்ற விஷயங்கள் அப்புறம்தான்.

என் குழந்தை காத்திருக்கட்டும். உலகக் கோப்பைதான் என் கண் முன்னால்...’’ எனப் பேசினார். மொத்த படத்தையும் பார்த்த தோனியின் முகத்தில் சந்தோஷம் சுடர்விட்டது. ‘‘நானே முக்கிய நகரங்களுக்கு புரமோஷன்களுக்கு வரவா?’’ என தோனி கேட்க, ‘ஆஹா’ என அரவணைத்துக்கொண்டது யூனிட். சரி! அவரது வரலாற்றைத் தயாரிக்க தோனிக்கு கொடுத்த தொகை என்னவாம்? ‘20 கோடி ரூபாயாம்.. லாபத்திலும் பங்காம்’. என்ன, உங்களுக்கு ஓகேவா!

- மை.பாரதிராஜா