உறவெனும் திரைக்கதை



ஈரோடு கதிர்

நீதியின் மௌனம்
காடு, மலை, குகைகளில் மனிதர்கள் வாழ்ந்த காலங்களில், இணை உயிர்களான விலங்குகளைக் கண்டு அச்சம் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் சக மனிதர்களைக் கண்டு அச்சப்பட அவசியம் இருந்திருக்காது. தம் புத்திக்கூர்மை கொண்டு விலங்குகளை அடக்கி, வசப்படுத்தி தன் கட்டுப்பாட்டிற்குள் வளர்க்கும் வரை முன்னேறியாகிவிட்டது. மனிதன் இன்று அதிகமாக பயம் கொள்வது சக மனிதனைப் பார்த்துத்தான்.

சக மனிதனிடமிருந்து உயிரை, உடைமைகளை, உரிமையைப் பாதுகாக்கவே சட்டங்களை இயற்றி, காவல்துறையை அமைத்து,  நீதிமன்றங்களை எழுப்பி வைத்திருக்கின்றோம். மனிதர்கள் கெடுதல் செய்யாதவர்களாக மாறிவிட்டால் எனும் மிகைக் கற்பனையில் காவல்துறையும், நீதிமன்றங்களும் மறைந்து போய் விடுகின்றன. வழக்கு வம்புகள் இல்லாத ஒரு சமூக அமைப்பு கற்பனைக்கு மிக அழகியதாய் இருக்கிறது.

நம்மைக் காக்க வேண்டிய காவல்துறையும், நீதிமன்றமும் நம்மை அரவணைக்கின்றனவா, அந்நியப்படுத்துகின்றனவா என்பதை அறிவுசார் உலகம் அலச வேண்டிய கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறோம். இரு சக்கர வாகனத்தில் சாலையின் இடதுபுறமாக வந்துகொண்டிருந்தார் தியாகு. சாலையைக் கடந்துகொண்டிருந்த மூதாட்டி ஒருவர், எதிர்பாராத தருணத்தில் தடுமாறிக் குழம்ப, வாகனம் அவர்மீது மோதி விடுகிறது. இருவருக்கும் பலத்த காயம். விபத்துகளில் நியாயங்களைத் தாண்டி, மோதியதில் எது பெரிய வாகனமோ அதன் மீது பழிபோடப்படுவதே வாடிக்கை. கூட்டம் சேர்கிறது.

மூதாட்டியின் நிலைமை உணர்ந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். காவல் நிலையத்தில் காவலர் ஒருவர், தான் விபத்தைப் பார்த்ததாகவும் வண்டியின் எண்ணைக் குறித்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கிறார். எனினும் ‘சாலையின் ஓரத்தில் அமைதியாக அமர்ந்திருந்த பாட்டி மீது, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், உயிருக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் வந்து மோதியதாக’ வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. உண்மையில் தியாகு வண்டி ஓட்டி வந்த திசைக்கு, எதிர்த்திசையிலிருந்து வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ‘‘இது பெரிய வழக்கில்லை, நீதிமன்றத்தில் அபராதம் கட்டிவிட்டால் போதும்’’ என காவல்துறை தெரிவிக்கிறது.

‘‘விபத்தை நடந்த விதமாகப் பதிவு செய்யுங்கள், நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும் சரி. ஆனால் உண்மைக்குப் புறம்பாக, பயணித்த திசையையே மாற்றி, அமர்ந்திருந்தவர் மீது மோதியதாகப் பொய்யாக வழக்குப் பதிவு செய்வதை ஒப்புக்கொள்ள முடியாது’’ என தியாகு மறுக்கிறார். நண்பரான, ஊரின் பிரபல வழக்கறிஞரிடம் ஆலோசிக்கிறார். ‘‘விபத்து வழக்குகளில் இதுதான் வழக்கம். இப்படித்தான் காவல்துறை வழக்கை முடிக்கும்’’ என்கிறார் அவர்.

ஆனால் தியாகு வழக்கை நடத்தத் தீர்மானிக்கிறார். வழக்கு நடப்பதில் உள்ள சிரமங்களைச் சொல்லி காவல்துறையினர் நயமாக மிரட்டுகிறார்கள். வழக்கறிஞரின் பிரபலத்தன்மை காவல்துறையினருக்கு எரிச்சலூட்டுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடங்குகிறது.  ‘இந்த வழக்கையெல்லாம் நடத்த வேண்டிய அவசியமென்ன’ என்ற எரிச்சல் நீதிபதியிடமும் இருப்பதாக தியாகு உணர்கிறார்.

சம்பவத்தைப் பார்த்த சாட்சிகள், வாகனத்தை ஆய்வுசெய்த வாகனப் போக்குவரத்து ஆய்வாளர், சிகிச்சையளித்த அரசு மருத்துவமனை மருத்துவர், வழக்கைப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் என பல கட்டங்களாக விசாரணை நடக்கிறது. கிட்டத்தட்ட இருபது விசாரணைகள், இரண்டு வருடங்களுக்கு நீடிக்கிறது. ஒருமுறை தியாகு நீதிமன்றத்திற்கு வரத் தவறியதற்காக பிடியாணை வாங்கி, வெள்ளிக்கிழமை இரவு வீடு தேடி வந்து அவரைக் கைது செய்வதாக போலீஸ் மிரட்டுகிறது.

இறுதியில் காவல்துறை வழக்கு தொடுத்தவிதமாக குற்றம் உறுதி செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பெழுதப்படுகிறது. மராத்தி கவிஞர் நாராயண் காம்ளே மேடையொன்றில் எழுச்சியுடன் பாடிக் கொண்டிருக்கும்போது கைது செய்யப்படுகிறார். ‘மனிதக்கழிவுகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தமது சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள தற்கொலை ஓர் உன்னதமான வழி’ என்ற பாடல் வரிகள் மூலம், சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளிகளை தற்கொலைக்குத் தூண்டியதாகவும், அதனால் ஒப்பந்தத் தொழிலாளி வாசுதேவ் பவார் சாக்கடையைச் சுத்தம் செய்யும்போது இறந்து போனதாகவும் காவல்துறை அவர்மீது வழக்குப் பதிவு செய்கிறது.

வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. எந்தப் பூச்சுகளும் இல்லாத, உண்மையில் நாம் கண்டு அனுபவப்பட்டிருக்கும் ஒரு நீதிமன்றமாகவே அது காட்சியளிக்கிறது. நீதிபதி தனக்கென சில கொள்கைகளை வைத்திருப்பவராகத் தெரிகிறார். ஆங்கிலோ-இந்தியப் பெண் ஒருவரின் ஸ்லீவ்லெஸ் உடை நீதிமன்றத்திற்கு ஏற்புடையதன்று என அவரை விசாரிக்க மறுத்து வழக்கைத் தள்ளி வைக்கிறார்.

சாக்கடைகளைத் துப்புரவு செய்யும் தொழிலாளிகள் இந்த தேசத்தில், அந்தக் குழிகளுக்குள் விஷ வாயுவால் தாக்கப்பட்டு மாண்டு போகும் அவலத்தை எல்லோரும் அறிந்திருந்தாலும், அந்த நீதிபதி அந்த வழக்கில் இருக்கும் அபத்தத்தை உணராதவாறு நடத்துகிறார். அரசுத் தரப்பில் வாதிடும் பெண் வழக்கறிஞர் எளிமையானவராகக் காட்சியளிக்கிறார். மின் தொடர்வண்டியில் சாமான்யர்களோடு பயணிக்கிறார். இயல்பாக வீட்டு வேலைகளைச் செய்கிறார். வழக்கென்று வரும்போது நாராயண் காம்ளேவை பிணையில் விட, கடுமையாக எதிர்க்கிறார். ஆதாரங்களை முனைப்போடு எடுத்து வைக்கிறார்.

காம்ளேவை விடுவிக்கப் போராடும் வழக்கறிஞர், வசதியான இளைஞர். பெரிய அங்காடிகளில் பொருட்களைத் தெரிவு செய்து வாங்குகிறார். கருத்தரங்குகளில் கலந்துகொள்கிறார். மது அருந்தி நடனமாடிக் கொண்டாடுகிறார். வழக்கில் இருக்கும் அபத்தங்களைக் கணக்கில்கொண்டு, காம்ளேவை பிணையில் கொண்டு வந்துவிட கடுமையாக உழைக்கிறார். இறந்துபோன வாசுதேவ் பவாரின் மனைவியை நீதிமன்றத்தில் நிறுத்துகிறார். தற்கொலை மனநிலையில் பவார் ஒருபோதும் இருந்ததில்லை என்பதை அவர் வாயிலாக தெளிவு படுத்துகிறார்.

‘சாக்கடைக்குள் இறங்கும்போது பாதுகாப்புக் கவசம் அணிந்திருக்கவில்லை, மது அருந்தியிருந்தார்’ என்பதை ஆதாரங்களுடன் சுட்டுகிறார். வாசுதேவ் பவாருக்கு நிகழ்ந்தது தற்கொலையல்ல, சாபக்கேடான கொடும் விபத்து எனும் பொது உண்மையை நிரூபிக்கப் போராடுகிறார். ஒருவழியாகப் பிணை கிடைக்கிறது. முதுமையாலும் நோய்களாலும் நலிவுற்ற நிலையிலும் நாராயண் காம்ளே ஒதுங்கி விடாமல், ஒரு புத்தகத்தை அச்சிட்டு வெளியிடும் முயற்சியில் இருக்கையில், அச்சகத்திலேயே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை மீண்டும் பிணையில் கொண்டுவர  வழக்கறிஞர் போராடுகிறார்.

கோடை விடுமுறைக்காக தன் இறுதிப் பணி நாளை நிறைவுசெய்து நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்படுகின்றன. கதவுகள் மூடப்படும்போது நீதிமன்றம் இருளில் பதுங்குகிறது. நாராயண் காம்ளேவின் சிறைவாசம் தொடர்கிறது. நீதிபதி தம் குடும்பம் மற்றும் உறவுகளோடு ஓய்வெடுக்க சுற்றுலா செல்கிறார். அங்கு புல் தரையில் நாற்காலியில் அமர்ந்தபடி பகலில் தூங்குகிறார். விளையாட்டுப் பிள்ளைகள் அவர் அருகே வந்து கத்தியபடி  விளையாடுகிறார்கள். மிரண்டு எழுபவரைக் கண்டு சிதறி ஓடுகிறார்கள். ஓர் சிறுவன் மட்டும் நிற்க, அத்தனை கோபத்தையும் திரட்டி, ஓங்கி அறைகிறார்.

2015ம் ஆண்டு மராத்தியில் வெளியான ‘கோர்ட்’ திரைப்படம், மக்களைக் காக்கும் அமைப்புக்கும் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் வலிமைக்கும் இடையேயான போராட்டத்தை மிக நுணுக்கமாக, யதார்த்தமாக, ‘இப்படித்தான் நடக்கின்றதா’ என நாம் மிரண்டுபோகும் வகையிலும் பதிவு செய்கிறது. ஒருவரை ‘கெட்டவன்’ என அவர்களே தீர்மானித்து விடுகிறார்கள். ‘நல்லவன்’ என்பதற்கு மட்டும் அடுத்தடுத்து ஆதாரம் கேட்கிறார்கள் எனும் வரிதான் நினைவுக்கு வருகின்றது. மனிதர்களைக் காக்க, அவர்களை நெறிப்படுத்த உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்புகள் ஏதேதோ காரணங்களைச் சொல்லி மிக எளிதாக மனிதர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடுகின்றன.

முகாந்திரமே இல்லாத குற்றச்சாட்டுகளிலிருந்து வெளியில் வருவதற்கு சாமானியன் நிகழ்த்தும் போராட்டம் அசாதாரணமான ஒன்று. அதிகாரம் மிக்கவர்கள் எப்போதும் தமக்குச் சாதகமான வழிகளில்  மட்டுமே சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மனிதர்களைக் கண்டு மனிதர்கள் அச்சம் கொள்வதற்கு முக்கியக் காரணம். கண்களைக் கட்டியபடி தராசைக் கையில் பிடித்து, தனக்கான நீதியை வழங்கிட நீதி தேவதை என்றும் தயாராக இருக்கிறாள் என்ற நம்பிக்கைதான் மனிதர்களை அவ்வப்போது தெம்பூட்டுகிறது; நிகழும் அநீதிகளையும் கடந்து வாழ்க்கை மீது நம்பிக்கைகொள்ள வைக்கிறது.

பிடிக்காத ஒருவரின் நிலை குறித்து, ஒழுக்கம் குறித்து, பண்பு குறித்து எவராலும் கணப்பொழுதில் அவதூறு பரப்பிவிட முடியும். அது பொய்யென நிரூபிக்க அவருக்கு யுகப்பொழுதும்கூட போதாது. அதற்காகப் பெரும் போராட்டம் நிகழ்த்த வேண்டி வரும். அவ்வாறான போராட்டங்களில் பல நேரங்களில் அநீதி வென்றுவிடுவதும், நீதி மௌனிக்கப்பட்டுவிடுவதும் என்ன வகையான அறத்திற்குள் அடங்கும் என்பது மட்டும் புரியவில்லை.

நம்மைக் காக்க வேண்டிய காவல்துறையும்,  நீதிமன்றமும் நம்மை அரவணைக்கின்றனவா, அந்நியப்படுத்துகின்றனவா என்பதை அறிவுசார் உலகம் அலசவேண்டிய கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறோம்.

கண்களைக் கட்டியபடி தராசைக் கையில் பிடித்து, தனக்கான நீதியை வழங்கிட நீதி தேவதை என்றும் தயாராக இருக்கிறாள் என்ற நம்பிக்கைதான் மனிதர்களை அவ்வப்போது தெம்பூட்டுகிறது.

ஓவியங்கள்:
ஞானப்பிரகாசம் ஸ்தபதி

(இடைவேளை...)