கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதனும் சனியும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

உழைப்பாளிகளின் நண்பனான சனியும், விவேகிகளின் சிநேகிதனான புதனும் சேர்ந்தால் புத்தியானது கடலளவு ஆழம் பெறும். வேகமும் விவேகமும் வேண்டும் என்கிற வார்த்தைக்கு முழு அர்த்தமும் இவர்கள் வாழ்க்கைதான். சனியின் திருப்தியற்ற மனோநிலை இவர்களை ஏதேனும் சாதிக்கச் சொல்லி தூண்டியபடி இருக்கும். புதனின் அங்கீகாரக் குறைபாடு கொண்ட மனோநிலை மிகத் தீவிரமாக இவர்களை யோசிக்க வைக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் புதனும் சனியும் இணையும்போது, நிச்சயம் அங்கு மகத்தான படைப்பூக்கமும் படைப்பாற்றலும் பெருகும். இந்த அமைப்பில் பிறந்தோர்கள் பெரும்பாலும் கருவிலே திருவுடையாராகத்தான் இருப்பார்கள். கொஞ்சம் தூண்டினாலே போதும்... மகத்தான ஆற்றலை வெளிப்படுத்துவார்கள். உழைப்பாளர்களின் பக்கம் இருப்பார்கள்; அதேசமயம் மிதமிஞ்சிய அறிவாற்றலுக்கும் எப்போதும் மரியாதை செலுத்துவார்கள். எல்லாவித மக்களுக்கும் எந்த விஷயம் பயன்படுமோ அதற்குத் தகுந்த மாதிரி யோசிப்பார்கள்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் புதனும் சனியும் இணைந்திருந்தால் கிடைக்கும் பொதுவான யோகங்களை இதுவரை பார்த்தோம். ராசியில் எந்தெந்த இடங்களில் இவர்கள் இருவரும் இணைந்தால், எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை இனி பார்க்கலாம்... ஒன்றாம் இடத்தில் - அதாவது கன்னி லக்னத்தில் புதனும் சனியும் இணைந்து அமர்ந்திருந்தால் ஆழமும், தீர்க்கமுமான அறிவைப் பெற்றிருப்பார்கள். எதற்கும் அவ்வளவு எளிதில் அவசரப்பட மாட்டார்கள்.

கடுமையான உழைப்பை மட்டுமே நம்புவார்கள். எளிதில் எது வந்தாலும் சந்தேகப்படுவார்கள். தோற்றப் பொலிவை விட அறிவின் வெளிப்பாட்டுக்கே முக்கியத்துவம் தருவார்கள். யாருக்கு என்ன தேவை என்றாலும் உடனே ஓடிப் போய் உதவுவார்கள். இவர்கள் மிகுந்த சுதந்திரப் பிரியர்கள். அதனால் நண்பர்களை ஏதேனும் ஒரு எல்லையோடு நிறுத்தி வைப்பார்கள். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதிலுள்ள நியாயத்தை மட்டுமே முதலில் பார்ப்பார்கள்.

லக்னத்துக்கு இரண்டாம் இடமான துலாம் ராசியில் இவ்விரு கிரகங்களும் இணைந்து அமர்ந்தால், அவசரப்பட்டு ஏதேனும் காரியங்களைச் செய்தபடி இருப்பார்கள். மனம் ஓரிடத்தில் ஒரு வேலையில் நிலையாக நின்று வேலை செய்யாது. அவ்வப்போது தங்கள் போக்கையே மாற்றிக்கொள்வார்கள். ஆரம்பக் கல்வியை விட கல்லூரியில் சிறப்பாகப் பயிலுவார்கள். கவிதை, கட்டுரை, நாவல்கள் போன்றவற்றில் முழு ஈடுபாடு காட்டுவார்கள். இவர்கள் மனம் வைத்தால் பெரும் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் வர முடியும். பழைய மரபிலிருந்து வரும் எந்த விஷயத்தையும் அப்படியே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கேள்வி கேட்பதில் வல்லவர்கள்.

விருச்சிக ராசியான மூன்றாவது இடத்தில் புதனும் சனியும் மறைவது நல்லதாகும். இவர்களுக்கு இளைய சகோதர, சகோதரிகள் மிகவும் அனுகூலமாக இருப்பார்கள். எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை விட்டுவிட்டு புதியதாக ஒரு விஷயத்தையே கூறுவார்கள். எதையும் அரைகுறையாக விட மாட்டார்கள். ஒன்றைச் செய்ய நினைத்தால், எல்லா தடைகளையும் தாண்டி சாதித்துக் காட்டுவார்கள்.

தனுசு ராசியான நான்காம் இடத்தில் புதனும் சனியும் இணைந்திருந்தால் கல்வி நிறுவனங்களை வைத்து நடத்துவார்கள். வாகனங்கள் விஷயத்தில் இவர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. தேவையற்ற இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கியர் வண்டியை இவர்கள் உபயோகிக்கக் கூடாது. தாயாரின் சொல் கேட்டுத்தான் எந்த விஷயத்தையும் செய்வார்கள். நவீன காலகட்டத்திற்கு ஏற்றவாறு எந்த விஷயத்தையும் வடிவமைப்பார்கள். தாய்வழிச் சொந்தங்களைக் கைவிடாது உதவுவார்கள். சிலர் தாய்மாமன் வகையிலேயே திருமணமும் முடிப்பார்கள். இதனால் சாதகங்களும் உண்டு. பாதகங்களும் உண்டு.

ஐந்தாம் இடமான மகர ராசி இவர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம். இதில் லக்னாதிபதியான புதனுடன், பூர்வ புண்ணியாதிபதியான சனி சேர்ந்து அமரும்போது பேர் சொல்லும் பிள்ளைகளாக இவர்களின் வாரிசுகள் இருப்பார்கள். ஆனால், அவர்கள் தனித்துவத்தோடு இருப்பதற்குத்தான் ஆசைப்படுவார்கள். குலதெய்வம், பரம்பரை, பாரம்பரியம் போன்றவற்றின் வேர்களைத் தேடி ஓடுவார்கள். நிறைய ஆன்மிக யாத்திரைகளை மேற்கொள்வார்கள். ஆங்கிலம் மற்றும் பழைய உலக மொழிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். 

நிறைய தான, தர்மங்களைச் செய்வார்கள். தங்களின் குல ஒழுங்கை, மரபை எப்படிப்பட்ட நிலையிலும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள். 
கும்ப ராசியான ஆறாம் இடத்தில் இவ்விரு கிரகங்கள் சேர்ந்து அமர்ந்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. அதிலும் செவ்வாயின் இடத்தில் புதனும் சனியும் சேர்ந்திருப்பதால் எதிரிகளால் ஏதேனும் தொந்தரவு இருந்துகொண்டே இருக்கும். மனோரீதியாக அடக்கி வைக்க முயற்சிப்பார்கள். உங்களின் பலவீனத்தைத் தெரிந்துகொண்டு முடக்கி வைக்க முயல்வார்கள்.

சொந்த வாகனமாக இருந்தாலும் இவர்களின் பெயரில் வைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. ஒரு கடனை வாங்கி இன்னொரு கடனை அடைக்கக் கூடாது. புதன் எப்படியேனும் கடனை அடைத்துவிடலாம் என்று குருட்டு தைரியத்தை அளிப்பார். நரம்புத் தொல்லை, காலில் ஏதேனும் பிரச்னை அவ்வப்போது வந்து நீங்கியபடி இருக்கும். மீன ராசியான ஏழாம் இடத்தில் புதனும் சனியும் ஒன்றாக அமர்கின்றனர். இந்த அமைப்பில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். இவர்களுக்கு தம்மைவிட புத்திசாலித்தனமான வாழ்க்கைத்துணை அமையும். இதனாலேயே அவ்வப்போது ஈகோ பிரச்னை தலை தூக்கியபடி இருக்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபடக் கூடாது. ஏனெனில், உங்களின் சுதந்திரத்தை மற்றவர்கள் பாதித்தபடி இருப்பார்கள். எந்தத் தொழில் செய்தாலும் தனக்குப் பிடித்த ஏதேனும் ஒரு துறையில் ஈடுபட்டு நிறைய சன்மானங்களைப் பெறுவார்கள்.

மேஷ ராசியான எட்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமைவது என்பது ஓரளவு நற்பலன்களைக் கொடுக்கும். தீர்க்கமான ஆயுள் பெற்றிருப்பார்கள். திடீர் பயணங்களால் நிறைய வருமானம் உண்டு. இவர்கள் சரியானபடி சேமித்தால் பிற்கால வாழ்க்கையில் எந்தப் பிரச்னையும் இராது. தனது தன்னம்பிக்கையை யாராவது லேசாக அசைத்துப் பார்த்தாலே பயந்து விடுவார்கள். அதனால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நிலைகுலையாத மனோநிலையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நீர்க்கடுப்பு, ஜலதோஷம் போன்ற தொந்தரவுகள் இருந்து கொண்டேயிருக்கும். தேவையற்ற இடங்களில் கடுமையாகப் பேசி கெட்ட பெயர் எடுப்பார்கள். ரிஷப ராசியான ஒன்பதாம் இடம் இவர்களுக்கு பாக்கிய ஸ்தானம். இங்கு புதனும் சனியும் இணைவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.  பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். இவர்கள் ஒட்டுமொத்த கிராமத்தையும் நிர்வகிப்பவர்களாக இருப்பார்கள்.  தந்தையின் தொழிலை ஏற்று நடத்துவார்கள். நிறைய சேமித்து வைக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். புண்ணிய காரியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். தொடையில் அடி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் எல்லா இடத்திற்கும் நடந்து போவதையே விரும்புவார்கள். 

மிதுன ராசியான பத்தாம் இடத்தில் புதனும் சனியும் இருப்பது சிறப்பான பலன்களைத் தரும். பொதுவாகவே சனி பகவான் மிதுனத்தில் இருப்பது விசேஷமாகும். புதன் இங்கு ஆட்சி செய்கிறார்.  நெருக்கடியான நேரத்தில் கூட தீர்க்கமாக முடிவெடுப்பார்கள். சமூகப் பிரச்னைகளில் தலையிட்டு தீர்வு காண முயற்சிப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் சுயதொழிலில்தான் ஈடுபடுவார்கள். இவர்கள் வேலையென்று பார்த்தாலும் ஒரு டீம் லீடர் மாதிரி பெரிய பதவியில்தான் அமர்வார்கள். மெரைன் எஞ்சினியர், பப்ளிகேஷன்ஸ், பல் டாக்டர், சரும நோய் நிபுணர், பட்டுப்பூச்சி வளர்ப்பு, கோழிப் பண்ணை என்று பல்வேறு துறைகளில் சாதிப்பார்கள்.

கடக ராசியான பதினோராம் இடத்தில் புதனும் சனியும் இணைந்திருந்தால் மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மைகள் நடக்கும். மத்திம வயதில் மாற்றுப் பாலினத்தாரோடு ஏற்படும் தவறான நட்பைத் தவிர்ப்பது நல்லது.  நிரந்தர வேலையின்மையால் பணப்பற்றாக்குறையும், மன உளைச்சலும் அடைவார்கள். இதனால் குறுக்கு வழியையும் தேடுவார்கள். எனவே, எச்சரிக்கை தேவை.  இவர்கள் மெதுவாகச் சென்றாலே போதுமானது. தாங்கள் ஆசைப்பட்டது போல் வாழ்வார்கள்.

சிம்ம ராசியான பன்னிரண்டாம் இடத்தில் சனியும் புதனும் இணைந்தால், சுக செலவுகள் கூடும். படுக்கை அறைக்கு நிறைய செலவு செய்வார்கள். ஆனால், தூக்கம்தான் வராது. கஷ்டப்பட்ட காலங்களையே எப்போதும் நினைத்தபடி இருப்பார்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. மன அமைதியோடு செயல்களில் ஈடுபடுவது நல்லது. எதற்காக இவ்வளவு தூரம் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறோம் என்பதை நினைத்துப் பார்ப்பது நல்லது. 

இந்த புதனும் சனியும் சேர்ந்த அமைப்பு என்பது பெரும்பாலும் நற்பலன்களையே கொடுக்கும். இது புத்திக்கூர்மையையும், உழைக்கும் உடல்கட்டையும் சமமாகத் தரக்கூடிய அமைப்பாகும். இந்த இரு கிரகங்கள் பகை பெற்ற இடங்களில் அமரும்போதோ, நீசம் பெறும்போதோ, எதிர்மறைப் பலன்களை அளிக்கும். நிறைய யோசிப்பார்கள். ஆனால், சோம்பல் முதலில் வந்து முட்டுக்கட்டை போடும். இவர்களுக்கு எப்போதும் நேர்மறைப் பலன்களே கிடைக்க சீர்காழி சட்டநாதரையும், தோணியப்பரையும், ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தரையும் தரிசித்து வந்தால் போதுமானது.

இவர்கள் அவ்வப்போது ஞானசம்பந்தப் பெருமானின் சரித்திரத்திலுள்ள ஞானப்பால் அருந்திய விஷயத்தை மனதிற்குள் கொண்டு சென்று தியானித்தால், சரணாகதி நிலையை அடைவார்கள். இதனால் இவர்களுக்குள் இயல்பாக இருக்கும் திறமைகள் தானாக வெளிவரும். தான் வெறும் கருவி என்று நன்றாக உணர்வார்கள். இத்தலம் சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது.

ஓவியம்: மணியம் செல்வன்

(கிரகங்கள் சுழலும்...)