எப்படி எழுதறீங்க?



-ரா.பிரசன்னா

வங்கிக்குள் நுழையும்போதே எதிர்ப்பட்டார் கேஷியர் கருணாகரன்.  பார்த்தவுடன் கேட்டார், ‘‘இந்த வார ‘குங்குமம்’ல உங்க கதை படிச்சேன். நல்லா  இருந்துச்சு! உள்ள போங்க... இதோ வர்றேன்’’ என்றபடியே வெளியே சென்றார். சலானை எடுத்து, தங்கையின் அக்கவுன்ட் நம்பரை செல்போனில் பார்த்து எழுதத் துவங்கினேன். பாதி எழுதிக் கொண்டிருக்கும்போதே அருகே ஒரு குரல். ‘‘சார், கொஞ்சம் பேனா தர்றீங்களா?’’ - வயதான பெரியவர். எழுதுவதை நிறுத்திவிட்டு அவரிடம் கொடுத்தேன். பத்து நிமிடங்கள் கழித்து பேனா மீண்டும் என் கைக்கு வந்தது.

மீண்டும் எழுதும்போது ஒரு குரல். அழகான பெண். ‘‘எக்ஸ்க்யூஸ் மீ... கொஞ்சம் பென்  கிடைக்குமா?’’ மூன்றே நிமிடங்களில் சரசரவென எழுதி முடித்தாள். மீண்டும் சலானை நிரப்பி, சரிபார்த்து, கையெழுத்து போடலாம் என பேனாவை எடுத்தேன். மீண்டும் ஒரு குரல். ‘அடங்க மாட்டாங்க போல இருக்கே!’ கோபமாகத் திரும்பினால், கல்லூரி வயது வாலிபன் ஒருவன். பேனாவை உரிமையோடு வாங்கியபடியே கொஞ்சம் தூரம் தள்ளிச் சென்றான்.

அதற்குள் சீட்டிற்கு வந்துவிட்ட கருணாகரன் என்னைக் கூப்பிட்டார். போய் சலானையும் பணத்தையும் கொடுத்தேன். ‘‘கையெழுத்து போடுங்க சார்’’ என்று என்னிடம் நீட்ட, ‘‘கொஞ்சம் பேனா கொடுங்க ப்ளீஸ்’’ என்றேன். ‘‘என்ன சார் நீங்க? கதை எல்லாம் எழுதுறீங்க... ஒரு பேனா வச்சிக்க மாட்டீங்களா?’’ என்று சலித்துக்கொண்டே பேனாவை நீட்டினார்.