நமக்குள்ளே இருக்கும் குழந்தை விரும்புவது என்ன?



குழந்தையின் கண்களைக் கொண்டு இந்த உலகின் அழகை, வாழ்க்கையின் ரம்மியத்தை ரசித்திருக்கிறீர்களா? நீங்களும் வளர்ந்துவிட்ட ஒரு குழந்தைதான் என்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மனிதரையும் நேசத்துடனும், நட்புடனும்  அணுகியிருக்கிறீர்களா? யாரிடமாவது சண்டையோ, கருத்து வேறுபாடோ  ஏற்பட்டு, உங்களிடம் தவறே இல்லாதபோதும்கூட நீங்களாகவே முன்வந்து  சமாதானம் செய்ய முயற்சித்து இருக்கிறீர்களா?

இந்த  மாதிரியான  உன்னத உணர்வுகளை, உறங்கிக்கொண்டிருக்கும் நம் மனதுக்குள்ளிலிருந்து தட்டியெழுப்பி விழிப்படையச் செய்கிறது  அலெக்சாண்டர் மிலோவின்  ‘லவ்’ என்கிற  சிற்பம். கடந்த ஆண்டில் உலகக் கலைஞர்களையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த சிற்பம் ‘பர்னிங் மேன்’ திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டு பலரின் பாராட்டைப் பெற்றது. 59 அடி நீளம், 18 அடி அகலம், 24 அடி உயரம் கொண்ட பிரமாண்ட படைப்பு இது.

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இருக்கும் ‘ப்ளாக் ராக் சிட்டி’எனும் பாலைவனத்தில், உலகெங்கிலும் உள்ள ஓவியர்கள், இசை, நடனக் கலைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடி கொண்டாடுகின்ற  திருவிழாதான்  ‘பர்னிங் மேன்’. ஆடைகளற்ற இயல்புநிலையில், இயற்கையுடன் இயற்கையாகப் பிணைந்துகொள்வதற்காக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் சடங்குக்காக ஒரு மர பொம்மையைத் தீயிலிட்டு எரிப்பார்கள். அதனாலேயே இதற்கு ‘பர்னிங் மேன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கடந்த வருடத்தில் எரிக்கப்பட்ட பொம்மையின் சாம்பல் துகள்களை உடம்பில் பூசிக்கொண்டு நிர்வாண நிலையில் குவியும் கலைஞர்கள், அந்தப் பொட்டல் காட்டில், சுட்டெரிக்கும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் உல்லாசமாகத் திரிவார்கள். கடந்த காலக் கவலை, துயரங்களை அந்த வெப்பத்தில் பொசுக்கிவிட்டு புத்துணர்வைப் பெறுவதற்காகவும் நிறைய பேர் இங்கு வருகின்றனர். இங்கே எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. பிடித்திருந்தால் யாரும் யாருடன் வேண்டுமானாலும் கூடிக் குலாவி மகிழ்ச்சியாக இருக்கலாம்.

ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கிற இந்த உல்லாசத் திருவிழா ஒரு வாரம் நீடித்துச் செல்லும். இந்தத் திருவிழாவில் கலந்துகொள்கின்ற கலைஞர்கள் தங்களின் விதவிதமான படைப்புகளைக் காட்சிப்படுத்துவார்கள். அந்த ஒரு வாரம் கலைஞர்களின் சொர்க்கபுரியாகவே மாறியிருக்கும் இந்தப் பாலைவனம். கடந்த ஆண்டு நடந்த திருவிழாவில் அங்கே குழுமியிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட வைத்தது, உக்ரைன் நாட்டுச் சிற்பியான மிலோவின் ‘லவ்’ சிற்பம்தான்.

ஆண், பெண் என இரண்டு உருவங்கள் தனித்தனித் தீவாக முரண்பட்டு அமர்ந்திருக்கும் இந்த சிற்பத்தை உலோகத்தைக் கொண்டு ஒரு கூண்டு போல வடிவமைத்திருக்கிறார் அவர். அந்த கூண்டுக்குள் அன்பு, சமாதானத்தை வேண்டி ஏங்கி நிற்கின்ற இரண்டு குழந்தைகளின் சிற்பங்களையும் வைத்திருக்கிறார். பகலில் இந்த சிற்பத்தை பார்க்கும்போது எந்த உணர்வும் நமக்கு ஏற்படாது. ஆனால் கதிரவன் மறைந்து இருள்சூழ ஆரம்பித்ததும் ரேடியம் பூசப்பட்டிருக்கும் அந்தக் குழந்தைகள், நிலவைப் போல ஒளிர ஆரம்பிப்பார்கள்.

அப்போது அந்த சிற்பத்தைக் காணும்போது நம் மனதை சதா அலைக்கழித்துக் கொண்டிருக்கும் ஈகோ, போட்டி, பொறாமை போன்ற இருள் மறைந்து அன்பு, காதல், சமாதானம் என்ற வெளிச்சம் நம் மீது பாயும். அந்த ஆண்-பெண் போல நாம் வெளியில் எவ்வளவு முரண்பட்டு இருந்தாலும், நமக்குள் குடிகொண்டிருக்கும் குழந்தைமை விரும்புவது அன்பை மட்டும்தான் என்பது இதன் ஹைலைட்!

நேற்று விஜய்-அமலாபால், இன்று அஸ்வின்-சௌந்தர்யா, பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலி என ஆயிரக்கணக்கானவர்கள் நீதிமன்றத்தின் வாசல் முன் விவாகரத்தை வேண்டி முரண்பட்டு நிற்பதற்கு முதன்மைக் காரணமாக இருப்பது தங்களுக்குள்ளே எப்போதும் ஒளிந்துகொண்டிருக்கின்ற குழந்தைமை உணர்வை மறந்ததுதான். நாம் மறந்துவிட்ட அந்தக் குழந்தையை தன் கலையினூடாக ஒளிரவிட்டிருக்கிறான் மிலோவ் என்ற கலைஞன்!

மனிதர்கள் முரண்பட்டு நிற்பதற்கு முதன்மைக் காரணமாக இருப்பது தங்களுக்குள்ளே எப்போதும் ஒளிந்துகொண்டிருக்கின்ற குழந்தைமை உணர்வை மறந்ததுதான்.

- த.சக்திவேல்