ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர்

-சுபா


குணாளன் சொன்னால் மறு பேச்சு கிடையாது என்பது தெரியும் என்பதால், “சரி...” என்று ஒற்றை வார்த்தையில் உரையாடலை முடித்தார், தீபக் தர்மசேனா. அவர் முகத்தில் வியர்வை முத்துக்கள் பூத்தன.

விஜய்தான் குற்றவாளி என்று வாக்குமூலம் கொடுத்தபின், ஜார்ஜ் மருத்துவமனையில் என்ன முடிவை சந்தித்தானோ,  அதே முடிவைத்தான் தானும் சந்திக்க நேருமா என்ற கவலை அவரை ஆட்கொண்டது. போனை மருத்துவ நண்பரிடம் திருப்பிக் கொடுக்கையில், அவர் குரல் கம்மியது. “எனக்கு ஊசி போட வேணாம்... மாத்திரை எதுவும் வேணாம்... எதுலயாவது விஷம் கலக்கறதா இருந்தா, முன்கூட்டியே சொல்லிடு! நான் சாகறதுக்கு முன்னாடி தெரிஞ்சுக்கிட்டு தயாரா இருக்க விரும்பறேன். எங்கம்மாவுக்கு ஏதாவது நல்ல ஏற்பாடு செய்ய விரும்பறேன்...”

மருத்துவர் பதில் எதுவும் சொல்லாமல் அவரைத் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு நகர்ந்தார். சிந்தாதிரிப்பேட்டை குளிர் அறை. நம்பர் பூட்டு திறக்கப்பட்டு, அந்த கனமான இரும்புக் கதவு தள்ளித் திறக்கப்பட்டது. உள்ளே விளக்குகளைப் போட்டுக்கொண்டு போலீஸ் நுழைந்தது. பாய்ச்சப்பட்ட ஒளி ஒவ்வொரு இடமாக வெளிச்சமிட்டுக் காட்ட... அங்கு அடுக்கப்பட்டிருந்தவற்றைப் பார்த்து, போலீஸ் அதிர்ந்தது. உறுதியான கண்ணாடித் தாள் போட்டு மூடப்பட்டு, பல சிற்பங்கள், தூண் அமைப்புகள் அங்கே சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.

“கவனமா ஒவ்வொண்ணையும் வீடியோவுல பதிவு பண்ணுங்க...” என்றார், சப் இன்ஸ்பெக்டர் சுகுமார். தன் பரபரப்பை அடக்க முடியாமல் துரை அரசனுக்கு போன் செய்தார். “இங்க கெடைச்சிருக்கற ஆதாரம் போறும், சார்... அந்த தீபக் தர்மசேனாவை அரெஸ்ட் பண்ண!” என்று பரபரத்தார். “ஐ’ம் ஆன் மை வே...” என்றார் துரை அரசன். ஜெயசூர்யா லேப்டாப்பிலிருந்து விலக்கி தன் நீளமான விரல்களை நெட்டி முறித்தான்.

“இது, சவாலான வேலையாதான் இருக்கு..!” என்றான். நந்தினி கொட்டாவியை அடக்கியபடி, “அப்போ, உன் தோல்வியை ஒத்துக்கறியா..?” என்று, சற்றே எள்ளலான குரலில் கேட்டாள். ஜெயசூர்யா, அதைவிட எள்ளலான சிரிப்பு ஒன்றை உதிர்த்தான். தன்னுடைய லேப்டாப்பின் திரையைக் காட்டினான். “சவாலா இருக்குனு சொன்னேனே தவிர, பின்வாங்கிட்டேன்னு சொன்னேனா..? அங்க பாரு, என்ன நடந்துட்டு இருக்குனு...” நந்தினி பார்த்தபோது, பல்வேறு கம்ப்யூட்டர் ஆணைகள் ஒன்றன்பின் ஒன்றாக அந்தத் திரையில் கீழிருந்து மேல் நோக்கி புல்லட் ரயில் வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்தன.

“என்னோட பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தியிருக்கேன். என்னோட ஸ்பெஷல் சாஃப்ட்வேரால கண்டுபிடிக்க முடியாத பாஸ்வேர்டு கிடையாது. பூட்டை உடைக்காம திறக்கணும்னு கள்ளச் சாவி போட்டு முதல்ல ட்ரை பண்ணுவோம்... முடியலன்னா சுத்தியலை வெச்சு உடைச்சுத் திறக்க வேண்டியதுதான்னு முடிவு பண்ணிட்டேன்...” “டேய்... டேய்... அந்தப் பூட்டுலயே விஷயம் இருக்கலாம். அவசரப்பட்டு உடைச்சிராத..!”

“அடடா, ஒரு உதாரணத்துக்கு சொன்னேன். உடனே அதைப் பிடிச்சுக்காத...” என்று ஜெயசூர்யா சொல்லும்போதே, கம்ப்யூட்டர் திரை ஓட்டம் ஒரு முடிவுக்கு வந்து சரக்கென்று நின்றது. சிவப்பாய் இருந்த சில எழுத்துக்கள் நிறம் மாறி பச்சையாக முடிந்தன. “திஸ் ஈஸ் ஜெயசூர்யா..!” என்றான் அவன், அவளைத் திரும்பிப் பார்த்து. “அப்படின்னா..?” “வேலை முடிஞ்சிருச்சு! இப்ப நம்ம சிப்பாய் வியூகத்தை உடைச்சி, உள்ள நுழைஞ்சிட்டாரு! போய், ஒவ்வொரு ஃபோல்டரா உனக்குத் திறந்து காட்டப் போறாரு..! பக்கத்துல உட்கார்ந்து பாரு...” அவன் சொன்னபடியே, விஜய் அனுப்பியிருந்த ரகசிய ஃபோல்டர் திறந்தது. உள்ளே, கிட்டத்தட்ட எழுபது புகைப்படங்கள் இருந்தன.
முதல் புகைப்படத்தைச் சுட்டியதும், அது, பெரிதாக விரிந்தது.

“இது ஏதோ கோயில் சிற்பம் மாதிரி இருக்கு..!” என்றான் ஜெயசூர்யா. அடுத்தடுத்த படங்களை நகர்த்திப் பார்த்தபோது, நடராஜர், பைரவர், மகிஷாசுரமர்த்தினி, காளி, அர்த்தநாரீஸ்வரர், குழலூதும் வேணுகோபாலன் என்று வெவ்வேறு வடிவங்களில் சிற்பங்கள்! அந்தப் புகைப்படத் தொகுப்பில் ஒரு நந்தியும், சில தூண்களும்கூட இருந்தன. “அரவமணிநல்லூர்ல ஒரு நடராஜர் திருடு போனார்னு நினைச்சோம். அந்த நெட்வொர்க்குடைய கேலரி போல இருக்கே இது! எப்படி இது விஜய் கைக்குக் கிடைச்சது..?” நந்தினி தன் போனை எடுத்து, விஜய்க்கு போன் செய்தாள்.

“உன் ஃபோல்டரைத் திறந்தாச்சு... எல்லாம் கோயில் சிற்பங்கள்டா..!” என்றாள். “துரை அரசனுக்கு உன் நம்பர் கொடுத்து, உனக்கு போன் பண்ணச் சொல்றேன். அந்த போட்டோக்களை எல்லாம் அவருக்குக் கொடுத்துடு! அப்படியே, ஃபோல்டர்ல இருக்கற போட்டோக்களை காப்பி பண்ணி, கூகுள் ட்ரைவ்ல ஷேர் பண்ணு! நானும் இங்க பார்த்துக்கறேன்...” என்றான் விஜய்.

“ஷ்யூர்...” “எழுத்தும் நம்பரும் குழப்பமா ஒரு மேட்டர் அனுப்பினேனே..?” “இருடா... ஒவ்வொண்ணா செக் பண்ணிட்டு இருக்கோம்!” என்றாள் நந்தினி. போன் உரையாடலை முடித்துக்கொண்டு, ஜெயசூர்யாவின் பக்கம் திரும்பினாள். “கம்ப்யூட்டரை வெச்சு உன் புத்திசாலித்தனத்தை காட்டிட்ட! அந்த பேப்பர்ல இருக்கற மேட்டர்..?” “என் ரத்தத்தை முழுசா உறிஞ்சிடுவே போல இருக்கே..?” என்று அந்த ப்ரின்ட் அவுட்டை அவளிடமிருந்து வாங்கினான், ஜெயசூர்யா.

வரிசையாக அடுக்கப்பட்டிருந்த அந்தச் சிற்பங்களை துரை அரசன் பிரமிப்புடன் பார்த்தார். “மாத்ருபூதம், அவர் மூலமா சின்னதுரைனு ஏதோ வாலைப் பிடிச்சி, ஏதோ குடுமியைப் பிடிச்சி, இங்க வந்து சேர இத்தனை நாள் ஆயிருச்சு... இனிமே தீபக் தர்மசேனாகிட்ட ஸ்க்ரூவை டைட் பண்ண வேண்டியதுதான்...” என்றவர், நந்தினிக்கு போன் செய்தார். “இப்பதான் விஜய் போன் பண்ணாரு... சொன்னாரு... எக்ஸலன்ட் விஷயம்மா! நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க... நான் சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரை அனுப்பி, அந்த போட்டோக்களை வாங்கிக்கறேன்...” “வேண்டாம் சார்... உங்க இ மெயில் ஐ.டி. குடுங்க! நான் கூகுள் ட்ரைவ்ல ஷேர் பண்ணிட்டா, நீங்க அப்படியே ஓப்பன் பண்ணி பார்க்க முடியும்...” என்றாள் நந்தினி.

“ஓ... டெக்னாலஜி அந்த அளவுக்கு எல்லாத்தையும் வசதியாக்கிடுச்சா? ரொம்ப நல்லதும்மா... என்னுடைய மெயில் ஐ.டியை இப்பவே உங்களுக்கு மெசேஜ் பண்றேன்...” என்றார் துரை அரசன், மகிழ்ச்சியுடன். எழுத்துகளும் எண்களுமாக அர்த்தமில்லாமல் அடுக்கப்பட்டிருந்த அந்தக் காகிதத்தை வாங்கி, ஜெயசூர்யா உன்னிப்பாகக் கவனித்தான். சில நிமிடங்கள் தொடர்ந்து பார்த்ததும் கண்களில் பூச்சி பறந்தது. மண்டைக்குள் ‘க்ளிக்’ என்ற ஒலி கேட்டது. அகலமாகப் புன்னகைத்தான். “இது, சங்கேத மொழில எழுதப்பட்டிருக்கற ஒரு தகவல். நான் நினைக்கறது கரெக்டா இருந்தா, இதை உடைச்சிர முடியும்...” என்றான், பிரகாசமாக.

“என்ன சங்கேதம்.? எனக்குப் புரியல...” என்றாள் நந்தினி. “இப்ப முதல் வரிசையில பாரு... மூணு எழுத்து தாண்டி, என்ன நம்பர் போட்டிருக்கு..?” “5” “அங்கேர்ந்து அஞ்சாவது எழுத்து என்ன? அதை எடுத்து தனியா எழுதிக்கோ... அதுக்கப்புறம் வர்ற எழுத்தெல்லாம் வேஸ்ட். மறுபடியும் நம்பர் எப்ப வருது..?” “இதோ... ரெண்டாவது வரிசையில 13ன்னு போட்டிருக்கு!” “ஸோ, அந்த நம்பர்ல ஆரம்பிச்சு, 13வதா என்ன எழுத்து வருதோ, அதை எடுத்து அடுத்ததா எழுதிக்கணும். இப்படி, எங்க எல்லாம் நம்பர் வருதோ, அந்த இடத்துலேர்ந்து அந்த நம்பர்ல குறிப்பிட்டிருக்கற அளவுக்கு எழுத்துக்களைத் தாண்டி வர்ற எழுத்தை எடுத்து, எழுதிட்டே வந்தா, கடைசியா நமக்கு அர்த்தமுள்ள வார்த்தை கிடைக்க வாய்ப்பு இருக்கு...”

நந்தினி சட்டென்று ஜெயசூர்யாவின் கன்னத்தில் முத்தமிட்டாள். “ப்ரில்லியன்ட்டா இருக்கேடா நீ! ஆனா, யார்டா உட்கார்ந்து இந்தப் பொடிப்  பொடி எழுத்தையெல்லாம் பார்த்து எழுத முடியும்..? ஒரு வரிசை மிஸ் பண்ணாகூட, ஒரே குழப்பமா ஆயிடுமே..!” “இதை நீயோ, நானோ கண்ணால பார்த்து எழுதினோம்னா பத்து நாளாகும். ஆனா, இதையே கம்ப்யூட்டருக்குத் தின்னக் கொடுத்தோம்னா சில நிமிஷத்துல வேலையை முடிச்சிரும்...” “அப்படியா..?”

“ஆமாம். ஆனா, இப்ப நான் உன்கிட்ட சொன்ன விளக்கத்தை கம்ப்யூட்டர்ல ஒரு ப்ரோகிராமா நான் எழுதணும். அப்புறம், நீ போட்டோவா குடுத்திருக்கறதை எழுத்தா மாத்தணும். இந்த ரெண்டு வேலையும் செய்யறதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும்... அது முடிஞ்சதும், உனக்கு இதோட அர்த்தத்தையும் சொல்லிடுவேன்!”

ஜெயசூர்யா அந்த வேலையில் அடுத்து இறங்கினான். சான் ஃப்ரான்சிஸ்கோ. பத்ரி குளித்து உடை மாற்றிக்கொண்டபோது, அவனுக்கு போன் வந்தது. எடுத்தான். எதிர்முனை பேசுவதை குறுக்கிடாமல் கவனமாகக் கேட்டுக்கொண்டான். கடைசியில், “சரி சார்... அப்படியே செய்யறேன்!” என்றான். பதினோரு மணிக்கு விஜய்யை பத்ரி பிக் அப் செய்துகொண்டபோது, விஜய்யின் கண்களில் இன்னும் தூக்கம் மிச்சமிருந்தது. “இப்ப நாம எங்க போறோம்..?” என்றான், களைத்த குரலில். “நேத்து பார்த்தோமே... டாம் கார்ட்டர், அவர் இன்னொரு நண்பர் வீட்டுக்கு நம்மளை கூட்டிட்டுப் போகப் போறார்...” “அவரும் வந்திருக்காரா..?”

“நாம போற வழியில டாம் கார்ட்டரை பிக் அப் பண்ணிக்கப் போறோம்...” என்றான் பத்ரி. காரில் பயணம் செய்கையில் விஜய்யின் மண்டைக்குள் சில கேள்விகள் பூச்சிகளாகப் பறந்தன. ‘தமிழ்நாட்டில் கோயில் சிற்பங்கள் கொள்ளையடிக்கப்பட்டபோது நான் சாட்சியாக இருந்ததே தற்செயல் என்று நினைத்திருக்கையில், நான் போகும் பாதையில் சந்திக்கும் மனிதர்கள் யார் யாருக்கோ அதில் ஏதோ ஒரு பங்கு இருக்கும் போலிருக்கிறதே! இது என்ன அதிசயம்?

அமெரிக்காவுக்கு நான் அனுப்பப்பட்டது என் தொலைக்காட்சி நிறுவனத்துக்காக சில தொலைத்தொடர்கள் வாங்குவதற்குத்தானே..? இங்கு பத்ரியின் பென் டிரைவில் கிடைத்த புகைப்படங்கள் கோயில் சிற்பங்களுடையது என்று நந்தினி சொன்னாளே... அப்படியானால் சிற்பங்கள் கொள்ளை போவதற்கும் என் தொலைக்காட்சி ஊழியர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்னைச் சுற்றி மர்மமாக ஒரு வலை பின்னப்படுகிறதோ!’

அந்தக் கேள்விகளுக்கான விடை கிடைக்கும் முன்னரே கார் ஒரு நிறுத்தத்துக்கு வந்தது. பொது நூலகத்தின் வாசலில், ஒரு மர பென்ச்சில் அமர்ந்திருந்தார் டாம் கார்ட்டர். காரை நிறுத்தியதும், சரேலென்று ஏறிக்கொண்டார். “குட் மார்னிங்...” என்று பளீரென்று புன்னகைத்தார். “குட் மார்னிங்...” “நேற்று நன்றாகத் தூங்கினாயா..? ஜெட்லேக் உன்னைத் தொந்தரவு செய்யவில்லையே..?” தொந்தரவு செய்தது பத்ரியிடம் கிடைத்த பென் டிரைவ்தான் என்று விஜய் சொல்லவில்லை. “நாம் இன்று மிக முக்கியமான நபர் ஒருவரைச் சந்திக்கப் போகிறோம்... அவர் மிகப்பெரிய தொலைக்காட்சித் தயாரிப்பாளர். அவரிடம் பல சுவாரஸ்யமான தொடர்கள் இருக்கின்றன...” என்றார் கார்ட்டர்.

அவர்களுடைய கார் திடீரென நின்றது. காரணம், ஒரு மூத்த குடிமகன் மோட்டார் வைத்த சக்கர நாற்காலியில் தெருவைக் குறுக்கே கடந்தார். விஜய் கவனத்தை திசை திருப்ப வெளியே பார்வையை எறிந்தான். சக்கர நாற்காலி நடைபாதையில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வசதியாக சரிவான பாதை அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, விஜய் ஆச்சரியப்பட்டான்.

‘இந்த நகரத்தின் நடைபாதைகள் எவ்வளவு அகலமாக இருக்கின்றன! இந்த நடைபாதை அளவுக்குக்கூட நம் ஊரில் பல தெருக்கள் அகலமாக இல்லையே...’ என்று விஜய் மனதில் ஓர் ஏக்கம். நடைபாதைவாசிகளுக்கும், தெருவைக் கடக்கும் பாதசாரிகளுக்கும் இங்கே முக்கியத்துவம் தரப்படுவதையும் விஜய் கவனித்தான். கார் கிட்டத்தட்ட அறுபது கி.மீ தொலைவை நாற்பது நிமிடங்களில் கடந்து, நகரத்துக்கு சற்று ஒதுக்குப்புறமாக இருந்த பகுதியை அடைந்தது.

‘தனாசி பகுதிக்குள் நுழைகிறீர்கள்’ என்று பச்சை போர்டுகள் அறிவித்தன. உயர்ந்து வளர்ந்த பச்சை மரங்கள் நிழல் தந்திருக்க, அந்தப் பகுதியே ரம்மியமாக இருந்தது. ஒரு மாபெரும் மாளிகையின் வாசலில் அவர்களுடைய கார் நிறுத்தத்துக்கு வந்தது. உள்ளே அவனுக்கு இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்று விஜய்க்குத் தெரியாது.

பாய்ச்சப்பட்டஒளி ஒவ்வொரு இடமாக வெளிச்சமிட்டுக் காட்ட... அங்கு அடுக்கப்பட்டிருந்தவற்றைப் பார்த்து, போலீஸ் அதிர்ந்தது.

ஓவியம்: அரஸ்

(தொடரும்...)