அப்பா... மகன்...



சிவா பிஸியாக ஒரு ஃபைல் பார்த்துக்கொண்டிருந்தபோது போனில் அந்த அழைப்பு வந்தது. ‘‘என் பெயர் வெங்கடேசன். மதுரையிலிருந்து பேசுறேன். என்னை உங்களுக்குத் தெரியாது. டெலிபோன் டைரக்டரியில் உங்க பெயரை செலக்ட் பண்ணி போன் செய்றேன்...’’ என்றது குரல் எரிச்சலடைந்த சிவா கடுமையாகக் கேட்டார், ‘‘நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?’’ ‘‘1998ல் ஒரு விபத்தில் என் கால் எலும்பு உடைஞ்சிடுச்சு. நடக்க முடியாம படுத்த படுக்கையா கிடக்கறேன். என் காலை சரி பண்ணிக்க பண உதவி வேண்டும்...’’

சிவா பதிலேதும் பேசாமல் போனை வைத்துவிட்டு ஃபைலில் மூழ்கினார். சில நிமிடங்களில் மீண்டும் போன் ஒலித்தது. காலர் ஐ.டி.யில் பார்த்தார். அதே நம்பர். கோபத்தோடு போனை எடுத்தார். ‘‘மன்னிக்கணும்... இப்ப போன்ல உங்களிடம் பேசினது என் அப்பாதான்.   சாரி... அவருக்குக் கொஞ்சம் மூளை சரியில்லை.

அடிக்கடி இப்படித்தான் யாருக்காவது போன் பண்ணி காசு கேட்பார்...’’ கோபம் வடிந்து பரிதாபம் பிறக்க, ‘‘பரவாயில்லை!’’ என்றார் சிவா. ‘‘அவரை ஒரு நல்ல மனநோய் டாக்டரிடம் காட்டணும். செலவுக்குப் பணம் இல்ல! பெரிய மனசு பண்ணி நீங்க உதவி செய்ய முடியுமா?’’ ‘‘பிள்ளைக்கு அப்பாவே தேவலை’’ என்று ஆத்திரச் சிரிப்போடு போனை வைத்தார் சிவா.            

-பம்மல் நாகராஜன்