சந்தானத்துக்கு பொறுப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு!



இயக்குநர் ராஜேஷ்.எம்

‘‘தமிழ்ல ‘சரோஜா’, ‘பையா’னு ரோடு மூவி நிறைய வந்திருக்கு. நான் முதல் தடவையா அப்படி ஒரு ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கேன். சென்னையில் தொடங்கி கோவா, பாண்டிச்சேரினு பெரிய பயணம்... அதுல அழகான காமெடினு என் ஸ்டைல்ல இருக்கும். பிரகாஷ்ராஜ் சார், ஜி.வி.பிரகாஷ் கூட ஃபர்ஸ்ட் டைமா வொர்க் பண்ணியிருக்கேன்...’’ - மெலிதான புன்னகையுடன் பேசுகிறார் இயக்குநர் ராஜேஷ்.எம். இப்போது அவர் இயக்கி வரும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் டப்பிங் வேலையின் இடையே பேசினார்.

‘‘தமிழ்ல ரோடு மூவி பண்றது  சவாலான விஷயம். சென்னை நகருக்குள்ல சாலைகளில் ஷூட்டிங் நடத்த பர்மிஷன் கிடைக்கல. திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்தான்  பர்மிஷன் கிடைச்சது. சாலைகள்ல படப்பிடிப்புன்னா... எல்லா இடங்கள்லேயும் நம்ம இஷ்டத்துக்கு லைட்டிங் செட் பண்ணிட முடியாது. கிடைக்கற லைட்டிங்கில் யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் படத்தை முடிச்சிருக்கோம்.’’

‘‘என்ன சொல்றார் ஜி.வி.பிரகாஷ்?’’
‘‘இசையமைப்பாளரா இருந்து நடிகராக ஜெயிச்சவர் ஜி.வி.பிரகாஷ். எதையும் பாஸிட்டிவா எடுத்துக்கறவர். ஹீரோ காலேஜ் பையன் என்பதால், ஜி.வி. பொருத்தமா இருப்பார்னு அவர்கிட்ட கதையைச் சொன்னேன். கதையைக்  கேட்டு முடிச்சதும் அவர் சொன்ன டைட்டில்தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’.  நேஷனல் ஹைவேஸ்ல ஷூட். ஜி.வி.யும், பாலாஜியும் ஒரு கார்ல போயிட்டிருந்தபோது, எதிர்பாராத விதமா ஒரு கன்டெய்னர் லாரி அவங்க காரை இடிச்சிடுச்சு. மிகப் பெரிய விபத்துன்னு நாங்க பயந்துட்டோம். நல்லவேளை எதுவும் ஆகல. ஜி.வி.க்கும், பாலாஜிக்கும் சின்னச் சின்ன காயங்கள்... இப்படி நிறைய ரிஸ்க் எடுத்து உழைச்சிருக்கோம்!’’

‘‘இந்தப் படத்துக்காக ஆனந்தியை சிபாரிசு பண்ணினது ஹீரோ ஜி.வி.பிரகாஷ்தானா?’’
‘‘அய்யய்யோ! அப்படி எதுவும் கிடையாது. நிக்கி கல்ரானியும், தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணின அவிகா கோரும் நடிக்கறதா இருந்தது. ரெண்டு பேரையும் வச்சு போட்டோஷூட் கூட பண்ணிட்டோம். அவிகா இந்தியில் பெரிய ப்ராஜெக்ட் டி.வி. சீரியல்ல ஏற்கனவே நடிச்சிட்டிருந்தாங்க. ‘சீரியல் ஷூட்டிங்கை முடிச்சிட்டு இந்தப் படத்துக்கு வர முடியுமானு தெரியலை’னு அவங்க சொன்னதால ஆனந்தியை கமிட் பண்ணினோம். அறிமுகமான முதல் படத்திலேயே நல்ல பர்ஃபாமர்னு நிரூபிச்சவங்க.’’

நிக்கி கல்ரானி, ஆனந்தி... ரெண்டு பேரும் எப்படி?’’
‘‘போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. நிக்கியும், ஆனந்தியும் ஜி.வி. காம்பினேஷன்ல ஆடுற டான்ஸை மலேசியாவில் ஷூட் பண்ணினோம். பிரகாஷ்ராஜ் சார் மெயின் கேரக்டர் பண்ணியிருக்கார். முதல்முறையா அவரோட வொர்க் பண்ணினதுல சந்தோஷம். காலையில ஷூட்டிங் வர்றவர், அன்னிக்கு பேச வேண்டிய டயலாக்குகளை ரெண்டு நிமிஷத்துல படிச்சிடுவார். அதன்பிறகு அன்னிக்கு முழுவதும் எப்போ அந்த டயலாக்கை அவர்கிட்ட கேட்டாலும் ஒரே டேக்ல சொல்லி அசத்துவார்.

ரோடு மூவி என்றாலும் படத்துல காமெடி, ஆக்‌ஷன், சேஸிங், ஃபேமிலி டிராமா என எல்லாம் கலந்திருக்கேன். ரோபோ சங்கர், சிங்கம்புலி, ஆர்.ஜே. பாலாஜி, மொட்டை ராஜேந்திரன்னு நிறைய பேர் இருக்காங்க. என்னோட ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ரெண்டுக்கும் ஒளிப்பதிவு பண்ணின சக்‌தி சரவணன்தான் இதுலேயும் கேமரா பண்ணியிருக்கார். ‘சரோஜா’ படத்துல ரோடு ட்ராவல் வொர்க் பண்ணின அனுபவம் இதிலும் அவருக்குக் கை கொடுத்திருக்கு. ‘அம்மா கிரியேஷன்ஸ்’ சிவா சார்தான் இதையும் தயாரிச்சிருக்கார்.

அவர் இளையராஜாவோட மிகப்பெரிய ரசிகர். யுவன், கார்த்திக்ராஜா ரெண்டு பேருமே அவர் தயாரிச்ச படத்துலதான் அறிமுகம் ஆனாங்க. இந்தப் படத்துல ஜி.வி.பிரகாஷ் இசையமைச்சிருக்கார். ஒரு மியூசிக் டைரக்டரா அவரை ரொம்பப் பிடிக்கும். ‘மதராசபட்டிணம்’ ரொம்ப பிடிச்ச ஆல்பம். இதுல ஸ்டைலா ஒரு ஸாங், அழகான மெலடி தவிர ‘லொகாலிட்டி பாய்ஸ்’னு ஒரு பாடல் பண்ணிக் குடுத்திருக்கார். யங்ஸ்டர்ஸுக்கு ரொம்ப பிடிக்கும்.’’

‘‘ராஜேஷ் படம்னாலே டாஸ்மாக் சீன்ஸ் இருக்குமே..?’’
‘‘ஹலோ... எல்லாரோட படத்துலேயும்தான் அது இருக்கு. என்னை ஏன் டார்கெட் பண்ணி சொல்றாங்கன்னு தெரியல. இந்தப் படத்துல ஒரு டாஸ்மாக் சீன் கூட வைக்கல. ஸ்கிரிப்டோட மூடுக்கு தண்ணியடிக்கற காட்சிகள் தேவைப்படல!’’

‘‘உங்க ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துக்குப் பிறகு நயன்தாராவோட கிராஃப் உச்சத்துக்குப் போயிருக்கே?’’
‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவ்வளவு புரொஃபஷனலா நடிக்கற ஆர்ட்டிஸ்ட். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதைப் பேச வைப்பாங்க. இப்பவும் அவங்க கூட பேசுவேன். அவங்க சினிமா கேரியர்ல ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சின்ன இடைவெளி வரும். அதன்பிறகு மிகப்பெரிய உயரத்துக்குப் போவாங்க. மறுபடியும் பெஸ்ட் ஆக்ட்ரஸ்னு நிரூபிப்பாங்க. இந்த மாதிரி சூழல்கள் அவங்க கேரியர்ல பல முறை நடந்திருக்கு...’’

‘‘என்ன சொல்றார் உங்க நண்பர் ஹீரோ சந்தானம்?’’
‘‘அவர் ஹீரோவானது ஏற்கனவே திட்டமிட்டதுதான். ‘இனிமே நான் ஹீரோவாதான் நடிக்கப் போறேன்’னு படப்பிடிப்பில் ஒருநாள் வந்து சொன்னார். உடனே பாராட்டினேன். அதன்பிறகு அவரை காமெடியனாக நடிக்கக் கேட்டு வந்த ஆஃபர்களை எல்லாம் மறுத்திட்டதா சொன்னார். அவரோட ‘தில்லுக்கு துட்டு’ பெரிய ஹிட் ஆனதில் ரொம்ப சந்தோஷம். காமெடியனா நடிச்சாலும் சரி, கதாநாயகனா நடிச்சாலும் சரி... அவர் நல்ல நடிகர்.

இப்ப அவருக்கு பொறுப்பு ரொம்ப ஜாஸ்தி ஆகியிருக்கு. ஒரு ஹீரோவா படத்துல நிறைய விஷயங்கள் பண்ண வேண்டியிருக்கும். டான்ஸ் ஆடணும். ஃபைட் பண்ணணும்னு நிறைய விஷயங்கள் இருக்கு. எதிர்காலத்துல என்னோட படத்துலேயும் அவரை ஹீரோ ஆக்குவேன். ‘உங்களுக்கு என்ன தோணுதோ... அதை முழு மூச்சுல பண்ணுங்க. கண்டிப்பா ஜெயிப்பீங்க’னு சொல்லியிருக்கேன்.

ஒரு படம் சுமாரா இருந்து, அதுல அவரோட காமெடி நல்லா இருந்தால் ‘சந்தானம் கலக்கிட்டார்’னு சொல்லுவாங்க. படம் சுமார்னு பேர் வாங்கி ரிசல்ட் மோசமா இருந்தாலும் அவருக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. ஆனா, இனிமே அவர் அப்படி இருந்திட முடியாது.  மெயின் ரோல் பண்ணுறதால கடினமா உழைச்சால்தான் படம் நல்லா வரும். அதை அவரும் நல்லா புரிஞ்சு உழைக்கறது ரொம்ப சந்தோஷம்!’’

- மை.பாரதிராஜா