உள்ளே வெளியே



மகள் நளினியை சைக்கிளில் கூட்டிப் போய் பள்ளிக்கூடத்தில் விட்டான் முருகன். கேட்டில் இறக்கி விடும்போது நளினியுடன் கூடப் படிக்கும் சரண்யா காரிலிருந்து இறங்கினாள். முருகனின் முகம் மாறியது. அதைக் கவனித்த நளினியின் கிளாஸ் டீச்சர், ‘‘ஏற்றத்தாழ்வு ஸ்கூல் கேட்டுக்கு வெளியேதான். உள்ளே எல்லோரும் சமம். காரில் வந்தாலும் சரி, நடந்து வந்தாலும் சரி’’ என சிரித்தபடி சொன்னாள்.

நளினியும் சரண்யாவும் தோளில் கை போட்டபடி போவதைப் பார்த்தபடி சைக்கிளை மிதித்தான் முருகன். ‘‘என்ன முருகா... பொண்ணை ஸ்கூலில் விட்டுட்டு வர்றியா?’’ கேட்டபடி தோளில் கை போட்டான் நண்பன் ஏழுமலை. இருவரும் ஒரே  கம்பெனியில் வேலை செய்பவர்கள். பக்கத்துக் கடையில் டீ குடித்து விட்டு கம்பெனிக்குள் நுழைந்தார்கள். என்றும் இல்லாமல் அன்றைக்கு முருகனின் மனைவி இரண்டு முறை மொபைலில் பேசினாள். நீண்ட நேரப் பேச்சு! ‘‘இப்படி பேசிட்டே இருந்தா வேலை எப்படி ஓடும் முருகா?  போனை வை! நீ எனக்கு நண்பன். அது கம்பெனி கேட்டுக்கு வெளியே! கேட்டுக்கு உள்ளே நான் சூப்பர்வைசர்...’’  ஏழுமலையின் குரலில் அதிகாரம் இருந்தது. ஒரு மணி நேரத்தில் கேட்டுக்கு வெளியேயும், உள்ளேயும்  நடந்தவற்றை நினைத்தபடி மொபைலை அணைத்தான் முருகன்.       

-வி.சிவாஜி