எது நடக்கக் கூடாதுனு நினைச்சேனோ அது நடந்திடுச்சு!கலங்கிய ரஜினி

கிசுகிசுவாகப் பரவியதை சௌந்தர்யா உறுதி செய்திருக்கிறார். அஸ்வின் - சௌந்தர்யா ரஜினி பிரிவுச் செய்தி படித்தவர்கள் பரபரப்பானார்கள். உடல்நலப் பிரச்னைகள், லிங்கா பஞ்சாயத்து என அடுத்தடுத்து ரஜினியைக் கவலையில் ஆழ்த்திய விஷயங்களை ‘கபாலி’க்குக் கிடைத்த வரவேற்பும் ரசிகர்கள் அவரைக் கொண்டாடிய விதமும் மறக்கடித்து இருந்தன. அமெரிக்க சிகிச்சையும் ‘கபாலி’யும் தந்த ஆறுதலை, இப்போது இரண்டாவது மகள் சௌந்தர்யா-கணவர் அஸ்வின் ராம்குமாரின் பிரிவு சுத்தமாகத் துடைத்துப் போட்டுவிட்டது.

‘திருமண வாழ்க்கை குறித்து வரும் செய்திகள் உண்மையே. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். விவாகரத்து தொடர்பான பேச்சுகள் நடந்து வருகின்றன. என்னுடைய குடும்பத்தின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளியுங்கள்’ என சௌந்தர்யா ட்விட்டரில் கோரிக்கை விடுக்க... அது கோடம்பாக்கத்தில் செம ஹாட் டாபிக். ஊரையே கூட்டி கொண்டாட்டமாக நிகழ்ந்த திருமணம், ஆறே ஆண்டுகளில் விவாகரத்து வரை சென்றது ஏன்?

‘‘ஈகோதான் காரணம்’’ என்று பேச ஆரம்பித்தார் ரஜினி குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர். ரஜினி குடும்பத்திற்கு சமமான பெரும் பணக்காரக்  குடும்பம் அஸ்வினுடையது. என்னதான் நாகரிகம் மாறியிருந்தாலும், அவர்கள் சில ஆசாரங்களை விட்டுக்கொடுக்காமல் அனுஷ்டிப்பவர்கள். தங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவராக மருமகள் இல்லை என அவர்கள் நினைத்தார்கள். அப்பா ரஜினியின் பெயரும் புகழும் தனது தேவைக்கு அதிகமாக இருந்தும், தன்னுடைய தனித்திறமையை உலகிற்கு நிரூபிக்க நினைத்தார் சௌந்தர்யா.

திருமணமான சில மாதங்களிலேயே தயாரிப்பு, இயக்கம் பக்கம் ஆசை துளிர்த்தது. வெங்கட்பிரபுவை இயக்குனராக வைத்து ‘கோவா’ படத்தை சௌந்தர்யா தயாரித்தபோதே சௌந்தர்யா - அஸ்வின் இடையே மனக்கசப்புகள் தொடங்கிவிட்டனவாம். சௌந்தர்யா அதைப் பொருட்படுத்தாமல் அனிமேஷன் துறையில் அடுத்து கால் பதித்தார். ‘சுல்தான் தி வாரியர்’ படத்தில் பரபரப்பாகி அது தொடர்பான வேலைகளில் கவனம் செலுத்தி வந்தது அஸ்வினுக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. 

இதனால் இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தபோது நிலைமை கைமீறிப் போய்விடக்கூடாது என்பதற்காக ரஜினி தலையிட்டு  சமாதானம் செய்தார். ‘கோச்சடையான்’ பட ரிலிஸீன் தாமதத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்கவே ரஜினி மறுபடியும் நடிக்க ஒப்புக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. ‘கோச்சடையான்’ ரிலீஸுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கும் ஆசையில் இருந்தார் சௌந்தர்யா. ‘‘சினிமாவில் சாதனை பண்ணுங்க, வேணாம்னு சொல்லல... ஆனா அதுக்கு முன்ன இரண்டு குழந்தைகள் பெத்து வளத்துட்டு, சினிமாவுக்குப் போங்க’’ என ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதை யாரும் மறந்துவிடவில்லை.

அதன்பிறகே அவர்களுக்கு குழந்தை வேத் கிருஷ்ணா பிறந்தான். ‘பேரக் குழந்தை வந்துவிட்டான். இனி எல்லாரும் ராசியாகிவிடுவார்கள்’ என இரு குடும்பத்தினரும் நினைத்திருந்தார்கள். பிள்ளைப்பேறுக்காக அப்பா வீட்டிற்கு வந்தவர், தொடர்ந்து போயஸ் கார்டன் வீட்டிலேயே இருந்து பட வேலைகளில் இறங்கிவிட்டார். ‘‘வேலைகளை நான் பார்த்துக்கறேன்மா...’’ என ரஜினி நாசூக்காக சொல்லிப் பார்த்தாலும் சௌந்தர்யா கேட்பதாக இல்லை. உடல்நலம் சரியில்லாமல் இருந்த ரஜினியும் இதில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை.

அந்த நேரத்தில் வெளியான தனுஷின் ‘வி.ஐ.பி’ படத்தில் அவரோடு மோதும் கேரக்டரில் வந்த பணக்காரப் பையனுக்கு ‘அஸ்வின்’ என பெயர் வைத்தது குடும்ப உறவுகள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியது. சௌந்தர்யா தனது உணர்வுகளை வெளிக் காட்டாமல், அப்பாவின் ‘கபாலி’ பட விஷயங்களில் பிஸியாகி விட்டார். ‘கபாலி’ என ஒரு ப்ராஜெக்ட் உருவாகக் காரணமாக இருந்தவரே அவர்தான். இப்போது ‘கபாலி பார்ட் 2’ வரை எல்லாவற்றிலும் சௌந்தர்யாவின் உழைப்பும் இருக்கிறது. இந்த நிலையில்தான் விவாகரத்து சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

ரஜினி இந்த வேதனையில் மிகவும் மனம் தளர்ந்து போயிருக்கிறார். சின்ன ஃப்ளாஷ்பேக் ஒன்று... வைரமுத்துவின் மகன் கபிலன் திருமணத்தில் ரஜினி பேசியதை யாரும் மறந்துவிட முடியாது. ‘‘திருமணத்தில் அனைவரையும் திருப்திப்படுத்தவேண்டும் என்பது முடியாத காரியம். அவ்வாறு அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று நினைப்பவன் மிகப் பெரிய முட்டாள். இரண்டு திருமணத்தை நடத்தியதன் மூலம் நான் தெரிந்து கொண்டது இதுதான். கோபம் எனது பலம் என நீண்ட நாள் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, அது பலம் அல்ல, பலவீனம் என புரிய வைத்தவர் வைரமுத்து.

ஏனெனில் அவர் என்னை விட அதிக கோபக்காரர். வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தால்தான், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்’’ என்று அன்று ரஜினி பேசியது நாளைய மணமக்களுக்கும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள். விவாகரத்து குறித்து சௌந்தர்யா ட்விட்டரில் தெரிவித்ததும் கண் கலங்கிவிட்டார் ரஜினி. ‘எது நடக்கக் கூடாதுனு நினைச்சேனோ அது நடந்திடுச்சு’ என வேதனைப்பட்டு இரு குடும்பங்களையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

‘பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் மனிதர் கோட்டை விட்டுவிட்டாரே...’ என யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் அவர். சௌந்தர்யாவின் விவாகரத்து ட்வீட்டைக் கண்டதும் ‘தலைவர் வேதனைப்படுற மாதிரி நடந்துக்காதீங்க அக்கா!’ என ரஜினியின் ரசிகர்கள் பலரும் சௌந்தர்யாவிற்கு ட்வீட்டியிருக்கிறார்கள்.

எதையும் கண்டுகொள்ளாமல், ‘love of my life.. vedkrishna.. my son.. my everything’ என தனது பிறந்த நாளில் தன் குழந்தை புகைப்படத்தைப் போட்டு சௌந்தர்யா மறைமுகமாகச் சொல்லியிருப்பது, ‘இனி என் வாழ்வில் என் குழந்தையைத் தவிர யாருக்கும் இடமில்லை’ என்பதைத்தான்! ரஜினி இந்த மாதத்தின் கடைசியில் ஷங்கரின் படப்பிடிப்பில் களம் இறங்க... பா.இரஞ்சித்துடன் அடுத்த கதையைக் கேட்க ரெடியாகி, அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டார் சௌந்தர்யா. காலம் எல்லாவற்றையும் மறக்கச் செய்யட்டும்!

- ஜேம்ஸ்பாண்ட்