ஈழம்...அம்மாக்களின் கண்ணீர் வற்றவில்லை!



-சோமிதரன்

2003ம் ஆண்டில் இதே மாதத்தில், நான் பி.பி.சி தொலைக்காட்சிக்கான ஒரு விவரணப்படத்தின் பொருட்டு அந்த சிறுவனின் கதையைப் பதிவு செய்தேன். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் தனது தந்தையின் படத்தைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தான். அவனைப் போலவே, குழந்தைகள், வயதானவர்கள், இளம்பெண்கள் என பலரும் புகைப்படங்களை ஏந்தியபடி இருந்தனர். அவனுக்கு அப்போது ஏழு வயதிருக்கும். அவன் ஒருபொழுதும் தன் தந்தையைப் பார்த்ததில்லை. அவன் பிறந்த அந்த நாளில் அவன் அம்மாவை வைத்தியசாலையில் பிரசவத்திற்காக விட்டுவிட்டு பொருட்கள் வாங்கி வர வெளியே சென்ற அவன் அப்பா இப்போது வரை வீடு திரும்பவே இல்லை.

இது நடந்தது 1996 காலப்பகுதியில். அப்போதுதான் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளிடமிருந்து சிறிலங்கா ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. ‘காணாமல் போதல்’ என்பது அப்போது பரவலாக நடைபெற்றது. 13 வருடங்களுக்கு முன்னர் நான் பார்த்த அந்தக் காட்சிகள் இன்னும் மாறவில்லை. இப்போது முன்பைவிட அதிகமானவர்கள் புகைப்படங்களை ஏந்தியபடி அரச அலுவலகங்கள் முன்பாகவும் வெளிநாட்டுத் தூதரகங்கள் முன்பாகவும் இன்னும் தளராத நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

தங்கள் பிள்ளைகளை, கணவனை, சகோதரனைத் தேடி அலையும் இவர்களில் பெரும்பாலானோர், இறுதிச் சண்டையின் பின்னர் தங்கள் உறவுகளைத் தொலைத்தவர்கள். மரணத்தை விட கொடூரமானது ‘உயிரோடு இருக்கிறாரா, இல்லையா’ எனத் தெரியாமல் ராணுவ முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் தேடிக்கொண்டே இருப்பது. சிறிலங்கா ராணுவம் வெளியேறிய சில பகுதிகளில் மக்கள் குடியேறும்போது சில புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றில் அடையாளம் காணப்படாத எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை காணாமல் போன சிலருடையதாக இருக்கலாம். ஆனால் யாருடையது என்று எப்படிக் கண்டுபிடிப்பது? ஒருவர் இருவர் என்றால் கண்டுபிடித்து விடலாம். இங்கு நிலைமை வேறாக அல்லவா இருக்கிறது! இறுதிப் போர் நிகழ்ந்த 2009லும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் மட்டும் போராளிகள், பொதுமக்கள் என சில ஆயிரம் பேராவது ராணுவத்தால் கைதாகி காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன ஆனது என்று சர்வதேச அரங்கிலிருந்து இலங்கை அரசிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பொறுப்பான பதில் எதுவும் இல்லை.

‘நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு சிறையில் இருக்கும் 217 தமிழ் அரசியல் கைதிகளைத் தவிர வேறு யாரும் எந்த ராணுவ முகாமிலோ சிறைகளிலோ இல்லை’ என இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவாகக் கூறிவிட்டார். இந்த நிலையில், கடந்த ஜூலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது. ‘16 ஆயிரம் பேர் இதுவரை காணாமல் போயிருக்கிறார்கள். இதுகுறித்து  இலங்கையின் பதில் என்ன?’ என்று அந்த அறிக்கை கேள்வி எழுப்பியிருந்தது. இந்தச் சூழலில், செப்டம்பரில் ஆரம்பித்துவிட்ட ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விவாதம் நடைபெற வாய்ப்புள்ளது.

இதனைச் சமாளிப்பதற்காக இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டம் இது. காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களைச் சேகரித்து நடவடிக்கை எடுப்பதற்கும், தேடி அலையும் குடும்பங்களுக்கு தகவல் வழங்குவதற்கும் அலுவலகம் ஒன்றை இந்த புதிய சட்டத்தின் மூலம் அமைக்க முடியும்.

‘‘இந்த சட்டம் நல்லிணக்க நடைமுறைக்கான நல்லதொரு வாய்ப்பு’’ என மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலர் நிஷா பிஸ்வாஸ் கூறுகிறார். ஆகவே இம்முறையும் மனித உரிமை அவையில் இலங்கையை அமெரிக்கா காப்பாற்றிவிடுமென நம்பலாம்.  மகிந்த ராஜபக்சே ஆட்சியில் காணாமல் போனவர்கள் மற்றும் போரின்போது நடைபெற்ற குற்றங்கள் குறித்து அறிக்கை அளிக்கவென மேக்ஸ்வெல் பரணகம ஆணையம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கை அரசிடம் இருக்கிறது. இதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து யாரும் இப்போது பேசுவதாக இல்லை. அந்தக் குழுவின் முன்பாக சாட்சியமளித்தவர்களுக்கு பதில் எதுவும் இதுவரை இல்லை.

கடந்த 30 வருடங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக பரணகம குழு விசாரணை நடத்தியிருந்தது. இந்தக் குழுவின் அறிக்கையில் பல பூசி மொழுகல்கள் இருந்தாலும், அதையும் மீறி சில உண்மைகள் வெளிவந்துவிட்டன. காணாமல் போன பல பேர் கொல்லப்பட்டுவிட்டதையும், இறுதி யுத்தத்தில் சரணடைந்த பலர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதையும் இந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் அதில் கோரப்பட்டது ஆனால் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 

சில நாட்களுக்கு முன்பாக ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது, தங்கள் உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியபடி மக்கள் அழுகையும் கதறலுமாக வீதிகளில் நின்றனர். இந்தக் காட்சிகள் முன்பு ஊடகங்களுக்கு பரபரப்புக்கு உதவியது. இப்போது ஊடகங்களுக்கும் இவர்களின் இந்தப் போராட்டம் வழமையானதொன்றாகிவிட்டது. இதேபோன்றதொரு செப்டம்பர் மாதம், 1990ம் ஆண்டு... இலங்கையின் கிழக்கில், மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்ச மடைந்திருந்தனர். 

பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த சிறிலங்கா ராணுவம், ஒரு நாளில் மட்டும் 174 பேரைக் கூட்டிச் சென்றது. இப்போது வரை அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இதே போல இந்திய அமைதி காக்கும் படைக்  காலத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமாகும். இந்திய ராணுவ முகாம்களுக்கு முன்பாக தங்கள் பிள்ளைகளின் புகைப்படத்துடன் காத்துக் கிடந்த அம்மாக்களை என்னுடைய சிறு வயதில் நான் கண்டிருக்கிறேன். ராணுவ முகாம்களும், உள்ளே இருக்கும் ராணுவமும் மாறியபோதும் அந்த அம்மாக்களின் முகங்களில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை ‘காணாமல் போதல்’ என்பதற்கு நீண்ட வரலாறு உள்ளது. தமிழர்களைக் காட்டிலும் ஆரம்பத்தில் அதிகம்  காணாமல் போனவர்கள் சிங்கள இளைஞர்களே. 1971 மற்றும் 1986 முதல் 1990 வரையான காலப் பகுதியில் புரட்சியில் ஈடுபட்ட சிங்கள இடதுசாரி ஜே.வி.பி அமைப்பின் உறுப்பினர்கள் வேட்டையாடப்பட்டனர். இந்தக் காலப் பகுதியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் காணாமல் போனார்கள். தன் சொந்த இனத்திற்குள்ளேயே இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்ட அரச அதிகாரம், பின்னர் எப்படிச் செயல்பட்டிருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

1990களில்தான் பரவலாக இலங்கையின் கிழக்குப் பகுதியில் ‘வெள்ளை வேன்’ அறிமுகமானது. அடுத்து வந்த இருபது வருடங்களில் வெள்ளை வேன் என்பது இலங்கையில் அச்சமூட்டும் பெயர்களில் ஒன்றாக மாறிப்போனது. கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்ட அந்த வேன்களில் மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை கடத்தப்பட்டார்கள். நெருக்கடியான சூழலில் நாங்கள் பத்திரிகைகளில் பணியாற்றியபோது கடத்தல் குறித்த அச்சம் அதிகம் இருந்தது. வீதியில் நடந்து போகும்போது ஒரு வெள்ளை வேன் சடுதியாக வந்து நின்றால், ஒரு கணம் உயிர்வதையின் உச்சத்தை உணரலாம்.

ஏனெனில் இலங்கையில் காணாமல் போனவர்களில் பத்திரிகையாளர்களும் இருக்கிறார்கள். 2010ல் காணாமல் போன சிங்கள கார்ட்டூனிஸ்ட் பிரகித் எங்கலியகொடவுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவரது மனைவி சந்தியாவும் அவரின் இரண்டு குழந்தைகளும் புகைப்படங்களைக் கையில் ஏந்தியபடி பல வருடங்கள் போராடினர். இப்போது ரணில்-மைத்திரி அரசு ‘கடத்தலில் ஈடுபட்டவர்கள்’ என ராணுவ அதிகாரிகளைக் கைது செய்தது.

1996ம் ஆண்டு ஆகஸ்ட்டில், யாழ்ப்பாணத்தில் பரீட்சை முடிந்து விட்டு திரும்பியபோது  பள்ளி மாணவி கிருசாந்தி குமாரசாமி காணாமல் போனார்.  உயர்தர பரீட்சைக்குப் போன அக்காவைக் காணவில்லை என பக்கத்து வீட்டில் இருந்த உறவினரையும் அழைத்துக்கொண்டு போன கிருசாந்தியின் 16 வயது தம்பியும் அவருடன் கூடச் சென்றவரும் கிருசாந்தி போலவே மாயமானார்கள். கிருசாந்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதும், பின்னர் அவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. அப்போதுதான் இவர்கள் கொல்லப்பட்ட செம்மணி ராணுவ முகாமில் மிகப் பெரும் மனிதப் புதைகுழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள் வந்தன. 172 எலும்புக் கூடுகளை எடுத்தபிறகும் குவியல் குவியலாக எலும்புகள் இருந்தன. அதற்கு மேல் தோண்ட முடியாமல் நிறுத்தினார்கள். இந்த சம்பவத்தை ஊடகங்களில் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த நிமலராஜன் என்ற ஊடகவியலாளர், பின்னொரு நாளில் இனம் தெரியாதவர்களால் இரவு வேளை வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த ‘காணாமல் போதல்’களுக்கு ஒரு சாதாரண சிப்பாயே காரணமென அவருக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டது.

இப்போதும், இப்படி ஒரு சில சிப்பாய்களை பலிகடாக்களாக ஆக்கலாம். இதுவே இலங்கை அரசின் உச்சபட்ச நடவடிக்கையாக இருக்கும்.  இதனை சர்வதேசமும் அமெரிக்காவும் ‘நல்லெண்ண நடைமுறைகளுக்கான செயல்பாடு’ எனப் பாராட்டி மையப் பிரச்னையை மறைத்து விடும். எந்த விசாரணையும் இன்றி பத்து பதினைந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அரசு வழங்கிய வாக்குறுதி என்ன ஆனது எனத் தெரியவில்லை.

கடந்த 30 வருடங்களில் பலமுறை காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்க ஆணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இறுதி யுத்தத்தின் பின்னரும், அதற்கு முன்னரும் தங்கள் கண் முன்பாக ராணுவம் அழைத்துச் சென்றதைப் பார்த்ததாக பலரும் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். ஆனால் ஒரு பலனும் இல்லை. சிலப்பதிகாரத்தில் சிலம்பு விற்கப் போன கோவலன் அரச படைகளால் கைது செய்யப்பட்டு கொல்லப்படுவான்.

அவனைக் காணாது காடு, மேடு, நாடு, நகரெங்கும் அலைவாள் கண்ணகி. இறுதியில் மன்னன் அவையில் உரிமைக் குரல் எழுப்பி உண்மை உரைப்பாள்; பின்னர் அரசையே எரிப்பாள். அவள் இதிகாச நாயகி என்பதால் அது சாத்தியமாயிற்று. ஆனால் அடக்கப்பட்ட இனத்தின் கண்ணகிகள் என்ன செய்வார்கள்? இன்னமும் கையில் புகைப்படத்தை ஏந்தியபடி அலைந்துகொண்டே இருக்கிறார்கள். அதற்கு மேல் உரத்துக் குரல் எழுப்பினால், தன் அண்ணனைக் காணவில்லை என பிரிட்டன் பிரதமர் முன் அழுது கோஷமிட்ட விபுஷிகாவுக்கும் அவள் அம்மாவுக்கும் நடந்ததைப் போல பயங்கரவாத தடைச் சட்டம் பாயும். இம்முறையும் ஐ.நா மனித உரிமை அவை வருட உற்சவம் போல வந்து போகும்!               

ராணுவ முகாம்களும், உள்ளே இருக்கும் ராணுவமும் மாறியபோதும் அந்த அம்மாக்களின் முகங்களில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

வீதியில் நடந்து போகும்போது ஒரு வெள்ளை வேன் சடுதியாக வந்து நின்றால், ஒரு கணம் உயிர்வதையின் உச்சத்தை உணரலாம்.

அடக்கப்பட்ட இனத்தின் கண்ணகிகள் என்ன செய்வார்கள்? இன்னமும் கையில் புகைப்படத்தை ஏந்தியபடி அலைந்துகொண்டே இருக்கிறார்கள்.