நியூஸ் வே* நியூயார்க்கில் இருக்கும் குக்கன்ஹீம் மியூசியம், முழுக்க தங்கத்தில் ஒரு டாய்லெட்டை உருவாக்கியுள்ளது. நம்ம ஊரில் ‘வெஸ்டர்ன் டாய்லெட்’ என்பார்களே, அது போன்ற உருவாக்கம். இத்தாலிய சிற்பி மௌரிஸியோ கேட்டலான் இதை உருவாக்கியிருக்கிறார். ‘அமெரிக்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ள, 18 காரட் தங்கத்தில் உருவான இதன் பியூட்டி என்னவென்றால், மியூசியத்துக்கு வரும் யாரும் இதை டாய்லெட்டாகப் பயன்படுத்தலாம் என்பதே! மியூசியத்தின் நான்காவது மாடியில் மற்ற டாய்லெட்டுகளோடு ஒன்றாக ஒரு அறையில் இது உள்ளது. ‘தங்க டாய்லெட்’ என கதவில் இருக்கும் அறிவிப்பைத் தவிர, மற்றபடி வழக்கமான டாய்லெட்தான். நிறைய பேர் இதில் உட்கார்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்வதுதான் டூ மச்!

* கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் இந்திய சிறைகளில் 1702 பேர் இறந்திருக்கிறார்கள். இதில் 195 பேர் தற்கொலை, மரண தண்டனை, கொலை போன்ற காரணங்களால் மரணமடைந்திருக்கிறார்கள். நமது சிறைகளை மேலாண்மை செய்வதும், கண்காணிப்பதும் மாநிலங்களின் கடமையாகும். ஆனால் மாநில வாரியாக சிறை நெருக்கடிகளைப் பற்றி இப்போது வெளிவந்திருக்கும் தகவல்கள் சிறை மேலாண்மையின் அவலங்களை அம்பலப்படுத்துகிறது. இப்போது இந்தியச் சிறைகளில் இருக்கும் இடவசதியைவிட அதிகமாக  62,000 கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாக  தரவுகள் சொல்கின்றன. நம் நாடு மட்டும் அல்ல... நமது சிறைக்கூடங்களும் டிராஃபிக் ஜாமால்
திக்குமுக்காடுகிறதோ!

* பெப்சி நிறுவனத்தின் இந்தியாவுக்கான ஊட்டச்சத்து தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் விகாஸ் கன்னா. சமீபத்தில் சென்னை வந்த பெப்சி தலைமை நிர்வாகி இந்திரா நூயிக்கு பிரேக் ஃபாஸ்ட் சமைத்துக் கொடுத்தார் விகாஸ். பணியாரம், இட்லி, பெசரட்டு, பாயசம் என சவுத் இந்தியனில் அசத்திவிட்டார் அவர். பாயசம்தான் ரெண்டு பேருக்குமே பிடித்திருந்ததாம்!

* கடந்த 35 வருட காலத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகை சுமார் 2.8 லட்சம் கோடி ரூபாய். ஆனால் ‘இந்தத் தொகையை எதற்கும் பயன்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டிருக்கிறார்கள்’ என்று   குற்றம்சாட்டியிருக்கிறது  ‘இண்டியாஸ்பென்ட்’ என்ற புலனாய்வு வலைத்தளம். மதிய உணவு, ஸ்காலர்ஷிப், பயிர் காப்பீடு போன்றவற்றின் மூலம் இந்த சமூகத்தை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட பணம் இது. ‘இந்தப் பணத்தை மாநிலங்கள்தான் சரியாகப் பயன்படுத்தவேண்டும்’ என்று மத்திய அரசும் கை விரித்திருப்பதுதான் துயரம்!

* விரைவில், ஜீன்ஸ் ஆடை தயாரிப்பில் குதிக்கப் போகிறார் ‘யோகா குரு’ பாபா ராம்தேவ். ஏற்கனவே அவரின் ‘பதஞ்சலி’ நிறுவனம்  ஐந்நூறுக்கும் மேற்பட்ட பொருட்களைத் தயாரித்து சர்வதேச  நிறுவனங்களுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. ‘‘இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ சுதேசி ஜீன்ஸ் ஆடை உற்பத்தி ஆரம்பிக்கப்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ஜீன்ஸ் உடை, வெளிநாட்டுத் தயாரிப்புகளோடு போட்டியிடும்’’ என்கிறார் ராம்தேவ் பத்மாசனத்தில் அமர்ந்தபடி!

* அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை நினைவிருக்கிறதா? இராக், ஆப்கானிஸ்தான் போர்களால் புகழ்பெற்ற அவர், ஓய்வு பெற்றதும் ஓவியர் ஆகிவிட்டார். முன்னாள் ராணுவ வீரர்கள், புகழ் பெற்ற தளபதிகளை அவர் வரைந்த 70 ஓவியங்கள் தொகுக்கப்பட்டு புத்தகம் ஆகிறது. இதில் வரும் வருமானத்தை முன்னாள் படைவீரர்கள் நலனுக்குத் தரப் போகிறார் அவர்.

* உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு வரும் தேர்தலுக்காக மாநிலம் முழுக்க ‘சமாஜ்வாடி விகாஸ் ரத யாத்திரை’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார் முதல்வர் அகிலேஷ் யாதவ். இதற்காக பல கோடி செலவில் சொகுசு பஸ்ஸும் தயாரானது. ஆனால் சித்தப்பா சிவ்பால் யாதவுடன் சண்டை போட்டதில் அவரது கட்சிப் பதவி பறிபோக, கோபத்தில் யாத்திரையைத் தள்ளிப் போட்டுவிட்டார்.

* ‘‘விளக்கை அணைத்துவிட்டு இருட்டு அறைக்குள் ஜூஸ் சாப்பிட்டுப் பாருங்கள். அப்போது மது குடித்த உணர்வு கிடைக்கும். பெரிய மாற்றமும் ஏற்படும். அதை விடுத்து ஏன் ஒரு பெக்கில் அழிவைத் தேடுகிறீர்கள்’’ என கள்ளச்சாராய மரணங்களைக் குறிப்பிட்டு வருத்தமாகச் சொல்லியிருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். ‘‘மதுவிலக்கு கொண்டு வந்ததுதான் என் மிகப்பெரிய சாதனை. இப்போதுதான் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்கிறது’’ என்கிறார் அதிரடியாக!

* முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி. 2004ல் பாகிஸ்தான் டூரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். தொடர்ந்து ஏற்பட்ட காயங்களால் அவரால் இந்திய அணியில் இடம் பெற முடியாமல் போனது. இனி, டி20 மேட்ச்களில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாகக் கூறியிருக்கும் பாலாஜி, 106 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 330 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

* உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளைச் சந்திக்க ராகுல் காந்தி யாத்திரை நடத்துகிறார். புகழ்பெற்ற தேர்தல் நிபுணரான பிரசாந்த் கிஷோரின் ஐடியா இது! ஒவ்வொரு ஊரிலும் கயிற்றுக் கட்டில்கள் போடப்பட்டு, அதில் விவசாயிகள் அமர்கிறார்கள். அவர்களோடு ராகுல் உரையாடுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் கட்டில்களை ஆளாளுக்கு தூக்கிக்கொண்டு போகிறார்கள். யாரும் தடுப்பதில்லை. ‘விவசாயிகள் கட்டில்களைத் திருடுகிறார்கள்’ என யாரோ சொல்ல, கோபமாகி அவரைக் கண்டித்தார் ராகுல்.