உலகின் உயரமான கட்டிடத்தில் மெக்கானிக் வாங்கிய 22 அபார்ட்மென்ட்கள்!



‘‘என்னைப் பொறுத்தவரையில், கற்றல்தான் மிகப்பெரிய செல்வம். நான் தினந்தோறும் புதிதாக ஏதோவொன்றை கற்றுக்கொண்டே இருக்கிறேன். இதுதான் என் வெற்றியின் ரகசியம். கனவு காணுங்கள். கனவுதான் சாதனையை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும்’’ என்று அப்துல் கலாம் வாசகங்களைப் பேசுகிறார் ஜார்ஜ் வி.நீரபரம்பில். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் ‘ஜார்ஜேட்டா’ என்று அன்புடன் அழைக்கப்படுகிற இவர், துபாயில் இருக்கும் உலகின் உயரமான கட்டிடமான ‘புர்ஜ் கலீஃபா’வில் 22 அபார்ட்மென்ட்களை வாங்கியிருக்கும் இந்திய பிசினஸ்மேன். இந்தக் கட்டிடத்திலேயே அதிகமான அபார்ட்மென்ட்களுக்கு சொந்தக்காரரும் இவர்தான்!

கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்ட ஜார்ஜ், சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். பிசினஸ் மீதும், கனவுகள் மீதும் பெருங்காதல் கொண்டவர். நினைத்ததை சாதித்தே தீர வேண்டும் என்ற வெறியும், வித்தியாசமான சிந்தனையும்தான் அவரை வழிநடத்துகிறது. 11 வயதிலேயே வீணாக குப்பையில் வீசப்படுகின்ற பருத்திக்கொட்டையிலிருந்து பசை தயாரித்து பிசினஸ் செய்திருக்கிறார். 1976ல் துபாய்க்குச் சென்று ஏ.சி. மெக்கானிக்காக வாழ்க்கையைத் தொடங்கிய ஜார்ஜ், படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு ஜிஈஓ என்ற நிறுவனத்தை நிறுவியிருக்கிறார். இந்த நிறுவனம் குளிர்சாதனப் பொருட்கள் சந்தையில் பெரிய ஜாம்பவானாகத் திகழ்ந்து வருகிறது.

உறவினர் ஒருவர் ஜார்ஜிடம், ‘‘உன்னால் புர்ஜ் கலீஃபா கட்டிடத்திற்குள் நுழைய முடியுமா?’’ என கிண்டலாகக் கேட்டுள்ளார். அதனை சவாலாக எடுத்துக்கொண்டு 22 அபார்ட்மென்ட்களை வாங்கிக் காட்டியுள்ளார் ஜார்ஜ்! ‘‘அந்த உறவினர் என்னிடம் ‘இந்தக் கட்டிடத்துக்குள் உன்னையெல்லாம் விட மாட்டாங்க’ என்று சொன்னார். அந்த கிண்டல் பேச்சுதான் வெறியை எனக்குள் தூண்டியது. 2010ம் ஆண்டில் இங்கு ஒரு அபார்ட்மென்ட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கினேன்.

இப்போது இங்கு 22 அபார்ட்மென்ட்கள் எனக்கு சொந்தம். 5 அபார்ட்மென்ட்களை வாடகைக்கு விட்டுள்ளேன். மீதமுள்ளதை சரியான நபர்கள் கிடைக்கும்போது வாடகைக்கு விடுவேன். இதோடு நிறுத்தப் போவதில்லை, இந்தக் கட்டிடத்தில் நல்ல விலைக்கு அபார்ட்மென்ட்கள் விற்பனைக்கு வரும்போது நிச்சயமாக வாங்குவேன்’’ என்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை கால்வாய் வெட்டி, அதைப் பல காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் ஜார்ஜின் அடுத்த கனவு. கனவை நிஜமாக்குவதுதான் ஜார்ஜுக்கு கைவந்த கலையாயிற்றே!

- த.சக்திவேல்