டி.வி‘‘என்னம்மா இது? ஆளுக்கொரு டி.வியைப் பிடிச்சுக்கிட்டு காலையில இருந்து நைட் வரைக்கும் சுட்டி டி.வியும், சோட்டா பீம் சி.டியும் பாத்துக்கிட்டிருந்தா நான் எப்பத்தான் நியூஸ் பாக்கிறதாம்?’’ என்று கோபமாக முறையிட்ட விஷாலை சமாதானப்படுத்தினாள் அம்மா. ‘‘விடுடா விஷால்! ஆசையா, சந்தோஷமா பாக்கிறவங்களை நாம் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. அவங்களுக்காக நீ இதைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டியா?’’

‘‘ஆசைப்படறது சரிதான். அதுக்காக தூங்கற நேரம் போக மற்ற எல்லா நேரத்துலயும் டி.வி. முன்னாடியே உக்கார்ந்திருக்கணுமா?’’ ‘‘பந்திக்கு முந்தணும்ங்கிறது மாதிரி நீ கொஞ்சம் முந்திக்கோயேன்...’’ ‘‘எப்படிம்மா இவங்களை முந்துறது? டி.வியைப் பிடிக்கணும்கிறதுக்காக காக்கா கரையிறதுக்கு முந்தியே நான் எந்திரிச்சாலும் இவங்க அதுக்கு முன்னாலயே எந்திரிச்சி ஆளுக்கொரு டி.வியைப் பிடிச்சுக்கிறாங்களே? ரொம்பவே என்னைப் படுத்துறாங்கம்மா...’’

‘‘கோபப்படாதே விஷால். இன்னும் நாலே நாலு மாசம் பொறுத்துக்கோ. உனக்குனு தனியா ஒரு டி.வி. வாங்கித் தந்துடுறேன். அதுல நீ நியூஸ் பாத்துக்கோ! செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிற நீ, சுட்டி டி.வி, சோட்டா பீம்னு ஆசை ஆசையாப் பாக்கிற உன் தாத்தா, பாட்டிகூட மல்லுக்கு நிக்காதே!’’

-சுபமி