சென்னையை பயமுறுத்திய கைரோனோமிட்



டெங்கு, சிக்குன்குனியாவைக் கண்டுதான் இதுவரை மிரண்டு போயிருந்தார்கள் சென்னைவாசிகள். ஆனால், இப்போது கடிக்காமலே மிரட்டும் ஒரு பூச்சியைக் கண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்திருக்கிறார்கள், சென்னையை அடுத்த கொரட்டூர் ஏரியாவாசிகள்!

கடந்த வாரம் ‘கைரோனோமிட்’ எனும் பூச்சிகள் படையெடுத்து வந்து கொரட்டூர் ஏரியாவாசிகளை பாடாய்படுத்தியிருக்கிறது. கொசுவை விட சிறிய பூச்சியான  இது, அமைச்சர், அதிகாரிகள், நிபுணர்கள் என அத்தனை பேரையும் கொரட்டூரில் டேரா போட வைத்துவிட்டது. காரணம், கை, கால், முகம் என உடலை முழுவதுமாக மூடாமல் அந்த ஏரியாவுக்குள் மக்களால் நுழைய முடியவில்லை.

அந்தளவுக்கு சுற்றித் திரிந்த இந்தப் பூச்சிகள், சுவர்களிலும், பாத்திரங்களிலும், உணவுகளிலும், பல்புகளிலும், உடலிலும் படிந்து மக்களை வதைத்துவிட்டது. இந்த விஷயம் முதல்வரின் கவனத்திற்குப் போன பிறகே நடவடிக்கைகள் பாய்ந்து இப்போது கட்டுக்குள் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள் ஏரியாவாசிகள்.

‘‘தேன் கூட்டுல கல் எறிஞ்சா எப்படி சுத்தி வருமோ... அதுமாதிரிதான் சார், நிறைய பூச்சிகள் வந்துச்சு. லட்சக்கணக்குல இருக்கும். அப்படியே உடல்ல அப்பிடும். ஆனா, துளியும் கடிக்கல. அப்புறம், குடிநீர், சுவர், சாப்பாடுனு எதையும் விட்டு வைக்காம எல்லாத்திலும் விழுந்து பாழாக்கிடும். கண்ணுல விழுந்ததும் சிவப்பாகிடும். கண்ணைக் கழுவினாலும் சிவப்பு மாறலை. எரிச்சல்ல அதை அடிச்சா, ஒரு துர்நாற்றம் வீசும் பாருங்க... ரெண்டு நாளைக்கு  சாப்பிட முடியாது. அப்படியொரு நாற்றம் கையில இருக்கும்’’ என திகிலோடு பேசுகிறார், ‘கொரட்டூர் வடக்கு மூத்த குடிமக்கள் சேவை சங்க’த் தலைவர் அரிகிருஷ்ணன்.

இந்தப் பூச்சியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். கொரட்டூர் ஏரியிலிருந்துதான் இந்தப் பூச்சிகள் உற்பத்தியாகி வருவதாகக் குறிப்பிடுகிறார் அவர். ‘‘இந்தப் பிரச்சனை  நாலஞ்சு வருஷமாவே இங்க இருந்துகிட்டு இருக்கு. நாங்களும் பல மனுக்கள் கொடுத்திட்டோம். ஆனா, எந்த நடவடிக்கையும் எடுக்கல. அப்போ, ஏரி பக்கத்துல இருக்கிற மக்கள் மட்டும்தான் பாதிச்சாங்க. அவங்களும், சாயங்காலம் வீட்டுக் கதவை சாத்திட்டு உள்ளே இருந்துப்பாங்க. அதனால, பிரச்னை பெரிசாகல.

இந்த வருஷம் நிறைய இடங்களுக்கு பரவிடுச்சு. பொதுவா, மழைக்காலம் வந்ததும்தான் இந்தப் பிரச்சனை வருது. ஏரியிலதான் உற்பத்தியாகுதுனு சொல்றாங்க. நான், ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னாடி ஆவடி பக்கம் ரயில்ல போகும்போது இந்தப் பூச்சியைப் பார்த்திருக்கேன். அங்கிருந்து கூட இங்க வந்திருக்கலாம். இப்போ, மறுபடியும் மழை பெய்ஞ்சா வருமானு தெரியலை’’ என்கிறார் அவர் பயந்தபடி!

ஆனால், ‘‘கொரட்டூர் ஏரியிலிருந்து இந்தப் பூச்சிகள் உற்பத்தியாகவில்லை’’ என்கிறார் கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரியின் பூச்சியியல் துறைத் தலைவர் பி.எம்.எம்.டேவிட். இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளித்திருக்கிறது இவரது குழு! ‘‘இந்த பூச்சியினம் கைரோனோமேட் குடும்பத்தைச் சேர்ந்தது. இது தேங்கிய தண்ணீரிலும், ஏரியிலும் வளரும். ஆனா, நாங்க வந்து பார்த்தப்போ கொரட்டூர் ஏரி நீர்ல இந்தப் பூச்சிகள் வளரலை. அப்படி வளர்ந்திருந்தா ஆயிரம் ஏக்கர் ஏரி முழுவதும் இந்தப் பூச்சிகள் பரவியிருக்கணும். அப்படியில்லாம ஏரியின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலதான் பரவி இருந்துச்சு.

உடனே, சுத்தி இருக்கிற வீடுகளைப் போய் பார்த்தோம். அப்போ, அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர்ல இந்தப் பூச்சியினத்தின் புழுக்கள் உருவாகியிருப்பதைக் கண்டுபிடிச்சோம். சமீபத்துல பெய்ஞ்ச மழையில வீடுகளின் பின்பகுதியில் நீர் தேங்கியதை சரியா கவனிக்காம விட்டிருக்காங்க. அங்க இந்தப் பூச்சி அதிகளவுல வளர்ந்து வேகமாக வெளியேறியிருக்கு. பொதுவா, சில பூச்சியினங்கள் அமாவாசை தினத்திலும், சில பூச்சியினங்கள் பௌர்ணமியிலும் ஆக்டிவா செயல்படும்.

இந்தப் பூச்சிகள் பௌர்ணமியில ஆக்டிவா செயல்பட்டு வீடுகள்ல பரவியிருக்கு. பிளீச்சிங் பவுடர், சுகாதாரத்திற்கான மருந்துகளைத் தெளிச்சாலே இதன் புழுக்களை முழுசா ஒழிச்சிடலாம். அதனால, மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை’’ என்கிறார் அவர்! இப்போது இந்தப் பகுதியின் அனைத்து தெருக்களிலும் பிளீச்சிங் பவுடர் போடுவதும், மருந்துகள் தெளிப்பதும், புகைபோடும் வண்டிகள் மூலம் கொசுவை ஒழிக்கும் பணியும் ஜரூராக நடந்து வருகிறது. இதுதவிர பூச்சிகளை ஈர்க்க ஏரியைச் சுற்றிலும் டியூப் லைட்டுகள் போடப்பட்டுள்ளன.

‘‘இப்போ, பூச்சிகள் சுத்தமா இல்லை! சுத்தி போட்டிருக்கிற லைட் வெளிச்சத்தைப் பார்த்து போயிடுது. அப்புறம், ஏரியில இருநூறு வாத்துகளும் விட்டிருக்கோம். வாத்துகள் இதனோட புழுக்களை சாப்பிட்டு வளரவிடாது. இனி, பூச்சிகளால் எந்தத் தொந்தரவும் இருக்காது’’ என நம்பிக்கை அளிக்கிறார்கள் அப்பகுதியைக் கவனித்து வரும் மண்டல சுகாதார அதிகாரி டாக்டர் ஷீலாவும், சுகாதார அலுவலர் கேசவனும். தண்ணீர் மாசுபடுவதை அலட்சியம் செய்தால் என்ன ஆகும் என்பதற்கு இதுவும் ஒரு பாடம்!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: புதூர் சரவணன்