குட்டிச்சுவர் சிந்தனைகள்-ஆல்தோட்ட பூபதி

நாட்டுல அவனவன் ஞாயிற்றுக்கிழமையானா பல்லு விளக்கிக் கூட குளிக்கிறதில்ல; ஆனா சில உணர்ச்சிமிக்கவர்கள் நடு ரோட்டுல தீக்கூட குளிக்கிறாங்க.  கன்னட மக்களின் போர்வையில் இருந்துக்கிட்டு அந்த ஆளுங்களாவது தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் கார்,  பஸ், லாரின்னு எரிச்சானுங்க; ஆனா நம்ம ஊர் பசங்க கண்டவர்களின் பேச்சுக்களை நம்பி அவங்களையே எரிச்சுக்கிறாங்க.

ஆனா நெருப்பை அள்ளிக் கொட்டுற மாதிரி கன்னட அமைப்பினர் நம் மீது வெறுப்பை அள்ளிக் கொட்டினாலும்,  இதுல ஒரு மதிக்கத்தக்க விஷயம்... அவங்க என்னதான் வெறியோட இருந்தாலும் லாரி, பஸ்ல எல்லோரையும் இறக்கி விட்டுட்டு எரிக்கிறாங்களே தவிர நம்மாளுங்க மாதிரி பஸ்ஸுக்குள்ள ஆள் இருக்கிறப்பவே எரிக்கிறதில்ல.

ஏதாவது தியான சாமியார்களையோ, இல்லை... யோகா மாஸ்டர்களையோ நம்பி ‘குண்டலினி’ சக்தியை கொஞ்சம் கொஞ்சமா உருட்டி, குண்டாவுக்குள்ள அடக்கி குழம்பு வைக்கிறேன்னு அவங்களோட ஆசிரமத்துல சூடம் சாம்பிராணி கொளுத்துறவங்களுக்கும், ஜாதி மதம் இனம் மொழி நாடுன்னு கதர்சட்டையோ கருப்புச்சட்டையோ காவிச்சட்டையோ போட்டுக்கிட்டு கழுத்து நரம்பு புடைக்க  கூவறவங்க பின்னால ஆட்டுக்குட்டியாய் போறவங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லைன்னே சொல்லலாம்.
 
வாய் வழியே பிரசவமாகும்  வெறும் சத்தத்தை வைத்தே ஒருத்தன் மனதிலும் மூளையிலும் உணர்வு யுத்தம் நடத்தி மூளைச் சலவை செய்வது கூட, யோசித்துப் பார்க்கையில் ஒரு வகையில் நம்பிக்கைத் துரோகம்தான். வந்தவர்களை வாழ வைப்பது மட்டுமில்லாமல் ஆளவும் வைக்கும் தங்கத் தமிழ்நாடு முதல், இலியானாவின் இடுப்பைப் போல இருக்கா இல்லையா என்றே தெரியாது இறையாண்மையைக் கொண்டிருக்கும் இந்தியத் திருநாடு வரைக்கும், சுதந்திரம் கிடைத்த இந்த அறுபது சொச்ச வருடங்களில் எத்தனையோ தொண்டர்கள் தங்கள் தலைவர்களுக்காகத் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள்;

ஆனால் எத்தனை கட்சித் தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்காகவோ தங்கள் கொள்கைகளுக்காகவோ தீக்குளித்து இறந்திருக்கிறார்கள்? தன் தலைவனுக்கு எதிரா சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்தா தீக்குளிக்கிறான், தன் தலைவி வீட்டுல துணி துவைக்கிற சர்ஃப் பவுடர் தீர்ந்தா தீக்குளிக்கிறான். ஆனா என்னைக்காவது தொண்டனுக்காகவோ, இல்லை... தனது கொள்கைகளுக்காகவோ தலைவர்கள் தீக்குளிச்சு இருக்காங்களா? நானும் பல வருஷமா எந்த கட்சித் தலைவர் தீக்குளிச்சு சாவறாரோ, அந்த கட்சிக்கு வாழ்நாள் முழுக்க ஓட்டு போடலாம்னு காத்திருக்கேன், எதுவும் நடக்கலை!

நாட்டுல தொழிலதிபர்களும் நடிகர் நடிகைகளும் பணக்காரங்களும் கல்யாணம் பண்ணி நாலே நாலு வருஷத்துக்குள்ள தேனிலவுல ஆரம்பிச்சு தொட்டில் நிலவு ஒண்ணை பெத்து எல்லாத்தையும் முடிச்சு டைவர்ஸே வாங்கிடுறாங்க. ஆனா பொது ஜனம் நம்மளால பொண்டாட்டி புள்ளைக்குட்டி பேரோட தனி ரேஷன் கார்டே வாங்க முடியல.

‘நாங்க ஏழு வருஷம் காதலித்தோம்’, ‘நாங்க ஏழு ஜென்மம் காதலித்தோம்’னு காத்து கூட கக்கத்துல போக முடியாத அளவுக்கு கட்டிப் புடிச்சு பேட்டி தர்றவங்கதான், காலாண்டு பரீட்சைக்கு விடுற லீவு அளவுக்குக் கூட சேர்ந்து வாழாம கொக்கானி காட்டிக்கிட்டு கோர்ட்டுக்குப் போறாங்க. காதலிச்ச வருடங்களில் காதலன் - காதலியா வாழ்ந்ததுல பாதியைக் கூட கல்யாணம் பண்ணி கணவன் - மனைவியா வாழ முடியலைன்னா கல்யாணத்துக்குப் பிறகுன்னு இல்ல; காதலிக்கிறப்பவும் ரெண்டு பேரும் உண்மையா இல்லன்னு அர்த்தம்.

இருவரோட கனவை ஒன்றா உருமாற்றி ஒற்றுமையா வாழுறதுக்கு பேரு கல்யாணம்னு இருந்தது. அது இப்ப மாத்தி மாத்தி அடுத்தவர் கனவை, ஈகோவை வேகவிட்டுக் கிளறிக் கலைச்சுக்கிறதுன்னு ஆயிடுச்சு போல. கல்யாணத்துக்கு கட்டுன பட்டுப் புடவையையும் பட்டு வேட்டியையும் இன்னொரு தடவை பீரோவுக்குள்ள இருந்து எடுக்கிறதுக்குள்ள கல்யாணம் பண்ணினவங்க ரெண்டு பேரும் யாரோவாகிப் போயிடுறாங்க. ஆனா ஒண்ணு, காதலிக்கிறப்ப மொக்க போட்டு பேசுன நிமிஷங்களில் 10% நேரத்தை கல்யாணத்துக்குப் பிறகு பேசியிருந்தா
டைவர்செல்லாம் தேவையில்லப்பா.

தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி பிரச்னை தீர்வதற்குள்...
இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்னை முடிவதற்குள்...
பெரியார் போட்டோவுக்கு மாலை போட்டுட்டு ‘அம்மா வாழ்க’ன்னு கோஷம் போடும் மனிதர்கள் மாறுவதற்குள்...
நாட்டுல எந்த விஷயம் நடந்தாலும் முதல் ஆளாய் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை கொட்டுபவர்கள் திருந்துவதற்குள்...
குடும்பப் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளில் பெரும் செல்வாக்குமிக்கவர்கள் வந்து பிரச்னைகளை பேசி முடிக்கும் நாள் வருவதற்குள்...
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளை முற்றிலும் தடுப்பதற்குள்...
சிம்புவின் அடுத்த படம் ரிலீஸாவதற்குள்...
பிளாட்பாரங்களில் கார் ஏற்றிய பணக்காரர்களின் வழக்குகள் முடிவதற்குள்...
முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்குள்...
பெரும் சிறைச்சாலைகளில் நடக்கும் கைதிகளின் தற்கொலைகளைத் தடுப்பதற்குள்...
நிச்சயம் ஹிந்தி டப்பிங் சீரியல் ஹீரோயின் கூட சீரியலில் கர்ப்பமாகி குழந்தை பெற்று விடுவாள்;
அல்லது அண்ணன் வைகோவின் கட்சி கூட தனித்து நின்று ஒரு கவுன்சிலர் சீட் ஜெயித்து விடலாம்.

 ஓவியங்கள்: அரஸ்