கன்னி லக்னத்துக்கு புதனும் சுக்கிரனும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

வசீகர கிரகமான சுக்கிரனும், புத்தி கிரகமான புதனும் சேர்ந்தால் தானாக அங்கு ரசிகர்கள் கூட்டம் உருவாகும். இந்த சேர்க்கை பெற்றவர்கள், ஆழமான விஷயங்களைக்கூட அழகாகத் தருவதில் வல்லவர்கள். கடினமான தத்துவங்களைக்கூட அல்வா போல கிண்டிக் கொடுத்து விடுவார்கள். அழகை ஆராதிப்பார்கள். நுட்பமான விஷயங்களைக் கண்டு கொண்டு பாராட்டுவார்கள். மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்.

இவர்கள் பார்ப்பதற்கு எளிமையானவர்களாகத் தெரிவார்கள். தவறைக் கூட மென்மையாக சுட்டிக் காட்டுவார்கள். முற்றிலும் நவீனமயமான ஒரு உலகை உருவாக்க வேண்டுமென்று கனவு காண்பார்கள். அலுப்பூட்டும் விஷயங்களை முற்றிலும் தவிர்ப்பார்கள். கன்னி லக்னத்தின் ஜீவனாதிபதியான புதனும், குடும்பாதிபதியும் தனாதிபதியும் பாக்கியாதிபதியுமான சுக்கிரனும் சேரும்போது மாபெரும் ராஜயோக வாழ்க்கையை அளிப்பார்கள். 

இவர்களில் பலருக்குக் கோடீஸ்வரராகும் யோகம் உண்டு. காவிய, சிருங்கார கிரகமான சுக்கிரனோடு புதன் சேரும்போது சாகா வரம் பெற்ற படைப்புகளை உருவாக்குவார்கள். மற்றவர்களை மகிழ்விப்பதையே முக்கியமாகக் கருதுவார்கள். கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்திருந்தால் கிடைக்கும் பொதுவான யோகங்கள் இவை. ராசியில் எந்தெந்த இடங்களில் இவர்கள் இணைந்திருந்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை இனி வரிசையாகப் பார்க்கலாம்...

ஒன்றாம் இடத்தில் - அதாவது கன்னி லக்னத்தில் புதன் ஆட்சி பெறுகிறார். சுக்கிரன் இங்கு நீசமடைகிறார். எனவே நீசபங்க ராஜயோகம் அடைகிறார். இந்த அமைப்பு கொண்டவர்கள், பார்ப்பதற்கு வசீகரமாக இருப்பார்கள். செய்ய வேண்டிய நேரத்தில் எந்த வேலையையும், ஏன்- அதுபற்றிய யோசனையையும் கூட செய்யாமல் காலம் தாழ்த்திச் செய்வார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் செலவு செய் த படியும், புதிது புதிதாக கடன் வாங்கியபடியும் இருப்பார்கள்.

ஆரம்ப கால வாழ்க்கை மிக நன்றாக இருக்கும். ஆனால், படிப்பில் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பார்கள். இவர்கள் இளமையில் எந்த கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் வாழ்க்கையையே தொலைத்து விடுவார்கள். மிகச் சுகமாக வேலையில் சென்று அமர்வார்கள். சுற்றிலும் எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். பலருக்கு ஆலோசனைகளைச் சொல்லும் நிலைக்கு உயர்வார்கள். எப்போதும் பளிச்சென உடுத்துவார்கள். சில சமயம் உழைக்காமல் எல்லாவற்றையும் பெற்றுவிடலாம் என்று கனவு காணுவார்கள். சுக்கிரன் எல்லாமுமே சுகமாகக் கிடைக்க வேண்டுமென்கிற எண்ணத்தை ஏற்படுத்துவார்.

லக்னத்திற்கு இரண்டாம் இடமான துலாம் ராசியில் புதனோடு சுக்கிரன் அமர்வதும் நல்லதே! சுக்கிரனுக்கு இது ஆட்சி வீடாகும். இவர்கள் பால்ய வயதிலிருந்தே கலைத்துறையில் மிகுந்த ஈடுபாட்டோடு இருப்பார்கள். கல்லூரிக் காலங்களில் நன்கு படிப்பார்கள். ஆனால், கலை, பண்பாடு, மரபு சார்ந்த துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். பேச்சில் அசகாய சூரர்களாக விளங்குவார்கள். இவர்கள் எந்த விஷயத்தைக் குறித்துப் பேசினாலும், அதில் சுவாரசியம் இருக்கும். நவீன கல்வியோடு சாஸ்திரப் பயிற்சியும் அடுத்த தலைமுறைக்கு வேண்டும் என்பார்கள். கவிதை, கட்டுரை, நடிப்பு என்று தன் பாதையை மாற்றிக்கொள்வார்கள்.

மூன்றாம் இடமான விருச்சிகத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்தால் சோம்பேறித்தனம் அதிகமாக இருக்கும். மனசெல்லாம் நிறைய சாதிக்க வேண்டுமென்கிற எண்ணம் இருந்தாலும், சோம்பலால் மூடப்பட்டவராக இருப்பார்கள். எனவே, இவர்கள் சாதிக்க முயற்சிப்பது நல்லது. இளைய சகோதரர்களுக்கு இவர்களால் நன்மையே நடக்கும். ஒரு இடத்தில் கூட அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். முயற்சிக்காமல் என்ன கிடைக்கும் என்பதையே யோசித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு நிறைய நண்பர்கள் உண்டு.

நான்காம் இடமான தனுசு ராசியில் புதனும் சுக்கிரனும் இருந்தால், தாயாரைக் கேட்காமல் எந்த காரியத்தையுமே செய்ய மாட்டார்கள். விதம்விதமான வாகனங்களை வெளிநாடுகளிலிருந்து தருவித்து வைத்துக் கொள்வார்கள். தனக்குப் பிடித்த மாதிரி வீட்டை நகரத்திற்கு வெளியே கட்டுவார்கள். எல்லா சொந்த பந்தங்களோடும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். வீட்டில் எத்தனை நவீன வசதிகள் இருந்தாலும் கிணறு ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்வார்கள்.

தென்னை மரங்கள் சூழ பண்ணை வீடு அமைத்து வாழ்வது பிடிக்கும். வாசனைத் திரவியங்களை விதம்விதமாக வாங்கி வைத்துக் கொள்வார்கள். ஐந்தாம் இடமான மகரம் இவர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம். இங்கு புதனும் சுக்கிரனும் அமர்வதால் அழகும், அறிவுமுள்ள வாரிசுகள் அமைவார்கள். சக்தி வழிபாட்டில் மிகுந்த ஈடுபாட்டோடு இருப்பார்கள். நிறைய மந்திரங்களை கற்றுக் கொள்வார்கள். இவர்கள் வாழ்வில் திடீர் அதிர்ஷ்டம் வந்தபடி இருக்கும்.

முற்பிறவி குறித்த ஆராய்ச்சிகளில் அடிக்கடி ஈடுபடுவார்கள். மூதாதையர்கள் குறித்த நிறைய தகவல்களை சேமித்து வைத்துக்கொண்டு புத்தகமாக்குவார்கள். அடுத்த தலைமுறை குறித்து மிகுந்த ஈடுபாட்டோடு இருப்பார்கள். ஆறாம் இடமான கும்பத்தில் புதனும் சுக்கிரனும் சேரும்போது தாம்பத்ய உறவு விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. இல்லை யெனில் அது சம்பந்தமான நோய் வரும் அபாயம் அதிகம். அளவுக்கு மீறி கடன் வாங்கக் கூடாது.

சாதாரணமாக பேசி முடிக்க வேண்டிய விஷயங்களுக்கெல்லாம் நீதிமன்றத்திற்கு செல்லக் கூடாது. இவர்கள் பணம் இருக்கும்போது அளவு தெரியாமல் செலவு செய்வார்கள். பெருமைக்காக செய்துவிட்டு பின்னர் அவஸ்தைப்படுவார்கள். வேலை செய்யும் இடத்தில் எல்லா நேரமும் யாருடனாவது பிரச்னை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஜீவன ஸ்தானத்திற்குரியவர் ஆறில் அமர்வதால் தொழில் செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்னைகள் முளைத்தபடி இருக்கும். மத்திம வயதுக்குப் பின்னர் தாய்நாட்டிற்குத் திரும்புதல் நல்லது.

ஏழாம் இடமான மீனத்தில் புதன் நீசமடைகிறது. சுக்கிரன் உச்சம் பெறுகிறார். இது நீசபங்க ராஜயோக அமைப்பாகும். இவர்களின் வாழ்க்கைத்துணைவர் நல்ல அந்தஸ்து பெற்றவராக இருப்பார். வாழ்க்கை வாழ்வதற்கே என்றிருப்பார். பலருக்கு அவ்வப்போது வெளிநாட்டுப் பயணம் அமையும். சாதாரண வாழ்க்கையை வாழ்வதை விட சாதனையாளராக இருக்கவே விரும்புவார்கள். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டு பெரும் பணம் சம்பாதிப்பார்கள்.

எட்டாம் இடமான மேஷத்தில் புதனும் சுக்கிரனும் மறைகிறார்கள். இவர்கள் படைப்பாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அன்னதானம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள். சிறிய பிரச்னைக்கே நிலைகுலைந்து போவார்கள். தத்துவ ஞானத்தோடு விளங்குவார்கள். அறிந்த விஷயங்களை அழகாகத் தொகுத்துக் கொடுக்கும் சாமர்த்தியம் உண்டு. இவர்கள் குறிஞ்சி மலர்போல எப்போதேனும் பூக்காமல் அவ்வப்போது சாதனைகளைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.

உணவு விஷயத்தில் ருசி பற்றிய நுட்பங்களை இவர்களிடம்தான் கேட்டுக்கொள்ள வேண்டும். இவர்கள் உயரமான இடத்திற்குச் செல்லும்போது கவனம் தேவை. கடன் எனில் பயப்படுவார்கள். ஒன்பதாம் இடமான ரிஷபத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்தால், தந்தையார் நிறைய சொத்து சேர்த்து வைப்பார். நிறைய தர்ம காரியங்கள் செய்வார்கள். யாரையேனும் ஞானகுருவாக வரித்துக்கொண்டு வணங்குவார்கள். அதாவது மதங்கள் காட்டும் தெய்வங்களைவிட மனிதர்களாக இருந்து தெய்வமானவர்களையே இவர்கள் பெரிதும் மதிப்பார்கள். இவர்களில் பலர் தந்தையின் தொழிலை ஏற்று நடத்துவார்கள்.

அதையே நவீன முறையில் பெருக்கவும் செய்வார்கள். சிறிய உதவிகள் செய்தவர்களைக்கூட வாழ்நாள் முழுவதும் நினைத்து நன்றியோடு நடந்து கொள்வார்கள். பத்தாம் இடமான மிதுனத்தில் புதனும் சுக்கிரனும் சேர்க்கை பெற்றிருந்தால் புகழ்பட வாழ  விரும்புவார்கள். சிந்தனையாலும், பேச்சாலும், எழுத்தாலும் எல்லோரையும் வசீகரித்தபடி இருப்பார்கள். சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.  அதிலும் புதன் தசையோ அல்லது சுக்கிர தசையோ நடைபெறும்போது மாபெரும் ராஜயோகத்தை அடைவார்கள். 

அரசியல் அல்லது சினிமா சம்மந்தப்பட்ட வி.ஐ.பி.களுக்கு நெருக்கமாக இருப்பார்கள். ரியல் எஸ்டேட்டில் ஈடுபட்டு நவீனமயமான நகர்களை உருவாக்குவார்கள்.  மக்களுக்கு மத்தி யில் புகழ் பெறவும், தன்னை எல்லோரும் அடையாளம் கண்டு வியக்கவுமே இவர்கள் விரும்புவார்கள். நிறைய தான தர்மங்களைச் செய்வார்கள். பதினோராம் இடமான கடகத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந்தால், மூத்த சகோதரரால் நிறைய அனுகூலம் உண்டு. கப்பலில் பயணிக்க விரும்புவார்கள்.

ஏற்றுமதி - இறக்குமதியில் ஆர்வம் செலுத்தி ஏஜென்சி வைத்து நடத்துவார்கள்.  நண்பர்களோடு அவ்வப்போது சேர்ந்து உணவு உண்பதை விரும்பிச் செய்வார்கள். பன்னிரண்டாம் இடமான சிம்மத்தில் புதனோடு சுக்கிரனும் மறையும்போது சந்நியாசம், அருள்வாக்கு என்றெல்லாம் ஈடுபடுவார்கள். வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். பணத் தட்டுப்பாடு எப்போதும் இருக்கும். அதனால் சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். பெருமாள் அல்லது அம்மன் உபாசனையில் ஈடுபடுவார்கள். நிறைய கோயில்கள் திருப்பணியை மேற்கொள்வார்கள்.

காடு, மலையெல்லாம் சுற்றுவதில் தனித்த சுகம் காண்பார்கள். அடிக்கடி சித்தர்களின் ஜீவசமாதிகளுக்கெல்லாம் சென்று வருவார்கள். இந்த புதனும் சுக்கிரனும் சேர்ந்த அமைப்பு என்பது பெரும்பாலும் நற்பலன்களையே அளிக்கக் கூடியதாகும். புகழ் மீதான போதையையும், மித மிஞ்சிய படைப்பாற்றலையும் கொடுக்கக் கூடியது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், சில இடங்களில் அமர்ந்து மறைந்து, பகை பெறும்போது எதிர்மறை பலன்களைக் கொடுக்கும். புத்தி என்பது ஒரு எல்லை வரைதான் என்பதையும் உணர வைக்கும் இடங்கள் வாழ்க்கையில் ஏற்படும். பணமே பெருஞ் சுகங்களை அளித்து விட முடியாது என்பதையும் அறிய வைக்கும்.

எனவே, இந்த அமைப்பைப் பெற்றவர்கள் தெளிவும், நிதானமும் பெற சுகப்பிரம்ம ரிஷி பூஜித்த சேலம் சுகவனேஸ்வரரை தரிசியுங்கள். சுகப்பிரம்ம ரிஷி என்கிற கிளிநாசி உடைய முனிவரால் வணங்கப்பட்ட தலமாதலால் சுகவனேஸ்வரர் என்று பெயர். மற்ற கிளிகள் இந்த ஈசனை பூஜிக்கும்போது வேடர்களால் தாக்கப்படாமல் இருக்க இவரே லிங்கத்தைக் காத்ததாகவும் ஐதீகம் உண்டு. விடாமல் செய்த சிவபூஜையின் காரணமாக சுகரோடு சேர்ந்த மற்ற கிளிகளும் சிவலோகம் அடைந்தன. கருணை பொங்கும் நாயகியாய் தனிச் சந்நிதியில் ஸ்வர்ணாம்பிகை அருள்கிறாள். பச்சை நாயகி, மரகதவல்லி என்ற திருப்பெயர்களும் உண்டு.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்