காவிரி... கசக்கும் உண்மைகள்!ஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகளிடம் பணயக் கைதிகளாக சிக்கிய தமிழக பணியாளர்கள்கூட பாதுகாப்பாகத் திரும்பி வருகிறார்கள்; சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய தமிழக கப்பல் பொறியாளர்கள்கூட கண்ணியமாக நடத்தப்படுகிறார்கள். ஆனால் பக்கத்து மாநிலமான கர்நாடகத்துக்குச் செல்லும் தமிழக லாரி டிரைவர், நிர்வாணமாக்கி உருட்டுக்கட்டையால் தாக்கப்படுகிறார்; அடிபட்டவருக்கு சிகிச்சை வழங்கக்கூட டாக்டர்கள் மறுக்கிறார்கள்.

அங்கேயே குடியிருக்கும் அப்பாவிகளுக்கும், தமிழக பதிவெண் வாகனங்களில் வீதிக்கு வந்தபோது பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை. நான்கு மாநிலங்களுக்கு பாசன உரிமை உள்ள நதியை ‘காவிரி எங்களுக்கே’ என கர்நாடகம் முழக்கம் எழுப்புவது சரியா? ‘‘பாட்டில் தண்ணீரே காசு கொடுத்தால்தான் கிடைக்கிறது, கர்நாடகா சும்மா தண்ணீர் தருமா?’’ எனக் கேட்கும் ‘சோஷியல்மீடியா அறிவுஜீவிகளும்’, ‘‘அங்கே அடித்தால் இங்கே திருப்பி அடிக்க வேண்டும்’’ என இன உணர்வு பொங்குபவர்களும் நிறைந்திருக்கும் இந்தக் காலத்தில்தான் பருவ மழை அடிக்கடி பொய்க்கிறது.

தண்ணீர் தராததற்கு மழையின் மீது பழியைப் போட்டு, ‘பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்’ என ஒரு கருத்தை கன்னட மீடியாவினர் தேசிய அரங்கில் விதைக்கிறார்கள். ஆனாலும் பிரச்னைக்கு அது மட்டுமே காரணம் இல்லை. சில புள்ளிவிவரங்களைப் பாருங்கள்...

* கடந்த 83 ஆண்டுகளில் மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்காக கச்சிதமாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே! கடந்த நான்கு ஆண்டுகளாக ஆகஸ்ட், செப்டம்பரில்தான் சம்பா சாகுபடிக்காக அணை திறக்கிறார்கள். (2012ல் செப்டம்பர் 17ம் தேதியும், 2013ல் ஆகஸ்ட் 8ம் தேதியும், 2014ல் ஆகஸ்ட் 10ம் தேதியும், 2015ல் ஆகஸ்ட் 9ம் தேதியும் அணை திறக்கப்பட்டது!)

* இந்த ஆண்டு இதுவரையிலான காலத்தில் கர்நாடகாவில் பருவமழை வழக்கத்தைவிட 17 சதவீதம் குறைவாகப் பெய்திருக்கிறது. கர்நாடக அணைகளில் வழக்கத்தைவிட 30 சதவீதம் குறைவாக தண்ணீர் இருக்கிறது. ஆனால் பருவமழை இயல்பாக இருந்த காலத்தில்கூட தமிழகத்துக்கான பங்கை கர்நாடகா தருவதில்லை என்பதே உண்மை. அணைகள் நிரம்பி வழிந்தால், வேறு வழியின்றி திறந்துவிடப்படும் தண்ணீரும், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களின் கழிவுகளுமே எல்லை தாண்டி வருகின்றன.

1924ம் ஆண்டு முதல் ஒப்பந்தம் போடும்போது காவிரி நீரில் தமிழகத்தின் பயன்பாடு 80 சதவீதமாக இருந்தது; கர்நாடகா வெறும் 16 சதவீத காவிரி நீரையே பயன்படுத்தியது. இதற்குக் காரணம் இருக்கிறது. கன்னடர்களின் உணவுமுறை என்பது அதிகம் சிறுதானியங்களைச் சார்ந்தது. அதனால் அவர்கள் அப்போது அதிகம் அவற்றையே பயிரிட்டனர். அதற்கு நிறைய தண்ணீர் தேவைப்படவில்லை. கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டிய பிறகு நிலை மாறியது. மைசூர், மாண்டியா மாவட்டத்தின் எல்லா பகுதிகளும் அதிக தண்ணீர் தேவைப்படும் நெல் வயல்களும் கரும்புத் தோட்டங்களுமாக மாறின. மைசூர், பெங்களூரு என இரு நகரங்களும் ஆண்டுமுழுக்க குடிப்பது இந்த நீரையே!

* காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பு, தமிழகத்துக்கு காவிரி யில் 419 டி.எம்.சி தண்ணீரை உறுதி செய்தது. இதை முழுமையாகக் கர்நாடகம் வழங்கினாலும், காவிரியில் தமிழகத்தின் தண்ணீர் பங்கு 57 சதவீதம்தான்.

* காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு கடந்த 2007ம் ஆண்டு வெளியானது. ஆனால் அதை மத்திய அரசு மிகத் தாமதமாக 2013ம் ஆண்டில்தான் அரசிதழில் வெளியிட்டது. ‘காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். பற்றாக்குறை காலங்களில் தண்ணீரை எப்படிப் பகிர்ந்துகொள்வது என்பதை அங்கு பேசி பிரித்துக்கொள்ள வேண்டும்’ என்பது உத்தரவு. தீர்ப்பு வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியம் அமையவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் இதை அமைக்குமாறு இந்த செப்டம்பர் 20ம் தேதி உத்தரவிட்டிருக்கிறது.

* ‘நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியானபிறகு இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் ஏற்கக்கூடாது’ என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். ஆனாலும் தமிழகம் ஒவ்வொருமுறையும் உச்ச நீதிமன்றத்துக்குப் போய் தண்ணீர் பெற வேண்டியுள்ளது. இப்போதுகூட எத்தனை உத்தரவுகள் மாறியிருக்கின்றன! செப்டம்பர் 5ம் தேதியிலிருந்து 10 நாட்களுக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்றது நீதிமன்றம்.

கர்நாடகம் எதிர்ப்பு தெரிவிக்க, போராட்டங்கள் வெடிக்க, கலவரங்கள் நிகழ, இது 12 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. மத்திய அரசின் காவிரி கண்காணிப்புக் குழு இதை 3 ஆயிரம் அடியாகக் குறைத்தது. மீண்டும் நீதிமன்றம் 6 ஆயிரம் அடியாக உயர்த்தியது. ‘கலவரங்கள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன’ என இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

* ‘‘கர்நாடகாவில் மேற்கே பாயும் பல நதிகளில் சுமார் 2000 டி.எம்.சி தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் வீணாகச் சென்று அரபிக் கடலில் கலக்கிறது. இதில் நான்கில் ஒரு பங்கு தண்ணீரைத் திருப்பிவிட்டாலே காவிரி பிரச்னை தீர்ந்துவிடும்’’ என்கிறார், தேசிய நீர்வழிச் சாலைத் திட்டம் பற்றி எப்போதும் பேசிக்கொண்டிருக்கும் பொறியாளர் ஏ.சி.காமராஜ். இது கர்நாடகாவுக்கும் நன்மை தரும் திட்டம். ஆனால் அவர்கள் இதில் கவனம் செலுத்தத் தயாராக இல்லை.

* காவிரிப் படுகையில் சராசரியாக ஓராண்டில் கிடைக்கும் தண்ணீர் 740 டி.எம்.சி. தமிழகம் கேட்பது 562 டி.எம்.சி. கர்நாடகா உரிமை கொண்டாடுவது 465 டி.எம்.சி. கேரளத்தின் பங்கு, புதுச்சேரியின் பங்கு, இயற்கைச் சூழல் சரியாக இருக்க கடலில் கலக்க வேண்டிய தண்ணீர் என எல்லாம் கணக்கிட்டால் சிக்கல் கூடும்.

* ‘‘நகரங்களில் மக்கள்நெருக்கம் பெருகுவதால், காவிரி இன்னும் பலரின் குடிநீர்த் தேவையை தீர்க்க வேண்டிய சுமை ஏற்படுகிறது. அதனால் அதிகம் நீர் தேவைப்படும் பயிர் ரகங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்’’ என கர்நாடக விவசாயிகளுக்கு அங்கிருக்கும் நீர் மேலாண்மை நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் யாரும் கேட்பதாக இல்லை.

* காவிரி பிரச்னை தொடர்பாக நிகழ்ந்திருக்கும் கலவரம் பலரையும் பொருளாதாரரீதியாக பாதித்துள்ளது. தமிழகத்திலிருந்து தினமும் 20 ஆயிரம் லாரிகள் கர்நாடகாவுக்கும், கர்நாடகா வழியாக வட இந்தியப் பகுதிகளுக்கும் செல்லும். கலவரத்தால் இது முடங்கிவிட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஆங்காங்கே சிக்கியிருக்கின்றன.

கர்நாடக தொழிற்சாலைகளுக்கு உதிரிப்பாகங்கள் சப்ளை செய்யும் சிறு தொழிலகங்கள் தமிழகம் முழுக்க உள்ளன. இந்த சப்ளை சிஸ்டம் அறுபட்டதால் இருவருக்குமே பிரச்னை. தமிழகத்துக்கு வெங்காயம், பூண்டு, அரிசி என பல அயிட்டங்கள் கர்நாடகாவிலிருந்து வரும். இந்தப் போக்குவரத்து அடிபட்டதால், கர்நாடக மண்டிகளில் வெங்காயம் கிலோ ஒரு ரூபாய் என அடிமாட்டு விலைக்கு வந்து கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

* காவிரிக்காக பெங்களூரு எரிந்தால், பாதிப்பு அவர்களுக்குத்தான். கர்நாடகாவின் மொத்த வரி வருமானத்தில் 60 சதவீதம் பெங்களூருவிலிருந்துதான் கிடைக்கிறது; இந்தியாவின் ஐ.டி துறை ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு பெங்களூருவிலிருந்துதான் செய்யப்படுகிறது. 85 லட்சம் பேர் வாழும் இந்த நகரத்தில் ‘தொழில் நிம்மதி’ இல்லையென்றால், அரசு கஜானா காலியாகிவிடும்.

* கர்நாடகாவின் உருவாக்கத்தில் தமிழர்களின் உழைப்பை யாரும் மறுக்க முடியாது. விதான் சௌதா, கிருஷ்ணராஜ சாகர் அணை என அங்கிருக்கும் பிரமாண்டங்கள் பலவும் தமிழர்களின் வியர்வையில் மேலெழும்பியவை. இப்போதும் பெங்களூருவின் அடித்தட்டு உழைப்பாளிகள் தமிழர்களே! 2350 குடிசைப்பகுதிகளில் வாழும் 6 லட்சம் மக்களில் 95 சதவீதம் பேர் தமிழர்கள். இவர்களின் உழைப்புக்கு நன்றிக்கடனாகவாவது காவிரி தமிழகத்தில் பாய வேண்டும்!

- அகஸ்டஸ்