வருத்தப்படுறதும் திருத்திக்கறதும்தான் வாழ்க்கை!மனம் திறக்கிறார் பிரபுதேவா

இந்தியாவின் மோஸ்ட் வான்டட் நடன இயக்குநர், நடிகர் - இயக்குநர் என திரும்பிய பக்கமெல்லாம் பிரபுதேவா பறக்க விட்டது வெற்றிக்கொடி! அடுத்த இந்திப் படத்திற்கான அவதானிப்பு, தமிழில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘தேவி’ படத்தின் ஃபைனல் வேலைகள் இருக்க, ஒரு குறுஞ்செய்தியை அலைபேசியில் அனுப்பினால், ‘‘சார், எப்படி இருக்கீங்க?’’ சிரிப்போடு சேர்ந்து வருகிறது விசாரிப்பு.

‘‘அடுத்து ஒரு இந்திப் படம். கிட்டத்தட்ட கன்ஃபார்ம். இப்ப தமிழில் அதற்குள்ள இன்னொரு படமும் செய்திடலாமான்னு யோசனையில் இருக்கேன். இனிமேல்தான் முடிவாகும். ரொம்ப நாளைக்குப் பிறகு ஹீரோவாக பண்ற ‘தேவி’தான் இப்ப கண்ணு முன்னாடி நிக்குது. எனக்கு ஆரம்பத்துலயே ‘தேவி’ யோட ஸ்க்ரீன்ப்ளே பிடிச்சது. இப்ப படம் முடிச்சு பார்க்கும்போது எனக்குப் பிடிச்ச படமாகவும் ஆகிட்டது’’ என கலகலப்பாக அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது உரையாடல்.

‘‘என்ன, இவ்வளவு நாள் கழிச்சு திடீர்னு ஹீரோ?’’
‘‘எனக்கு சரியா அமைஞ்சது. இதுல காமெடி, திகில், அப்புறம் கொஞ்சமா ஹாரர் இருக்கு. நமக்கு வேண்டிய பாசம், நேசம் எல்லாமே மனைவிகிட்டயே இருக்கு. மாடர்ன் டே லைஃபை பின்னாடி தள்ளி, ‘கணவன் - மனைவி உறவு எப்படி இருந்தால் நல்லாயிருக்கும்’னு படம் சொல்லும். எல்லாம் சேர்ந்து புதுசா இருக்கு. டைரக்டர் ஏ.எல்.விஜய், ஒளிப்பதிவாளர் மனுஷ்நந்தன்னு இளமையான ஆட்களோட படம் பண்ணும்போது நாம நல்லா நடிக்கணும்னு இயல்பாகவே பயம் வந்துடுது.

நல்ல பெயர் வாங்கணும்னு கூடவே ஒரு ஆசை. சீனியர்னு நம்மால ஒரு பிரச்னை வந்துடக்கூடாதுன்னு ஒரு அக்கறை சேர்ந்து படம் ஒரு நல்ல லெவலுக்கு வந்திட்டது. இயக்குநர் விஜய் எல்லாரையும் ஹேண்டில் பண்றது, பொறுமையாக இருக்கிறது எனக்குப் பிடிச்சிருக்கு. அவர் ரொம்ப நல்ல மனுஷன். நானெல்லாம் செட்டில் பரபரன்னு இருப்பேன். மூக்குக்கு மேலே கோபம் வரும். ஆனால் விஜய் படபடப்பு இல்லாமல் ஆழமா வேலை வாங்குகிறார். என்னைப் பார்த்து யூனிட்டில யாரும் பயப்படலை. அவங்களோட என்னையும் ஒரு செட்டா சேர்த்துக்கிட்டு, மொத்த ஷூட்டிங்கும் நல்ல அனுபவத்தில் போய் முடிஞ்சது!’’

‘‘முதல் தடவையா தமன்னா ஜோடி...’’
‘‘அவங்க அவ்வளவு சின்சியர். ‘தமன்னா இவ்வளவு டெடி கேட்டட் பொண்ணு’ன்னு சத்தியமா எனக்குத் தெரியாது. ஒரு பாட்டுக்கு ஆட, ரொம்ப அருமையாக பண்ண, குறைவான நாளே எடுத்துக்கிட்டாங்க. ஒரு கிராமத்துப் பொண்ணா மேக் ஓவர் ஆகி வந்தாங்க பாருங்க, நான் பொறுக்க முடியாமல் ‘இதுதாங்க உங்க பெஸ்ட்’னு சட்னு சொல்லிட்டேன். இவ்வளவு மாடர்ன் பொண்ணு, இவ்வளவு அழகா கிராமத்துப் பொண்ணா மாறி வந்து நின்னதைப் பார்த்து ஆச்சர்யம் தாங்க முடியல!’’

‘‘டிரெய்லரில் பார்த்த உங்க டான்ஸ் களை கட்டுதே! புதுசா இருக்கே?’’
‘‘நன்றி... நன்றி... ஆனால் அந்தப் பாட்டு கொஞ்சம் வேலை வாங்கினது நிஜம். சமயங்களில் டான்ஸ் ஆடி முடிச்ச பின்னாடிதான், அது எந்த மாதிரி வந்திருக்குன்னு நமக்குத் தெரியும். உடம்பும் மனசும் ஒரே புள்ளியில் சந்திச்சு கை குலுக்குகிற சமயம் அது. நல்லா வந்திருக்குன்னு சொன்னால், அது கடவுளோட சித்தம். நீங்க அழுத்திச் சொல்றதை பார்த்தா, எனக்குத் திறமை இருக்கோ என்னவோ... எனக்கே தெரியலை!’’

‘‘இத்தனை நாள் அனுபவம் கத்துக் கொடுத்த பாடம் என்ன?’’
‘‘எனக்கு என்ன தெரிந்தது இவ்வளவு நாளா? ஒண்ணும் இல்லையே! சின்ன வயசில் ஒழுங்கா உட்கார்ந்து படிக்காமல், சரியாக ஸ்கூல் பக்கம் போகாமல் இருந்திட்டேன். விளையாட்டுப் போக்கா டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தவன்... கடைசியில் அதுவே வாழ்க்கையா ஆகிப் போச்சு! இப்பவும் என்னை சராசரி ஆளாகத்தான் நினைக்கிறேன். அது எனக்கு சுலபமாவும் இருக்கு! இப்ப பாருங்க... இரண்டு நாளைக்கு முன்னாடி திடீர்னு காலையில தூக்கம் விழிக்கும்போது, முதுகுல சுளுக்கு மாதிரி ஆகிட்டது. எழுந்திருக்க முடியலை.

காலை அசைக்கவே முடியவில்லை. உட்கார முடியல. கையைத் திருப்ப முடியலை. ‘அடடா, டான்ஸ் அவ்வளவுதானா கடவுளே’ன்னு நினைச்சேன். நல்லவேளையா அது வெறுமனே பயமுறுத்திட்டு போயிடுச்சு! இதுகூட ஒரு பாடம்தான். எனக்கு ஒவ்வொரு நாளும் புதுசாக இருக்கு. வழியில் பார்க்கிற ஆளெல்லாம் ஒரு விஷயத்தை சொல்லியும், குறிப்பால் உணர்த்திட்டும் போறாங்க. 42 வயசு ஆகியும் இன்னும் கத்துக்கிட்டே இருக்கிற ஸ்டூடன்ட் நானாகத்தான் இருக்கும். என்கிட்டே போய் பாடம் கேட்க வந்திட்டிங்க!’’

‘‘இப்படிச் செய்யாமல் இருந்திருக்கலாம்னு எதுக்காகவாவது வருத்தப்பட்டதுண்டா?’’
‘‘என்னை விடுங்க... அப்படி வருத்தம் இல்லாதவங்க யாரு? அப்படி யாராவது இருந்தா எனக்குக் காண்பிங்க! அவங்க காலில் விழுந்து எழுந்திருச்சி சேவை பண்றேன். வருத்தப்படுறதும், திருத்திக்கறதும், திரும்ப வருத்தப்படுறதும்தானே முழுநீள வாழ்க்கையாகவே போய்க்கிட்டு இருக்கு. வருத்தம் முடிஞ்சதுன்னா வாழ்க்கை முடிஞ்சிடுமே!’’

‘‘பார்த்த நாளிலிருந்து அப்படியே எப்படி உடம்பை வைச்சிருக்கீங்க?’’
‘‘பெரிதாக ஒண்ணும் இல்லை. சில பழக்கங்கள் இயல்பாகவே இல்லை. சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் சாப்பிட மாட்டேன். வெஜிடேரியன். வயிறு நிறைய, மூச்சு முட்ட சாப்பிட்டதே கிடையாது. பதினைந்து வருஷமா ஒரே வெயிட்தான். சும்மா தூங்கி வழியாமல் காலையிலிருந்து பம்பரமாக சுத்தி வேலை பார்ப்பேன்.

உழைக்கிறதுக்கு அஞ்சற ஆளே கிடையாது. இதெல்லாம் சேர்ந்துதான் அப்படியே உடம்பு இருக்கோ தெரியலை. ஆனா ஒண்ணு... சாக்லெட்ஸ், ஸ்வீட், ஐஸ்கிரீம், கேக்னு சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன். என்னால் கன்ட்ரோல் பண்ணவே முடியலை. ஒவ்வொரு நாளும் ஸ்வீட்ஸ் சாப்பிட ஆசையா இருப்பேன்.  சாப்பிட்ட பின்னாடி ‘எவன்டா இதைக் கண்டுபிடிச்சது’ன்னு திட்டுவேன். இப்படித்தான் போயிட்டு இருக்கு பிரதர் வாழ்க்கை...’’

‘‘இன்னும் 20 வருஷம் பின்னாடி பிரபுதேவாவை மக்கள் எப்படி நினைவு வச்சுக்கணும்?’’
‘‘சாதாரண ஆளுகிட்டே போய் பெரிசு பெரிசா கேள்வி கேட்கிறீங்க. மனசெல்லாம் என் பசங்க மேலே இருக்கு. என் உலகமே அவங்களா மாறிப் போன இடத்திற்கு வந்திட்டேன். கொஞ்சம் ஃப்ரீ ஆகிட்டா உடனே மனசு பசங்களைத்தான் தேடுது. அவங்கதான் என் ரிலாக்ஸ். அவங்கதான் என்னை கன்ட்ரோலில் வச்சுக்கிறாங்க. அதனால என்னைப் பத்தியே நினைக்கறதில்லே!’’

‘‘உங்க பசங்க எப்படி வரணும்னு நினைக்கறீங்க?’’
‘‘நல்ல பசங்களா வளரணும். இதுவரைக்கும் நம்பிக்கையா இருக்கு. சாதனையாளர்களா கூட வர வேண்டாம். ரொம்ப நல்ல மனுஷங்களாக வரணும். நீங்க அவங்களைப் பார்த்துப் பேசினா ‘நல்ல பசங்களா இருக்காங்களே’ன்னு ஃபீல் பண்ணணும். அது போதும் எனக்கு!’’

- நா.கதிர்வேலன்