குங்குமம் ஜங்ஷன்



யு டியூப் லைட்
போட்டோஷூட், சினிமா என டிராவல் ஆன எமி ஜாக்சன், இப்போது மியூசிக் ஆல்பத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ராக் பாடகர் மன்ச் மியூசிக் பாடி இசையமைத்து நடித்துள்ள ‘லக் ஹில்லாடே’ இசை ஆல்பத்தில் எமியும் டான்ஸ் ஆடியிருக்கிறார். இந்த வீடியோ சாங்கை ஆறே நாட்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். நேரலை நிகழ்ச்சியில் எமியைப் பார்த்த பலரும் எமோஷனல் ஆகி, ‘ஐ லவ் யூ’, ‘ஸோ க்யூட்’ என ஜொள்ளு விட்டாலும், சிலர் எக்கச்சக்க கேள்விகள் கேட்டு எமியை திக்குமுக்காட வைத்துவிட்டனர். 11500 கமென்ட்கள், 308 பகிர்வுகள் என செம வைரல் ஆகியிருக்கிறது இந்த வீடியோ!

சிற்றிதழ் talk
நடிப்பு என்பது பெரிய ஆசிரியராக, நிஜ வாழ்க்கையின் மனிதர்களை மிகவும் உற்றுப் பார்ப்பதும், அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று கவனிப்பதுமே ஆகும். இதைக் கடந்து ‘நடிப்பு’ என்பது க்ஷண நேரத்தில் நடக்கக்கூடிய மிகப் பெரிய அதிசயம்.
- இயக்குநர் மிஷ்கின் (‘படச்சுருள்’ இதழிலிருந்து...)

புத்தகம் அறிமுகம்
ஃபாரென்ஹீட் 451 ரே பிராட்பரி / தமிழில்: வெ. ஸ்ரீராம்
(வெளியீடு: க்ரியா, புது எண்.2, பழைய எண்.25, 17வது கிழக்குத் தெரு, காமராஜ் நகர், திருவான்மியூர், சென்னை-41. விலை ரூ.180/-) வாசிப்பது அற்றுப் போன காலமிது. வீடுகளில் புத்தகங்களுக்கான இடங்கள் கட்டாயமாக்கப்படவில்லை. அந்த இடத்தை வேறு எவையோ ஆக்கிரமித்துவிட்டன. 1953ல் எழுதப்பட்ட இந்த நாவல் இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும் பொருந்திப் போகும்படி அமைந்துவிட்டது.

புத்தகங்கள் வெறுக்கப்படுகிற சூழலை முன்னரே யூகித்துக் கொண்ட மாதிரி இந்த நாவலை எழுதியிருக்கிறார் ரே பிராட்பரி. சமூகத்தின் பல பிரச்னைகளைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. ஆனாலும் பிரசாரம் செய்யும் நாவல் அல்ல இது. அதற்கான முன்மொழிதலை  மட்டுமே கொண்டது. மொழிபெயர்ப்பில் எப்போதுமே வெ.ராமின் பங்கு சிறப்புக்குரியதாகவே இருக்கும். இந்த நாவலின்  எளிமைக்குக் கீழிருக்கும் ஆழம்தான் முக்கியமானது.

நிகழ்ச்சி மகிழ்ச்சி
ஜி.வி.பிரகாஷ், சுரபி, சரத்குமார் நடிக்கும் ‘அடங்காதே’ படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. சிம்புவின் ‘மன்மதன்’ படத்திற்குப் பிறகு  மந்த்ரா பேடி  இந்தப் படத்தில் நடிக்கிறார். பட பூஜையின்போது அவரைப் பார்த்த பலரும், ‘மந்த்ராவுக்கு வயது ஏறலையே. சிக்குன்னு இருக்காங்களே’ என அப்ளாஸை அள்ளி வீசியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் சரத்குமார் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார். ‘‘சினிமா என் தொழில். நல்ல கதையம்சம் உள்ள படங்களும், எனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களும் தேடி வரும்போது, அதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து நடிப்பேன். இதேபோல் புனித் ராஜ்குமாருடன், ‘ராஜ்குமாரா’ என்ற கன்னடப் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன்’’ என்று சமீபத்தில் சரத் மனம் திறந்தது நினைவிருக்கலாம்.

சர்வே
தீவிரவாதிகளின்  தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் இரையாவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ‘உலகெங்கும் கடந்த ஆண்டில் 11774 இடங்களில் நடந்த தாக்குதல்களில் 28328 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 35320 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள்’ என்கிறது ஒரு ஆய்வு. தீவிரவாதிகள் பாதிப்புக்கு அதிகம் ஆளாகும் நாடுகள் பட்டியலில் இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானுக்கு அடுத்து நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா. நம் இந்தியாவில் நடந்த 791 தாக்குதல்களில் 43 சதவீதம் நக்சலைட்டுகளால் அரங்கேறியுள்ளது.

உலக அளவில் தலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ், போகோ ஹராமுக்குப் பிறகு இந்தியாவில் உள்ள நக்சலைட்டுகள்தான் அதிபயங்கர அமைப்பு என்கிறது இந்த ஆய்வு. இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் அதிகம் பாதித்த மாநிலங்களின் வரிசையில் சத்தீஸ்கர், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் உள்ளன. இந்திய தீவிரவாதிகளால் இந்த ஆண்டு  கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 863 பேர்.  அப்ப ஆள் கடத்தல்தான் இந்தியத் தீவிரவாதத்தின் லேட்டஸ்ட் டிரெண்ட் என்று சொல்லலாமா?

டெக் டிக்
ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் டிஸ்கோ ப்ளூடூத் ஸ்பீக்கரை சென்ற மாதம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இசை மற்றும் நடனப்பிரியர்களைக் கவரும் வகையில் வண்ணமயமான டிஸ்கோ லைட்டுகள் இதனுடன் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் எஃப்.எம் ரேடியோவும் உள்ளது. லித்தியம் பேட்டரியைக் கொண்டு செயல்படுவதால் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும். பார்ட்டி, ஃபங்ஷன் போன்ற கேளிக்கை நிகழ்வுகளுக்கு இந்த கேட்ஜெட் பெஸ்ட் சாய்ஸ். இதன் விலை ரூ.1,500/-