வலைப்பேச்சு‘தோளுக்கு மேல வளர்ந்தாச்சு! இனி அவனை அடிக்க முடியாது’ன்னு பெத்தவங்க மகனை அடிக்க இன்னொருத்தியை ஏற்பாடு பண்றதுதான் திருமணம்.

@MuthusankarS
ஒரு மரத்தின் சரித்திரத் தொடக்கம், ஏதோ ஒரு பறவையின் எச்சமாக இருக்கலாம்.

@expertsathya
காய்கறி மார்க்கெட்டுக்கும், ஆஸ்பிட்டலுக்கும் போகும்போதுதான் வாழ்க்கை மீது லேசாக பயம் வருகிறது...

@prakashalto
நான் நேர்மையாக இருப்பது உங்களிடம் பதக்கம் வாங்கி குத்திக் கொள்வதற்கல்ல... என் நிம்மதிக்காக!

@Elanthenral
விருந்தினர் தங்கும் கொஞ்ச நேரத்திற்கு, வீடு ஒரு நாடக மேடையாய் இருக்கிறது!


எவரிடம் தைரியமாக பொய் சொல்லக் கூச்சப்படுகிறோமோ அவரிடம் அன்பால், அக்கறையால் வசீகரிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே நிசர்சனமான உண்மை.
- சூர்யா சுரேஷ்

இரண்டே வரிகளில் அடிப்பதில் வாலியை அடிக்க ஆளில்லை. கோவலன் கதையை இரண்டே வரிகளில் சொல்ல முடியுமா என்று கேட்டபோது அவர் சொன்னது... ‘புகாரில் பிறந்தான், புகாரில் இறந்தான்!’
- சந்திரன் வீராசாமி

வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது: தமிழ்நாடு தேர்தல் துறை.
# ‘பணம் வாங்க டோக்கன் தர்றோம்’னு சொல்லுங்க!

பக்கத்து வீட்டுப் பையன் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான். ‘‘தம்பி... உனக்கு பரீட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?’’ன்னு கேட்டேன்.
‘‘சொல்லுங்க அங்கிள்... தெரிஞ்சிக்கிறேன்!’’
‘‘தம்பி, பரீட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க!’’
‘‘ம்ம்ம்ம்...’’
‘‘முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்!’’
‘‘ம்ம்ம்ம்...’’
‘‘இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்!’’
‘‘ம்ம்ம்ம்...’’
‘‘அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்!’’
‘‘ம்ம்ம்ம்...’’
‘‘கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும்... இதுல ஏதாவது சந்தேகம் இருந்தா கேளு?’’
‘‘ஒரே ஒரு சந்தேகம்தான் இருக்கு!’’
‘‘என்ன?’’
‘‘மூணு மணி நேரமும் கேள்வியையே எழுதிக்கிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது?’’
# நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ?

@sankarshri
பஸ்ல ஜன்னல் கண்ணாடிய திறக்கறதுக்குன்னு தனியா ஜிம்முக்கு போவணும் போல... முடியல!

@iamVariable
‘கடைக்குப் போயிட்டு வா’னு சொன்னாக்கூட பேசாம போவோம். ‘சும்மாதானே இருக்க... கடைக்குப் போயிட்டு வா’னு சொல்லும்போதுதான் எரிச்சல் வரும்.

‘‘கண்ணே! என் நண்பன் வந்திருக்கான்... காபி எடுத்துட்டு வா தங்கமே!’’
‘‘கல்யாணமாகி 25 ஆண்டுகள் ஆகியும் மனைவியை பெயர் சொல்லாமல் ‘அன்பே, கண்ணே, மணியே’ என்று அழைக்கிறாயே... பாராட்டுகிறேன் நண்பா!’’
‘‘அட, நீ வேறப்பா! அவ பெயர மறந்து 25 வருஷம் ஆச்சு. அவகிட்ட கேட்க முடியாது. அதான் அப்படி!’’

‘‘இந்த நாள உன் டைரில குறிச்சிக்கோ’’ன்னு வாழ்க்கைகிட்ட சவால் விட முடியவில்லை. ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாய் பிரச்னைகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது...
- நாஸீர் மொஹமத்
‘நாளை நமக்கு காபியா? பாலா?’ என்பதில் புதைந்திருக்கிறது வாழ்க்கையின் ரகசியம்!
- பாலா சேலம்

சயின்டிஸ்ட் ஒருத்தர் கூண்டில் எலி வளர்த்தார். எலிக்கு பசி எடுத்தால் கூண்டுக்குள் உள்ள மணியை அழுத்தக் கற்றுக் கொடுத்திருந்தார். பசியெடுத்தால் எலி மணியை அடிக்கும். சயின்டிஸ்ட் உணவு கொண்டு வந்து தருவார். ‘ஒரு எலியை இந்த அளவுக்குப் பழக்கி விட்டோமே’ என்று அவருக்கு தலைகால் புரியாத பெருமை.

இந்த நிலையில், சயின்டிஸ்ட் புதிதாக ஒரு எலியைப் பிடித்து வந்து கூண்டில் விட்டார். 2 எலிகளும் பேசிக்கொண்டன. புதிய எலி கேட்டது, ‘‘இந்த ஆள் எப்படி?’’ அதற்கு பழைய எலி சொன்னது, ‘‘இவனா? ரொம்ப தத்தி. மணி அடிச்சதும் சாப்பாடு எடுத்துட்டு வர்ற மாதிரி இவன பழக்குறதுக்குள்ளே நான் பட்ட பாடு இருக்கே... அப்பப்பா! பய இப்பத்தான் ஒருவழியா தேறிட்டு வர்றான்...’’
நீதி: (நான் என்னத்தை சொல்ல? நீங்களே உங்க கற்பனைக்கேத்தபடி எதையாச்சும் நினைச்சுக்குங்க!)

@SuruliOfficial 
இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவனைப் பார்த்து ‘‘அதை சாப்பிடு... இது சாப்பிடு’’னு சொல்லுவாங்க. வசதி இருக்கவனைப் பார்த்து ‘‘எதையும் சாப்பிடக்கூடாது’’னு சொல்வாங்க!

ஜட்ஜ்: ‘ஆறு வருஷமா உன் பொண்டாட்டியை அடிமையா நடத்தி இருக்கே! அது உண்மையா?
கைதி: என்னை மன்னிச்சுடுங்க எஜமான்!
ஜட்ஜ்: அந்த பேச்செல்லாம் இங்க வேண்டாம். உன்னாலே இதை எப்படி சாதிக்க முடிஞ்சுதுன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இரு!

@SriLiro
ஒரு கட்டத்துக்கு மேல அப்பா நமக்கு மகனா மாறுவார். ‘‘அது வேணும்... இது வேணும்’’னு கேட்பார். முடிஞ்ச அளவு செய்யணும். அந்த சந்தோஷமே வேற!

@geethu_Twitz
பொதுக் கழிப்பிடத்தில் ‘ஐ லவ் நந்தினி’னு எழுதுறீங்களே! நந்தினி ஏன்டா ஆண்கள் கழிவறைக்கு வரப்போறா?

@mrithulaM 
அளவிற்கு அதிகமான அன்பு முதலில் பிரமிக்கப்பட்டு, பின் ரசிக்கப்பட்டு, தொல்லையாகி, சலிக்கப்பட்டு, இறுதியில் உதாசீனப்படுத்தப்படுகிறது!

@ikrthik
ஞாபகம் வைத்திருப்பவர்களை மறந்துவிடுகிறோம், மறந்தவர்களை ஞாபகம் வைத்திருக்கிறோம்!

@Aathithamilan
தெருவைக் கடந்தேன் ஜாதியைக் கேட்டான் மாவட்டத்தைக் கடந்தேன் ஊரைக் கேட்டான் மாநிலம் கடந்தேன் இனம், மொழியைக் கேட்டான் நாட்டைக் கடந்தபிறகே இந்தியன் ஆனேன்.

@chitram_twitts
உழைக்கும்போது ‘வீண் முயற்சி’ என்பார்கள்; வெற்றி பெற்றபின் ‘விடா முயற்சி’ என்பார்கள்.

தண்ணீர் மதுபானத்திடம் கேட்டது, ‘‘உயிர் வாழ நான்தான் முக்கியம். ஆனால் மனிதர்கள் என்னைவிட உன்னை அதிகம் நேசிக்கிறார்களே, ஏன்?’’
மதுபானம் சொன்னது, ‘‘நீ மனிதர்களைப் பிரிக்கிறாய், நான் இணைக்கிறேன்!’’

ஒரு குஜராத்தி தொழிலதிபர் புதிதாக உயிரியல் பூங்கா திறந்தார். சுற்றிப் பார்க்க கட்டணம் 50 ரூபாய் என நிர்ணயித்தார், யாரும் வரவில்லை. 25 ரூபாயாகக் குறைத்தார், அப்போதும் யாரும் வரவில்லை. 20 ரூபாய் என்றார், அப்போதும் பார்வையாளர்களைக் காணோம். 10 ரூபாயாகக் குறைத்தும் பலனில்லை!

உடனே ஒரு தந்திரம் செய்தார். ‘கட்டணமே இல்லை, எல்லாம் இலவசம்’ என சலுகை அறிவித்தார். அடுத்த நிமிடமே கூட்டம் அலைமோதியது. பூங்கா முழுக்க கூட்டம் நிரம்பியதும், நுழைவு வாயில் கதவை மூடிய அவர், சிங்கத்தை கூண்டிலிருந்து வெளியே விட்டார். மக்கள் அலறி அடித்துக்கொண்டு வாயிலை நெருங்க, ‘‘வெளியில் செல்வதற்கு கட்டணம் 200 ரூபாய்’’ என்றார்.
பின்குறிப்பு: இந்தக் கதைக்கும் .... வழங்கும் சலுகைக்கும் சம்பந்தம் இல்லை!

ஒருமுறை போலி என்கவுன்ட்டரின்போது, அதில் ஈடுபட்ட வட இந்தியாவைச் சேர்ந்த உயரதிகாரி, தாக்குதலின்போது காயம் பட்டதாகப் பத்திரிகைகளுக்குப் புகைப்படங்கள் அனுப்பியிருந்தார். ஒரு படத்தில் இடது கையில் கட்டுப் போட்டிருந்தார். இன்னொரு படத்தில் வலது கையில் கட்டுப் போட்டிருந்தார். அப்பட்டமான ஆவணமாக அந்தப் படம் இருந்தது.

மனித உரிமை அமைப்புகள் எதுவும் அப்போது எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. ‘‘அவை அந்தந்த நேரத்தில் மட்டுமே சத்தம் கொடுக்குமே தவிர, வேறு எதையும் செய்து விடமுடியாது’’ என தனிப்பட்ட சந்திப்பின்போது சொன்னார் அந்த அதிகாரி. அந்த தைரியம் நாடி நரம்பெல்லாம் ஓடுவதால்தான், துணிந்து கதைகளைக் கட்டி விட முடிகிறது. கல் தடுக்கி கீழே விழுந்து இறந்தார் என்று சொன்னால்கூட கேட்பதற்கு ஒரு நாதியுமிருக்காது!

- சரவணன் சந்திரன்