நயன்தாராவுக்கு கடன்காரன் ஆகிட்டேன்!



‘‘தொடர்ந்து சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்டா பண்றதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன் தம்பி. காமெடி, குணச்சித்திரம்னு நான் என்னிக்கும் பிரிச்சுப் பார்க்க மாட்டேன். எல்லாமே எனக்கு கேரக்டர்கள்தான். குணச்சித்திரத்துல காமெடி கலந்து பண்றதையே சிறந்ததா நினைக்கறேன். ‘நவரசங்கள்ல முக்கியமான ரசங்களான நகைச்சுவை, கோபம், சோகம் இதையெல்லாம் தம்பிராமையா பிரமாதமா பண்ணுவான்யா’னு நல்ல பெயர் வாங்கியிருக்கேன்.

அந்த குட் நேமை ஒவ்வொரு படத்துலேயும் சம்பாத்திக்கணும்னு விரும்பி உழைக்கறேன். பிரபுசாலமனோட ‘தொடரி’ என்னை வேற ஒரு உயரத்துக்குக் கொண்டு போகும். இந்த வருஷத்தோட பெஸ்ட் காமெடினு சொல்லப் போறாங்க. ரிப்பீட் ஆடியன்ஸ் அதிகரிக்கும் தம்பி’’ - சந்தோஷ மூடில் புன்னகைக்கிறார் தம்பி ராமையா. விக்ரமுடன் நடித்த ‘இருமுகன்’ சக்சஸ், விஜய்யுடன் ‘பைரவா’, ‘அஜித்-57’ என சார் செம ஹேப்பி.

‘‘என்ன சொல்றார் விக்ரம்?’’
‘‘ஏற்கனவே ‘தாண்டவம்’ படத்துல அவரோட சேர்ந்து நடிச்சிருக்கேன். சிலரோட நடிக்கும்போது அந்தப் படம் முழுவதுமா அவரோட காம்பினேஷன்ல நடிக்க மாட்டோமானு தோணும். அப்படி விக்ரம், விஜய்னு ஒருசிலரை சொல்லிட்டே போகலாம். ‘இருமுகன்’ல மலேசியன் கேரக்டர் பத்தி இயக்குநர் சொன்னதும் ‘சிங்கம் 3’ சூர்யா மாதிரி அடர்த்தியான மீசையோடு டைரக்டர் ஆனந்த் ஷங்கர் முன்னாடி நின்னேன். கூட விக்ரமும் இருந்தார். ‘உங்க மீசையை பார்த்ததும் ‘சிங்கம்’ சூர்யா சாயல்ல இருக்கு.

ஹரியும், சூர்யாவும் எனக்கு நண்பர்கள். சூர்யாவை நான் கிண்டல் பண்றேன்னு யாரும் நினைச்சுடக்கூடாதுங்க. ஸோ, உங்க மீசையை குறைச்சுக்க முடியுமா?’னு விக்ரம் கேட்டார். சக நடிகர்களை மதிக்கும் விக்ரமின் பண்பு ரியலி கிரேட். இயக்குநர் சீனை சொன்னதும், அதை ரெண்டு மூணு விதத்தில ரோல் பண்ணி பார்க்குறார். அதுல எது பெஸ்ட்னு கண்டுபிடிச்சு பண்றார். ஒரு புது ஹீரோ மாதிரி உழைக்கிறார்.’’

‘‘விஜய்யோட குட்புக்ல நீங்களும் இருக்கீங்களே?’’
‘‘விஜய், அஜித்னு எல்லார் மனசிலும் நான் இடம்பெறக் காரணம், சினிமாவில நான் சரியா இருக்கறதுதான்னு நினைக்கறேன். என்னோட வேலையை கரெக்டா பண்றேன். அது எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. ‘ஜில்லா’, ‘புலி’க்குப் பிறகு நான் விஜய்யோட ‘பைரவா’ல நடிக்கறேன். ‘ஜில்லா’ டைம்ல விஜய்கிட்ட ஒரு காமெடி சீன் சொல்லியிருந்தேன். நேத்து ராஜமுந்திரியில் ‘பைரவா’ படப்பிடிப்பை முடிச்சிட்டு திரும்பி வரும்போது, ஃபிளைட்ல காமெடி நடிகர் சதீஷ் என் பக்கத்துல இருந்தார்.

‘நீங்க சொன்னதா விஜய் சார் ஒரு காமெடி சீன் நடிச்சுக் காண்பிச்சார். வயிறு குலுங்க சிரிச்சோம்’னு சதீஷ் சொன்னார். எப்பவோ ஒரு சீன் சொன்னதை இவ்ளோ பிஸியிலும் ஞாபகம் வச்சிருக்காரே மனிதர்னு ஆச்சரியமாகிடுச்சு. ‘பைரவா’ அழுத்தமான ஒரு கதை. அதுல நான் கீர்த்தி சுரேஷோட தாய்மாமன். ‘தொடரி’க்குப் பிறகு கீர்த்தியோட நடிச்சிருக்கேன். அந்தப் பொண்ணு செம பிரில்லியன்ட் கேர்ள். கற்பூர புத்தி!’’

‘‘மீண்டும் நயன்தாராவோட நடிக்கிறீங்க போல..’’
‘‘சற்குணத்தோட அசோசியேட் தாஸ் இயக்கும் படம் ‘டோரா’. ‘வாகை சூட வா’வில் நான் நடிச்சதைப் பார்த்து என் மீட்டர் என்னான்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கார் தாஸ். சில படங்கள்ல நடிக்கறப்போ வேற ஒருத்தர் பண்ண வேண்டிய ரோலை நாம பண்ணியிருப்போம். ஆனா, ‘டோரா’ அப்படியில்ல. அந்த ஸ்கிரிப்ட்டை எழுதும்போதே, என் டயலாக் மாடுலேஷன், பாடிலாங்குவேஜ் எல்லாத்தையும் மனசில வச்சு எழுதினதால எனக்கே எனக்கு தைச்ச சட்டை மாதிரி அமைஞ்சிருக்கு. 40 நாட்கள் நடிச்சிருக்கேன். அதுல நான் நயன்தாராவோட அப்பா. ‘அபியும் நானும்’ல பிரகாஷ்ராஜ் பெயர் வாங்கினது மாதிரி இதுல எனக்குக் கிடைக்கும்.

என்னோட ஆக்டிங் நயன்தாராவுக்கு ரொம்ப பிடிக்கும். ஸ்பாட்டுல குழந்தை மாதிரி சிரிப்பாங்க. நான் நடிக்கற சீன்களை மானிட்டரில் பார்த்து ‘சோ க்யூட்’னு பாராட்டுவாங்க. அப்படி நூறு சோ க்யூட்டாவது நான் வாங்கியிருப்பேன். ஒவ்வொரு சோ க்யூட்டும் ஒரு கோடி ரூபாய் செக் கொடுத்ததுக்கு சமம் தம்பி. அப்படி பார்த்தா நூறு கோடி ரூபாய்க்கு செக் கொடுத்து என்னை கடன்காரனா ஆக்கிட்டாங்க தம்பி. அந்த அன்பை எப்படி திருப்பிச் செலுத்தப் போறேனோ!’’

‘‘அடுத்து?’’
‘‘ஒரு படத்துல நடிக்கறதுக்கு முன்னாடியே, ‘அந்தப் படத்தோட கதையில் இருந்து என்னோட சீன்களை தனியா வெட்ட முடியாது’ங்கற மாதிரியான கதைகளைத்தான் நான் தேர்ந்தெடுக்கறேன். ‘தனி ஒருவன்’ல எனக்கு செம கேரக்டர் கொடுத்திருந்தார் மோகன்ராஜா. அடுத்து அவர் சிவகார்த்திகேயன், நயன்தாராவை வைத்து இயக்கும் படத்துல செம தீனி இருக்கும். அட்லீ தயாரிக்கும் ‘சங்கிலிபுங்கிலி கதவ திற’ல என்னைத் தள்ளி வச்சிட்டு கதையை பார்க்க முடியாது. விஜய் டைரக்‌ஷனில் ஜெயம் ரவி நடிக்கும் படம், ஜி.வி.பிரகாஷ் படம்னு கைவசம் நல்ல ப்ராஜெக்ட்ஸ் இருக்கு.’’

‘‘உங்க பையன் உமாபதி ஹீரோவாகிட்டாரே?’’
‘‘உமாபதி ஒன்பதாவது படிக்கும்போதே சினிமாவுல வரணும்னு ரெடியாகிட்டான். டான்ஸ், ஃபைட்னு எல்லாத்தையும் கத்துக்கிட்டு ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’, ‘தேவதாஸ்2016’னு களத்துல இறங்கிட்டான். அவன்கிட்ட எனது சாயலோ, ஆளுமைத்திறனோ வெளிப்பட்டுடக் கூடாதுனு அவனோட ரெண்டு படங்கள்லேயும் சேர்ந்து நடிக்கலை. ஆனா, அவனோட மூணாவது படத்துல நானும் இருக்கேன். ஒரு இயக்குநரா, நடிகனா அவன்கிட்ட எந்த அட்வைஸும் பண்ணல. ஆனா, அப்பாவா ஒரு விஷயம் சொல்லியிருக்கேன். ‘நான் யாருன்னு கண்டுபிடிச்சு என்னை நிரூபிச்சிட்டேன். உன்னை நீ யாருன்னு கண்டுபிடிச்சு. உன்னை அடையாளப்படுத்து...’ என்ன, நான் சொல்றது நியாயம்தானே?’’

விஜய், அஜித், விக்ரம்னு எல்லார் மனசிலும் நான் இடம்பெறக் காரணம், சினிமாவில நான் சரியா இருக்கறதுதான்!

- மை.பாரதிராஜா
படம்: புதூர் சரவணன்