நினைவோ ஒரு பறவை



நா.முத்துக்குமார்

‘கெள’ for கெளபாய் விமானத்தை மிக சாதாரணமாகவும், வண்ணத்துப்பூச்சியை ஆச்சரியமாகவும் பார்க்கிறார்கள் நகரத்து சிறுவர்கள் யாரோ மூன்றாவது முறையாக நான் அமெரிக்கா சென்றிருந்தது, தமிழ்ச் சங்கங்களின் அழைப்பின் பேரில்! நண்பரும் பத்திரிகையாளருமான ‘ஒன் இந்தியா’ சங்கர் தொலைபேசியில் அழைத்து, ‘‘அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியுமா?’’ என்று கேட்டபோது, நான் கடுமையான வேலைப்பளுவில் இருந்தேன்.



இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கும் ‘ஓம்’ படத்தின் பாடல்கள், இயக்குநர் ராம் இயக்கும் ‘தரமணி’, ‘பேரன்பு’ படங்களின் பாடல்கள், இயக்குநர் ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்குறான் குமாரு’ படத்தின் பாடல்கள், இயக்குநர் ராஜீவ் மேனனின் புதிய படத்தின் பாடல்கள் என பதின்மூன்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கான பாடல் வேலைகள் பாக்கி இருந்தன.

‘‘நிறைய வேலை இருக்கு சார். அடுத்த வருஷம் பார்க்கலாம்’’ என்றேன்.  நண்பர் சங்கர் விடவில்லை. ‘‘இது வெறும் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி மட்டுமில்லை. அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்காக ஒரு இருக்கை அமைக்கும் முயற்சி நடைபெறுகிறது. அதற்கு ஆறு மில்லியன் டாலர் தேவைப்படுகிறது. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை அமைந்தால் தமிழுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை எடுத்துச் சொல்லவும்தான் இந்த நிகழ்ச்சி.

உங்களைப் போன்ற பிரபலமான கவிஞர்கள் எடுத்துச் சொன்னால், தமிழ் மக்களிடம் உடனே போய்ச் சேரும்’’ என்று நண்பர் சங்கர் சொல்ல, என் வேலைகளை மறந்து, ‘‘கண்டிப்பாக வருகிறேன்’’ என்றேன். டேலஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கால்டுவெல், துணைத்தலைவி சித்ரா, தமிழ்ச் சங்க உறுப்பினர் தினகர் என பலர் திரண்டு வந்து விமான நிலையத்தில் வரவேற்றனர்.

என் முதல் அமெரிக்கப் பயணத்தைப் பற்றி ஏற்கனவே விலாவரியாக எழுதி விட்டதால், மூன்று வருடங்களுக்கு முன்பு மனைவி, மகன் என கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் சென்ற எனது இரண்டாவது அமெரிக்க விஜயத்தைப் பற்றி சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். வெள்ளை மாளிகை விஜயம், வாஷிங்டன் டி.ஸி. நகர் உலா, மீண்டும் நயாகரா சாரல் என அந்த முப்பது நாட்களை விவரிக்க நுழைந்தால் எழுத்தாளர் சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகத்தைப் போல் தனியாக ஒரு புத்தகமே எழுத வேண்டி வரும் என்பதால் மீண்டும் நாம் டேலஸ் தமிழ்ச் சங்கத்திற்கு திரும்புவோம்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் என்பது ஹாலிவுட் படங்களில் வரும் கெளபாய்களின் தலைநகரம். சிறுவயதிலிருந்தே நான் படித்த ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் போன்ற புத்தகங்களும், நான் பார்த்த பல ஹாலிவுட் திரைப்படங்களும், டெக்சாஸ் என்றாலே தலையில் கெளபாய் தொப்பியுடனும், கையில் துப்பாக்கியுடனும் குதிரையில் வந்து சண்டை போடும் ஷெரிப்களை நினைவுபடுத்தின.

சென்னையிலிருந்து கிளம்பியபோது லேசாக காய்ச்சல் இருந்ததால், 23 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு வதங்கிய கீரைத்தண்டைப் போல் டேலஸ் வந்திறங்கினேன். இதற்கிடையில் என் மனைவி வேறு, என் உடல்நிலை பற்றி எடுத்துச் சொல்லி தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்களைக் கலவரப்படுத்தி இருந்ததால், அங்கு இறங்கியதுமே ‘‘முதல்ல உங்க மனைவிக்கு என்னுடைய போனில் இருந்து பேசுங்க. ரொம்ப பயந்துட்டாங்க’’ என்றார் தமிழ்ச் சங்கத் தலைவர் கால்டுவெல்.

ஹோட்டல் அறையை ரத்து செய்து விட்டு, தன் வீட்டிலேயே தங்க வேண்டுமென்றும், வேளா வேளைக்கு எனக்கான பத்திய உணவைச் செய்து தருவதாகவும் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவி சித்ரா கேட்டுக்கொள்ள, வேறுவழியின்றி ஒப்புக்கொண்டேன். சித்ராவின் கணவர் மகேஷ், கணிப்பொறித் துறையில் வேலை செய்கிறார். சித்ரா தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர். இருவருமே நவீன இலக்கிய வாசகர்கள் என்பதால் பொழுது போனதே தெரியவில்லை. தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த தினகரும் நல்ல வாசகர்.

டேலஸில் நான் தங்கியிருந்தவரை விடுமுறை எடுத்துக் கொண்டு, ஒரு தாய்க் கோழியைப் போல தினகர் என்னைத் தாங்கிக் கொண்டார். அடுத்த நாள் மாலை, டேலஸ் தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். முதலில் தமிழ்க் கவிதைகளைப் பற்றியும், ஹார்வர்டின் தமிழ் இருக்கைக்கான தேவை பற்றியும் என்னுடைய சிறப்புரை முடிந்ததும், தமிழ் இருக்கைக்காக அரை மில்லியன் டாலர் நன்கொடை அளித்த மருத்துவர் சம்பந்தம் உரையாற்ற, அதன்பின் சுகி. சிவம் அவர்களின் சொற்பொழிவும், பாடகர் மனோ, பாடகி சித்ரா போன்றோரின் நிகழ்ச்சிகளும் நடைபெற, விழா இனிதே முடிந்தது.

கிட்டத்தட்ட மூவாயிரம் தமிழ்க் குடும்பங்களை நேரில் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். அடுத்த நாள் அதிகாலை டேலஸில் இருந்து நான், பாடகர் மனோ, பாடகி சித்ரா என அனைவரும் மிச்சிகன் மாகாணத்தில் டெட்ராய்டு நகரை நோக்கிப் பயணமானோம். சென்னையிலிருந்து டெல்லி செல்வதைப் போல், மூன்று மணி நேர விமானப் பயண தூரத்தில் டெட்ராய்டு. அமெரிக்காவின் மிகப் பழமையான தமிழ்ச் சங்கங்களில் ஒன்றான டெட்ராய்டு தமிழ்ச் சங்கத்தில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்காக உரையாடியது மகிழ்ச்சியளித்தது.

டெட்ராய்டு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பெயர் அண்ணாதுரை. ஆகையால் என் உரையை இப்படி ஆரம்பித்தேன். ‘‘அண்ணாதுரை இந்த விழாவிற்கு அழைத்தபோது என்னால் மறுக்க இயலவில்லை. ஏன் என்றால் என் ஊர் காஞ்சிபுரம். அண்ணாதுரை அழைத்தால் காஞ்சிபுரம் வராமல் இருக்குமா?’’ என்று நான் பேசி முடித்ததும் கைதட்டல்கள் அடங்க நிமிடங்கள் ஆனது. டெட்ராய்டிலும் கிட்டத்தட்ட ஐயாயிரம் தமிழ்க் குடும்பங்கள் உணர்ச்சிப் பெருக்கோடு விழாவில் கலந்துகொண்டனர்.

காஞ்சியில் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை என்னுடன் படித்த நண்பன் விஜயன் டெட்ராய்டில் வசிக்கிறான். அவன் வீட்டில் தங்கி, பள்ளி நாட்களைப் பற்றிப் பேசப் பேச... இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை. விஜயனுக்கு ஒரேயொரு மகன்.
‘‘ஏண்டா, ரெண்டாவது குழந்தை பெத்துக்கலையா?’’ என்றேன்.

‘‘எனக்கும் ஆசைதான். ஆனா பாத்துக்கறதுக்கு ஆள் வேணுமே! அமெரிக்காவுல நிறைய தமிழர்கள் ஒரு குழந்தையோட நிறுத்திடறாங்க. ஆயிரம்தான் வசதியிருந்தாலும் நம்ம ஊரு மாதிரி வராதுடா’’ என்றான் விஜயன். சொல்லும்போது அவனது கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. ‘‘அமெரிக்க வாழ்க்கை பற்றி எழுத்தாளர் சுஜாதா பல வருஷங்களுக்கு முன்னாடி எழுதினதை படிக்கறேன், கேட்கறியா?’’ என்றேன். ‘‘படிடா’’ என்றான்.

‘‘அமெரிக்க ராஜபாட்டைகளில் அறுபது மைல் வேகத்தில் பக்கத்தில் பொம்மை பனியன் அணிந்திருக்கும் பெண்டாட்டியுடன், துடிப்பான சங்கீதம் கார் ஸ்டீரியோவில் பரவ, நயாகராவுக்கோ, பிட்ஸ்பர்குக்கோ ஓட்டிக் கொண்டு செல்லும்போது ‘சொர்க்கம் என்பது இதுதான்’ என்று தோன்றும். எதுவரை இந்த சொர்க்கம் நீடிக்கும் என்பது பேருக்குப் பேர் மாறுபடும்.

பெரும்பாலானவருக்கு முதல் குழந்தை வரை. இப்போதுதான் டயாப்பர் என்கிற சமாசாரம் இருக்கிறது. அதை அசுர வேகத்தில் குழந்தையின் பின் பாகத்தில் மாற்ற வேண்டும், மில்க் அலர்ஜி போன்ற பல்வேறு அலர்ஜிகள்; ஃபார்முலா கலப்பது எப்படி; பின் சீட்டில் குழந்தையை ஃபைபர் இருக்கையிலும், டிபார்ட்மென்ட் ஸ்டோர் வண்டிகளிலும் பொருத்துவது போன்ற எல்லாக் காரியங்களையும் நீங்களே செய்ய வேண்டிய நிலை வரும்போது இந்தச் சொர்க்கம் சற்று கலையும்.

குழந்தை நடு இரவில் அழும்போது, பீடியாட்ரிஷியன் அப்பாயின்ட்மென்ட் கிடைக்க ஒரு மாதம் ஆகும்போது, உங்கள் அப்பாவும் அம்மாவும் எப்படி அத்தனைக் குழந்தைகளை சமாளித்தார்கள் என்கிற வியப்பு வரும்போது, சொர்க்கம் விலகும். இந்தியாவில் இருந்தால் இந்த குழந்தையைக் கொண்டாட ஒரு கோஷ்டியே இருக்கும். இங்கே தனி அறையில் தொட்டிலில் ஸ்பீக்கர் போனில் அழுகிறதே. இதற்கு ஏற்ற தாலாட்டு கூட புதுசாக எழுத வேண்டியிருக்கிறதே என்னும் ஏக்கம் பரவும்.

விடுமுறையின்போது ஒருமுறை தாத்தா, பாட்டியிடம் குழந்தையைக் காட்டிவிட்டு திருப்பதி போய் ஒரு மொட்டையடித்துவிட்டு வரலாம். ஆனால், முதலில் ஏர் இண்டியா டிக்கெட் கிடைக்க வேண்டும். இங்கே வந்ததும் அதற்கு ஒத்துப் போகவேண்டும். உங்கள் விஜயம் கஸ்டம்ஸில் ஆரம்பித்து ஏர்போர்ட் டாக்ஸி டிரைவர்களை சந்திப்பதற்குள், ‘ஏண்டாப்பா இந்தப் பாழாப் போன பாரத தேசத்துக்கு வந்தோம்’ என்று தாய்நாட்டு வெறுப்பு உச்சகட்டத்துக்கு வரும்.

திருப்பதியில் மொட்டை அடித்த கையோடு குழந்தைக்கு ஜுரம் வந்து அமர்க்களமாகி ‘இனிமேல் இந்தியாவுக்கே வரக்கூடாது’ என்கிற சத்தியத்துடன் திரும்புவீர்கள்!’’ படித்து முடித்ததும், ‘‘சூப்பரா எழுதியிருக்காருடா. அவரு விரலுக்கு மோதிரம்தான் போடணும்’’ என்றான் விஜயன். ‘‘அதுக்கு நீ நரகத்துக்குத்தான் போகணும்’’ என்றேன். ‘‘நரகமா?’’ என்றான் அதிர்ச்சியுடன்.

அதையும் சுஜாதா வார்த்தையிலேயே கேளு, ‘‘எனக்கு சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கேதான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், இறந்த பிறகு நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கேதான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது!’’

அப்பாவும் அம்மாவும் எப்படி அத்தனைக் குழந்தைகளை சமாளித்தார்கள் என்கிற வியப்பு வரும்போது, சொர்க்கம் விலகும்.

(பறக்கலாம்...)
ஓவியங்கள்: மனோகர்