குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்

அகில உலக பொய் சொல்லும் போட்டி... சொல்ற பொய் ஷங்கர் படம் போல பிரமாண்டமா இருந்தாலும், அதுல உண்மை எஸ்.வி.சேகர் படம் போல சின்னதாவாவது இருக்கணும் என்பதுதான் ஒரே விதி. வழக்கம் போல முதலாவதா வர்றாரு அமெரிக்காகாரரு. ‘‘அய்யா, வணக்கம்! முந்தாநேத்து காலைல நான் சஹாரா பாலைவனத்துல ஜாக்கிங் போய்க்கிட்டு இருந்தேன். வழக்கமா என் குடும்பத்துல எல்லாரும் ஒட்டகப் பால்லதான் டீ போட்டு குடிக்கிறதுனால, வர்ற வழில அப்படியே அங்க மேயுற ஒட்டகங்கள் மடியில பாலைக் கறந்துக்கிட்டு வந்திடுவேன்.



நேத்தும் அப்படி பால் கறக்கிறப்ப, ஒட்டகம் மூணுக்கு மூணு அடி சைஸ்ல ஒரு முட்டைய போட்டுச்சு. என்னடா பதினஞ்சு அடி உயரத்துல இருந்து விழுற முட்டை உடையலையேன்னு எடுத்து பார்த்தா, அது தங்க முட்டை. யாரும் முட்டைய பார்த்திடக்கூடாதுன்னு முட்டைய என் சட்டைக்குள்ள வச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்தேன். பார்க்கிறவங்க எல்லோரும், ‘கர்ப்பமா இருக்கியா?’ன்னு கேட்கிறாங்க. நானும், ‘ஆமா! வயித்துக்குள்ள ரெட்டைப் புள்ளைங்க எட்டி உதைக்குது’ன்னு சொல்லிட்டு வேக வேகமா வீடு வந்து சேர்ந்தேன்.
 
அய்யா, பாருங்க... வழக்கமா எங்க வீட்டுக்கு வந்து விளையாடுற வீராணம் குழாய் சைஸு பாம்புங்க ரெண்டு ‘பசிக்குது’ன்னு அந்த முட்டைய குடிச்சிடுச்சுங்க. குடிச்ச முட்டையோட அதுங்க வெளிய வந்தா, அடிச்ச வெயில்ல முட்டை வெந்து வயித்துல சிக்கிக்கிடுச்சு. அப்புறம் என்னத்த செய்ய? பாம்பு வாயைத் திறக்கச் சொல்லி, என் கடைசி பையன பாம்பு வயித்துக்குள்ள அனுப்பிதான் வெளிய எடுக்க முடிஞ்சுது. ரெண்டு நாளா செம வேலை’’னு சொன்னாரு அவரு.

அடுத்ததாக வருகிறார், கூகுளில் தேடினாலும் கழுத்துக்கு மேல மூக்கும் முழியும் எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க முடியாத சீனாக்காரர். ‘‘அய்யா! நான் என்னத்த சொல்றது? எங்க ஊருலயே பெரிய பணக்காரர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். கல்யாணத்துக்கு பந்தல் மட்டும் ஜப்பான் எல்லையில ஆரம்பிச்சு, மங்கோலியா எல்லையில முடிச்சிருந்தாங்க. பந்தல் போட்டு மூடினதுல, மொத்த சீனாவும் சூரியனையே பார்க்க முடியலன்னா பாருங்க...

அது மட்டுமா? பந்தல் முழுக்க தோரணத்துக்குப் பதிலா, திராட்சைய தொங்க விட்டிருந்தாங்க. கல்யாணம்னா சாதாரண கல்யாணமெல்லாம் இல்ல! பொண்ணுக்கு தாலி மட்டும் தொண்ணூறு பவுன்ல போட்டிருந்தாங்க. மாப்பிள்ளை வீட்டுக்கு சீதனமா கொடுத்த பொருட்களை முன்னூறு ரயில்ல கொண்டு போனாங்கன்னா பார்த்துக்கங்க. பொண்ணுக்கு புடவை நீளம் நானூறு மீட்டருன்னா, மாப்பிளைக்கு வேட்டி எண்ணூறு மீட்டர்.

மாப்பிள்ளை கழுத்துக்கு போட்ட தங்கச் சங்கிலிய எடுத்து ஏழெட்டு யானைகளை கட்டி வைக்கலாம்னா பார்த்துக்கங்க. ஆயிரம் ஆட்டுக்கு பட்டி கட்டுற சைஸ்லதான் பொண்ணுக்கு ஒட்டியாணம் போட்டாங்க. சாப்பாடு அயிட்டம் பத்தியெல்லாம் சொல்லி மாள முடியாது. பாம்புத்தலை பொரியல், கருவண்டு கூட்டு, ஆமை ஓட்டை அதக்கி வச்ச அப்பளம், உடும்பு சூப், ஒட்டக தொடைக்கறி, பூரானை பொசுக்கி வச்ச குருமா, தவளைய வெட்டிப் போட்ட ரசம், கடைசியா பச்சோந்தி பாயசம்னு முழுக்க முழுக்க சீனாக்காரங்களுக்குன்னே பார்த்துப் பார்த்து செஞ்ச மெனு. எல்லாம் நல்லா போறப்ப, எவனோ ‘சாப்பாட்டுல பல்லி கிடக்கு’ன்னு புரளி கிளப்ப, எல்லாத்தையும் கீழ கொட்டிட்டாங்க!’’

அடுத்ததா வந்தாரு இங்கிலாந்துக்காரரு. ‘‘அய்யா! போட்டிய மட்டும் நேத்து வச்சிருந்தீங்கன்னா என்னால கலந்துக்கிட்டு இருக்கவே முடியாது. அய்யா, மழைன்னா மழை... அப்படி ஒரு ‘காஞ்சனா 2’, ‘கான்சூரிங் 2’தனமான பேய் மழை. மொத்த லண்டன் மாநகரமே ரசத்துக்குள்ள நசுக்கிப் போட்ட கொத்தமல்லியாட்டம்  மிதந்துக்கிட்டு இருக்கு. மூக்குக்கு கீழ மூணு இன்ச் உசரம் வரை தண்ணி தேங்கி நிற்க, தெருவே தெப்பமா இருக்கு. நானெல்லாம், கார் கதவுக்கு  கடப்பாரை ரெண்டை கட்டி விட்டு, துடுப்பாக்கி படகாட்டம் மிதந்துக்கிட்டு அலைஞ்சேன்.

ஊரெல்லாம் தண்ணின்னா தண்ணி, பசுபிக் பெருங்கடல்ல மிதக்குற கப்பலெல்லாம் பக்கிங்ஹாம் பேலஸ்ல வந்து பார்க் ஆகுற மாதிரி அம்புட்டு தண்ணி. இதுதான் சந்தர்ப்பம்னு பார்த்தேன்... வீட்டு பக்கெட்டுல இருக்கிற வெள்ளை கலர் mug எடுத்து, தேங்கி நிக்கிற தண்ணிய மோந்து, காட்டுத் தீயினால கஷ்டப்பட்ட ஆஸ்திரேலியா மேல ஊத்த ஆரம்பிச்சேன்.

கறிச்சோற கைல அள்ளி கவளம் கவளமா சாப்பிடுற ராஜ்கிரணாட்டம், ஃபைட் சீனுக்கு கூட லிப்ஸ்டிக் போட்டு வர்ற ராமராஜனாட்டம், செய்யற கடமைல முழு அர்ப்பணிப்போட பசி தாகம் பார்க்காம, தண்ணிய மோந்து ஊத்துனதுல, தேங்கி நிக்கிற தண்ணி குறைய ஆரம்பிச்சுது. அதே சமயத்துல அட்லாண்டிக் பெருங்கடல்ல நீர்மட்டம் நாலஞ்சு அடி உயர ஆரம்பிச்சு, ஆஸ்திரேலியா காட்டுத் தீயும் அணைஞ்சுடுச்சு!’’

ஆள் யாரும் அவசரத்துக்கு கிடைக்காததனால, அமெரிக்க நாசாவுல இருந்து மைக்ரோசாப்ட் வரைக்கும் உலகமெங்கும் பரவியிருக்கும் புத்திசாலிகள் தமிழர்கள்தான்னு நம்பி, நம்மாளு ஒருத்தர அனுப்பி விட்டுடுறாங்க. அவர் பேச்சை ஆரம்பிச்ச மறுநிமிடமே, முதல் வரிய கூட முழுசா சொல்றதுக்கு முன்னால, முதல் பரிசை அவருக்குக் கொடுத்து அனுப்பிவிட்டுடறாங்க.

அவர் பேச்சை ஆரம்பித்தது இப்படித்தான்... ‘‘இந்தியாவில் தொழில் வளர்ச்சி, கட்டமைப்பு, பாதுகாப்பு, விவசாயம், சுத்தம், சுகாதாரம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் முதல் மாநிலமாகவும், கொலை கொள்ளை என எதுவுமே நடக்காத அமைதிப் பூங்காவாகவும் இருக்கும் எங்கள் மாநிலம் சார்பாக இந்தப் போட்டியில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகி...’’