மில்லியன் லேடி ஹன்சிகா!



ட்விட்டரில் 2 மில்லியன், இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் என ஃபாலோயர்களின் டேட்டா தகவல்களோடு வரவேற்கிறது ஹன்சிகா துவங்கியிருக்கும் யு டியூப் சேனலின் முதல் வீடியோ. ‘‘என் ரசிகர்கள்கிட்ட நேரடியாக பேசுறதுக்கு வசதியா இந்த சேனலை தொடங்கியிருக்கேன்.  என்னைப் பத்தின சுவாரஸ்யமான விஷயங்களை இதில் தெரிஞ்சிக்கலாம். டைம் கிடைக்கறப்ப ஆன்லைன்ல என்னைப் பார்க்க முடியும்!’’  கண்களில் பரவசம் மின்ன புன்னகைக்கிறார் ஹன்சிகா.



‘‘தமிழ்ல எப்போ பேசப் போறீங்க?’’
‘‘தமிழ்ல பேசினா புரிஞ்சுக்குவேன். ஓரளவு பேசவும் முடியும். தடுமாறாமல்  பேசறதுக்கு பயிற்சி எடுத்துட்டிருக்கேன். தமிழ்ல நிறைய படங்கள் பண்றதுலதான் என் கவனம் இருக்கு!’’

‘‘உங்க பெயின்டிங் ஆர்வம் என்ன நிலையில இருக்கு?’’
‘‘சூப்பரா போயிக்கிட்டிருக்கு. மும்பையில் இருந்தால் யோகாவுக்கு அடுத்து என் நேரமெல்லாம் ஓவியங்களுக்குத்தான். பெயின்ட் பண்ண ஆரம்பிச்சா, நேரம் போறதே தெரியாது. ஆறேழு மணி நேரம் கூட தொடர்ச்சியா உட்கார்ந்து வரைவேன். இப்போ ‘உயிரே உயிரே’, ‘மனிதன்’, ‘போகன்’னு தொடர்ந்து தமிழ்ல வொர்க் பண்றதால சென்னையில்தான் அதிகம் இருக்கறேன். வீட்ல 15 பெயின்ட்டிங்ஸ் இருக்கும். கண்காட்சி வைக்கணும்னா ஃபிப்டி பெயின்டிங்ஸாவது வேணுமே!’’

‘‘என்ன சொல்றார் ‘போகன்’ ரவி?’’
‘‘ஜெயம் ரவியோட நான் நடிக்கும் மூணாவது படம். ‘எங்கேயும் காதல்’ பண்றப்போ தமிழ் சினிமா எனக்குப் புதுசு. ‘ரோமியோ ஜூலியட்’ பண்ணும்போது, அவரே பாராட்டும்படி முன்னேறி இருந்தேன். ‘போகன்’ல அவர் இன்னும் மிரட்டுறார். நான், ரவி, அரவிந்த்சாமி எல்லாருமே  போட்டி போட்டு நடிச்சிருக்கோம்!’’

‘‘முதன்முதலில் வாங்கின சம்பளம் நினைவிருக்கா?’’
‘‘அதெப்படி மறந்து போகும்? ‘கோயி மில் கயா’ படத்தில் குழந்தை நட்சத்திரமா நடிச்சேன். வாங்கின சம்பளம் 26 ஆயிரம்!’’

‘‘புது மேனேஜர்...’’
‘‘யெஸ். இப்போ தமிழ், தெலுங்குனு நிறைய  ஆஃபர்ஸ் வருது. அது தவிர, சோஷியல் சர்வீஸ் வொர்க்னு என்னோட மற்ற வேலைகளை  எல்லாம் அம்மா மோனாதான் மேனேஜ் பண்ணினாங்க. அம்மா டாக்டர்ங்கறதால அவங்களுக்கும் நிறைய கமிட்மென்ட்ஸ். ஸோ, என்னோட கால்ஷீட்  பார்க்க மேனேஜர் நியமிச்சிருக்காங்க!’’

‘‘குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கணும்னு எப்படித் தோணுச்சு?’’
‘‘என்னோட சமூக அக்கறைக்குக் காரணம், அம்மாதான். ஏழைகள்னா அம்மா ஃபீஸ் வாங்காம மருத்துவம் பார்ப்பாங்க. ஆதரவற்றோர்  இல்லம், முதியோர் இல்லம்னு எங்கே போனாலும் கூடவே என்னையும் அழைச்சிட்டு போவாங்க. ‘மத்தவங்களுக்கு நம்மால முடிஞ்ச உதவியை செய்யறதுக்குத்தான் நாம பிறந்திருக்கோம்’னு அம்மா அடிக்கடி சொன்னது ஆழமா பதிஞ்சிடுச்சு.

சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு அவங்கள மாதிரி உதவி பண்ணணும்னு சின்ன வயசுலயே நினைச்சேன். நடிகை ஆனதும், அதை செயல்படுத்திட்டேன். இப்போ வரை என்னோட வளர்ப்பில 30  குழந்தைங்க இருக்காங்க. அவங்க எல்லாருக்குமே தென்னிந்திய உணவு வகைகள் ரொம்ப பிடிக்கும். என்னை ‘அக்கா’னு அன்பா அவங்க கூப்பிடுற அழகே தனிதான்!’’
 

-மை.பாரதிராஜா
அட்டை மற்றும் படங்கள்: புதூர் சரவணன்