முகங்களின் தேசம்



ஜெயமோகன்

‘நான் கடவுள்’ படப்பிடிப்பில் வெளிப்பட்ட ஒரு துறவியின் கடந்த காலம்... ஜெயமோகனின் வரிகளில்...



சொல்லிச் சொல்லி கடந்து செல்லுதல் ‘நான் கடவுள்’ படத்தின் படப்பிடிப்பின்போது அதில் நடிக்க ஏராளமான துறவிகள் தேவைப்பட்டனர். துணை நடிகர்களை துறவிகளாகவோ அல்லது அதைப் போன்ற விசேஷமான வாழ்க்கைமுறை கொண்டவர்களாகவோ நடிக்க வைக்க முடியாது. எத்தனை வேடம் போட்டாலும் அவர்களுடைய கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சினிமா ஒரு காட்சிக் கலை. ஒரு ஏழையை பணக்காரனாக சினிமாவில் நடிக்க வைப்பது மிகவும் கடினம். தோரணைக்கு அப்பால், கண்களுக்கு அப்பால், பாவனைக்கு அப்பால் நமது மனம் உணரக்கூடிய ஏதோ ஒன்று இவர் பணக்காரனல்ல என்று சொல்லிவிடும்.

உதாரணமாக ‘அங்காடித்தெரு’வில் செந்தில்முருகன் ஸ்டோர்ஸின் அதிபரின் வேடத்தில் நடிப்பதற்கு ஒரு முகத்தை நானும் வசந்தபாலனும் தேடிக் கொண்டிருந்தோம். பல துணை நடிகர்களை வரவழைத்துப் பார்த்தோம். தோற்றம், தோரணை, நடிப்பு எல்லாமே சரியாக இருக்கும். ஆனால், ஒளிப்பதிவு செய்து போட்டுப் பார்த்தால் அவர்கள் அப்படித் தென்படமாட்டார்கள். கடைசியில் உண்மையிலேயே பணபலமும் உண்மையிலேயே அதிகாரப் பின்புலமும் உள்ள ஒருவரை நடிக்க வைக்க முடிவு செய்தோம்.



அப்போதுதான் என் மனதில் பழ.கருப்பையாவின் நினைவு வந்தது. அவரைப் பற்றி பாலனிடம் சொன்னேன். வசந்தபாலன் நேரில் தேடிச் சென்று கதையை அவரிடம் சொன்னவுடனேயே அவர் சற்றுத் தயங்கினார். அவருக்கு அவருடைய கதாபாத்திரம் கேலிக்குரியதாகவோ முற்றிலும் எதிர்மறையானதாகவோ காட்டப்படாது என்று உறுதியளித்தபோது அவர் ஒப்புக்கொண்டார். அவர் இல்லத்திலிருந்து வெளியே வந்த வசந்தபாலன் என்னைக் கூப்பிட்டு மகிழ்ச்சியுடன், ‘‘சார், இவர்தான் அந்தக் கதாபாத்திரம். அப்படியே இருக்கிறார் சார். அவரைப் பார்த்தவுடனே தெரிகிறது எத்தனை கோடிக்கு அதிபர் என்று!’’ என்றார். நான் சிரித்துக்கொண்டேன்.

‘நான் கடவுள்’ படத்தில் பெரும்பாலான துறவிகள் உண்மையிலேயே துறவு வாழ்க்கை கொண்டவர்கள். அவர்களுக்கு நடிப்பில் எந்த ஆர்வமும் இல்லை. பெரும்பாலான நேரம் சும்மாதான் இருந்தார்கள். பணமும் அவர்களுக்குப் பெரிதாக ஈர்ப்பை அளிக்கவில்லை. அவர்களை நடிக்கக் கொண்டு வரும் பொறுப்பை அன்றைய உதவி இயக்குநராக இருந்த தியாகராஜன் எடுத்துக்கொண்டார். தியாகராஜன் அவர்களைச் சந்தித்து பலவிதமாகப் பேசி அவர்களில் ஒருசிலரை நடிக்க கூட்டிக்கொண்டு வந்தார்.

அவர்கள் அனைவரும் தமிழர்கள். அவர்கள் பிறரை நடிக்க அழைத்துக்கொண்டு வந்தனர். பிச்சை எடுப்பதுதான் அவர்களுடைய தொழில். காசியின் பெரும்பாலான படித்துறைகளில் அவர்கள் பேசாமல் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அவர்களுக்கு உணவுக்கு பணம் தேவையில்லை. ஏனென்றால் காசி முழுக்க பல்வேறு இடங்களில் அவர்களுக்கு உணவு அளிக்கப்படும். அவர்கள் பிச்சை எடுப்பது பெரும்பாலும் கஞ்சா தேவைக்காக மட்டுமே.

மற்றபடி மருத்துவத் தேவையோ உடைத் தேவையோ உறைவிடத் தேவையோ அவர்களுக்குக் கிடையாது. அவர்களுடைய தேவைக்கு மேலேயே எப்போதும் பணம் கைக்கு வருவது வழக்கம். சினிமா என்ற துறையின் ஆர்வம் காரணமாகத்தான் பெரும்பாலும் அவர்கள் வந்தார்கள். அங்கென்ன நிகழ்கிறது என்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் பேசி சிரித்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்.

படத்தில் அவர்களுடைய நடிப்பு என்பது ஆங்காங்கு அமர்ந்திருப்பதும் கஞ்சா குடிப்பதும் மட்டும்தான். படப்பிடிப்பு இடைவேளையிலே அவர்கள் கூடி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தமிழர். சைவ மடாதிபதிகளுக்கு உரிய முறையில் மிகப்பெரிய பாணியில் மிகப்பெரிய சடைமகுடம் ஒன்று வைத்திருந்தார். அந்தச் சடையை அவிழ்த்துவிடும்படி கோரியபோது எழுந்து அவிழ்த்துவிட்டார். அதன் நுனி தரையைத் தொட்டது. தடித்த புகையிலை சுருள்கள் போன்ற சடைமுடி. பாலா அவரை இடுப்பளவு நீரில் இறங்கி நிற்கச்செய்து குளிக்க வைத்தார்.

அவர் அந்த சடையை நீட்டி நீராடிக்கொண்டிருக்கும்போது கேமிரா அவரில் இருந்து தொடங்கி அந்தப் படிக்கட்டைக் காட்டி மேலெழுந்து சென்று படிக்கட்டில் ஏறிச்செல்லும் ருத்ரனைக் காட்டும் அந்தக் காட்சியை பலரும் அந்தப் படத்தில் நினைவு கூரலாம். வருத்தமான விஷயம் என்னவென்றால் அவர் நீராடுவதே இல்லை. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் குளித்ததோடு சரி. அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது அருகே இருந்த இன்னொரு துறவியிடம் எங்களுடன் இருந்த நடிகர் சிங்கம்புலி, ‘‘சாமி உங்க கதையை சொல்லுங்க’’ என்று கேட்டார்.

அவர் சாதாரணமாக “சொல்றதுக்கென்ன இருக்கிறது? எல்லாரையும் போலத்தான் வீட்டை விட்டு கிளம்பி வந்தேன்’’ என்றார். ‘‘இல்லை சாமி, ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு மாதிரி. சொல்லுங்கள்’’ என்று கேட்டபோது மிக உணர்ச்சியற்ற, ஆனால் புனைவுத்தன்மை மிகுந்த மொழியில் தன் கதையைச் சொன்னார். அவருக்குத் தென்னிந்தியாவின் ஐந்து மொழிகள் தெரியும். வட இந்தியாவின் இந்தியும் மராத்தியும் போஜ்புரியும் தெரியும். இந்தியா முழுக்க ஐம்பது முறைக்கு மேல் சுற்றி வந்திருக்கிறார்.

வயது எழுபதை ஒட்டி. சாமியாராக ஆகி நாற்பதாண்டு காலமாகிறது. சொந்த ஊர் கடப்பா அருகே ஒரு சின்ன இடம். அங்கே அவருக்கு நிறைய நிலம் இருந்தது. மனைவியும் குழந்தைகளும் இருந்தனர். குண்டூர் அருகே கிருஷ்ணா நதிப்பாசனத்தில் மிகவும் வளமான நிலம் அது. விவசாயம் செய்வது அவருடைய பரம்பரைத் தொழில் என்பதால் அதை மிகச்சிறப்பாகவே செய்து வந்திருந்தார். ஆறு குழந்தைகள். அதில் நான்கு பெண். மனைவியிடம் இனிமையான உறவு இருந்தது. விவசாய வேலைகளைத் தவிர வேறு எதுவுமே தெரியாது.

இரண்டு முறை சிவசைலத்துக்குச் சென்று வந்திருக்கிறார். திருப்பதிக்குச் சென்று சாமி கும்பிட வேண்டுமென்று ஆசை இருந்தது. ஆனால், விவசாய வேலைகளை விட்டு அதைச் செய்ய முடியாது என்பதனால் அது தட்டிப்போய்க் கொண்டே இருந்தது. மத விஷயங்களில் எந்த ஆர்வமும் இல்லை. அரசியலில் எதுவும் தெரிந்து கொள்வதில்லை. நன்றாக வயலில் காலை முதல் மாலை வரை வேலை செய்வதும், வயிறு புடைக்கும்படி சாப்பிடுவதும், தூங்குவதும்தான் அவருடைய வாழ்க்கை.

அதுதான் வாழ்க்கையிலேயே மிகச் சந்தோஷமான விஷயம் என்று அவர் சொன்னார். வயிறு புடைக்கும்படி சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் அளவுக்கு வேலை செய்பவர்கள்தான் உலகத்திலேயே மகிழ்ச்சியானவர்கள் என்றார். அவருடைய நிலத்தில் பொன் விளையும் என்று சொன்னார். இன்றைக்கும் அந்த நிலத்தை கண்ணால் பார்க்க முடிகிறது என்றார். அந்த நிலத்தை அவர் நெய்க்கரிசல் என்று சொன்னார்.

‘‘மண்வெட்டியால வெண்ணையை வெட்டுவது போல புரட்டிப்போடலாம். உழுது போட்ட நிலம் ஆயுர்வேத வைத்தியர்கள் வைத்திருக்கும் லேகியம் போல இருக்கும். கால் புதைந்த இடமெல்லாம் வெண்ணையில் பதிந்தது போல். உழுது புரட்டும்போது ஒவ்வொரு அடிக்கும் மண்புழுக்கள் கத்தைகத்தையாக நெளியும். நீரூற்றி உழுது மண் மரமடித்துவிட்டு கரையில் ஏறி நின்று பார்த்தால் பளிங்கால் ஆனது போல் இருக்கும் வயல்’’ என்றார்.

அதன் மேல் சிறிய பறவைகள் வந்து அமர்ந்தால் கூட உடம்பு உலுக்கிக்கொள்ளும். வயலைப் பார்ப்பதுதான் தன்னுடைய வாழ்க்கையில் அவருக்கு மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் வயல் அருகே சென்று பார்த்துக் கொண்டிருப்பார். வேலை இல்லை என்றாலும் கூட வரப்பிலேதான் அமர்ந்திருப்பார். பாயை அங்கேயே விரித்து படுத்து தூங்கிக்கொள்வதும் உண்டு. வயலை விரும்புகிறவன் அதில் விழுந்துவிடுவான். பெண்ணாசையைவிட பொன்னாசையைவிட மண்ணாசை மிகப்பெரியது என்றார் அவர். பசுமை தழைத்து மேலே வரும் பயிர் வேறு எதையுமே நினைக்கவிடாது.

இரவில் கனவில் கூட அதுதான் வந்து கொண்டிருக்கும். காலை எழுந்ததுமே தண்ணீர் கூட குடிக்காமல் வயலை நோக்கித்தான் ஓடத்தோன்றும். ஒருமுறை அவர் வயல் நன்றாக விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது. பொன்நிற மணிகள். ஒரு சாண் அளவுக்கு நீளமானவை அவை. மாலையில் காற்று கடந்து செல்லும்போது ஆயிரம் கொலுசுகள் குலுங்கும் ஒலி கேட்டது. அறுவடைக்குத் தயாரான வயல் என்பது பொன்னேதான். கரையில் இருந்து பார்க்கும்போது அந்தி வெயிலில் அது பொன்னைவிட அதிகமான வெளிச்சத்தை, பிரகாசத்தைக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும்.

அறுவடைக்கு ஆட்கள் ராயலசீமாவில் இருந்துதான் வரவேண்டும். அவர்கள் ஒரு பகுதியிலிருந்து அறுவடை செய்துகொண்டே வருவார்கள் அவர்களுக்காக அவர் காத்திருந்தார். அந்த முறை அறுவடை செய்து முடித்த பிறகு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு திருப்பதி சென்று வரவேண்டுமென்று எண்ணியிருந்தார். ஆனால் யாரும் நினைத்திருக்காதபடி வானம் கறுத்து மழை வந்தது. அந்த வருடத்தின் மிகப்பெரிய புயல் அது. மழை வருவதை தெரிந்துகொண்டதும் அவர் மடைகளைத் திறந்துவிடுவதற்காக வயலுக்குச் சென்றார்.

வயலில் அனைத்து மடைகளையும் திறந்து விட்டபிறகு கூட அங்கிருந்து வர மனமில்லாமல் குடையுடன் வரப்பிலேயே நின்று கொண்டிருந்தார். வானமே கிழிந்து தலைமேல் விழுவது போல மழை பொழிந்தது. மிகப்பெரிய அருவிக்கு அடியில் நின்று கொண்டிருப்பது போல. கை நீட்டிப்பார்த்தால் அந்தக் கையைப் பார்க்க முடியாத அளவுக்கு மழைத்திரை. ஆனாலும், வீட்டுக்கு போகத் தோன்றவில்லை. இரவில் நெடுநேரம் வரை அங்கிருந்துவிட்டு நள்ளிரவில்தான் வீட்டுக்குச் சென்றார்.

பிள்ளைகளை வீட்டுக்குள் செல்லும்படி சொல்லிவிட்டு ஏரியைத் திறப்பதைப் பற்றி பேசுவதற்காக அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றார். கோயிலிலேயே பேச்சு முடிந்து விடியற்காலையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஏதோ ஓசை கேட்டது. பலர் அலறுவது போன்ற சத்தம். நல்ல இருள். ஓடிச் சென்று ஒரு மண்டபத்தின் மேலேறி பார்த்தபோது அருகிலிருந்த கல்மண்டபங்கள் அனைத்தும் மூழ்கும்வரை வெள்ளம் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தார். கிருஷ்ணா பெருகிக் கரைக்கு வந்துவிட்டது.

தன்னுடைய குடும்பம் என்ன ஆகும் என்று பயம் வந்தது. ஆனால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. எந்த திசை என்பது கூடத் தெரியவில்லை. ஒவ்வொரு மின்னலுக்கும் தண்ணீர் கூடிக் கொண்டே இருப்பதைப் பார்க்க முடிந்தது. அங்கேயே நின்று அலறித் துடித்தார். தண்ணீரில் பாய்ந்து நீந்திச் சென்றாலும் கூட தண்ணீரின் ஒழுக்கு அவரை அடித்துச் சென்றது. எங்கோ ஒரு பனைமரத்தில் தொற்றி ஏறி அமர்ந்து கொண்டார். காலையில் பார்த்தபோது பனைமரத்தின் முக்கால் பங்கு அளவுக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

சுற்றிலும் தண்ணீர் அன்றி எதுவுமே இல்லை. இரண்டு நாட்கள் பனைமரத்தின் உச்சியிலேயே தொற்றிக் கொண்டு அமர்ந்திருந்தார். மூன்றாவது நாள் அவரை படகில் வந்து மீட்டுக் கொண்டு சென்று பள்ளிக்கூடத்தில் தங்கவைத்தனர். தன்னுடைய பிள்ளைகள் என்ன ஆயினர் மனைவி குடும்பம் என்ன ஆயினர் என்று தெரிந்து கொள்வதற்காக பள்ளிக்கூடங்கள் தோறும் கதறியபடி அலைந்தார். அவர்கள் தென்படவே இல்லை. ஏழு நாட்களுக்குப்பிறகு வெள்ளம் முழுமையாக வடிந்து நிலம் முழுக்க சேற்றுப்பரப்பாக மாறியது.

அவர் இறங்கி தன் வீடிருந்த இடத்திற்கு சென்றார். மண்ணில் கட்டப்பட்டிருந்த வீடு இருந்த தடமே தெரியாமல் கலைந்து அழிந்து சென்றுவிட்டிருந்தது. கன்றுகள் இல்லை. அவரது வயலும் சேறால் மூடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு ஊர் வயல் வாழ்க்கை இருந்ததற்கான ஒரு சான்றும் இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்களாக சேறு இருப்பது போலிருந்தது அந்தப் பகுதி. அவர் அங்கே நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். மனதுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று.

திரும்பி தன் இடுப்பில் கட்டியிருந்த ஆடையை எடுத்து கிழித்து அரை ஆடை மாதிரி கட்டிக் கொண்டார். வடக்கு நோக்கி நடந்தார். இரண்டரை வருடங்களுக்குப் பிறகு காசிக்கு வந்து சேர்ந்தார். அன்றிலிருந்து இன்று வரை துறவிதான். திரும்பி ஊருக்குச் செல்லவோ அந்த வயலையோ மண்ணையோ பார்க்கவோ இல்லை.  இயல்பான குரலில் ‘‘இதுதான் தம்பி கதை’’ என்றார். அப்போதுதான் எனக்கு ஒரு மின்னல் அடித்தது. அவரை நான் முன்பு பார்த்திருக்கிறேன்.

‘‘நான் உங்களை முன்பு பார்த்திருக்கிறேன். இதே கதையை நீங்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்’’ என்று சொன்னேன். ‘‘எப்போது?’’ என்றார். ‘‘நான் இளைஞனாக இருந்தபோது இதே போல வீட்டைவிட்டு வந்து காசியிலே ஒரு துறவி மாதிரி இருந்தேன். படிக்கட்டில் வாழ்ந்திருந்தபோது ஒருமுறை உங்களைப் பார்த்தேன். இதே கதையை சொன்னீர்கள்’’ என்றேன். ‘‘சொல்லியிருப்பேன்’’ என்று அவர் சொன்னார்.

அப்போது சொன்ன அதே உணர்வுகளும் அதே வார்த்தைகளுமாக அதைச் சொன்னார் என்று தோன்றியது. ஒரு தேர்ந்த புனைகதையாளனுக்குரிய கதை நுட்பத்துடன், விவரணைகளுடன் அந்தக் கதை இருந்தது. அதைச் சொல்லிச் சொல்லி அவர் பெரிது பண்ணிக் கொண்டாரா அல்லது அவருக்கு மனதில் வார்த்தை வார்த்தையாக அந்தக் கதை அப்படியே பதிந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆனால் இப்போது யோசிக்கும்போது அப்படி ஒரு கதையைத் துல்லியமாகச் சொல்ல ஆரம்பிக்கும்போதே அந்தக் கதையிலிருந்து அவர் விலகிவிட்டார் என்று தோன்றியது. அந்தக் கதையை சொல்லும்போது, அது ஒரு மனிதனுடைய கதையாகும்போது அது அவருடைய கதையாக அல்லாமல் ஆகிவிட்டது. துயரத்தை வெல்வதற்கு மிகச்சிறந்த வழி என்பது அதை ஒரு கதையாக ஆக்கிக்கொள்வதுதான். அதைத்தான் இலக்கியம் இன்றுவரைக்கும் செய்து வருகிறது.

உண்மையிலேயே பணபலமும் உண்மையிலேயே அதிகாரப் பின்புலமும் உள்ள ஒருவரை நடிக்க வைக்க முடிவு செய்தோம். அப்போதுதான் என் மனதில் பழ.கருப்பையாவின் நினைவு வந்தது.

வருத்தமான விஷயம் என்னவென்றால் அவர் நீராடுவதே இல்லை. பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் குளித்ததோடு சரி. வயலை விரும்புகிறவன் அதில் விழுந்துவிடுவான்.  பெண்ணாசையைவிட பொன்னாசையைவிட மண்ணாசை மிகப்பெரியது என்றார் அவர்.

(தரிசிக்கலாம்...)

ஓவியம்: ராஜா