உறவெனும் திரைக்கதை
ஈரோடு கதிர்
மது அடிமைகள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு சரியான காரணங்களோ, தருணங்களோ தேவை. அவற்றை யார், எப்படி உருவாக்க வேண்டும்?
மழைத்துளிகளில் முளைக்கும் விதைகள்!
தம் உறவுகள் மத்தியில் உயர்கல்வி பெற்ற முதல் நபர் அவர்தான். நட்புகளால் அவர் வாழ்வில் புகுந்த மது, மிக உயரிய அங்கீகாரமாய் தன்னை அறிவித்தது. சுயமாய் உழைத்து மிகப்பெரிய அளவில் அவர் எழுப்பியிருந்த தொழில் பேரரசின் அடிக்கல்லை மது மெல்ல அரிக்கத் தொடங்கியது. சில வருடங்களில் பொலபொலவென சாம்ராஜ்ஜியம் சரிந்தது. ஒரு கட்டத்தில் குடிக்கக் காசு இல்லாமல், சாலையோரம் நின்று, வருவோர் போவோரிடம் ஐந்து பத்து என யாசகம் பெற்று தன் நாற்பதுகளில் வாழ்க்கையைக் கரைத்து தீர்த்தழித்தார்.
அவர் மரணம் கொடியதொரு சுயகொலைக்கு நிகரானது என்பதோடு, மனைவி, பிள்ளைகளின் நியாயமான ஆசைகளையும் கொலை செய்து தன்னுடலோடு எரித்துச் சாம்பலாக்கினார். ஊரில் மரியாதையான குடும்பமொன்றின் தலைவன் அவர். ஒரே பலவீனம் குடி. தம் எண்பது சதவிகித ஆயுளைக் குடித்தே கழித்தவர். ஒருபோதும் போதையில் நிதானமிழந்து ஊருக்குள் சண்டையிட்டதில்லை.
ஆனால் வீடு நரகம். மனைவியின் முகத்தில் இன்றளவும் மறையாமல் கிடக்கும் தழும்புகள், குடியெனும் கொடிய விஷம் கொண்ட பாம்புப் பற்களின் வருடல்களன்றி வேறென்ன? மிக இளம்வயதில் கைக்குழந்தையோடு மகள் விதவையானபோது, சாபமாய் மகனுக்கும் குடிப்பழக்கம் தொடங்கியது. அதுகுறித்து அவனிடம் தீர்க்கமாய்ப் பேசவேண்டுமென நினைத்திருந்த நாட்களில், அவகாசமேதும் கொடுக்காமல், அடையாளம் தெரியாத வாகனமொன்றில், மிதமிஞ்சிய போதையில் மோதி மறைந்துபோனான்.
இந்த இழப்புகள் அவரை மாற்றவில்லை. மரணம் தன்னைத் தின்னும்வரை அவர் குடியிலிருந்து பின்வாங்கவே இல்லை. ஆண்களே இல்லாமல்போன குடும்பத்தில் அம்மா, மகள், பேத்தி எனப் பெண்கள் மட்டுமே தனித்துத் தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். கால் நூற்றாண்டு காலமாகக் குடித்துக் கொண்டிருக்கும் ரகுநந்தன், ஒரு வெளிநாட்டு வங்கியின் முன்னாள் அதிகாரி. ‘ஷோ த ஸ்ப்ரிட்’ எனும் பரபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடத்துனர்.
ரகுவின் மனைவி மீரா. காது கேட்கா, வாய் பேசா மகன் சன்னி. ரகுவின் குடியாலும் குணத்தாலும் வெறுப்புண்ட மனைவி மீரா, விவாகரத்து வாங்கி, அலெக்ஸியைத் திருமணம் செய்துகொள்கிறாள். மகன் அவளோடு செல்கிறான். எனினும் அழகியதொரு நட்பும், நல்லது கெட்டதுகளில் பங்கெடுக்கும் பக்குவமும், அதன் இறுதியில் குடியின் பொருட்டு ஒரு கலகத்தை ஏற்படுத்தும் உரிமையும் ரகுநந்தனுக்கு உண்டு.
விடியலில் கறுப்பு காபியில் மதுவைக் கலந்து பருகுவதில் தொடங்கி, தனக்குப் பிரியப்பட்ட கோய்சி பாரில் பகற்பொழுதுகளைத் தீர்த்து, இரவில் மிஞ்சிய போதையோடு உறங்கிப்போவது ஏறத்தாழ ரகுவின் அன்றாடம். விதவிதமான வெளிநாட்டுக் குடுவைகளும், விலை உயர்ந்த மதுபானங்களும், அதைப் பருகும் லாவகமும், காணும் எவருக்கும் ‘நாமும் மது அருந்தலாமே’ எனும் சபலத்தை வெகு எளிதாக ஏற்படுத்துபவை.
எவரையும் எதிர்கொள்ளும் அறிதலின் துணிவும், ஜெர்மன், பிரெஞ்ச் உள்ளிட்ட ஐந்து மொழிகள் அறிந்திருக்கும் திறனும், தன்னளவில் நேர்மையாக இருத்தலும் ரகுநந்தனை எங்கும் வென்றெடுப்பவனாக வைத்திருக்கிறது. தொலைக்காட்சி உரையாடலில் சுற்றுலாத்துறை அமைச்சரை, அவரின் பாலியல் செயற்பாடுகளை ஆதாரங்களாகக் கொண்டு வீழ்த்துகிறான். அதேசமயம் அமைச்சரின் எதிரிகளிடம் ஆதாரங்களை விற்காத நேர்மைக்கு சொந்தமானவன்.
வணிக வளாகத்தில் பெண்களிடம் ஆபாசமாக நடந்த ஒரு மாணவனை அடித்து உதைத்த ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை, தன் கேள்விகளால் திணறடிக்கிறான். பதற்றம் கூடிய நேரலை உரையாடல்களில்கூட தம் காபி கோப்பையில் மதுவை நிரப்பிப் பருகியபடியே பங்கேற்கும் திறமையுள்ளவன். போதை கரைந்திடா விடியலொன்றில் ரகுவை சந்திக்கிறான் அலெக்ஸி.
தன்னைப் புற்றுநோய் தாக்கியிருப்பதாகச் சொல்லும் அலெக்ஸி, ‘‘நான் இறந்துபோனால் மீராவும் சன்னியும் தனியே வாழமாட்டார்கள், அவளுக்கு இன்னொரு துணை தேவைப்படும்போது, குடியில் வேகம் கூட்டி வாழ்க்கையைச் சீக்கிரம் முடித்துக்கொள்ள விரும்பும் நீ அவ்வாறான துணையாக இருக்கமுடியாது. யார் வேண்டுமானாலும் மீராவுக்குக் கணவனாகலாம். ஆனால் சன்னிக்கு என்னைப் போல, உன்னைப் போல ஒரு தந்தையாக முடியாது. மீராவுக்கும் சன்னிக்குமாக நீ சிந்திக்க வேண்டும்’’ என்கிறான்.
ரகு போதையால் நிதானமிழந்து செய்யக்கூடாத நிகழ்வுகளை நிகழ்த்திவிடுவதாக கோய்சி பாரில் வேலை செய்யும் ஜான்சன் சொல்கிறான். நான் ஒரு குடி அடிமை இல்லை எனும் ரகுநந்தனிடம், ‘‘நீ ஒரு நாட்பட்ட குடிகாரன்’’ என அழுத்தமாகச் சொல்கிறார், பக்கத்துவீட்டு ஓய்வுபெற்ற கப்பல் கேப்டன். எல்லோருக்கும் பிரியமான கவிஞன் சமீர், ஒரு பகற்பொழுதில் ரகுநந்தன் வீட்டுக்கு வருகிறான்.
மதுவால் சிதைந்து சிகிச்சையிலிருந்தவனிடம் சிகிச்சை குறித்துக் கேட்க, ‘‘உடம்பில் ரத்தத்தின் அளவு கூடிப் போனால் இப்படி வாந்தியாக ரத்தம் வெளியேறுமாம்’’ என்கிறான். ‘‘இந்த ஜென்மத்தில் நாம் குடிக்கவேண்டிய மதுவை நாம்தானே குடித்துத் தீர்க்கவேண்டும்’’ எனச் சொல்லி மது அருந்துகிறான். சில நொடிகளில் ரத்த வாந்தியெடுத்து ரகுநந்தன் மடியில் வீழ்ந்து மரணம் எய்துகிறான். மரணிக்கும் நொடியில் ‘‘அம்ம்ம்ம்ம்மேஏஏஏஏ’’ என அவன் எழுப்பும் மரண ஓலம், உலகம் முழுதிலும் தன் அடிமைகளைச் சுண்டியிழுக்கும் கோடானுகோடி அழகிய மதுப்புட்டிகளில் கலந்தேகும் விஷம் எனச் சொல்லலாம்.
தெளிவோ, பயமோ, கூரிய நாக்கு கொண்டு ரகுநந்தனின் போதையை வருடுகிறது. போதையின் ருசியில் கடுங்கசப்பு பாய்கிறது. விடியலை வேறு கண் கொண்டு பார்க்கிறான். வீட்டில் தண்ணீர் தடைபட, சரி செய்யவரும் பிளம்பர் மணியன் முதல் வேலையாக மதுவை கிளாஸில் ஊற்றிக் குடிக்க முயல்கிறான். அதில் கலக்க தண்ணீர் கிடைக்காததால், கழிவறையில் இருக்கும் தண்ணீரைக் கலந்து குடிப்பதைக் காண்கிறான். மணியனாய் தானும் இருந்ததை உணர்கிறான்.
நீங்கள் குடியின் ருசி உணர்ந்தவராக இருப்பின் மலையாளத்தில் 2012ம் ஆண்டில் வெளிவந்த, ரகுநந்தனாய் மோகன்லால் வாழ்ந்த ‘ஸ்பிரிட்’ படத்தின் முதல் பாதி பார்க்கும்போதே குடிக்கப்போகும் சாத்தியமுண்டு. இரண்டாம் பாதியை உணர்ந்து, புரிந்து பார்த்தால், குடியைத் துறக்கும் சாத்தியமுண்டு. நண்பர் ஒருவர், இருபதாண்டுகளுக்கும் மேலாகத் தினந்தோறும் இரவில் இரண்டு பெக் மது அருந்துவதை அவர் கொண்டாட்டமாகக் கருதினவர். ஒன்றுகூடல்கள் அனைத்திலும் மதுவே முன்னிற்கும். அத்தருணங்களில் எத்தனை சுற்று மது அருந்துவது என்பதை ஒருபோதும் அவர் தீர்மானிக்கமுடியாது.
அந்தத் தீர்மானத்தை மூன்றாவது பெக், தன் கையில் எடுத்துக்கொள்ளும். ஒரு பயணத்தில் நாங்கள் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது நடந்த உரையாடலில், மதுப்பழக்கம் குறித்தும், மது அடிமைத்தனம் குறித்தும் நான் ஏதோ சொல்லியிருக்கிறேன். அவ்வார்த்தைகள் அவரை தனக்குள் வாரிச் சுருட்டி வைத்துக்கொண்டன. அதன்பின் ஒருபோதும் மது தன் வயப்படுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை. நான் சொன்னது என்னவென எனக்கு நினைவில்லை; அவை மந்திரச்சொற்களுமன்று. மிக எளிய சில சொற்களாகத்தான் இருக்கவேண்டும். அந்தத் தருணத்தில் அவருக்கு அந்த வார்த்தைகள் தேவையானதாக இருந்திருக்கலாம்.
‘ஸ்பிரிட்’ படத்தின் இறுதிக்காட்சியில் மணியனின் வாழ்க்கை மற்றும் மீட்பு குறித்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் நடத்திவிட்டு வெளியே வரும் ரகுநந்தனைப் பாராட்டும் வகையில்கூட அவன் கையில் ஒரு மதுக்கிண்ணமே வழங்கப்படும் காட்சியை, அதிகப்படியான ஜோடனையாக நான் கருதவில்லை. சில கூட்டங்களில் மதுவிற்கு எதிரான கருத்துகளை நான் பேசுகையில் கை தட்டிய, நிறைவில் கை குலுக்கிப் பாராட்டிய நபர்களே, அப்போதைய உணவு வேளையில் கையில் மதுக்கிண்ணத்தோடு செயற்கையான வெட்கத்தோடு ‘‘இதெல்லாம் ஒரு ஜாலிக்குங்க’’ என உடனுக்குடன் முரண்படுவதைச் சலிக்கச் சலிக்கக் கடந்து வந்திருக்கிறேன்.
மனதளவில் பலவீனப்பட்டவர்களுக்கு மது மிகப் பெரியதொரு அரணாகத் தன்னை உணர்த்துகிறது. இறுக்கத்தைக் குறைத்து மது நெகிழ்வை அளிப்பதாகத் தீர்க்கமாய் நம்புகிறார்கள். தன் திறன் மதுவால் தூண்டப்பட்டுக் கூடுதலாய் வெளிப்படுவதாகக் கருதுகிறார்கள். தனக்குள் பதுக்கி வைத்திருந்த உக்கிரத்தை மதுவின் துணைகொண்டு வெளிப்படுத்திக்கொள்ள இயலுமென நம்புகிறார்கள்; அல்லது நம்ப வைக்கிறார்கள்.
போதையில் எதையும் செய்துவிட்டு, தெளிந்ததும் நல்ல பிள்ளையாய் நடிக்கப் பழக்கப்பட்டிருக்கிறார்கள்; அல்லது மற்றவர்களைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள். போதையில் நிலை தடுமாறி, தன் மகளையேகூட பாலியல் வன்முறைக்கு ஆளாக்க முற்பட்ட தந்தைகள் குறித்துக்கூட வாசித்திருக்கும் நாம், ஒருபோதும் போதையில் நிலைதடுமாறி தன் கழிவை உண்டதாகக் கேள்விப்பட்டதுண்டா? இருக்க முடியாது! குடிப்பவர்களின் ஆகச்சிறந்த ‘டிசைன்’ அது!
‘ஸ்பிரிட்’ படத்தின் பாடல் வரியான ‘மழைத் துளிகளில் மட்டுமே முளைக்கின்ற சில விதைகள்’ போல, சில சொற்களை விதைகளாக மாற்ற சில மனங்களால் மட்டுமே சாத்தியமாகிறது. மருத்துவ ரீதியாக மதுவிலிருந்து வெளியேற சில சிகிச்சைகள், ஆலோசனைகள் அவசியப்பட்டாலும்கூட, ஒரு மது அடிமை தன் உயிரை மெல்லக் கொய்துகொண்டிருக்கும் மதுவிலிருந்து வெளியேற மிகச்சரியான காரணங்களும், தருணங்களும் தேவை. அதை அவர்களோ, உடனிருப்பவர்களோ உருவாக்கவும், உணர்த்தவும் செய்தாக வேண்டும்.
மதுவிலிருந்து வெளியேற மிகச்சரியான காரணங்களும், தருணங்களும் தேவை. அதை அவர்களோ, உடனிருப்பவர்களோ உருவாக்கவும், உணர்த்தவும் செய்தாக வேண்டும்.
மது அருந்துவது என்பதை ஒருபோதும் அவர் தீர்மானிக்க முடியாது. அந்தத் தீர்மானத்தை மூன்றாவது பெக், தன் கையில் எடுத்துக்கொள்ளும்.
(இடைவேளை...) ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
|