‘சைத்தான்’
எனக்கு தப்பா தெரியலை! விஜய் ஆன்டனி பளிச்
சார்தான் இன்றைக்கு மாஸ் ஹீரோ. ‘பிச்சைக்காரன்’ வெற்றி விஜய் ஆன்டனியை உச்சத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறது. அடுத்தடுத்து கொடுத்த வெற்றிகளில் தமிழ் சினிமாவின் செல்லப் பிள்ளையாகி இருக்கிறார் ஆன்டனி. ‘‘ஈவ்னிங் பார்த்துடலாம்...’’ எனச் சொன்ன மாதிரியே சந்திப்பு. வொர்க்அவுட் செய்த ஆர்ம்ஸ் விரித்து, அடிக்கடி சிணுங்கும் மொபைலை அணைக்கிறார். அடுத்து தொடங்கிய பேச்சில் ‘சைத்தான்’ படத்தின் சித்திரம் விரிந்தது.
‘‘எனக்கு சினிமா ஒரு சந்தோஷம். இனிமே இது கமர்ஷியல், ஆர்ட் ஃபிலிம்னு நாம சொல்றதுக்கு வேலையே இல்லை. எல்லாத்தையும் ரசிகர்களே தீர்மானிக்கிறாங்க. இப்படித்தான் படம் பண்ணணும்னு முன்னாடி சில அம்சங்கள் இருந்தது. இப்ப சகலமும் வேற மாதிரி மாறி நிக்குது சினிமா. 90ல இருந்த ரசிகன் இப்ப இல்லை. சினிமாவின் சகல ரகசியங்களும் வெளியே தெரியுது.
படம் புதுசா தெரிந்தால், யாராக இருந்தாலும் ஆதரவு கொடுக்கிறாங்க. பழசா இருந்தா, பெரிய ஆளா இருந்தாலும் தள்ளி வைக்கிறாங்க. வித்தியாசமா செய்ய நினைக்கிறவங்களுக்கு இதுதான் அருமையான நேரம். இந்தச் சமயத்தில் ‘சைத்தான்’ வர்றது பெரிய ப்ளஸ்!’’
‘‘நல்ல நல்ல படங்களோட சுவாரஸ்யமான லைன்அப் இருக்கு உங்ககிட்ட...’’ ‘‘எஸ்... இதற்கான ஆரம்ப ஆயத்தம் ரெண்டு வருஷமா நடந்துக்கிட்டே இருக்கு. இந்த லைன் அப் சரியா வந்துச்சானு ஒவ்வொரு வருஷக் கடைசியிலும் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கணும். இமேஜ் எதிலும் ஒட்டிடக்கூடாதுன்னு ஆசைப்பட்டேன். இமேஜ்னு ஏதாவது ஒரு விஷயம் இருந்தால், அதை வேற யாராவது எடுத்துக்கிட்டுப் போகட்டும். ‘விஜய் ஆன்டனி படத்திற்கு நம்பிப் போகலாம்’னு ஒரு பொது அபிப்பிராயம் உருவாக்கினதுதான் எனது சக்ஸஸ்.
மத்தபடி ‘பிச்சைக்காரன்’ பெரிய சக்ஸஸ், தெலுங்கில் பிளாக் பஸ்டர்னு எதையும் தலையில் ஏத்திக்கிறதே இல்லை. அப்படி ஏத்திக்கிட்டா அதைத் தவிர தலையில் வேறு எதுவும் நிக்காது. நான்தான் ஹீரோன்னு சொன்னதும் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் நானே வந்து நிற்க மாட்டேன். எனக்கு சௌகரியமான படங்களையே பண்றேன். முடிஞ்சதைச் செய்றேன்.
‘இதுவரை தமிழ் சினிமா பார்க்காதது’னு எதையும் நான் சொல்றது கிடையாது. பொய் சொன்னா ஞாபகம் வச்சுக்கணும். தப்பாக எதையும் சொல்லி வச்சிட்டா, மத்தவங்க பின்னால ஞாபகப்படுத்துறாங்க. என் பிழைகளை திருத்திக்கொள்வதுதான் என் கேரியரே. என் மேல் நம்பிக்கை வந்ததும், ஜனங்க நம்பிக்கை வச்சதும் இப்ப எனக்கான திருப்தி. அந்த வகையில்தான் என் படங்கள் வரும்!’’
‘‘ ‘பிச்சைக்கார’னுக்குப் பிறகு ‘சைத்தான்’. எப்படி தயாராகுது பிரதர்?’’ ‘‘ ‘சைத்தான்’ சைக்காலஜிக்கல் த்ரில்லர். முன்னாடி பல பேய்ப் படங்கள் வந்து மக்களை பயமுறுத்தி வைச்சிருக்கு. இப்ப எல்லாம் மக்களுக்கு பேயைப் பார்த்து பயமே இல்லை. அப்படிப்பட்ட நேரத்தில் வெற்றிமாறனின் அசோசியேட் பிரதீப் இந்தக் கதையோட வந்தார். இந்த த்ரில்லர் நிச்சயமா வேற. அதனால்தான் தேர்ந்தெடுத்தேன். ஒரே சாதம், ஒரே பருப்பு, காய்கறிதான். அதையே ேஹாட்டலில் சாப்பிட்டா ஒரு மாதிரியா இருக்கு, வீட்டில் செய்து சாப்பிட்டா வேறு மாதிரி இருக்கு. ஆக, அந்த வித்தியாசம்தான் இந்தப் படம்.
பேய்ப்படம்னா தவிர்க்கவே முடியாமல் சில காட்சிகள் வரும். திடீர்னு புறாக்கள் றெக்கைகளை க்ளோசப்பில் அடிச்சிட்டு பறக்கும். திடீரென்று ஒரு பெண் எங்கேயோ வெறிச்சு பார்த்துக்கிட்டு நிக்கும். கழுத்தில் ஒரு கை விழும். பதறியடித்து ரத்த அழுத்தம் எகிறி வியர்த்துப் போய்ப் பார்த்தால், அவள் கணவர் ‘என்ன... தூக்கம் வரலையா!’னு கேட்டு அழைச்சிட்டுப் போவார். மியூசிக்கில் காரணமே இல்லாமல், திகில் பரப்பி அசரடிப்பாங்க. ‘டப்... டப்... டப்...’னு ஜன்னல்கள் திறந்து திறந்து மூடும். பைப்பில் தொடர்ச்சியா திடீர்னு தண்ணீர் கொட்டும்.
இப்படி ஏமாற்றுகிற விஷயம் எதுவும் இதில் இருக்காது. என்னுடைய கதைத் தேர்வில் நான் சரியா இருந்திருக்கேன்னு படம் முதல் பிரதி பார்த்ததும் தெரிஞ்சது. அந்த தைரியத்தில்தான் உங்களிடம் பேசவும் முடியுது. என்னோட கேரக்டரைப் பத்தி சொல்லலாம். எப்படிப் பார்த்தாலும் நான் கொஞ்சமா ேபசுவது மாதிரியே தெரியும். அதை சினிமாவில் பார்க்கிறதுதான் நல்லது.
நாம் வாழ்கிற வாழ்க்கையோட சில இடங்கள் இதில் வருது. ஒரு சுவாரஸ்யமான சினிமாவைத் தரவேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஒரு நடிகரா, நல்ல இயக்குநரோட இணைஞ்சு வேற வேற உலகத்தையும், அனுபவங்களையும் தர வேண்டியது என் கடமை. மிகை நடிப்புக்கு இங்கு இடமில்லாமல் செய்திருக்கேன்.’’
‘‘பொண்ணு யாரு?’’ ‘‘அருந்ததி... என் படத்தில் ெபண்களுக்கு எப்பவும் நாகரிகமான இடம் இருக்கும். இதிலும் அது குறைவில்லாமல் இருக்கு. கேரியரில் பெரிய இடத்திற்குப் போக வேண்டிய எல்லா தகுதிகளும் அந்தப் பொண்ணுகிட்ட இருக்கு. அவர்களை நானே தமிழில் பேச வச்சு டப்பிங் செய்திருக்கிறேன். சில சமயம் விருது பெறுவதற்கு சொந்தக் குரல் இல்லாதது தகுதிக் குறைவா போயிடும். அதனால் அவங்களே பேசினாங்க.
என் படம் விற்பனையாகணும், வெற்றி பெறணும் என்ற ஆசைகள் போக, சுவாரஸ்யமான சினிமா தரணும்கிறதுதான் என்னுடைய ரொம்பப் பேராசையா இருக்கு. நல்ல படம் பார்க்கணும்னு ஜனங்க விருப்பப்படும்போது, நானும் அதையே தரணும்னு ரிஸ்க் எடுக்கிறதில் ஆச்சர்யம் இல்லை!’’
‘‘வேற ஒரு ஆளுமை நடிக்கிறதா கேள்விப்பட்டேன்...’’ ‘‘அட, உங்களுக்கும் செய்தி வந்திருச்சா? சினிமாவுக்கே ஆச்சர்யமா சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜோ டி குரூஸ் பெரிய ரோல் பண்றார். அந்த உயரத்திற்கும், கம்பீரத்திற்கும் அவர் நடிப்பு அள்ளிட்டுப் போகுது. ரொம்ப நாள் கழிச்சு சாருஹாசன் ஸார் கூட நடிக்கிறார். சினிமா ஒரு ஜனநாயகக் கலை. பெயின்டிங் மாதிரி ‘கேன்வாஸ் ஆச்சு... ஓவியர் ஆச்சு...’னு ஒதுங்கிட முடியாது. ஒளிப்பதிவாளர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர்னு எல்லாரும் சேர்ந்ததுதான் இது. இதில் பங்கேற்கிற ஒவ்வொருத்தருக்கும் சந்தோஷம் காத்திருக்கு!’’
‘‘நீங்களே மியூசிக்...’’ ‘‘இன்னும் கவனமா செய்யலாமே... அதான்! விடாப்பிடியான பிடிவாதம் எல்லாம் கிடையாது. நல்லா வந்திருக்கு. த்ரில்லர் இல்லையா, இதில் பிரத்யேகமாக வேலைகள் இருக்கு. வாழ்க்கையின் ஒவ்வொரு இடத்திலும் படாதபாடுபட்டு வந்த எனக்கு, ‘பிச்சைக்காரன்’ என்கிற வார்த்தையும் தப்பா படலை. ‘சைத்தான்’ என்கிற வார்த்தையும் தப்பா படலை!’’
-நா.கதிர்வேலன்
|