பிடித்தது



கி.ரவிக்குமார்

அந்த பிரபல துணிக்கடைக்கு ஒரு போன்கால் வந்தது! ‘‘சார்! உங்க கடையில் ஒரு சட்டையை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போயி வாங்கினேன். என் கணவருக்காக! ஆனா, அது அவருக்குப் பிடிக்கல. அதை மாத்தணும் சார்!’’ என்று ஒரு பெண் குரல் கெஞ்சியது!
‘‘ஒரு செகண்ட் மேடம்!’’  பக்கத்தில் இருந்த மேனேஜரிடம் விஷயத்தைச் சொன்னார் ஊழியர்.



‘‘அடடா! தனக்குப் பிடிச்சிருந்தாலும், தன் கணவனுக்கு பிடிக்காததை போட்டுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தாம அதை மாத்திக் கொடுக்க நினைக்கிறாங்க பாருங்க! மனைவின்னா இப்படித்தான் இருக்கணும். இங்கே கொண்டாங்க!’’ என்று போனை வாங்கி, ‘‘மேடம்! தாராளமா வந்து வேற சட்டை மாத்தி வாங்கிக்கோங்க!’’ என்றார்.

அடுத்த நாள் அந்தப் பெண்மணி வந்திருந்தார். ‘‘உங்க வீட்டுக்காரர் வரலையா மேடம்... அவருக்குப் பிடிச்சதை அவரே செலக்ட் பண்ணிக்கலாமே!’’ என்றார் மேனேஜர். ‘‘இல்லை சார்! இந்தச் சட்டை எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு! இதிலேயே சின்ன சைஸ் எடுத்து என் மகனுக்கு கொடுக்கப் போறேன்!’’

‘‘அப்போ! உங்க கணவருக்கு..?’’ ‘‘வாங்கிக் கொடுத்ததை வாயை மூடிக்கிட்டு போட்டுக்கத் தெரியலை... அவருக்கெல்லாம் எதுக்கு இப்ப டிரெஸ்..? அப்புறம் பார்த்துக்கலாம்!’’  கடுப்புடன் சொன்னார் அந்தப் பெண்மணி!