தூக்கம்
தாமோதரனுக்கு இரவு நேரப் பணி. தினமும் காலையில் பணி முடிந்து திரும்பியதும் குளித்து, உடை மாற்றி, டிபன் சாப்பிட்டுவிட்டு தூங்குவது வழக்கம். மதியம் ஒரு மணிக்கு எழுந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்கி மாலை ஐந்து மணிக்கு எழுந்து ரெடியாகி வேலைக்குச் செல்வார். ஆனால் கடந்த ஒரு வாரமாக அவருக்கு என்ன ஆனது? பகலெல்லாம் தூங்காமல் தனியே உட்கார்ந்து செல்போனில் சினிமா பார்த்து ரசிக்கிறார்..? என்ன படமாக இருக்கும்? ஐம்பதைத் தாண்டிய இந்த வயசில் இப்படியொரு மோகமா? அவர் மனைவிக்கு தாறுமாறாய் சந்தேகங்கள்.
‘‘நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். தூக்கத்தை விட உங்களுக்கு அப்படி என்னங்க சினிமா முக்கியமா போச்சு?’’ ஒரு நாள் கோபத்தில் வெடித்தாள் அவர் மனைவி. ‘‘அடி அசடு! நைட் சர்வீஸ் பஸ்ல கண்டக்டர் வேலை பார்க்குறேன். பத்து மணிக்கு பஸ் எடுத்தா மறுநாள் காலையிலதான் சென்னை போக முடியும். டிரைவர் தூங்கிட்டா எல்லாருக்குமே கைலாசம்தான். என் வேலை முடிஞ்சதும் டிரைவர் பக்கத்துல உட்கார்ந்து, பகல்ல நான் பார்த்த புதுப்படக் கதையைச் சொல்வேன். இதனால ரெண்டு பேருக்கும் தூக்கமே வராது!’’ ‘வீணா சந்தேகப்பட்டோமே!’ என்று நொந்துகொண்டாள் மனைவி.
|