அம்மா கணக்கு விமர்சனம்
‘உங்கள் கனவுகளைப் பிள்ளை கள் மீது திணிக்காதீர்கள்’ என்ற பேரன்டிங் தத்துவம் அதிகம் அதிகம் சொல்லப்பட்டே போரடிக்கிறது. அதிலிருந்து வேறுபட்டு, ‘பிள்ளைகள் கனவே காணாமல் இருக்கிறார்கள்’ என தூஸ்ரா டர்ன் எடுத்தால், அதுதான் ‘அம்மா கணக்கு’! கணவன் இறந்துவிட்ட நிலையில், அடுத்தடுத்து பல்வேறு அடித்தள வேலைகளைப் பார்த்து மகள் யுவஸ்ரீயைப் படிக்க வைக்கிறார் அமலா பால். ஆனால், மகள் அதை உணராமல், ‘‘நானும் உன்னைப் போல வேலைக்காரியாகத்தான் ஆவேன்.
அதற்கு எதற்காகப் படிக்கணும்?’’ என்கிறார். மகளுக்கு வராத கணக்கை வர வைக்க அமலா, தானே அவள் படிக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்கிறார். நினைத்தபடி யுவ கணக்கில் தேர்ந்தாரா? அல்லது தாயைப் போல வேலைக்காரி ஆனாரா? என்பதே ‘அம்மா கணக்கின்’ விடை! ‘36 வயதினிலே’ என ஒரு படம் வராமல் இருந்திருந்தால் இந்தக் களம் இன்னும் புதுசாக மனம் ஈர்த்திருக்கலாம். எனினும் அமலா பால் அண்ட் கோவின் யதார்த்த நடிப்பு இந்த சினிமாவுக்கு தனித்துவம் தந்து நிலை நிறுத்துகிறது.
வீட்டு வேலை செய்யும் பெண் சாந்தியாக அமலா பால். மகள் பற்றிய கவலையைத் தேக்கியபடியே பணியிடங்களில் உலவும் அவரின் உடல் மொழிக்கு ஃபுல் மார்க்ஸ். ஒரே வகுப்பில் மகளுடன் போட்டி போட்டு கணக்குப் பரீட்சை எழுதுவதும், அம்மா மகள் உறவை வகுப்புத் தோழர்களிடம் மறைக்கும் இடங்களும் வெல்டன்.
யாருங்க அது... யுவ? விக்கிபீடியாவில் கூட விவரங்கள் இல்லாத ஒரு சுட்டியிடமிருந்து இப்படி ஒரு நடிப்பா? அபியாக அந்தக் கண்கள் பேசுகின்றன. அம்மாவை வகுப்புத் தோழியாக ஏற்க முடியாமல் அவமானத்தில் குறுகும்போதும், ரோஷம் பொங்க கணக்கில் 58 மார்க் வாங்கிக் காட்டும்போதும், அம்மா வேறு ஒருவருடன் டூவீலரில் வந்து இறங்குகிறார் என்றதும் விரக்தி கொள்ளும் போதும் அந்தப் பிஞ்சு முகம் பிக்சர் பர்ஃபெக்ட்!
சமுத்திரக்கனியின் தகுதிக்கு இந்த ஹெட்மாஸ்டர் பாத்திரம் ரொம்பவே குறுகல்! அர்த்தபுஷ்டியான அவர் முகம் குட்டிக் குட்டி காமெடி சேஷ்டைகளுக்குள் அடைபடாமல் திமிறுகிறது. எச்சரிக்கை பாஸ்! ஈர நெஞ்சம் கொண்ட எஜமானியாக ரேவதி கச்சிதம். இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரியின் படமாக்குதல் தரம் மிக நன்று. எனினும் அந்தப் படிப்பாளி பையன் உள்ளிட்ட இதர பாத்திரங்கள் எல்லாமே உணர்ச்சியின்றி பேசிச் செல்லும் துயரத்துக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.
ஏழை வீட்டுக்கும் பங்களாவுக்கும் மாறி மாறிப் பயணிக்கும் கேமராவில் வெரைட்டி காட்டி நிற்கிறார் கேவ்மிக் யு ஆரி. இளையராஜாவின் இசைக்கு முழுமையான தீனி இல்லை என்றாலும் பின்னணி நச். பெண்களின் தேர்ச்சி விகிதம் எப்போதும் உச்சத்தில் இருக்கையில் ‘பெண்களுக்கே கணக்கு வராது’ என இதில் ஆளாளுக்குச் சொல்வது எந்த அடிப்படையிலோ... புரியவில்லை.
கடைசியில் அம்மாவின் தியாகத்தைப் புரிந்து மகள் திருந்தும் இடங்களில் இத்தனை நாடகத்தனமா? பள்ளி திறக்கும் நாளில் இருந்து அரையாண்டுத் தேர்வு முடிவு வரையிலான நான்கைந்து மாதம்தான் கதைக் காலம். அப்படியெனில் சம்பவங்கள் எத்தனை சுவையாகக் கோர்க்கப்பட்டிருக்க வேண்டும். அது மிஸ்ஸிங்! சீரியல்தனத்தை ஒதுக்கியிருந்தால் ‘அம்மா கணக்கு’ சென்டம்!
-குங்குமம் விமர்சனக் குழு
|