தாமிரபரணி போர்!



ஓவியங்கள், சிற்பங்கள், கோயில்கள் என எங்கும் தங்கள் காதலி பெயரை எழுதுவது நவீன தமிழனின் பழக்கம்; பண்டைத் தமிழர்கள், ஓவியங்களில் வரலாற்றை எழுதியது பற்றிய கட்டுரை இது!



தக்கோலம், வந்தவாசி என எத்தனையோ போர்கள் பற்றி வரலாற்றுப் புத்தகங்களில் மெய்சிலிர்க்க வாசித்திருப்போம். ஆனால், ‘தாமிரபரணி போர்’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரு ஓவியத்தில் தீட்டப்பட்டிருந்த காட்சிகள் வழியாக இப்போது இந்தப் போரை அடையாளம் கண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் சா.பாலுசாமி. அந்த ஓவியங்களைத் தொகுத்து அதன் பின்னணி விளக்கத்தோடு, ‘சித்திரக்கூடம்  திருப்புடைமருதூர் ஓவியங்கள்’ என்ற பெயரில் நூலாகக் கொண்டு வர இருக்கிறார் விரைவில்!

‘‘திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் போற வழியில இருக்கற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர், திருப்புடைமருதூர். இங்க இருக்கிற நாறும்பூநாத சுவாமி கோயில், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னாடியே கட்டப்பட்டது. பிற்காலச் சோழர், விஜயநகர நாயக்கர்கள், திருவிதாங்கூர் மன்னர்கள்னு பலராலும் வளர்ச்சி பெற்றிருக்கு. இந்தக் கோயில் ராஜகோபுரத்துல உள்ள ஐந்து நிலைகள்லயும் விஜயநகர ஓவிய பாணியையும், நாயக்க ஓவிய பாணியையும் இணைச்சு அற்புதமா சுவரோவியங்கள் தீட்டப்பட்டிருக்கு.



‘வேணாட்டு பாணி’னு சொல்லப்படும் தனித்தன்மை வாய்ந்த இந்த ஓவியங்கள், 16ம் நூற்றாண்டின் சமய, சமூக, அரசியல் வரலாற்றின் ஆவணம்னு சொல்லலாம். அவ்வளவு செய்திகள் தாங்கிய ஓவியங்கள் இவை. இதில்தான் தாமிரபரணி போர் பத்தின காட்சிகள் விவரிக்கப்பட்டிருந்துச்சு. இதுவரை இதை வெறுமனே ‘போர்க் காட்சிகள்’னு வரலாற்றுல எழுதியிருக்காங்க. ஆனா, அது எந்தப் போர், எந்த இடத்துல, எப்போ நடந்ததுனு விவரங்கள் சொல்லப்படலை.

இதை ஆறு வருடத் தேடலுக்குப் பிறகு கண்டுபிடிச்சிருக்கேன்’’ என விரிவாக ஆரம்பிக்கிறார் பாலுசாமி. சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியரான இவர் கவிதை, ஓவியம், சிற்பங்கள் பற்றி பல்வேறு நூல்கள் எழுதியவர். ‘‘என் முனைவர் பட்ட ஆய்வே ‘நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்’தான். அதுல எழுந்த ஆர்வம், என்னை ஓவியங்களை நோக்கி ஈர்த்துச்சு. அப்போ ‘மக்கள், தாவரங்கள் மற்றும் சூழலியல் மையம்’னு ஒரு அமைப்பு சார்பா ‘தமிழக சுவரோவியம் ஆவணத் திட்டம்’னு ஒரு திட்டத்தைத் தொடங்கினோம்.

இதுல, திருப்புடைமருதூர், ரங்கம், சிதம்பரம், ராமநாதபுரம், நத்தம் கோவில்பட்டினு சில முக்கிய கோயில்கள்ல உள்ள ஓவியங்களைப் புகைப்பட ஆவணமா பண்ணினோம். நான் அதையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தினேன்!’’ என்கிறவர், அந்தப் போர் காட்சிகள் பற்றி பேசினார். ‘‘எங்க ஆய்வுல திருப்புடைமருதூர்தான் அதிக நேரம் எடுத்துக்கிட்ட கோயில். காரணம், ரொம்ப மாறுபட்ட ஓவிய பாணி அங்க இருந்துச்சு. இதிகாசங்கள், புராணங்கள், போர்த்துகீசிய, அரேபிய குதிரை வணிகங்கள், அலங்காரங்கள்னு வேறெங்கும் காணக் கிடைக்காத அற்புத ஓவியங்கள்.

கோபுரத்தின் ரெண்டாவது தளத்துல காணப்பட்ட வரலாற்று ஓவியங்கள் என்னை ரொம்ப ஈர்த்துச்சு. ஒரு போர்க் காட்சியில யானைகள், அதன் அணிகலன்கள், அரசியல் நடவடிக்கைகள்னு நிறைய விஷயங்கள் இருந்தன. துப்பாக்கி கூட இந்தப் போர்ல பயன்படுத்தியிருக்காங்க. அது என்ன போர்னு தேடினப்போ எந்தத் தகவலும் கிடைக்கலை. நிறைய வரலாற்று, இலக்கியக் குறிப்புகளை வச்சு தொடர்புபடுத்தினப்போ ‘தாமிரபரணி போர்’னு தெரிய வந்துச்சு.

இந்தப் பெரிய போர் நடந்த இடம் ஆரல்வாய்மொழி கணவாய். இது விஜயநகரத்திற்கும், திருவிதாங்கூருக்கும் இடையே நடந்திருக்கு. பாண்டிய மன்னனுக்கு ராஜ்ஜியத்தை திருப்பிக் கொடுப்பதற்காகவே நடந்த போர். அப்போ விஜயநகரத்தை கிருஷ்ண தேவ ராயர் தம்பி அச்சுத தேவராயர் ஆட்சி புரிந்தார். அப்போ தென்காசியை ஆட்சி புரிந்த வல்லபன் என்ற பாண்டிய மன்னர், இவருக்கு நெருக்கமானவர். திருவிதாங்கூர் மன்னரான பூதல வீர உதய மார்த்தாண்ட வர்மா இந்த வல்லப பாண்டியனை நாட்டை விட்டு விரட்டி விட்டார்.

பாண்டியனுக்கு பக்க பலமா அச்சுத தேவ ராயர் நின்னார். இதுக்கிடையில போர்த்துகீசியர்கள் தென்பகுதி பரதவ மக்களை தங்கள் இனத்தவர்களாக மாத்திட்டு இருந்தாங்க. அவர்களை அடக்கவும் இந்தப் போர் அவசியமா இருந்திருக்கு. பின்னாளில் கேரள வரலாற்று ஆசிரியர்கள் ேபாரில் பூதல வீரன் வெற்றி பெற்றதா எழுதியிருக்காங்க. சிலர் அச்சுத தேவ ராயர் வெற்றி பெற்றதா சொல்றாங்க. ஆனா, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்லயும், காஞ்சிபுரம் வரதராஜர், காமாட்சி அம்மன் கோயில்கள்லயும் உள்ள கல்வெட்டுகள் அச்சுத தேவராயர் வெற்றி பெற்று பாண்டியனுக்கு மகுடம் சூட்டியதா சொல்லுது.

பிறகு, பாண்டியனின் மகளை அச்சுதர் திருமணம் முடித்ததாகவும் எழுதியிருக்கு!’’ என்கிறவர், இடைவெளிவிட்டு தொடர்ந்தார். ‘‘இந்த ஓவியங்கள்ல அரசர்கள் எப்படி இருப்பார்கள், எந்த மாதிரி உடை அணிந்து இருப்பார்கள், மெய்க்காவலர்கள் எப்படி இருந்தார்கள், அரேபியர்கள் குதிரைகளை எப்படி விற்றார்கள், தென்திசை நோக்கி போருக்குப் போனது, வெற்றி கொண்டது, பாண்டியன் மகளை திருமணம் செய்து தந்தது என எல்லாம் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கு.

அப்புறம், முதல் தளத்துல சம்பந்தர் வரலாறும் அவர் பாண்டியன் சுரம் தீர்த்த படலமும் சமணரைக் கழுவேற்றிய நிகழ்ச்சிகளும் தீட்டப்பட்டிருக்கு. இப்படி ஒவ்வொரு நிலையிலும் விதவிதமான ஓவியங்கள். தமிழகக் கலை வரலாற்றில் இதைப் பொக்கிஷம்னுதான் சொல்லணும்!’’ என்கிறார் நெகிழ்ந்தபடி! ‘‘இப்போ, நான் இந்த ஓவியங்களையும், அதற்கான குறிப்புகளையும், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி ஒரு நூலா தொகுத்திருக்கேன்.

முழுக்க ஆர்ட் பேப்பரில் தரணும்னு இப்பவே முன்வெளியீட்டுத் திட்டத்தை முன்னெடுத்திருக்கோம். அதாவது, புத்தகத்தை முன்னாடியே பாதி விலையில ‘புக்’ பண்ணிக்கலாம். நவம்பர் மாசம் வெளியிடப் போறோம். திருப்புடைமருதூர் ஓவியங்கள் பத்தி படிக்க நினைக்கிறவங்களுக்கு  இந்த நூல் நிச்சயம் ஒரு பயனுள்ள களஞ்சியமா இருக்கும்!’’ என்கிறார் அவர் நிறைவாக!

அரசர்கள் எப்படி இருப்பார்கள், எந்த மாதிரி உடை அணிந்து இருப்பார்கள், மெய்க்காவலர்கள் எப்படி இருந்தார்கள்னு விவரிக்கற இந்த ஓவியங்கள் தமிழகக் கலை வரலாற்றின் பொக்கிஷம்!

-பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்,
ரா.பரமகுமார்