தாய்ப்பால் வங்கிக்கு தானம் கொடுங்கள்!



ஊட்டச்சத்துக் குறைபாட்டால் நிகழும் குழந்தைகள் மரணம்; தாய்ப்பால் அதிகம் சுரந்து மார்பில் கட்டி பெண்கள் படும் அவதி. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு, தாய்ப்பால் வங்கி.



ரத்தத்தைச் சேமித்து வைக்கும் ரத்த வங்கிகள் பார்த்திருக்கிறோம். ஆனால், தாய்ப்பாலை சேமித்து வைக்கும் வங்கிகள்..? ஏதோ வெளிநாட்டு செய்தியைச் சொல்லப் போகிறோம் எனத் தயாராக வேண்டாம். தமிழகத்தில்... அதுவும் அரசு சார்பில் தாய்ப்பால் வங்கிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதுவும் தாய்ப்பாலைப் பதப்படுத்தி தாய்ப்பால் பவுடர் தயாரிக்கும் அளவுக்கு நம் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. ‘‘ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வுதான் நம் மக்களிடம் இல்லை’’ எனக் கவலைப்படுகிறார்கள் மருத்துவர்கள்.



கடந்த 2014ம் ஆண்டு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டது தமிழகத்தின் முதல் தாய்ப்பால் வங்கி! இப்போது, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 9 இடங்களில் வந்துவிட்டது. தனியார் மருத்துவமனைகளும் தாய்ப்பால் வங்கி ஆரம்பித்து வருகின்றன.

அதென்ன தாய்ப்பால் வங்கி?
‘‘பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தவிர வேறு உணவைப் பரிந்துரைக்க முடியாது. குழந்தைங்க ஆரோக்கியத்துக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் தாய்ப்பால்தான் டானிக்! ஆனா, சில நேரங்கள்ல பிறந்த குழந்தைக்கு அதன் அம்மாவால தாய்ப்பால் கொடுக்க முடியாம போகலாம். தாய்க்குப் போதியளவு பால் சுரக்காம இருந்தாலோ அல்லது எடை குறைவா குழந்தை பிறந்தாலோ, அல்லது வேற காரணங்களாலோ இப்படிப்பட்ட சூழல் ஏற்படும்.

அப்போ, பசும்பாலை அதற்கு மாற்றா கொடுத்தால், குழந்தையின் குடல் அழுகும் அபாயம் இருக்கு. அதுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தத் தாய்ப்பால் வங்கி!’’ என அறிமுகத்தோடு ஆரம்பிக்கிறார் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவு மருத்துவர் கமலரத்னம். ‘‘பொதுவா தாய்ப்பாலை ‘திரவத்தங்கம்’னுதான் சொல்வோம். அவ்வளவு விலைமதிப்பில்லாதது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கறதுல பிரச்னை இருக்கிற மாதிரி, வேறு சில பெண்களுக்கு தேவைக்கு அதிகமாவே பால் சுரக்கும்.

அப்படி அதிகம் சுரக்கிறவங்ககிட்ட இருந்து தாய்ப்பாலை வாங்கி பாதுகாத்து, தாய்ப்பால் கிடைக்காம தவிக்கும் குழந்தைங்களுக்குக் கொடுப்பதுதான் இந்த வங்கியோட பிரதான நோக்கம். இந்தியாவில் 1989ம் ஆண்டே இந்தத் தாய்ப்பால் வங்கி கான்செப்ட்டை மும்பையைச் சேர்ந்த டாக்டர் அர்மிதா ஃபெர்னாண்டஸ் தொடங்கி வச்சிட்டாங்க. அது இப்போதான் பரவலா கவனம் பெற்று வருது!’’ என்கிறவர், தாய்ப்பால் வங்கிக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார்.

முற்றிலும் குளிரூட்டப்பட்ட கவுன்சிலிங் அறையும், தாய்ப்பால் சேகரிக்கும் அறையும் அதிநவீன மெருகோடு காட்சியளிக்கின்றன.  ‘‘இங்கிருக்கிற தாய்ப்பால் வங்கியை தமிழகத்தின் மாதிரி வங்கியா அரசு அறிவிச்சிருக்கு. பெரும்பாலும், இங்க சிகிச்சைக்காக வர்ற தாய்மார்களுக்குப் போதிய கவுன்சிலிங் கொடுத்து, முழுமையான சம்மதத்ேதாடுதான் தாய்ப்பால் பெறுவோம். கூடவே, அவங்க மருத்துவ ரிப்போர்ட்டும் செக் பண்ணிடுவோம். ஏதாவது தொற்று நோய் இருக்கானு சோதிச்சே தாய்ப்பால் தர அனுமதிப்போம்.

அதேபோல தாய்ப்பால் தானம் பெறும் குழந்தைகளோட தாய்மார்களின் சம்மதத்தையும் வாங்கிக்குவோம். ஆரம்பத்துல, கையால் அழுத்தி தாய்ப்பாலை சேகரிச்சுத் தந்தாங்க. அதனால, மார்பு வலி பிரச்னை இருந்துச்சு. ஆனா, இப்போ பால் சேகரிப்புக்குனு எளிய மிஷின்கள் வந்துடுச்சு. இதுல, வலியே இருக்காது. ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் பால் சுரந்து கொடுக்கலாம். இப்படிப் பெறப்படுற தாய்ப்பாலை அப்படியே குழந்தைக்குக் கொடுக்க முடியாது.

பல்வேறு பதப்படுத்தும் செயல்களுக்கு உட்படுத்தணும். முதல்ல 62.5 டிகிரி வெப்பத்தில் பாலைப் பதப்படுத்துவோம். வைரஸ், பாக்டீரியானு தொற்றுக் கிருமிகள் ஏதாவது இருந்தாலும் இதில் அழிஞ்சிடும். அப்புறம், அதுல இருந்து கொஞ்சம் பாலை எடுத்து ஆய்வுக்கு அனுப்புவோம். மீதியை ஃப்ரீஸரில் வச்சிடுவோம். நான்கு நாட்களில் ஆய்வு முடிவு வந்துடும். அதில் எந்தச் சிக்கலும் இல்லைனு தெரிஞ்ச பிறகுதான் குழந்தைகளுக்கு வழங்குவோம். எங்க வங்கியில் உள்ள ஃப்ரீஸரில் இருநூறு லிட்டர் தாய்ப்பாலை ஆறு மாத காலம் வரை கெடாமல் பாதுகாக்க முடியும்.

இப்போ, ஒரு நாளைக்கு சராசரியா 1,200 மி.லி. பாலைத்தான் சேமிக்கிறோம்!’’ என்கிறவர் தொடர்ந்தார். ‘‘எடை குறைவா பிறக்குற குழந்தைங்களுக்குத் தாய்ப்பால் மட்டும் கொடுத்து எடை கூட்ட முடியாது. ஏன்னா, 100 மி.லி பால்ல ஒரு கிராம்தான் சத்து இருக்கும். ஆனா, குழந்தைக்கு 3.5 கிராம் தேவை. அதனால, தாய்ப்பாலோடு கொஞ்சம் பசும்பால் சேர்த்து புகட்டுவோம். இப்போ, நாங்க தாய்ப்பாலோடு தாய்ப்பால்ல தயாரிச்ச பால் பவுடர் சேர்த்து எடையைக் கூட்ட முடியுமானு சோதனை பண்ணி ஜெயிச்சிருக்கோம்.

அதுக்கு அங்கீகாரம் கிடைச்ச பிறகுதான் பயன்பாட்டுக்கு வரும். அப்போ, இன்னும் தாய்ப்பால் தேவைப்படும்!’’ என்கிறவர், ‘‘சரி, வேறொரு தாயின் பாலை தன் குழந்தைக்கு கொடுக்க ஒரு தாய் சம்மதிப்பாரா?’’ எனும் முக்கிய சந்தேகத்துக்கும் விடையளிக்கிறார்... ‘‘தாய்ப்பாலுக்கு நிகர் தாய்ப்பால்தான் சார்... அதுக்காக நம்ம சென்டிமென்ட்ல காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம். ஆனாலும், சிலருக்கு ரொம்ப தயக்கம் இருக்கத்தான் செய்யுது.

அவங்ககிட்ட எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறோம். சிலர், ‘என் பிள்ளைக்கு என் பாலைத்தான் தருவேன்’னு அடம்பிடிப்பாங்க. குழந்தை குடிக்காவிட்டாலும் மெஷின் வழியா பால் சுரந்து குழந்தைக்கு பாட்டிலில் கொடுப்பாங்க. வேறு வழியில்லாத குழந்தைங்களுக்கு இதுதான் பெஸ்ட். இப்போ நிறைய பேர் இந்தத் தயக்கங்களைக் கடந்து வந்துட்டாங்க. ஆனா, தாய்ப்பாலை தானமா தருவதில்தான் நிறைய சென்டிமென்ட் சிக்கல். ஊட்டச்சத்து குறைபாட்டால நம் நாட்டில் ஆண்டுக்கு பல்லாயிரம் குழந்தைகள் இறக்குறாங்க.

இன்னொரு பக்கம் தாய்ப்பால் அதிகம் சுரந்து அது மார்பில் கட்டி அவதிப்படுற பெண்களும் இருக்காங்க. இந்த ரெண்டு பிரச்னைக்குமான தீர்வுதான் தாய்ப்பால் வங்கி. சிலர், ‘பாலை உங்களுக்குக் கொடுத்துட்டா, என் குழந்தைக்கு எங்க போறது’னு கேட்பாங்க. உண்மையில, தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்கதான் அதிகமா சுரக்கும். இதைத் தாய்மார்கள் புரிஞ்சிக்கணும்!’’ என்கிறார் அவர் அழுத்தமாக!

சிலர், ‘பாலை உங்களுக்குக்  கொடுத்துட்டா, என் குழந்தைக்கு எங்க போறது’னு கேட்பாங்க. உண்மையில, தாய்ப்பால் கொடுக்கக் கொடுக்கதான் அதிகமா சுரக்கும்.

-பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்