பாஸ்வேர்ட்



-வீ.சுரேஷ்

‘‘விவாகரத்து வழக்குல ஒருவழியா தீர்ப்பு வந்துடுச்சு. இனிமே நான் யாரோ, அவர் யாரோ! அப்படி ஆகிட்ட பிறகு என் சம்பந்தப்பட்ட எதுவும் அவர் லேப்டாப்ல இருக்க வேண்டாம். நீங்களே எல்லாத்தையும் அழிச்சிருங்க’’  கணவன் ராகவனிடம் இருந்த லேப்டாப்பை பிடுங்கி தன் வக்கீலிடம் கொடுத்தாள் காயத்ரி.



லேப்டாப்பைத் திறந்து உயிரூட்டியபோது, அது லாகின் பாஸ்வேர்ட் கேட்டது. ‘‘பாஸ்வேர்டு என்ன?’’ வக்கீல் கேட்டார். ‘‘காயத்ரி...’’ என இழுத்தான் ராகவன். ‘‘சார்! இனிமே அவங்ககிட்ட பேசறதுக்கு ஒண்ணுமில்லை. காயத்ரி மேடம் சொல்றது சரிதான். விவாகரத்து ஆயிருச்சின்னா அவங்க சம்பந்தப்பட்ட எதுவுமே உங்க லேப்டாப்ல இருக்குறது சரியில்லை. அதுதான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது. தயவுசெய்து வம்பு பண்ணாம உங்க பாஸ்வேர்டை சொல்லுங்க!’’ கொஞ்சம் அதட்டலாகவே கேட்டார் வக்கீல்.

‘‘அதான் சொன்னேனே சார்... ‘காயத்ரின்’னு!’’  ராகவன் சொல்ல, விக்கித்துப் போய் நின்றார்கள் காயத்ரியும் வக்கீலும். ‘‘என்ன சார் பண்றது? பாசத்தையும் பாஸ்வேர்டையும் மறைச்சி வச்சித்தானே பயன்படுத்த வேண்டியிருக்கு!’’ என்று பரிதாபமாகச் சொன்னான் ராகவன். ‘ஊமைக் கொட்டான்’, ‘உம்மணாமூஞ்சி’, ‘அம்மா பிள்ளை’ என கணவனை எப்போதும் திட்டும் தன்னை நொந்தபடி ராகவனை கண்கலங்கப் பார்த்தாள் காயத்ரி.