சிறு துளி



-மீனா சுந்தர்

அலுவலகத்திலிருந்து வந்த கணவனிடம், ‘‘என்னங்க கிடைச்சுதா?’’ என்றாள் அம்பிகா. ‘‘இல்லை அம்பிகா. ஆயிரம் ரூபாயாச்சே! மாசக்கடைசி... எல்லாரும் இல்லைன்னு கை விரிச்சிட்டாங்க...’’ என்றான் கணேசன் வருத்தமாக! அடுத்த இரண்டு நாட்களில் மிக முக்கியமான உறவினர் வீட்டுத் திருமணம். அவர்கள் இவர்களுக்கு நிறைய செய்திருக்கிறார்கள். அந்த வீட்டு விசேஷத்துக்கு குறைந்தது ஆயிரம் ரூபாயாவது மொய் எழுத வேண்டும். அதற்காகத்தான் அலுவலகத்தில் அத்தனை பேரிடமும் கைமாற்று கேட்டுப் பார்த்து ஏமாந்து திரும்பியிருந்தான் கணேசன்.



முகத்தில் சோக ரேகை படர அமர்ந்திருந்த கணவனுக்கு சூடாக ஒரு கப் காபி கொண்டுவந்து கொடுத்த அம்பிகா சொன்னாள், ‘‘நம்மள மாதிரிதானே எல்லாருக்கும் மாசக் கடைசி. மொத்தமா ஆயிரம்னு கேட்டா யார்கிட்டே இருக்கும். அதனால நான் சொல்றபடி கேளுங்க...’’ என்று அவன் காதுக்குள் முணுமுணுத்தாள்.

மறுநாள் அலுவலகம் சென்ற கணேசன், ஆயிரம் ரூபாய் வேண்டுமென்று யாரிடமும் கேட்கவில்லை. நாலைந்து பேரிடம் நூறு, இருநூறு என்று கேட்டான். அவர்களும் தங்களிடமிருந்ததைக் கொடுக்க, இப்போது அவன் கையில் முழுமையாய் ஆயிரம் ரூபாய் இருந்தது. ‘சிறுதுளி பெருவெள்ளம் என்பது சேமிப்புக்கு மட்டுமல்ல... கடன் கேட்பதற்கும்தான்’ என்று புரிந்துகொண்டு மனைவிக்கு மனதில் நன்றி சொன்னான் கணேசன்!