லீனா மணிமேகலை IN Download மனசு



மீட்க விரும்பும் இழப்பு
அப்பா. இதோ இப்ப கதவைத் திறந்திட்டு ‘கண்ணம்மா’னு கூப்பிட்டுக்கிட்டே வந்துட மாட்டாரான்னு ஏக்கமா இருக்கு. பேனா எழுது தானு சரி பார்க்கக்கூட அப்பா பேரைத்தான் கிறுக்குவேன். என் பாஸ்வேர்ட்லயும் அவர் இருப்பார். ‘உன் மெயிலை எளிதா உடைக்கலாம்’னு நண்பர்கள் கிண்டல் பண்ணுவாங்க. நான் சம்பாதிச்சு ஒரு சட்டை வாங்கித் தர்ற பாக்கியத்தைக்கூட அவர் எனக்குத் தரலை. அவரோட அன்பின் சாயலை யார்கிட்டே பார்த்தாலும் வகைதொகை தெரியாம விழுந்துடறது என் பெரும் பலவீனம். அப்பாவை மீட்க முடியும்னா எதையும் தரத் தயாரா இருக்கேன்.



கனவுகள்
ஒரு பெளர்ணமி இரவில் படகு கவிழ்ந்து இறந்து போகிறேன். என் உடலை கடலோடி தேடுறாங்க. நான் அகப்படலை. என் சிறிய நோட்புக் கிடைக்குது. பென்சில்ல எழுதப்பட்ட என் கவிதைகள் மட்டும் அழியாம மிதந்திட்டிருக்கு. என்னை ஒரு கருத்த நடுநிசியில குளத்தங்கரையில கட்டிப் போட்டிருக்காங்க. எனக்கு மனப்பிறழ்ச்சி. என்னோட ஆணும், பெண்ணும் குழந்தைகளுமா நூத்துக்கும் மேற்பட்டவங்க இருக்காங்க. எல்லோரும் ஏதோ அனத்திட்டேஇருக் காங்க.அப்புறம், ஒவ்வொரு நெய்விளக்கா தோன்றத் தோன்ற, நொறுங்கி விழுந்த நிலாவாக குளம் மாறிடுது.

சமீபத்தில் அதிர்ந்தது
ஒரு அசுர வெள்ளம் சடுதியில் வந்து எல்லாத்தையும் அடிச்சிட்டுப் போக, கொத்து கொத்தா மக்கள் தெருவில் நின்னதைப் பார்த்து அதிர்ந்துட்டேன். சென்னையை எவ்வளவு நேசிக்கிறேன்னு அப்போதான் புரிஞ்சுது. நிவாரணப் பணிகளுக்கு போனப்ப, கையேந்தி நிக்க நேர்ந்திட்ட மக்களைப் பார்த்து அலறிட்டேன். நிராதரவான நிலைக்கு முன்னாடி உதவியெல்லாம் எம்மாத்திரம்! 2004ல் சுனாமி வந்தப்ப நாகப்பட்டினத்தின் கடற்கரை கிராமங்களில் பைத்தியம் பிடிச்சு அலைஞ்ச நினைவுகள் திரும்பவும் மனதில் எழுந்தன. மனித வாழ்க்கைதான் எவ்வளவு அற்பமானது!



திருமணம்
ஒரு நிறுவனம், அவ்வளவுதான். இரண்டு ஆன்மாக்கள் இணையணும்னு முடிவு செஞ்சிட்டா அதுக்கு அரசாங்கம், கோர்ட், கோயில், கோத்திரம், கல்யாணமெல்லாம் என்னத்துக்கு? அப்புறம் பிரியணும்னு முடிவு செய்றப்பவும் சாட்சிக்கு வந்தவங்களைத் தேட வேண்டியிருப்பது எவ்வளவு அபத்தம்? என்னோடு வாழ்வில் இருப்பது யஸ்வந்த். அவர் ஒரு சிற்பி. எஞ்சியிருக்கும் வாழ்க்கைக்கு என் வானமும் அவராக இருக்க வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை.

கற்ற பாடம்
கற்றுக்கொண்டிருக்கிற பாடம், பொறுமை. மலைகளையும், நதிகளையும், செடிகளையும், பூக்களையும், பறவைகளையும், கடலையும் பார்த்துப் பார்த்து, ‘‘என்னடி உனக்கு அவசரம்!’னு தினமும் என்னைக் கேட்டுக்கறேன். இயற்கையைவிட மாஸ்டர் பீஸான கலை ஏதும் இருக்கா? ஒரு சூரிய உதயம் கொடுக்கிற பரவசத்தையும், அஸ்தமனம் கொடுக்கிற அமைதியையும் வேற எதனால தரமுடியும்? தன்னந்தனியா உட்கார்ந்திருக்கிறப்ப, எங்கிருந்தோ வாலாட்டிட்டே வர்ற நாய்க்குட்டி, உங்க பாதத்தை நக்கிட்டு பக்கத்திலேயே சுருண்டு படுக்கும்போது அவ்வளவு ஆதரவா இருக்கும். அவ்வளவு நிதானமா, அவ்வளவு ஆதரவா வாழ்க்கையை நின்னு நிதானிச்சு ரசிக்கணும், எழுதணும், படம் பண்ணணும். அதைத்தான் சாதகம் பண்ணிட்டிருக்கேன்.

காதல்
காதலித்ததும், காதலிக்கிறதும், காதலிக்கப் போவதும்தான் வாழ்க்கை. காதல் இல்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியலை. காதல் வசப்படறதை நிறுத்தும்போது மூச்சு விடறதையும் நிறுத்திடுவேன்னு நினைக்கிறேன். காதலோட பருவங்கள்தான் எனக்கும் பருவங்கள். இலையுதிர் காலத்திற்கு முன்னாடி கூட வசந்தம் வரலாம்னு காதல் சொல்லிக் கொடுக்கும்.

ஒரே சமயத்தில் பறக்கவும், மூழ்கவும் வைக்கிற மாயக்கோல் காதல். பெருங்காதல்களை சந்திச்சும் கடந்தும் இருக்கேன். என்னுடைய மோசமான மனநிலைகளையும் குணங்களையும் தாங்குற  ஆன்மாதான், என் ேதவதைத்தன்மைகளுக்கும் தகுதியானவர். யாரோட வாழ விரும்புறேன்ங்கிற கேள்வி இப்ப எனக்கு முக்கியமில்லை. யாரோட சாக விரும்புறேன்ங்கறதுதான் முக்கியமா இருக்கு.

சினிமா என்பது...
எந்தப் பள்ளிக்கூடமும், பல்கலைக்கழகமும் சொல்லித் தராததை எனக்கு சினிமா சொல்லித் தந்தது. என் கேமரா மூலம் நான் உரையாடிய ஒவ்வொரு சமூகமும், அதன் மனிதர்களும் என்னை விசாலமாக்கினாங்க. மீனவர்கள், ஈழத்தமிழ் அகதிகள், தலித்துகள், ஆதிவாசிகள்னு இழக்கிறதுக்கு எதுவுமே இல்லாத சமூகங்களோட, அவங்களின் பாடுகளோட கைகோர்த்து நிற்கிற வாய்ப்பை சினிமாதான் எனக்குத் தந்தது.
சினிமாவை கதாநாயக பிம்பமா நான் பார்க்கலை.

‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எப்படி அந்நூல் எழுதப்பட்ட காலத்தோட பிரதிபலிப்போ, அப்படி என் சினிமாவும் நான் வாழும் காலத்தோட கண்ணாடியா இருக்கணும்ங்கிறதுதான் என்னோட எளிய ஆசை. சங்க இலக்கியத்தில் வர்ற வாகை மரம் என் வீட்டில இன்னிக்கு பூ பூக்குது. ‘செங்கடலில்’ பாடப்படுற அம்பா பாடல், அடுத்த ஆயிரம் காலத்துக்குப் பிறகும் தனுஷ்கோடியில் கேக்கும். சினிமாவையும், இலக்கியப் பிரதியாகத்தான் நான் பார்க்கிறேன்.

சூதாட்டம் ஆடுற பகடையா பார்க்கலை. ‘அப்ப வெகுஜன சினிமா பண்ண மாட்டீங்களா?’னு கேக்கறாங்க. குங்குமத்திற்கு வேற கவிதை, சிறு பத்திரிகைக்கு வேற கவிதைனு எழுத முடியறதில்லை. என் சினிமா எல்லோரும் பார்க்கக்கூடிய படம்தான். சந்தைக்குனு கலப்படம் பண்றதுக்கு கலைஞர்கள் தேவையில்லை.

பயணம்
திரைப்பட விழா, ரைட்டர்ஸ் ரெசிடென்ஸி, மாநாடுகள், படப்பிடிப்பு, பண்பாட்டுப் பகிர்வு, கவிதைத் திருவிழாக்கள்னு வெவ்வேறு காரணங்களுக்காக கடந்த 12 வருடங்கள்ல 40 நாடுகளுக்குப் பயணம் போயிருக்கேன். கலைஞர்களுக்கு இந்தச் சமூகம் பரிசளிக்கிற அநாதைத்தனத்தையும், அது தரும் நெருக்கடிகளையும் என்னால் பயணங்கள் மூலம்தான் போக்கிக்க முடியுது. உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் எனக்கு நட்புக் குடும்பங்கள் இருக்காங்க.

நம்ம ஊர்ல காசு சேர்த்து நகை, நிலம் வாங்கறாங்க. பயணம் போக மாட்டேங்கறாங்க. கர்வத்தையும், வெறுப்பையும் வளர்த்துக்கிறாங்க. எனக்கு அமைஞ்ச பயணங்கள்தான் என்னை இவ்வளவு independent ஆளா உருவாக்கினதுனு சொல்வேன். பிரதேச அடையாளங்களுக்குள் குறுகாம, பிரபஞ்சத்துக்கானவளா என்னை மாத்தினது பயணங்கள்தான். இன்னிக்கு உலகத்தை ஆட்டிப் படைக்கிற அகதிகளின் வலிகளைக் கவனிக்கும்போது, எல்லைகள் இல்லாத பூமி சாத்தியப்பட்டால் எவ்வளவு நல்லாயிருக்கும்னு மனசு அடிச்சிக்குது. பறவைகளுக்கு பாஸ்போர்ட் தேவைப்படுதா என்ன?

எடுக்க நினைக்கும் சினிமா
‘Rape Nation’ படத்திற்காக மணிப்பூர், காஷ்மீர், குஜராத், சட்டீஸ்கர், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், டெல்லி என இந்தியத் துணைக்கண்டம் முழுக்க அலைந்தேன். பாலியல் வன்முறையை தங்கள் சொந்த வாழ்வில் அயராத போராட்டங்களால் வெற்றி கண்ட பெண்களின் வாழ்வனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறேன். படம் எடிட்டிங்கில் உள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுத, பிரபுதேவா நடிக்கும் ஒரு மியூசிக்கல் ரோட் ஃபிலிம்... எழுத்தாளர் ஷோபா சக்தி நடிக்கும் ஒரு இன்டர்நேஷனல் கோப்ரொடக்‌ஷன்... கவிஞர் யவனிகா ஸ்ரீராம் எழுதியிருக்கும் ஒரு சில்ட்ரன்ஸ் ஃபிலிம்... கவிஞர் கமலாதாஸ் வாழ்க்கையையும் படைப்புகளையும் மையப்படுத்திய ஆங்கிலத் திரைப்படம் என இயக்குநராக நான்கு ப்ராஜெக்ட்களோடு களம் இறங்கியிருக்கிறேன். ஒரு கை பார்த்துவிடலாம்!

மிகச் சிறந்த நண்பன்...
தங்கராஜின் நட்பு என் வாழ்வின் பொக்கிஷம். என் எல்லாப் படங்களுக்கும் இவர்தான் எடிட்டர். கடந்த 12 ஆண்டு கால நண்பன். என் இன்ப துன்பங்களில் எந்தப் பிரதிபலனும் பாராது பங்கெடுப்பவர். நான் சடுதியில் செத்துவிட்டால், என்னைப் பற்றிய சிறு தகவலுக்குக்கூட இவரைத்தான் நீங்கள் அணுக வேண்டியிருக்கும். என்னைத் தேடி எந்தச் சிறப்பு வந்தாலும், அது இந்த நட்பிற்கே அர்ப்பணம். மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படி ஒன்றிருந்தால் அதிலும் எனக்கு தங்கராஜ்தான் நண்பனாக வரவேண்டும். என்னை எரித்தால் தங்கராஜ்தான் கொள்ளி போடணும். புதைத்தால் அவர் பெயரை என் உயிர் நண்பன் என்று பொறிக்க வேண்டும்.

பாதித்த விஷயம்
தற்போது நான் எடுத்து முடித்திருக்கும் சினிமா ‘Is it too much to ask’, இரு திருநங்கை தோழிகள் ஸ்மைலியும், கிளாடியும் சென்னையில் தங்களுக்கென்று வாடகை வீடு தேடும் அனுபவங்களைக் குறித்தது. தனிப் பெண்ணாக நானும் வாடகைக்கு வீடு தேடுவதில் பெரும் போராட்டங்களைச் சந்தித்திருக்கிறேன். Only vegetarians, Brahmins only, IT professionals only, Family only என்று வெளிப்படையாகவே racist விளம்பரங்களை நம்மூரில்தான் பார்க்க முடியும். வேறு நாடுகளில் தூக்கி உள்ளே போட்டுவிடுவார்கள். குடும்பங்களும் துரத்தியடிக்க, சமூகமும் விலக்கி வைக்க, நாதியற்று எந்தப் பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையிலும் தோழிகள் ஸ்மைலி, கிளாடியின் அசராத நம்பிக்கையும், முயற்சியும் என்னை பாதித்தது!

 நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்