பார்வையற்றவர்களுக்காக தேர்வெழுத வாங்க!



இணைக்கும் சேவையில் இணையதளம்

‘‘பள்ளிகள் திறந்தாச்சு... எல்லா மாணவர்களும் படிக்க ஆரம்பிச்சாச்சு... ஆனா, என்னதான் படிச்சாலும் தேர்வில் அதை எழுத முடியாத நிலையில ஆயிரக்கணக்கான மாணவமாணவிகள் தமிழ்நாட்டுல இருக்காங்க. குறிப்பா, பார்வையற்றோர், ஸ்பெஷல் சில்ட்ரன்ஸ்! ஆனா, இவங்களுக்காகத் தேர்வு எழுதும் ‘ஸ்க்ரைப்கள் ரொம்பக் குறைவு. படிக்கலைன்னு தேர்வு எழுதாம இருக்கலாம். ஆனா, ஸ்க்ரைப் கிடைக்கலைனு யார் படிப்பும் கெட்டுடக் கூடாது. அதனாலதான், இந்த வெப்சைட்டையே ஆரம்பிச்சோம்!’’  மெல்லிய குரலில் பேசுகிறார் மகேஸ்வரி நரசிம்மன்.



www.iscribe.co.in என்ற இணையதளத்தின் ஒருங்கிணைப்பாளர். அதென்ன ‘ஸ்க்ரைப்’?  அவரே விளக்குகிறார். ‘‘கிரிக்கெட்டுல அடிபட்டு ஓட முடியாமல் போகிற வீரர்களுக்காக ‘பை ரன்னர்ஸ்’ வருவாங்களே... அது மாதிரிதான் இதுவும்! மாற்றுத் திறனாளிகள், பார்வையற்றோர், சிறப்புக் குழந்தைகளால தாங்கள் படிச்சதை சொல்ல முடியுமே தவிர எழுத வராது. அவங்களுக்காகத் தேர்வு எழுதுறவங்களுக்குப் பெயர்தான் ‘ஸ்க்ரைப்’!

நல்ல உள்ளம் படைச்ச மனிதர்கள் ஒரு சேவையா இதைச் செய்யிறாங்க. மாணவர்கள் சொல்லச் சொல்ல இவங்க தேர்வெழுதுவாங்க. நல்ல உள்ளம் படைத்த இப்படிப்பட்ட ஸ்க்ரைப்களுக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் ஒரு பாலமா இருக்கறதுதான் எங்க வலைத்தளம். கடந்த 2007ம் வருஷம் வாசவி சுந்தரம், ராஜிவ் ராஜன்னு ரெண்டு பேர் சேர்ந்து இதத் தொடங்கினாங்க. வாசவி, ராஜிவ், நான் எல்லோருமே மாற்றுத் திறனாளிகளுக்காக இயங்கும் ‘வித்யாசாகர்’ங் கற அமைப்புல இருக்கோம்!’’ என்கிறார் மகேஸ்வரி.



இந்த மூவரில் வாசவி அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.ெடக் முடித்தவர். சேவை அமைப்பு சார்பாக அவர் ஒரு கல்லூரிக்குப் போக, பார்வையற்ற மாணவமாணவிகள் பலரும் ‘எங்களுக்காகத் தேர்வெழுத முடியுமா?’ எனக் கை நீட்டி அழைத்திருக்கிறார்கள். அந்தச் சம்பவம்தான் இந்தத் தளத்துக்கு விதை. இம்முயற்சியில் இவரோடு கை கோர்த்த ராஜிவ், செரிப்ரல் பால்சி எனும் வாத நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது!

‘‘இப்போ, இந்தியா முழுவதும் ரெண்டாயிரம் பேர் ஸ்க்ரைப்பா எங்ககிட்ட இருக்காங்க. ஆனா, சென்னையில இருக்குற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கே ஆட்கள் பத்தல. வெளியூர்கள்ல இருந்தெல்லாம் அழைப்பு வரும்போது ரொம்ப குற்ற உணர்வோடு ‘இல்லை’னு சொல்ல வேண்டியிருக்கு. அதனால, விருப்பமுள்ளவங்களை தன்னார்வலர்களா அழைக்கிறதே இந்த இணையதளத்தின் முக்கிய குறிக்கோள்னு சொல்லலாம்’’ என்கிற மகேஸ்வரி, புதிதாக வரும் ஸ்க்ரைப்களுக்கு பயிற்சியெல்லாம் கொடுக்கிறார்.

‘‘இது பிசினஸ் இல்ல... சமூக சேவை. அதுக்கேத்த சேவை மனப்பான்மைதான் ஒரு ஸ்க்ரைபுக்கு அடிப்படை. அது தவிர, சகிப்புத்தன்மை, பொறுமை, திறமைனு மூணு அம்சங்களும் ரொம்ப அவசியம். ஏன்னா, ஒவ்வொரு குழந்தையையும் ஒவ்வொரு மாதிரி கையாளணும். ஒரு செரிப்ரல் பால்சி பையனுக்கு தேர்வெழுத ராணுவத்துல இருந்து ஓய்வு பெற்ற எங்க ஆர்வலர் ஒருத்தரை அனுப்பிச்சேன். ஆனா, அவரோட கணீர் குரலைக் கேட்டு அவன் பயந்துட்டான். ‘இவர் வேண்டவே வேண்டாம்’னுட்டான். அதே ஆர்வலர் இப்போ வேறொரு பையனுக்கு பத்து தேர்வு வரை எழுதியிருக்கார். அந்தப் பையனுக்கு இவரை ரொம்ப பிடிச்சிருக்கு. இது மாதிரி ஆளுக்கு ஆள் மாறுபடும்.
 
சில பசங்களுக்கு பெண் ஆர்வலர்கள்தான் கம்ஃபர்டபிள். ‘அக்கா... அக்கா...’னு பிரியமா பேசுவாங்க. உளவியல்ரீதியா நிறைய விஷயங்களைப் பார்த்து ஒருங்கிணைக்கணும். அதே மாதிரி, அந்தத் தேர்வு பேப்பருக்கு சம்பந்தமில்லாத நபரைத்தான் ஸ்க்ரைபா அனுப்புவேன். ஒரு தடவை பி.ஏ. ஆங்கிலத் தேர்வுக்கு எம்.ஏ., ஆங்கிலம் முடிச்சவரை அனுப்பிட்டேன். அவர், ‘அந்தப் பையன் சொன்னதைத் தாண்டி நிறைய விஷயங்களை எழுதிட்டேன்.

கண்டிப்பா பாஸாகிடுவான்’னு எனக்கு போன் பண்ணிச் சொன்னார். நான் அதிர்ந்துட்டேன். ஏன்னா, அந்தப் பையன் எப்படி படிப்பான்னு காலேஜுக்குத் ெதரியும். அதைத் தாண்டி அவன் பெர்ஃபார்மன்ஸ் பண்ணியிருந்தா சந்தேகப்பட்டு எங்களைத்தான் கேப்பாங்க!’’ என்கிறவரைத் தொடர்கிறார் தன்னார்வலராக இருக்கும் உஷா ராமகிருஷ்ணன். இவர், தேர்வு மட்டுமல்ல... பார்வையற்றவர்களுக்காக புத்தகங்களை வாசித்து ரெக்கார்ட் செய்யும் பணியையும் மேற்கொள்கிறார்.

‘‘ஒருமுறை ஹைப்பர் ஆக்டிவிட்டி உள்ள ஒரு பையனுக்கு தேர்வெழுதப் போயிருந்தேன். ஒரு ஹால்ல நானும் அவனும் மட்டும்தான். அந்தப் பையன்கிட்ட மூணு முறை கேள்வியைக் கேட்கணும். அவனுக்குப் பதில் தெரிஞ்சிருச்சுன்னா சேரை விட்டு எழுந்திரிச்சு ஓடிப் போய் பின்னாடியுள்ள சுவரைத் தொட்டுட்டு வருவான். வந்ததும் மூச்சிரைக்க பதில் சொல்வான். இன்னொரு டைம் லயோலா காலேஜ்ல ஒரு ஆங்கிலத் தேர்வுக்குப் போயிருந்தேன்.

என்னால அந்த பையன் சொல்றதை எழுதவே முடியலை. அவ்வளவு வேகமான இங்கிலீஷ். இந்த சேவையில சகிப்புத்தன்மை ரொம்பவே முக்கியம்!’’ என்கிறார் அவர் பொறுமையாக! ‘‘எம்.காம் முடிச்சிட்டு வீட்டுல சும்மாயிருக்க முடியலை. ஏதாவது பண்ணணும்னுதான் இங்க வந்தேன்!’’ என்கிறார் புதிதாக ஸ்க்ரைப் ஆகியிருக்கும் ஜெயஸ்ரீ!

‘‘ஆட்கள் பற்றாக்குறையாலதான் எங்களால இன்னும் முழுசா இறங்க முடியலை. நிறைய ஊர்கள்ல இருந்து ஸ்க்ரைப் கேட்கிறாங்க. ஆனா, சென்னைக்கே, தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஃபிரெஞ்சு எழுத ஆட்கள் கிடைக்கலை. தமிழ்த் தேர்வு எழுதும்போது ஒற்றெழுத்து விட்டுடுவோம்னு பயந்து நிறைய பேர் வர்றதில்ல.

இப்படி பல சிக்கல்கள்! அதையெல்லாம் தாண்டிதான் ஓடிட்டு இருக்கோம். அந்தந்த மாவட்டங்கள்ல ஆர்வம் உள்ளவங்க இப்பவே எங்களோட இணைஞ்சா அடுத்த வருஷத் தேர்விலாவது மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளை இன்னும் சாதிக்க வைக்கலாம். இதுக்கு படிப்பு ரொம்பத் தேவையில்ல. எழுதத் தெரிஞ்சாலே போதும். நாங்க பயிற்சி கொடுத்து சிறப்பாக்கிடுவோம். ஆனா, உதவி செய்ய விரும்பும் மனது மிக முக்கியம்!’’ என்கிறார் மகேஸ்வரி நிறைவாக!

இதுக்கு படிப்பு ரொம்பத் தேவையில்ல. எழுதத் தெரிஞ்சாலே போதும். நாங்க பயிற்சி கொடுத்து சிறப்பாக்கிடுவோம். ஆனா,  உதவி செய்ய விரும்பும் மனது மிக முக்கியம்!

-பேராச்சி கண்ணன்
படங்கள்: புதூர் சரவணன்